Monday, March 28, 2016

தராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.

தராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.




வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையதாம் உயர்வு என்ற குறள் நெறிக்கேற்ப மக்களின் தரத்தைப் பொறுத்தே கட்சிகள், அரசியல், அரசுகள்,தேர்தல், வெற்றிகள் நிர்வாகம் எல்லாம் .ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட‌ கட்சிகளில்,நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியாவில் குறிப்பிடும்படியான‌ கட்சிகளாக‌(136),தமிழகத்தில் 76 கட்சிகள் இருந்தாலும் 8 பிரிவில் இவை அடங்க...

தி.மு.க, பா.ம.க,தே.மு.தி.க இவை குடும்பங்களை மையமாக வைத்தவை, அ.இ.அ.தி.மு.க சர்வாதிகார ஒரே சுப்ரீம் மையம், மத்திய மந்திரியால் கூட ஆண்டுக்கணக்காய் சந்திக்க முடியா கடவுள் நிலை என மத்திய மந்திரியே தமிழக முதல்வர் பற்றி பத்திரிகையிலேயே செய்தி தருகிறார்,சி.பி.ஐ,சி.பி.ஐ(எம்)சில மாநிலங்களில் இருந்தும் மறைய ஆரம்பித்து அவ்வப்போது வேர் வெளித் தெரியும் கட்சிகள் ஆனாலும் மிகவும் நலிந்த கட்சிகள் ஏன் வலுப்பெறவில்லை ஆய்வுக்கு அவசியம்




பாரதிய ஜனதா கட்சி மத, காவி வண்ணத்தில் சிக்கிக் கொண்டது, காங்கிரஸ்(கள்) பழம் பெருமை பேசி மக்களிடையே இருக்கும் கொஞ்சம் நஞ்சம் செல்வாக்கையும் இழந்து வருபவை.

இப்படிப் பார்த்தால் எந்தக் கட்சியுமே ஒரு நேர்மையான ஒழுக்கமான தொண்டரை, அல்லது செயல்வீரரை, அல்லது நாட்டுக்கு சேவையாற்ற கட்சி வேண்டும் என நினைக்கும் ஒரு இந்தியரை, தமிழரை ஒரு மனிதரை சாதி மத பேதமற்று வழிகாட்டி நல்ல மனிதரை கவர்பவையாக ஆர்வமூட்டும் நிலையில் இல்லை.



சகாயம், நல்லகண்ணு, போன்ற அரிய‌ மனிதர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் போல பரிமளிக்கவில்லை. இன்று உலகில் உள்ள 50 தலைவர்களில் ஒருவராக ஃபார்ச்சூன் என்னும் ஒரு அமெரிக்க ஆங்கில நாளேட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அர்விந்த்.

தலைவர் என்றால் ஒரு நல்ல குணமாவது வேண்டும் அவரை நாம் பின் தொடர...காமராஜை எடுத்துக்கொண்டால் சுயநலமில்லா எளிமை,அப்பழுக்கற்ற ஊழலின்மை, மக்கள் நலம் ஒன்றே குறிக்கோள்,

அண்ணாவை எடுத்துக்கொண்டால் அறிவுடமை, ஆங்கிலப்பேச்சு வன்மை, இன்னும் முறியடிக்க முடியாத சாதனையான‌ இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட மனிதர்களின் எண்ணிக்கையில் அண்ணாவின் இறுதி ஊர்வலம் ,இப்படி சொல்லலாம்,




எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால் அவரின் வள்ளல் தன்மை, சிறுவனாக இருக்கும்போது தன்னை அமர்ந்த சாப்பாட்டு இலையில் இருந்து சாப்பிடவிடாமல் எழ வைத்த மனிதர் பற்றி குரோதம் பாராட்டாமல் சாப்பாட்டுக்காக நேர்ந்த அவமானத்தை மனதில் கொண்டு எல்லாரும் சாப்பிட வேண்டும் என தன்னால் முடிந்த அளவு பசி போக்க நினைத்த மனம்,

இப்படி ஏதாவது ஒரு குணம் அவர்கள் சுயநல வாழ்வையும் மீறி மேல் ஏறி நிற்கும், ஆனால் முன் நாம் சொன்ன கட்சித்தலைவர்கள் யாவரும் ஏதாவது சில நல்ல குணம் இருந்தாலும் சுயநலம்,ஊழல், மது, ஒழுக்கமின்மை  விளம்பரம்.போன்ற குணங்களால் சூழப்பட்டவர்கள்.



எனவேதான் எம் போன்றோர் காந்தி, தெரஸா, அப்துல்கலாம் போன்றவரை மட்டுமே முன் மாதிரிகளாக கொள்ள முடிகிறது அவர்கள் வாழ்வும் திறந்த புத்தகமாகவே இருக்கிறது.
ஆனால் அவர்கள் ஏதும் கட்சி ஆரம்பிக்காமல் சேவையே பிரதானம் என்று வாழ்வை போக்கி விட்டார்கள்.



 ஏன் தீவிர வாதம் எனச் சொல்லப்பட்ட தலைவர்கள், போஸ்,பகத், சட்ட மேதை அம்பேத்கர் போன்றவர்களும் நல்ல தலைவர்களே. பொதுவாக இது போன்ற திருப்பூர் குமரன் போன்ற நாட்டுக்கு இன்னுயிரை ஈந்த தியாகசீலர்களை எல்லாம் சுதந்திரத்திற்கு முன் இந்த நாடு கண்டது. சுதந்திரத்துக்கும்  பின் சொல்லவே வேண்டாம்...

பா.ம.க வை எடுத்துக் கொண்டாலும் மக்கள் அவர்கள் முற்காலத்து மரம் வெட்டி கல் கொண்டு தாக்கிய போராட்டம், பொதுச் சொத்து கலவரம், போன்றவற்றை விழுப்புண்களாக பெற்றிருப்பதாலும்,மக்கள் அடையாளம் மறவாமல் இருக்கிறார்கள்.

 தமது குடும்பத்தில் இருந்து எவர் அரசியலுக்கு வந்து பதவிக்கு வந்தாலும் சாலை நடுவே மரத்தில் கட்டி சவுக்கால் எவரும் வெளுக்கலாம் தன்னை எனச் சொன்ன மருத்துவர் அய்யாவின் வாரிசு இன்று தனிப்பட்ட முறையில் நல்ல திட்டங்களை எல்லாம் குறிப்பிட்டு பேசியபோதும்,வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்றபோதும், மதுவிலக்கு என்ற போதும் கூட நம்பிக்கையின்றி மக்கள் இருக்கிறார்கள்.அவர்களின் சாதிய நெடியை அவர்கள் விட்டு விட்டதாக சொன்னாலும் அது அவர்களை விடுவதாக இல்லை.

தி.மு.க மு.க, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ,செல்வி, தயாளு அம்மாள், தயாநிதி மாறன் இப்படியே போக... தே.மு.தி.க விஜய்காந்த், பிரேமலதா, சுதீப், இப்படி போக, பாமக மருத்துவர், அவர் மருத்துவர் மகன் இப்படியாக...ஆனால் இவை தான் மக்கள் அதிகம் சேர்ந்த கட்சிகள் ஆளும் கட்சிக்கு அடுத்து...

ஆளும் கட்சியின் வரலாறே தனி அது ஒரு தி.மு.கவின் கிளை வரலாறு ம.தி.மு.க போல...

தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க இவை எல்லாம் பிரதான கட்சிகள் இவை மூன்றுமே குடும்பத்தின் பிடியில். ஆளும் கட்சி பற்றி சொல்லவே வேண்டாம்...

ஆக கட்சிகள், அரசியல் இவற்றில் எல்லாம் இந்தியாவிலும், தமிழகத்திலும் தூய்மை நேர்மை நிலவ வில்லை. அதற்கான வழிகளும் இல்லை. கட்சி நடத்திட பெரும் செல்வம் தேவைப்படுகிறது. நல்லவேளை கலாம் பேரில் கட்சி என்ற பொன்ராஜ் 234 தொகுதிகளிலும் இலட்சிய கலாம் கட்சி வேட்பாளர் என்றெல்லாம் சொல்லியவர் அடங்கிவிட்டார்.

டெல்லியின் கணக்கு வேறாகவே ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலை பார்க்க முடிகிறது. ஆனால் அவராலும் சுயமாக ஆள இயலாத சிக்கல்கள். திட்டத்தின் கடைசிப் பயணப்புள்ளி மத்திய ஆளும் அரசையே சாரவேண்டியதாயிருக்கிறது.

ஆக இப்படி இருக்கும் கட்சிகள் அவரவர் கட்சிகளுக்குரிய ஒரு வாக்கு வங்கியை ஏதோ ஒரு காரணம்பற்றி வைத்திருக்கிறது . அதில் தனி மனிதர் ஒவ்வொருவரும் அந்த ஏதோ ஒரு காரணம் அடிப்படையாக‌ மதம், சாதி, ஒரு பிடிப்பு, ஒரு கவர்ச்சி, ஒரு சினிமா கற்பனை, ஒரு பயன்பாட்டால் விளைந்த நன்றியுணர்வு, அல்லது ஒரு விருப்பம் ஆகியவற்றால் வெளிவராமல் ஏன் மது , சிகரெட், விருப்பப் படி இயங்குதல், இப்படி ஏதோ ஒரு மீறல் அல்லது பாது காப்பு, அல்லது காரணம்பற்றி அந்த கட்சிகளில் தொண்டராக ஆர்வமுள்ளவராக இயங்குகிறார், இருக்கிறார்.

