Wednesday, March 23, 2016

காவிரி எங்கள் தாய்க்கும் தாய்: மேட்டூர் அணையிலிருந்து கவிஞர் தணிகை





காவிரி எங்கள் தாய்க்கும் தாய்: மேட்டூர் அணையிலிருந்து கவிஞர் தணிகை

சூரியக் குடும்பத்தின் தந்தை சூரியன் என்னும் சராசரி அளவிலான‌ நட்சத்திரம் என்றால் பூமி உயிர் குலத்தின் தாய்.ஆனால் இயற்கை தந்த காவிரி எங்கள் மனித குலத்தின் தாய்க்கெல்லாம் தாய்.இன்று மேட்டூர் நீர்த்தேக்கத்தில் நீர் கொள்ளளவு 60 அடிக்கும் குறைவாக இருக்கிறது 120 அடி தேக்கும் முழு அளவில்.எனது ஆயுளில் 54 ஆண்டுகள் நேற்றுடன் முடித்து 55 ஆம்  ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் இந்த அன்னை நதி பொன்னியைப் பற்றி ஒரு நினைவுப் பதிவு.அதற்கான ஒரு அஞ்சலி, வணக்கம். நன்றியறிதலுடன்.

இயற்கையின் கொடையான மழை பொய்த்து விட்டால் இந்த கோடையை நகர்த்துவது என்பது நீரில்லாது பெரிதும் துன்பமுற நேரிடும்.நாங்கள் எங்கள் குடும்பத்தில் மொத்தம் 10 பேர். இது வரை நதியின் கரையும் அதன் நீருமே எங்களது ஜீவரசம்.இதுவரை இருந்தது போல் இல்லாது இந்தக் கோடை ஆரம்பமே தாங்க முடியாத உருக்கத்தில் இருக்கிறது. காலை விடியும்போதே வியர்த்து வேர்வை வழிகிறது.காலை 10 மணிக்கே வீட்டில் இருக்க முடியவில்லை.

எங்கள் வீடு பழைய கால ஓட்டு வீடு. கேட்கவே வேண்டாம். கிராமத்தில் இருக்கும் தோட்ட வீட்டுக்கார வசதி படைத்தோர் எல்லாம் குளிர் சாதனப் பெட்டி ஏ.சி வாங்கி வைக்குமளவு கடுமையான சூடு. வெப்பத்தின் அளவு செல்ஷியஸ்களில் 37 முதல் 41(அ) 42 இருந்தாலும் அதை விட 3 முதல் 6 செல்சியஸ் வரை உணர்தலில் அதிக வெப்பம் இருக்கிறது என கணினியின் கணிப்பு சொல்கிறது. எனவே பாலைவனத் தட்ப வெப்ப நிலையும், இங்கே புகை, புழுதி, மாசு ஆகியவற்றை எல்லாக் கம்பெனிகளும் உருவாக்கி விட மின்சார உருவாக்கம், அனல் மின்சார மையங்கள் கருக்கொண்டிருப்பதாலும் மனிதர்கள் நடமாட முடியா வெப்பக் காடாய் தகிக்கிறது மேட்டூர்.அனைவரும் வாழ முடியா நிலை.

இந்நிலையில் வரும் சட்டசபை மாநிலத் தேர்தலை கருத்தில் கொண்டு நீர்,மின்சாரம் ஆகியவற்றை மக்களுக்கு சிரமம் இன்றி அரசு எந்திரங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் மே மாதம் தேர்தலுக்கும் பின் இதே நிலை நீடித்தால் மின்சாரமும்,குடிநீரும் இதே போல் கிடைப்பது என்பது குதிரைக்கொம்புதான்.

என்ன ஒரு சிறு நல்லது எனில் என் மகன் போன்றோர் +2 தேர்வு எழுதும் சமயம் மின்சாரம் இரவில் படிக்க கிடைப்பது ஒன்றுதான் இந்த தேர்தல் காலத்தால் நமக்கு கிடைத்த பலன். இதே அடுத்த ஆண்டு அல்லது தேர்தல் முடிந்த பிறகு தேர்வுக்காலம் என்று இருந்திருந்தால் அதோகதிதான். எம் போன்ற சாதாரணக் குடும்பங்களுக்கு இன்னும் யு.பி.எஸ் வசதி எல்லாம் இல்லை.

நிலை இப்படி இருக்கும் போது தாய்க்கெல்லாம் தாயான எமது காவிரியை எண்ணிப்பார்க்கிறேன். இன்று தமிழ்மண்ணுக்கெல்லாம் குடி நீரும், உணவும் உருவாக காரணமான இந்த அன்னையை வணங்குகிறேன்.உணவாக,குடிநீராக, மின்சாரமாக, எல்லா ஆலைகளுக்கும் இங்கு நதி மூலமாக..மேட்டூர் என்ற நகருக்கே ஆதராமாக‌ அனைவருக்கும் ஆதரவாக இருக்கும் இந்த நதியின் குறுக்கே 1934ல் இந்த அணைக்கட்டு கட்டு முடிக்கப்பட்டு இருக்கிறது.

நான் எல்லாம் 1962ல் மார்ச் 23ல் பிறந்த சிறுவன். எங்கள் வாழ்வில் ஒன்றாகிவிட்ட இந்த தாயின் தாயை இன்று வணங்கி மகிழ்கிறேன் இந்த மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவின் தலைசிறந்த மனிதர்க‌ளுடன் அப்துல் கலாம் , உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி போன்றோருடன் உறவாடக் கொடுத்து வைத்தமைக்கும், 11 நூல்கள் எழுதிய வாய்ப்புடன் வாழ்ந்தமைக்கும், முதல் நூல் உலகின் மாபெரும் நூலகக் கூட்டத்தில் இடம் பெற்றமைக்கும்,இந்தியாவின் நாடெங்கும் வலம் வந்தமைக்கும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் என்னால் முடிந்த சேவை செய்தமைக்கும் உளபடியே பெருமிதம் கொள்கிறேன் அதனால் அடக்கமாக மௌனமாக இந்த அணை போல நதி போல இருக்க விரும்புகிறேன்.




இந்த நாளில் ஒரு செய்தி: முக நூல் என்னை முழு விடுதலையோடு எனது செயல்பாடுகளை செய்ய விட மறுப்பதால் இனி எவருக்கும் படிக்கச் சொல்லி எனது பதிவுகளின் இணைப்பை லிங்கை கொடுப்பதில் இருந்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அனைவர்க்கும் மொத்தமாக ஒரு இணைப்புக் கொடுப்பதோடு எனது பதிவு பற்றிய வலைப்பூ நிகழ்வை நிறுத்திக் கொள்ள விழைகிறேன்.வேண்டுவோர் விரும்பினால் படிக்கவும். பதில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வோம்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து முகநுல் நண்பர்கள், சமூக வலை தள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நெட் ஒர்க் செய்தால் எப்படி இருக்கும்? அப்படி செய்து அரசியலை அரசை சீரமைக்க முடியாதா? என்ற ஆதங்கத்தை தகுதியுள்ள தொழில் நுட்பம், சேவை மனமுள்ள நமது நண்பர்கள் மொழி வேறுபாடு இல்லாமல் கருத்தை பகிர்ந்து ஆக்கத்துக்கு உதவ முற்படவேண்டும் என இந்த நாளில் கோருகிறேன். அதற்கன எனது உழைப்பை நல்க தயாராக இருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment