Wednesday, March 16, 2016

ஸ்பீட் பிரேக்(வேகத் தடை ‍ 2) தலைப்புக்குள் அடங்கா தலைகள்:‍ கவிஞர் தணிகை.

ஸ்பீட் பிரேக்(வேகத் தடை ‍ 2) தலைப்புக்குள் அடங்காத் தலைகள்:‍ கவிஞர் தணிகை.




காலம் கதையின் அளவை சுருக்கி விடுகிறது.சில வரிகள் ஏன் ஒரு சொல்லில் கூட அடக்கி விடுகிறது.மண்ணாசைக்கு மகாபாரதம், பெண்ணாசைக்கு இராமாயணம் என்பது போல.இது கதையல்ல . உண்மைச் சம்பவம். கதா மாந்தர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் வாழ்வதால் பெயர்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தண்டாயுதபாணி தண்டபாணி என்றே அழைக்கப்படுவார். உங்களுக்கும் அவரைத் தெரியும். நல்ல பரோபகாரி. சமூகசேவகர், படித்த பண்பாளர். எல்லாருக்கும் நன்மை செய்வார்.அவரிடம் அன்று சர்வேஸ்வரனும் அவன் மனைவி அன்னபூரணியும் வந்து காலில் விழாத குறையாக, வெங்கட் அவர்களது ஒரே மகன்,+2வில் எதிர் மண்டபத்துக்காரர்களின் மகன்களுடன் கிரிக்கெட் ஆடியே கழித்து விட்டான் .இன்னும் கடைசி 3 மாதமே இருக்கிறது. பார்த்து பாஸ் பண்ண வைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டனர் அழுதபடி.

 வெங்கட்டுக்கு ஒரு  அக்கா பரமேஸ் ஒரு சிற்றூரில் இவர்கள் இருப்பிடத்திலிருந்து ஒரு 10 கி.மீ தொலைவில் வாழ்க்கை . விசைத்தறி சார்ந்த குடும்பத்தில் மணம் முடிக்கப்பட்டு ஆளும் கட்சி எம்.எல்.ஏவுடன் ஒரு கூட்டத்துக்கு போய் வரும் வழியில் விபத்துக்கு உள்ளாகி எம்.எல்.ஏ தம்பதியுடன் இவள் கணவனும் இறந்து விட ஒரு மகன் மகளுடன் வாழ்க்கை. மகன் குடிக்கடிமையாகிவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.




சர்வேஸ்வரனும், அன்னபூரணியும் ஒரு சிறு மளிகைக்கடை நடத்திவந்தனர். அப்போது சேலத்திலிருந்து சரக்கு ஏற்றி வந்து மாட்டு வண்டியில் இறக்கிய காலம் போய் லாரிகள் பயன்படுகின்ற இக்காலம் வரை அது அவர்கள் குடும்பத் தொழில்..சர்வேஸ்வரனும், அன்னபூரணிக்குடும்பமும் தண்டபாணிக்கும் அவர் தாய்க்கும் குடும்ப அளவில் ஆதி காலம் தொட்டு நெருக்கம். தூரத்து சொந்தம் என்றெல்லாம் சொல்லிக் கொள்வார்.அவர்கள் அண்ணார்,தம்பி குடும்பங்கள் எல்லாமும் கூட தண்டபாணியின் பெற்றோர் மற்றும் குடும்பம் ஆகியவற்றுடன் நல்ல உறவில் நல்ல நட்பில் இருந்தன.

தண்டபாணி தமது பணிகளில் ஒன்றாக அந்த ஊரிலுள்ள ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகவே தனிநேரக் கல்வி கற்பித்து வரவே இந்த வெங்கட் அதில் படிப்பதில் எந்தவித தொய்வும் இல்லாதிருக்கவே கடைசி 3 மாதத்தில் அந்த மாணவனை பள்ளி மேனிலை இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற வைத்தார். மதிப்பெண் 600க்கும் மேல் பெற்று வெங்கட் தேறி இருந்தான்.

சர்வேஸ்வரனும், அன்னபூரணியும் ஒரு தாம்பாளத்தில் கொஞ்சம் பணம் வைத்து பழம் தேங்காய் வெற்றிலைப்பாக்குடன் கொண்டு வந்து தண்டபாணிக்கு காணிக்கை செய்ய நினைத்தார்கள். ஆனால் அந்த மனிதர் அதை ஏற்கவேயில்லை.

வெங்கட் ஈரோடு சார்ந்த ஒரு கல்லூரியில் விலங்கியல் எடுத்துப் படித்து 3 ஆண்டுகளில் தேர்ச்சிப் பெற்று பட்டப்படிப்புடன் வெளி வந்து தமக்கு பாடம் கற்பித்த தண்டபாணியைப் போலவே இலவச வகுப்பு என முதலில் பள்ளிப்பிள்ளைகளுக்கு அவனது வெங்கட் என்ற வெங்கட் ட்யூசன் சென்டர் என்ற பெயரிலேயே ஒரு ட்யூசன் சென்டர் ஏற்படுத்தி நிறைய பள்ளிப் பிள்ளைகளுடன் காலப்போக்கில் கட்டணம் வாங்கி அதை ஒரு தொழிலாக்கிக் கொண்டான். இடம் போதாதால் பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தவன் தமது கடை வீட்டையே நன்கு தார்சு வீடாக்கி அதன் மேல் ட்யூசன் சென்டராகவும் ஆக்கிக்கொண்டான். கீழ் மளிகைக் கடை. மேல் ட்யூசன் சென்டர்.பக்கத்து ஊரில் இவனுக்கும் முன்பிருந்தே மற்றொரு ட்யூசன் நடத்திக் கொண்டு பள்ளி நடத்தி வரும் ராமனுடன் போட்டி போடுமளவு இவனது ட்யூசன் சென்டரும் வளர்ந்திருந்தது.

தண்டபாணியின் சகோதரி மகள்களும் இவனைப் போலவே ஆசிரியர்கள் ஆனார்கள். ஆனால் அதில் இரண்டு பெண்களில் ஒரு  பெண் அங்கு தண்டபாணியின் சகோதரி  வீட்டின் மேல் ட்யூசன் எடுப்பதைப் பார்த்த சர்வேஸ்வரனும் அன்னபூரணியும் வெங்கட் பேச்சைக் கேட்டு இப்படி உங்க அக்கா மகளும் ட்யூசன் எடுத்தால் எப்படி என் மகன் நடத்தும் சென்டருக்கு பிள்ளைகள் படிக்க வருவார்கள் என்று வீட்டில் வந்து கேட்டனர்.அதை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்கள்.

தண்டபாணியோ சிரித்தபடி கவலைப்படாதீர்கள் ,பெண் பிள்ளைகள் நாளைக்கு திருமணம் ஆனால் வேறு இடம் போய்விடுவார்கள், அவர்களுக்கும் தந்தை இல்லை, அவர்கள் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே அதுவும் அவள் ஏற்கெனவே வேறு ஒரு ட்யூசன் சென்டரில் ஆசிரியை வேலை பார்த்து அங்கே பிரச்சனை என்பதால் அவளிடமே படிக்க வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டதால் மட்டுமே ட்யூசன் எடுக்கிறாள்.இதை எல்லாம் பெரிது படுத்திக் கொள்ள வேண்டாம் என ஆறுதல் படுத்தி அனுப்பினார்.

அடுத்து அந்த ட்யூசன் எடுக்கும் தண்டபாணியின் விதவை அக்காவின் மூத்த மகளும் ஆசிரியர். அவளை வெங்கட் விரும்புவதாகவும் கேட்டார்கள். தண்டபாணி அந்தப்பெண்ணை விசாரித்தார். அது அவனை எனக்குப் பிடிக்காது எனச் சொல்லி தாம் ஆசிரியை பயிற்சியில் இருக்கும் போது இன்னொரு நபரை தேர்ந்தெடுத்து விட்டது  என்பதைக் கூட மாமாவிடம் சொல்லாமல் பிற்காலத்தில் அந்த நபரையேவீட்டில் எல்லாம்  சொல்லிப்போராடி மணமுடித்துக்கொண்டது எல்லாம் தண்டபாணிக் குடும்பத்தில் நிகழ்ந்த  வேறு கதை.

ஏமாற்றி விட்டீர்கள், ஏமாற்றி விட்டீர்களே என அன்னபூரணி தண்டபாணியிடம் அங்கலாய்த்துக் கொண்டாள்.

இவர்கள் அனைவரையும் சிறு பிள்ளைகளாக தம்மிடம் வந்து இலவச கல்வி பயிலும்போது இது போன்ற தவறான புரிதல்கள் நேர்ந்திருக்கலாம் என கணித்துக்கொண்டார் தண்டபாணி.

தண்டபாணியின் அண்ணார் தேவேந்திரன் வீடு கட்டும்போது சிமென்ட், மணல் லாரிகள் லோடு உள்ளே வர தற்காலிகமாக சாக்கடையை அடைத்து சில கற்கள் போட்டு அதன் மேல் ஏறி லாரிகள் வீடு கட்ட லோடு இறக்க அதனால் சாக்கடை மேல் நீர் வர அதை அவர்களிடம் நேராக கேட்காமல் தண்டபாணியிடம் வந்து இப்படி உங்க அண்ணார் செய்வது நியாயமா ? எங்களுக்கு நியாயம் செய்து அவரை அந்த சாக்கடையிலிருந்து கற்களை அகற்றி எப்போதும் போல் இருக்கச் செய்யுங்கள். என்றனர் வெங்கட் பெற்றோர்.

என் சகோதரரும் நானும் வெகுகாலம் பேசுவதில்லை. நீங்கள் உங்கள் கோரிக்கையை நேராக அவரிடம் கொண்டு செல்லுங்கள் என்னிடம் ஏன் இதை எல்லாம் சொல்கிறீர் என ஒதுங்கிக் கொண்டார் பெரிய சிக்கலாக மாறாமால் பார்த்துக்கொண்டார். நாளடைவில் அந்த வீட்டு வேலை முடிந்த பின் சாக்கடையை எல்லாம் அவரது சகோதரர் சரி செய்து கொடுத்து விட்டார்.