தேர்தல் எல்லா தில்லுமுல்லுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. என்னதான் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு நேர்மையாக இயங்கியபோதும் நடுநிலையோடு முயன்றபோதும் அரசின் எந்திரங்கள் ஆளும் கட்சி சார்பாகவே இருக்கின்றன.

30000ஆயிரம் கோடியை முதல்வர் மையம் தமது துணை மந்திரி மையங்களிலிருந்து பெறுவதை பெரும் செய்தியாக ஊடகம் மக்கள் கையில் எடுக்க விடாமல் 500 கோடி கூட்டணி பேரம், 1500 கோடி நிலவரம் என செய்திகள் பீப், இளையராஜா,ஈ.வி.கே.எஸ்,தியேட்டர் வரலாறு போன்றவை, நாஞ்சில் சம்பத் போன்ற தொடர் செய்தி ஆக்கங்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட கெட்ட பேரை மறைக்கும் மக்கள் மறக்கும் முயற்சியாக ஆளும் கட்சி ஊடகத்தை கையில் வைத்திருப்பதாக செய்திகள் வராமலுமில்லை.

இன்னும் குடியரசு ஆட்சி இருக்கிறது இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மலரவில்லை.இந்நிலையில் தேர்தல் ஒரு விழா.இதில் எல்லா விளையாட்டுமே உண்டு பிரித்தாள்தல், சூழ்ச்சி, சேர்ந்திருந்தே கெடுத்தல், வெளித்தெரியாமல் பணியாற்றல், வெளியே எதிரி உள்ளே நட்பு இப்படி எல்லாமே உண்டு. ஆனால் இதன் மூலம் கீழ் தட்டு மக்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள்.

வாக்குகளுக்கு ஒரு விலை. இல்லையெனில் வேலையை விட்டு ஒரு நாள் வந்து கியூ வரிசையில் நின்று வாக்களிக்க என்ன கிடைக்கிறது? மேல் தட்டு மக்களும், அரசு நிர்வாக அமைப்பில் உள்ளார்க்கும் அன்று சம்பளம், சம்பளத்துடன் வேலை, சம்பளத்துடன் விடுமுறை எல்லாம் கிடைக்கிறதா இல்லையா எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.அதற்கு கட்சிகள் பணம் சேர்க்க வேண்டிய நிலை. விட்ட பணத்தை தேர்தலுக்கும் பின் ஆட்சியில் பதவியில் அமர்ந்தவுடன் பல்லாயிரம் மடங்கு செலவு செய்ததை விட கொள்ளையடிக்கும் நிலை எல்லாம் உண்டு இந்த ஆட்சி அமைப்பில்.இப்போது தாம்புக்கயிறாக காசை வாங்கிக் கொண்டு ஆட்சி என்னும் மாட்டைப் பிடித்துக் கட்ட முடியாமல் இந்திய வாக்களன் தவிக்கிறான். காஞ்ச மாடு கம்பில் புகுந்து விளையாடி வருகிறது.பதவிக்கு அமர்ந்த பின் அப்போது தப்பித் தவறி ஏதாவது வாக்களன் கேட்டால் "நீ என்ன சும்மாவாடா? போட்ட? காசு அவுக்கல? காசு வாங்காமலா போட்ட , ஒன் ஓட்டு எல்லாம் ஒரு கேடா போடா போ " என நக்கலாகிற ஜனநாயகமும் வாக்காளனும்.




இன்னும் ஜனநாயக அமைப்பு, குடியுரிமை, சட்டம் நீதி நிர்வாகம், அரசு, கட்சிகள், அரசியல் மேல் எல்லாம் போதிய விழிப்புணர்வு அடையா நிலை. மறுபக்கம் தெரிந்து இருந்தாலும் மீறல் நிலை. காரணம் நாட்டின் நிலவும் அவலங்கள். மல்லையா, லலித் மோடிகள், நாட்டின் செல்வ நிலை, பொருளாதார நிலை, சமூக அமைப்பு, ஏழை படும்பாடு. கடன் சுமை ஏழைக்கும், நாட்டின் வங்கிகள் பணக்கார அரசியல் வாதிகள் கைகோர்ப்பிலுமாக செல்லுதல்

ஆக எல்லாவற்றுக்கும் அடிப்படை மக்கள் மன நிலை. இந்த மக்கள் பெருவாரியாக கட்சி என்ற பேரில் பிரிந்து கிடப்பது. ஒரு வாக்கு வெற்றியாளரையும் தோல்வியாளரையும் வேறு படுத்துவது,

வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளை விட அவருக்கு எதிராக விழுந்த மற்ற வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் பயனிழந்து போய் விடுவது... மக்கள் இந்த சுழியிலிருந்து வெளிவரவே வழி இல்லை.

