Tuesday, March 29, 2016

சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை:- ஒரு உலகளாவிய பார்வை- கவிஞர் தணிகை

சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை:- ஒரு உலகளாவிய பார்வை- கவிஞர் தணிகை



காடும் மலையும் குறையக் குறைய நாடும் நகரும் பெருகப் பெருக
பனிப்படலம் உருக உருக கடல் சீற்றங்கள் உயர உயர
ஓசோன் மண்டலம் கிழியக் கிழிய இரசாயன மழை பொழியப் பொழிய
பூமிப்பந்து அதிர அதிர  உயிரினங்கள் உதிர உதிர காற்றும் நீரும் கலங்க
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை..

எல்லைக் கோடுகளின் வெறி ஏற ஏற கொள்கைக் கோடுகள் கேடுகள் மாற  மாற
வேளாண் நிலங்கள் தரிசாய்ப் போக மனிதக் கூடாக தனிமைப் பரிசாக
கூட்டுக் குடும்பம் என்ற பேச்சே போச்சு, மூச்சுக் காற்றும் விஷமாகி--
தற்கொலை எண்ணிக்கை கூடலாச்சு
ஏரி குளங்கள் நீர் நிலைகள் காயலாச்சு, காணாமல் போச்சு, சோற்றுக்கும் நீருக்கும் சிக்கலாச்சு
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை

மறுபடியும் சாலைகள் போடப் போட, இலஞ்ச ஊழல் கூடக் கூட
இலட்சக்கணக்கான கோடிகள் இலட்சியம் இல்லாத கேடிகளிடம் சேர
அரசியல் என்றாலே முதல் இல்லாத வியாபாரம் என்றாச்சு
காந்தி வழித் தியாகமும் பகத், சுபாஷ் மொழி வீரமும் போச்சு;- அவை
இந்த மண்ணிலா விளைந்தது? என்ற வியப்பு விரியலாச்சு
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை.

குற்றவாளிகளே நாட்டை ஆளுகிறார் சட்டமும் நீதியும் மீறுகிறார்
மற்ற மக்களோ கை ஏந்துகிறார் துன்பத் துயருடன் மாளுகிறார்
கையில் காசு, வாயில் கோஷம் கொடுத்தா மொத்தம் ஜெயிக்கிற வாக்கு
சுரண்டல் அடியிலிருந்தும் ஆரம்பம் ஆள்வோர் (மணி)முடியிலிருந்தும் ஆரம்பம் முடிவின்றி
மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி, மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை, தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை

விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் பூமியில் குற்றுயிராச்சு
விளங்காமல் போன மனிதர்களின் மனமோ குரூரமாச்சு
எண்ணெய்க் கிணறும் ஆய்த வியாபாரமும் முதல் என்றாச்சு
மருந்துப் பொருளும் கலப்படமாக உயிர்விடும் மூச்சு;- எல்லாம்
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை ,தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை.

உலகெலாம் குண்டுகள் வெடிக்கத் தயார் நிலையில்
கலகமெலாம் கட்சித் துண்டுகள் ஓர் கறை நிற வழியில் சாதி மதமென
சந்திர செவ்வாய்க்கும் சென்றடைந்தது மனித அறிவு!
பூமியின் கல்,மண்,புல்,பூண்டு, தாவரம், உயிர் யாவும் சுரண்டும் மனிதா
அரசியல் என்ற பேரில் அவற்றையும் சுட்டு விடாதே! விட்டு விடு!
சுரண்டாதே அரசியலால் திண்டாடவிடாதே இயற்கையை!
அளவான தனிமனித வேட்கையோடு வாழு! வாழ விடு!

 மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகையின் மகன்
த.க.ரா.சு.மணியம்
இரண்டு  ஆண்டுகளுக்கும் முன் எழுதிய கவிதை.



பி.கு: ஜெயலலிதா வீட்டுக்கு கன்டெய்னர் மற்றும் லாரிகள் மூலம் 500 ரூ 1000 ரூ கட்டுகள் கொண்டு சென்று சிறுதாவூர் பங்களாவில் நிலவறை செய்யப்பட்டு அமுக்கி வைத்து வருகிறார்கள் என்று வைகோ தேர்தல் ஆணையத்துக்கு சோதனை செய்யச் சொல்லி புகார் தந்த செய்தியை தினமணி வழியே கண்ட நிலையில், நேபாளத்தின்  நிலநடுக்கம் எவரெஸ்ட் சிகரத்தில் ஓட்டைகளையும், விரிசல்களையும் உண்டாக்கி விட்டதாக செய்தி கண்ட நிலையில் இந்த கவிதை எழுதிய தாள் வேறு ஒரு தகவலைத் தேடிக்கொண்டிருக்கும்போது கையில் கிடைத்தது அது உங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment