Monday, October 2, 2017

நதி நீர் இணைப்பில் எனது பங்கீடு: கவிஞர் தணிகை

 நதி நீர் இணைப்பில் எனது பங்கீடு: கவிஞர் தணிகை

Related imageஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி,லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம், காமராசர் நினைவு நாள், இன்று இல்லாமல் போகாதிருப்பதற்காக எனது நதி நீர் இணைப்பு பற்றிய செயல்பாடு பற்றிய ஒரு பதிவை செய்து தக்க வைத்துக் கொள்கிறேன்.

முன்னதாக 200 ஆண்டு காலமாக இருந்து வரும் இந்த நினைவு வெளியீடுகளின் பதிவை நானும் எனது  20 வயதிலிருந்தே கைக் கொண்டிருந்திருக்கிறேன் இலக்கியம் வாயிலாக அறிந்திருக்கிறேன் அதற்கு தூண்டுகோலாக சில தொடர்புகள்...

இதே போல 02.10. 2002ல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் எதிரே உண்ணா நோன்பு நிகழ்த்துவோருக்காக கவிஞர் தணிகையாகிய நான் ஒரு உரை நிகழ்த்த அது சிறு கையேடாக நாடு முழுதும் தமிழக இலட்சியக் குடும்பங்கள் அமைப்பு மூலமாக பரப்பப் பட்டது. அடுத்து டிசம்பர் 28 2 2002ல் ஒரு மாநில அளவில் நடத்தப்பட்ட தலைமப் பொறுப்புப் பயிற்சி முகாமில் ஒரு நீள் கவிதையாக கொடுக்கப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்து 2009ல் நேசமுடன் ஒரு நினைவதுவாகி என்ற எனது ஒரு கவிதை உரைநடையாகிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் அது கோர்க்கப்பட்டு அனைவர்க்கும் பயனாக பதிக்கப்பட்டது.

நமது சுதந்திரப் போராட்டத்திற்காக எப்படி ஒரு 200 ஆண்டு கால மகத்துவம் உண்டோ அப்படி நதிகளை தேசியமயமாக்கு, கங்கை காவிரியை இணை என்ற கோரிக்கைகளுக்கும் 200 ஆண்டு கால சரித்திரம் உண்டு. ஆனால் இன்னும் நாம் இந்த அக்டோபர். 2. 20017 காந்தி ஜெயந்தி வரை அந்த குறிக்கோளை எட்டவே முடியவில்லை. என்றாவது ஒரு நாள் அந்த இலக்கு எட்டப்படும் என்பதற்கான ஒரு சிறிய முயற்சியே இதன் தொடர்புடைய எல்லா நிகழ்வுகளும் எழுதுவதும் , பேசுவதும், வெளியீடுகளும்.

காவிரியில் கல்லணையை கட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் நூற்றாண்டிலேயே பெரும் தொலை நோக்கோடு அதைக் கட்டியுள்ளார். அந்த சோழ மன்னனின் அக்கறை இன்றும் பொறியியல் துறையின் வல்லமையை உலகுக்கே பறை சாற்றுகிறது தமிழரின் பெருமையை.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயரே நமது இந்திய தேசத்த்து நீர்ப் பாசனத் தந்தையாவார். அவரிலிருந்து விடுதலை இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட விஞ்ஞானி விஸ்வேஸ்வரய்யா  மத்திய மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத் துறை மந்திரியாய் இருந்த டாக்டர் கே.எல். ராவ், கேப்டன் தின்ஸா தஸ்தூர், சில்வர் டங் சீனிவாச ஐய்யங்கார், சரி. சி.பி. இராமசாமி அய்யர் போன்றோர் இதன் முன்னோடிகள் ஆவார்கள் . தற்காலத்தில் கூட பல்வேறு இயக்கங்களும் தலைவர்களும் இது பற்றிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தத் தலையாயப் பணிக்காக பேதமின்றி இணைவதும் பணியாற்ற வேண்டியதும் தாயகத்தின் கடமையாகும். 

முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், காந்திய நெறி சிந்தனையாளர் நா. மகாலிங்கம், ச.மே.சிற்பி கொ.வேலாயுதம், பொறியாளர் ஏ.சி.காமராஜ் பி.ஈ. நவீன நீர்வழிச்சலைத் திட்ட வல்லுனர்,மற்றும் எனது நண்பர் விடியல் குகன் இன்னபிற நானறிந்த நானறியாத இந்தப் பணியில் இணைந்த அனைவர்க்கும் இன்றைய நாளில் இந்தப் பதிவு நன்றி செலுத்தி வணக்கம் செய்கிறது.

Related image

80 ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதி வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்றார். ஆனால் அது இன்னும் ஓர் இலட்சியக் கனவே. ஆனால் அவர் எழுதிய சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்று பாடிய கூற்று நிதர்சனமாகிவிட்டது.

ஏன் கங்கை காவிரி இணைப்பு, நதி நீர் இணைப்பு, நவீன நீர் வழிச்சாலை மட்டும் அப்படியே கனவாகவே உள்ளது? எனக்கென்னவோ நவீன நீர்வழிச்சாலைக்கும் நதி நீர் இணைப்புக்கும் பெரிதும் வேறுபாடு இருப்பதாக நான் எண்ணவில்லை. நதிகள் இணைப்பு என்றால் மாபெரும் திட்டம் என மற்ற மாநிலத்தார் பயம் கொள்ளக் கூட வாய்ப்புண்டு. அது நவீன நீர்வழிச்சாலையில் இல்லை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர் என்கிறார் பொறியாளர் ஏ.சி. காமராஜ். ஆனால் எனக்குத் தோன்றுகிறது என்ன வெனில் 1. பெயரில் வேறுபாடு மேலும் 2. நதி நீர் இணைப்பு மேலிருந்து கீழாக ஓடி மீதமிருப்பின் கடலுக்கே ஓடிக் கலக்கும், இதில் மேலிருந்து கீழுக்கும் கீழிருந்து மேலுக்கும் அதாவது இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு, தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கிலிருந்து மேற்கு என திருப்பிக் கொள்ளலாம் என்பதும் ஆகும்.

நதிகள் இணைப்பு என்பது மாபெரும் ஒரு இந்தியாவின் பொருளாதார மாற்றம் நிகழும் நிகழ்த்தும் அடிப்படை நிகழ்வு. இது பொய்யாகாது. என்றுமே கவிஞர்களின் தீர்க்க தரிசனம் செயலாகாமல் போகாது.ஆனால் அது எப்போது? நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்திலேயே அதை செய்து முடித்து புகழடையப்போகிறோமா? அல்லது நமக்குப் பின் கலியுகத்தில் அறிவார்ந்த சிறந்த இனி வரும் நம் இளைய தோள்களுக்கு பொறுப்பை மாற்றிவிட்டு நமது முன்னோர்களைப் போல சென்று ச்     சேரப் போகிறோமா இதுவே நம்முன் உள்ள மிகப் பெரிய  கேள்வி.

1974 கேப்டன் தின்ஸா தஸ்தூர்  கங்கை காவிரி இணைப்பு வெறும் 7000 ஏழாயிரம் கோடி ரூபாய் என்றார், கங்கை காவிரியை இணைத்து வைகை தாமிரபரணி வரை 1200 மைல் நீளம் கொண்டு வரலாம் என ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது சுமார் (2002ல்) மூன்று இலட்சம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு என ஆந்திர முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு போன்றோர் குறிப்பிடுகின்றனர். மேலும் அவர் தம் மாநிலத்தில் கோதாவரி கிருஷ்ணாவை இணைத்து மேற்கு கோதாவரி மாவட்டம் முழுதையும் விவசாயக் கழனி பூமியாக மாற்றிக் கொடுத்து விட்டார்.

நேரு காலத்தில் "தனக்கு முழுப் பொறுப்பும் கொடுத்தால்" கங்கை காவிரி இணைப்புத்திட்டதிட்டத்தை நிறைவேற்றி வைப்பதாக இந்தியாவில் சிறந்த பொறியியல் விஞ்ஞானி விஸ்வேஸ்வரய்யா  1861 _ 1962) குறிப்பிட்டுள்ளார்.
இது போல் எத்தனையோ  வாய்ப்புகள்கை  நழுவின. எனவே 3 இலட்சம் கோடி ரூபாய் என்பது இந்தியா போன்ற ஓர் உபகண்டட்திற்கு அதுவும் இது போன்றதொரு உயிர்நாடியான, இரத்த நாளமான திட்டத்திற்கு சேர்க்க முடியாத தொகையல்ல. சேர்த்து குவிக்க வேண்டியது போர்க்கால அடிப்படையிலான உயிர்காக்கும் முயற்சியாகும்.

1971, ஐக்கிய நாடுகள் சபையில் நீர்வளப்பிரிவின் தலைவர் பொருளியல் நிபுணர் டாக்டர்.பார்னீயா என்பவரின் தலைமையில் இந்தியா வந்த திட்டக் குழுவும்  "இந்தத் திட்டம் எவ்வளவு பொருள் செலவுடையதாக இருப்பினும் எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருப்பினும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம்" என்று மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது கவனிக்கத் தக்கது. அது மட்டுமின்றி இத் திட்டம் நிறைவேற்றப்படவில்லையெனில் கி.பி. 2000 ஆண்டு வாக்கில் இந்தியா நீர்ப்பற்ற்றாக்குறாஇயில் தவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

Image result for merging of waterways in india


இந்நிலையில் தனியாருக்கு தண்ணீரை தாரை வார்த்து அவர்கள் அதை பாட்டல் குடிநீராக‌ விற்பனை செய்வதும், பெரு ஆலைகளுக்கு எப்படி வேண்டுமானாலும் நேரடியாக ஆறு, நீர் நிலைகளிலிருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்த அனுமதிப்பதும்,பெரு முதலாளிகள்,அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மோட்டார் வைத்து நீர்த்திருட்டு செய்து நீரை தேக்கி வைத்துக்கொள்ளவும்...இப்படி பல வழிகளிலும் நீர்க் கொள்ளை செய்து கொள்ள அனுமதித்து விட்டு பெரும்பான்மையான ஏழை எளிய கீழ்த்தட்டு மக்களுக்கு நீரை கிட்டாத எட்டாப் பொருளாக மாற்றி வைத்திருப்பதுமாக அரசுகள் செய்திருக்கும் நிலையில்  நாம் தவிக்கிறோம்

தேவையை விட 10 மடங்கு தண்ணீர் அதிகம் உள்ள நம் தாய்த்திரு நாட்டில் குடிநீருக்காக செந்நீர் சிந்தி நாம் தவித்துக் கொண்டுள்ளோம்.

சரி இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியை எப்படி எல்லாம் பெறலாம் பெற முடியும் என்றால்:=

1. 100க்கு 66 கம்பெனிகளை குடும்பக் கம்பெனிகளாக நடத்தி  
  வருபவரிடம் இருந்து பெறலாம்.

2. 71% ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சேர்களை (பங்குச் சந்தையில் பங்குகள்) வைத்திருக்கும் சில குடும்பங்களில் இருந்து பெறலாம்.

3. எது எதெற்கோ கையேந்தி ஐ.எம்.எப்; IMF வோர்ல்ட் பேங்க் World Bank = உலக வங்கி மற்றும்  சர்வ தேச நிதியம் ஆகியவற்றிலிருந்து பெற்ற பணத்தை சூறையாடிக்கொண்டிருக்கிறோமே அந்த நிறுவனங்களிடம் இந்த நல்ல காரணத்துக்காக கையேந்தலாம்.

4. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அரேபிய எண்ணெய் வள நாடுகளிடம் இந்த அற்புதத் திட்டத்திற்காக் கையேந்தலாம்.

5. காந்தி விடுதலைப் போராட்டத்தில் நமது மக்களிடம் கையேந்தியபோது தாலி முதல் கழட்டிக் கொடுத்தார்களே நம் தய்மார்கள நம்பி அந்த நாணயம் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவோரிடமும் இருந்தால் அமது இந்திய தேசட்து குடிமக்கள் ஓவ்வொருவரிடமும் ஏதாவது பங்கீடு அளித்தேயாக வேண்டும் எனக் கையேந்தலாம்.

6. அவ சியமில்லாது வெறும் ஆடம்பரத்துக்காக திட்டமென்றும் விழாவென்றும் விரயம் செய்யும் பணம் யாவற்றையும் மத்திய மாநில அரசுகள் வடிகட்டி மடை மாற்றம் செய்து பயன்படுத்தலாம்.

7. தேவையேற்பட்டால் தேர்தல் மேளா, மக்கள் கூத்து, புகை, மது, போதை,போன்ற சராசரி பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்து கூட திட்டம் முடியும்வரை பயன்படுத்தலாம்.

8. மத்திய மாநில அரசுப்பணிகளின் அமைச்சகங்கள், செலவினங்கள், ராணுவத்தின் பயன்பாடு, பிற துறைகளின் உழைப்பு Un Employed Youth force utilization , ஏன் இந்த நாட்டின் மக்களின் எல்லாருடைய உழைப்பு மற்றும் மாத சம்பளம் வாங்குவோரின் ஒரு மாத சம்பளம் போன்றவற்றை அர்ப்பணிக்கலாம்.

9. வறட்சி நிவாரணம்,வெள்ள நிவாரணம், பூகம்பம் போன்ற  இயற்கைச் சீற்றங்களுக்காக ஆண்டுக்காண்டு செலவளிப்பதாக சொல்லிக் கொள்ளும் பணத்தை திட்ட முடிவு பெறும் வரை இதற்கே திருப்பி விடலாம்.( தென்பகுதி வறட்சியும் வடபகுதி வெள்ளமும் தீர்க்கும் அருமருந்தாயிற்றே இந்தத் திட்டம் என்பதால்).

10. தொழிலதிபர்கள், பெரும் முதலாளிகள் போன்றோரை குறிப்பிட்ட அளவு பணிகளை ஒப்படைத்து முடித்துக் கொடுத்து அவர்கள் பெயர்களையே அந்த நீளம் வரை சூட்டிக் கொள்க என்றும் பயன்படுத்தலாம்.

11. திருப்பதி, காஞ்சி, திருவனந்தபுரம், காசி, சிருங்கேரி, தேவாலயங்கள் மசூதிகள் , கட்சிகள், பொது சேவை நிறுவனங்கள் நடத்தும் பெரிய அறக்கட்டளைகள்,ட்ரஸ்ட்கள், மடாலயங்கள், கோவில்கள் போன்றவற்றிலிருந்து பெறும் நிதியை இதற்கு வர வழிவகுக்கலாம்.

12. விவசாயிகளிடம் பங்கு பத்திரங்கள் விற்பனை செய்யலாம்.

13. இப்படி இலட்சோப இலட்சம் வழிகள், சிந்தித்துப் பார்த்து செயல்படும்போது இந்த நொடி வரை 134 கோடியே 29 இலட்சத்து 68000 மூளைகளிலிருந்து புறப்படும் அவற்றை எல்லாம் சீர்படுத்தி பயன்படுத்தினால் இந்தியாவில் நதிகளை மட்டுமா இணைக்க முடியும்? நிலவுக்கும் சூரியனுக்குமே கூட பாலம் கட்டி விட முடியும். ஆனால் நமது மக்கள் யாவரும் திசை திரும்பியல்லவா குப்புறப் படுத்து தூங்குவதாக பாசாங்கு செய்கின்றனர். படுத்துக் கிடப்பாரை திருப்பிப் போட்டு விழிக்க வைப்போம், விழித்தெழுந்து நின்று நாட்டை செழிக்க வைப்போம்.

திட்டம் செயல்படுத்தப் பட்டால்:
__________________________________

1. அரேபிய நாட்டின் எண்ணெய் செல்வத்தை விட நம் தண்ணீரால் அதிக செல்வம் பெற முடியும்.

2. பாலைகள் எல்லாம் சோலைகள் ஆகும்

3. 39 கோடி ஏக்கர் அடீ கங்கை நீர் கடலில் வீணாவதில் பாதியை தடுத்தால் போதும் 2 காவிரிகளுக்கு முழு கொள்ளளவுக்கு சமமான நீர் பெறலாம்.

4. 1 கோடி ஏக்கர் பாசன வசதி பெற முடியும்.

5. ஏரி, குளம், குட்டை ,கிணறு போன்றவற்றில் நிலத்தடி நீர் ஊற்றெடுக்கும்.

6. கங்கை காவிரி மட்டுமல்ல நதிகளின் இணைப்புக் கால்வாய் வெட்டும் பணி அல்லது நீர் வழிச்சாலை அமைக்கும் பணியில் பல்லாயிரம் பொறியாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்

7. மைலுக்கு 2000 பேர் வீதம் 1.5 கோடி முதல் 2 கோடி பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.

8. நாட்டில் இரயில் பாதையை விட இணைப்புக் கால்வாய்கள் மூலம் அல்லது நீர்வழிச்சாலைகள் மூலம்  நீர் வழித்துறை மேன்மை பெறும்.

9. 9 வகையான இணைப்பில் 10,000 மைல் நீளம் இணைப்புக் கால்வாய் பெறலாம். அல்லது நீர்வழிச் சாலை பெறலாம்.

10. ஏறத்தாழ எழுபது இலட்சம் கிலோவாஅட் மின்சாரம் குறைந்த பட்ச செலவில் அதிகபட்சம் தயாரிக்கலாம்.

11. போக்குவரத்து, மின் துறை, நெடுஞ்சாலை, மீன்வளம் மேம்படும்.

12. கால்வாய் வெட்டும்போது கிடைக்கும் கருங்கற்களின் மதிப்பு 15000 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் 1974...75 கணக்கீட்டின்படி.

13. விந்திய சாத்பூராக் காடுகள் , ராயலசீமா...ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டி முழுப்பலனையும் பிற மாநிலங்கள் பெருமளவிலான பலனையும் பெறும்.

14. இந்தியாவின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடிவு வரும்.

15. மொத்தத்தில் வறுமையற்ற பாரதம் உலக அரங்குக்கு உன்னத வழிகட்டும்  உன்னத வழிகாட்டும் பாரதியின் கூற்றுப்படி.

பிறகு ஏன் இப்படிப்பட்ட காமதேனுவை , கற்பக விருட்சத்தை , கையில் வைத்த்க் கொண்டுள்ள இந்தியா திட்டத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் கையேந்தியபடியே நிற்கிறது?

கங்கை, சிந்து, பிரம்ம புத்திரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி இருந்தும் பஞ்சம் என்றால் அது இயற்கையோ, விதியோ அல்ல மனித சதியே.

முதலாம் நூற்றாண்டிலேயே கல்லணையைக் கட்டிக்கொண்ட தமிழகத்தில் அப்போதே 37,000 ஏரிகள் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வது நூற்றாண்டில் இராஜேந்திர சோழனல் கட்டப்பட்ட 27 கி.மீ நீளமுள்ள குளம் இன்றும் பயன்படுகிறது.

ஆனால் மனித  நாகிரீகம் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு பின்னேறி வரும் சான்றுகளையே இப்போது நாம் பார்க்கிறோம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறையை வேண்டுமென்றே புறக்கணித்தார்கள். "ஒன்றும் செய்யாதே" பஞ்சம் வந்தாலும் மடியட்டும் என்பதே ஆங்கிலேய ஆட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. இப்போது மட்டுமென்ன வாழ்கிறது? அரை கி.மீ தூரத்தில் காவிரி இருந்தும் நிலத்தடி நீரும் கெம்ப்ளாஸ்ட் சன்மார் குழுமத்துக் கழிவு நீரை குழாய்களில் செலுத்தாமல் நன்னீர் ஓடையின் வழியே செலுத்தி நிலத்தடி நீரை கெடுத்த் விட்டு வீட்டுக்கொரு ஒரு குடி நீர் கிணறு இருந்தது எல்லாம் மண் மூடிப் போக இப்போது காவிரியில் மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கெல்லாம் நீரை அளித்துக் கொண்டு பொது மக்கள் குடி நீருக்கே வாடி இருக்கும் நிலையில் பாசனத்துக்கு நீரைத் திறக்க மந்திரியும் ஆட்சியரும் வந்து திறந்து சென்றிருக்கிறார்கள் காவிரியில் தானாக ஏறிய 90 அடிக்கும் மேலான நீரை.

1834ல் சர் ஆர்தர் காட்டன் காவிரியில் திருச்சி முக்கொம்பில் மேலணையைக் கட்டினார். அதே 1834ல் மேட்டூர் அணையைக் கட்டும் திட்டமும் வகுத்தார். ஆனால் ஒரு நூற்றாண்டு கழித்து 1934ல் ஸ்டேன்லி என்பார் கவர்னராய் இருக்கும்போது அணை கட்டி முடிக்கப்பட்டது. எனவே அவர் பேருடைய இந்த மேட்டூர் அணை ஒன்றுதான் பெரும் அணையாக தமிழகத்துக்கே குடி நீரும், பாசன நீரும் தந்தபடி.

1847ல் ஆந்திரத்து கோதாவரி மாவட்டங்கள் வளங் கொழிக்கச் செய்தார். கிருஷ்ணா நதியிலும் அணை கட்டத் திட்டம் கொடுத்தார். ஆனால் 1863ல் கேப்டன் ஓர் என்பவரால் திட்டம் துவங்கப் பட்டு 1953ல் நிறைவு பெற்றது. சர்.ஆர்தர் காட்டனின் சிலை கோதாவரி அணையில் உள்ளது. சுமார் 4 இலட்சம் ஹெக்டார் நிலப்பாசன  வசதிக்கு  உதவிய ஆண்டுக்கொருமுறை ஆந்திர மக்கள் விழா எடுத்து மாலையணிவித்து மரியாதை செய்கின்றனர்.

பஞ்சாப் நதிகளை இணைக்கத் திட்டம் அளித்தவரும், 9 வகையான முறைகளில் கால்வாய்ப் போக்குவரத்தை ஏற்படுத்தினால் அது ரயில் போக்குவரத்தை விட சிக்கனமாகும் எனத் திட்டமிட்ட இவரை ஆங்கில அரசு பணியிலிருந்து இங்கிலாந்துக்கு திரும்ப அழைத்து , ஆங்கில அரசுக்கு அதிகம் செலவு வைத்தவர் என்றும், அரசோடு ஒத்துழையாதவர் என்றும் தண்டனையும் அபராதமும் விதித்தது. இவற்றை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இந்த தேசப்பிதா பிறந்த நாளில் இந்த இந்திய நீர்ப்பாசனத்தந்தையான சர். ஆர்தர் காட்டன் பற்றியும்.

அவருக்குப் பின் வந்த பலராலும் பல வைகையான இணைப்பு மற்றும் கால்வாய்த் திட்டங்களும் பரிந்துரைக்கப்பட்டன அவற்றுள் சில:

1. டாக்டர்.கே.எல். ராவ் அவர்களின்
கங்கை பாட்னாவிலிருந்து பிரிக்கப்பட்டு நர்மதை வழியாக கோதாவரி, கோதாவரியிலிருந்து காவிரி மேட்டூர் அணைவரை கிட்டத்தட்ட 2200 மைல் அல்லது வேறு வழியாக  1600 மைல் 

2. கேப்டன் தின்ஸா தஸ்தூர்: 
    1. மகா இமாலயக் கால்வாய்த் திட்டம்: கங்கை+ யமுனா+ பிரம்ம புத்ரா.

     2. பூமாலைக் கால்வாய்த்திட்டம்.
இணைப்புகளில் மீன் முள் அமைப்புடன் சிந்து விலிருந்து மேற்கு கடற்கரை வழியாக  ( ஹெர்ரிங் போன் சிஸ்டம்)

3. எம்.ஏ. திருநாரயாணன் சேது கங்கா இணைப்பு

4. திரு மோகன கிருஷ்ணன் அறிக்கை:= தீப கற்ப நதிகளின் மேம்பாடு போன்றவை மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.

5. இப்போது பொறியாளர் ஏ.சி.காமராஜ் அவர்களின் இந்திய நவீன நீர்வழிச்சாலைத் திட்டம்.


1958 முதல் 1987 ல் 649 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் அமைத்து இராஜஸ்தானின்  வறண்ட நிலத்தை வளமாக்கி இருப்பது கால்வாய்த்திட்டம் பலனளிக்கக் கூடியதே என்பதற்கான சான்றாகும்.
 ஆனால் இது போன்ற நதி நீர் இணைப்புத் திட்டத்தை அரசு கிடப்பில் போடக் காரணங்கள் அல்லது சொல்லிச் சொல்லிக் காலம் கடத்த காரணங்கள்:=

1. நிதி ஆதாரமின்மை மற்றும் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாமை

2. விந்திய சாத்பூரா மலைத் தடையாக உள்ளதால் 1650 அடி நீரை உயரம் தள்ளத் தேவையான மின்சக்தி தயாரிப்புச் செலவை ஏற்கும் சக்தியின்மை என்பதுமே.

இது போன்ற பதில்கள் கி.பி.2000 (2கே)க்கும் முன் கூட ஏற்புடையதாகக் கருதப்படவில்லை. எனும்போது இனி இந்த 2000 ஆண்டுகளுக்கும் பின் இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதேயில்லை. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வானளாவ உயர்ந்துள்ளன. ஏனெனில்

1. அமெரிக்கா (யு.எஸ்.ஏ) 3700 அடி நீரை உயரே ஏற்றித் தள்ளி மிசிசிபி நதியின் நீரை மேற்கு டெக்ஸாஸ் மற்றும் கிழக்கு மெக்ஸிகோ மாநிலங்கள் பயனுறச் செய்திருக்கிறது.

2. ரஷ்யாவில் வால்கா டான் 4000 அடிகளுக்கு மேல் நதிகளின் இணைப்பு  நம் நதிகளின் இணைப்புகளை விட பெரியதாய் நடந்தேறியிருக்கிறது.

3. ஐரோப்பிய நதிகள் இணைக்கப்பட்டு இன்று ஈ.ஈ.சி EEC ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் ஏற்பட்டு பொதுவான பணத்தாளையும் நல்ல பொருளாதாரத் திட்டங்களையும் தக்க வைத்துள்ளது.

4. ரஷியாவிலிருந்து அணு மின்சாரத் தொழிலையும் ஈனுலைகளையும் தொழில்நுட்பத்தையும் ஜப்பானிடமிருந்து புல்லட் ட்ரெயின் தொழில் நுட்பத்தையும், அதற்கான பணத்தையும் ,சீனாவிடமிருந்து சிறிய பொருட்களுக்கும் கூட ஒப்பந்தங்களையும், யு.எஸ்.ஏவிடம் நமக்கிருக்கும் எத்தனையோ பரிமாற்றங்கள், நாசா வின் நமது பங்கெடுப்புகளும் உத்திகளும் இருக்கும்போது இது மட்டும் நாம் கலந்து செய்யக் கூடாததா என்ன? முடியும் ஆனால் முடியாது என்பது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதத்தை விட தட்ப வெப்ப சூழலில் இயற்கை வளத்தில், மனித சக்தியில், மூளை முயற்சியில் தாழ்ந்த தேசமெல்லாம் முன் நிற்க நாம் ஏன் பின் நிற்கிறோம்? நதிகளின் இணை ப்பில்லாததுதான். நதிகளை தேசியமயமாக்காததால்தான், இதற்கான முயற்சிகளை உதறித்தள்ளுவதால்தான், நதிகளின் நீரை கடலில் விரயமாக்குவதால்தான்.

உயர்வாக எண்ணு, வானமே இலக்கு! என்ற சிந்தனையுடைய நமது பாரதத்தின் தானைத்தலைவர், முதல் மனிதராக மேதகு குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.ஆ.ப.ஜெ அப்துல்கலாம் இருந்த தருவாயை நழுவ விட்டுவிட்டோம். அவருக்கு அஞ்சலி செய்யும் முகமாகவேணும் நாம் நமது எண்ணங்களை ஏந்திப் பிடித்தேயாகவேண்டும் செயல்படுத்தியேத் தீர வேண்டும்.

தமிழகத்தில் 40% நிலம் நீர்ப்பாசனத்தைச் சார்ந்தது. 60% வானம் பார்த்தது. மழை பொய்த்துவிட்டால் சுமார் 40,000 ஏரி, குளம், கண்மாய்கள் வறட்சியால் பாதிப்புற்று நிலத்தடி நீரும் இன்றி அதோகதியாகிவிடுகிறது.

அந்த 40% நீர்ப்பாசன நிலத்தில் 0% கால்வாய்ப்பாசனத்துடன் இறவைப்பாசனமாக உள்ளது. 20 இலட்சம் கிணறுகளில் ஏறத்தாழ பாதி சுமார் பத்தரை இலட்சம் பம்ப் செட் இணைப்பில் உள்ளது. இவற்றில் எல்லாம் சுமாரான வறட்சியின் போதே 2 மணி நேர இறைப்புக்குக் கூட நலத்தடி நீர் இருப்பதில்லை. கடுமையான வறட்சி என்றால் சொல்லவே வேண்டாம். இதனிடையே ஏரிகள், குளங்கள் யாவும் பட்டா நிலங்களாகி விடுவது வேறு அபாயகரமான வேடிக்கை. இரசாயன ஆக்ரமிப்பால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு கிணற்று நீரே பயன்படாது போவதும் அன்றாட வாழ்க்கை. நிலத்தடி நீர் மிகவும் அபாயகரமான நிலைக்கு கீழ் இறங்கி விட்டது.

எனவே வரும் தலைமுறை வாழ வேண்டுமானால் நமது சங்கிலித் தொடர் சந்ததிகளுக்கு குடிக்க நீர் வேண்டுமானால் நமக்கு நதிகளை தேசிய அளவில் இணைப்பதைத்தவிர வேறு வழியே இல்லை. அது நவீன நீர்வழிச்சாலை என்று பேராய் இருந்தாலும் அனைத்து நதிகளை இந்தியா அளவில் இணைக்கப்பட வேண்டும்.