 எல்லா மக்களுமே நியாயம், நீதி, நேர்மை , தூய்மை எனப் பார்த்து சிறந்த ஆட்சி முறைக்காக இது போன்ற கட்சிகளில் இருந்து வெளியேற ஆரம்பித்தால் கட்சிகள் வெறும் கூடாரமாகிவிட்டால் இவர்களுக்கு எல்லாம் வேலை இல்லை.அப்படி ஒரு கோடிக்கணக்கான மக்கள் திரண்டால் அப்படி திரள்வதை மாற்றம் எனவும். ......எனவும் சொல்லலாம்.ஆனால் அது எல்லாம் கனா. அப்துல் கலாம் கண்டது போன்ற கனா. ஆனால் இப்போதைக்கு...




1.பெருவாரியாக நோட்டாவுக்கு வாக்களிப்பது அல்லது எவரும் வாக்களிக்காமல் தேர்தல் முறைகளில் பெருமாற்றம் செய்ய அடிப்படையாக இருந்தால் ஒரு மாற்றம் வரலாம்.

2.பெறும் வாக்குகள் சதவீத அடிப்படையில் பதவியும் ஆட்சி பங்கீடும் இருக்கலாம்.எல்லாக் கட்சிகளுக்குமே.

3.வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக அவர்தம் வாழ்வின் முன்னேற்றத்துக்காக செயல்பட வில்லையெனில் அவர் திரும்ப அழைக்கும் முறை வரலாம்..

 இவை எல்லாம் நம் முன் வரவேண்டிய உடனடியான தேர்தல் சீர்திருத்தங்கள் அல்லது மாற்றங்கள். இவை அல்லாமல் நிரந்தர நல்லாட்சிக்கு நீண்ட கால முறைக்கான செயல்பாடுகள் எல்லாம் நிறைய உள்ளன. இப்போது சொன்ன இவை ஒரு சிறு கை அளாவிய கைப்பிடிக்கூழ் (பெற்றவர்க்கு அளித்தல்) போல.

இதற்கு மேல் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் ஊழல் இலஞ்சம் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பொது வாழ்க்கைக்கே வராமல் எந்த தேர்தல் முறைகளிலும் நிற்க விடாத சட்ட சீர்திருத்தம் போன்றவை எல்லாம் வேண்டும்...அந்த சட்ட அடிப்படை ஒரு ஆண்டுக்குள் விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப் பட்டதாயும் மேல் முறையீடு இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.20 ஆண்டுகள் எல்லாம் வழக்கு நடக்கவே கூடாது.

அதற்கான நீதிபதிகள் தவறு செய்யும் பட்சத்தில் அது கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் போன்ற சிறியதாக இருந்தாலும், பெரும் தொகை மாறுதல் ஆக இருந்தாலும் அந்த நீதிபதியும் அந்த நீதி அமைப்பும் எவருமே அந்த அமைப்பு அந்த நீதிபதி போல் ஒரு நாளும் ஆகி விடக்கூடாது என்ற தண்டனை முறைகள் வரவேண்டும்.

ஆக வாக்களர் ஆட்சியை நிர்வாகத்தை ஏற்படுத்துவார் பற்றி முழு விழிப்புணர்வும், அவர்களுக்கு அவர்கள் எந்த பிரதி உபகாரமும் வாக்களிக்க பெறாமல் இருக்க ஆட்சியும் நிர்வாகமும் பார்த்துக் கொண்டு தேர்தல்நடத்தி நிர்வாகம் சீர் செய்யப் பட்டால் கட்சி ,ஆட்சி, அரசியல், மக்கள் , தேர்தல் வாக்குக்கான விலைபெறுதல் இவை எல்லாமே தூய்மை நேர்மை வழி வரலாம்.

எனவே மக்கள் எவ்வழி கட்சிகள் அவ்வழி கட்சிகள் எவ்வழி ஆட்சி அவ்வழி ஆட்சி எவ்வழி அரசியல் அவ்வழி...

அப்படி ஒரு வேளை நல்ல நிரந்தர மாறுதல் வந்தால்

அப்படி நிரந்தர மாறுதல் வந்தால் ஒரு வேளை நதி நீர் இணைப்பு நடக்கலாம் இந்த நாட்டிலும் நல்ல தலைமையின் பேர் லெனின், பிடல், ஹோசிமின், காந்தி, மாவோ போல் இடம் பெறலாம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






No comments:

Post a Comment