வறுமையை ஒழிக்கப் பாடுபடுவது, போதை, சாதி மதம் பேதம் ஒழிக்கப் பாடுபடுவது, கட்சிகள், அரசுகள், இயக்கங்கள், சேவை நிறுவனங்கள் இன்ன பிற சக்திகள் யாவுமே இணைந்து இந்த ஒரு மகத்தான பணியை மட்டும் நிறைவேற்றி விட்டால் மட்டும் போதும் இந்தியா அதன் பின் வரும் முதல் 10 ஆண்டிலேயே அமெரிக்காவை (யு.எஸ்.ஏ) பின் தள்ளி உலகின் தனிப்பெரும் முதல் நடாக நின்று வழி நடத்தும் என்பதல் எள்ளளவும் ஐயமேயில்லை.

பாரதியின் கனவும், நேருவின் கனவும் அற்புதமாக நிறைவேறும். மகாத்மாவின் பொற்பாதங்களில் உணமையான சுதந்திரம் அர்ப்பணமாகும். ஏதேதோ வழிகளில் நாட்டிற்காக உழைக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் கூட இந்த ஒரு இணைப்புப் பணியில் இணைந்தால் பெருமையேயுறும் அதில் சிறுமை துளியுமிரா.

இத்திட்டம் முடியுமா முடியாதா என்றெல்லாம்ம் வாய்ச்சொல்லில் எல்லாம் பேசுவதை எல்லாம் விட்டு விட்டு பணத்துக்காக , சுயநலத்துக்காக,என்ற நிலையிலிருந்து இதற்கான அர்ப்பணிப்புடன் சேவை மனப்பான்மையுடன் அனைவரும் இறங்க வேண்டும். கையெழுத்து இயக்கம், தபால் அட்டை அனுப்புதல், பத்திரிகை, தொடர்பு வழி சாதனங்கள்( மீடியா)  எந்த உருவத்திலிருந்து புறப்பட்டாலும் இந்த வழியில் ஒன்றிணைந்து தேவையேற்பட்டால் பாராளுமன்றம், சட்டமன்றங்களை எல்லாம் அஹிம்சை வழியில் உலுக்கி எடுத்து இந்தத் திட்டம் உருவாக  செயல்பட நிறைவேற உழைக்க வேண்டும்.

மகாத்மா காந்தி பிறந்த இந்த நாளில் சொல்கிறேன் அது போன்ற சாதனையை நிகழ்த்தும் நம்நாட்டின் தலைவர் மகாத்மாவின் பேரையும் பின்னுக்குத் தள்ளி நம் நாட்டு மக்களின் ஏழை மக்களின் வளமான வாழ்க்கைக்கு வழி செய்தவராவார்... ரஷியாவிற்கு கிடைத்த லெனின் போல,அமெரிக்காவுக்கு கிடைத்த லிங்கன் வாஷிங்டன் போல இங்கிலாந்துக்கு கிடைத்த வின்ஸ்டன் சர்ச்சில் போல, வியட்நாமுக்குக் கிடைத்த ஹோசி மின் போல, சீனாவுக்கு கிடைத்த மாவோ போல, சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ போல...கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ போல‌

அவர் யாரோ அவர் அடையாளம் காணப் படும் வரை இந்த திட்டம் நிறைவேறும் வரை உயிருள்ளவரை உழைக்க வேண்டும். அன்பர்களே வாருங்கள் விரயமாகும் நீரைத் திருப்பி திரவியமாக்குவோம்.! வணக்கம் நன்றி.!.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஆதாரங்கள்: 
1. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1986ல் வெளியிட்ட "கங்கை காவிரி இணைப்பு" கட்டுரைத் தொகுப்பு...திரு. ஆர். நல்லகண்ணு.

2. விடுதலைப்போரும் திராவிட இயக்கமும்...திரு. பி. ராமமூர்த்தி

3. இண்டியாஸ் வாட்டர் வெல்த்.

4. தினமணி, இந்து, இல்லஸ்ட்ரெட் வீக்லி, பிளிட்ஸ் மற்றுன் கிஸான் வேர்ல்ட், பத்திரிகைகள் 35 ஆண்டுகளுக்கும் முன் வெளியிட்ட குறிப்புகள்.

5. என்.டி.டி.வி.  மற்றும் பல....

4 comments:

 1. நதி நீர் இணைப்பில் எனது பங்கீடு: கவிஞர் தணிகை - அருமையான விபரங்கள் அடங்கிய சற்று பெரிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

  ReplyDelete
 2. thanks for your sharing and comment on this post sir. vanakkam.

  ReplyDelete
 3. அருமையான அனைவரும் அறிய வேண்டிய பதிவு நண்பரே
  நன்றி

  ReplyDelete