இப்படி எந்தப் பிரச்சனை என்றாலும் தண்டபாணியிடம் வெங்கட்டும் அவர்கள் குடும்பமும் ஓடி வந்து நிற்கும். ஆனால் நல்ல வளர்ச்சிக் கட்டங்களில் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாது.

குறுகிய 5 ஆண்டுக்குள் வீடு கட்டி,ட்யூசன் சென்டர் நடத்தி இந்தப் பெண் இல்லை என்றவுடன், வெங்கட்டின் சகோதரி ஊரில் அவர்கள்வீட்டின் அருகெ ஒரு பெண்ணை தேர்ந்து மணந்து ஆண் குழந்தையும் பெற்று அமர்க்களமாக இருந்தான் வெங்கட்.

ஒரு இரு சக்கர வாகனத்தை இவர்கள் அக்கா ஊரில் உள்ள வங்கி ஐசிஐசி மூலம் கடனுதவிப்பெற்று வாங்கிவிட்டு அதன் இ.எம்.ஐ சற்று கால தாமதம் ஆனாலும் 500 ரூ அபராதம் கேட்கிறார்கள் அண்ணா என்ன செய்வது இது போல் பல முறை ஆகிவிட்டது என்றான் வெங்கட் தண்டபாணியிடம். உடனே ஒரு நகையை ஏதாவது வைத்து அந்த வண்டிக் கடனை முடி அந்த வங்கி அப்படித்தான் செய்யும் என அந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.



வெங்கட் தமது ட்யூசன் சென்டரை பெரிது படுத்த தமது கடை , ட்யூசன் சென்டர் இருக்கும் வீட்டை அதன் உரிமைப் பத்திரம் பட்டாவுடன், மனைவி,மாமனார் வீட்டு நகைகள் எல்லாம் அடமானம் வைத்து ஒரு தேசிய வங்கி மூலம் கடன் பெற்று ஒரு நிலத்தை வாங்கிப் போட்டான். தமது கடன் சொத்து எல்லாவற்றுக்கும் முதலாம் வாரிசாக மனைவி, இரண்டாம் வாரிசாக ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தை மூன்றாம் வாரிசாக தமது அம்மா அன்ன பூரணி எனப்போட்டிருந்தான். தமது தந்தையிடமிருந்து வீட்டை எழுதி தன் பேருக்கு மாற்றி அதன் அத்தாட்சிகளைத்தான் வங்கியில் வைத்து நிலம் வாங்க கடன் பெற்றான்.எனவே எதை செய்தாலும் அவனின் மனைவி குழந்தையை முன்னிறுத்தாமல் ஏதுமே செய்ய வழி இல்லை. ஆமா ம் எதுவுமே செய்ய வழி இல்லைதான்.

இனிதான் கதை ஆரம்பம். ஆம். தமது சித்தப்பா மகன்களின் பங்கான தமது வீட்டின் அடுத்துள்ள பாகத்தை எல்லாம் விலைக்கு கேட்டு வந்தான் வேறு ஆட்களை வைத்து. பொதுவாக இருந்த சர்வேஸ்வரன்,அவரது சகோதரர்கள் சொத்தை அவர்களுக்கு எல்லாம் பிரித்து கொடுக்கவும் தண்டாயுதபாணியே முன் நின்று பிரித்துக்கொடுத்தார். தம்பியின் வீட்டுக்கும் தம் வீட்டுக்கும் உள்ள பொதுச் சுவருக்கும் கூட ஒரு அத்தாட்சிப்பத்திரம் எழுதிக்கொள்ளலாம் எனத் தம்பி மகன்களை தண்டபாணி மூலம் கேட்டு வந்தார்.

இந்நிலையில் குலதெய்வம் கும்பிட எல்லாம் சேர்ந்து அவர்கள் கோவிலுக்கு சென்றார்கள்.சர்வேஸ்வரன் குடும்பம் அவர்கள் வகையறா எல்லாம். செய்தி வந்தது சர்வேஸ்வரன் தம்பியின் மகன்களில் இளையவர் இவர்கள் இருவருமே வெங்கட்டை விட வயதில் பெரியவர்கள்.சர்வேஸ்வரனின் தம்பியின் இறப்புக்கும் கூட தண்டபாணியும் சென்று இருந்தார் 8 கி.மீ தள்ளி உள்ள ஊருக்கு துக்கம் விசாரிக்க. சர்வேஸ்வரன் முன்னிலையில் தான் எல்லாம் நடந்தது எங்கே விட்டேன்? ஆம் சர்வேஸ்வரனின் தம்பி மகன்களில் இளையவர் "வெங்கட்டை வெட்டி வீழ்த்தி விட்டார்". காரணம் வெங்கட் அடிக்கடி அவர்களின் பாகத்தையும் விலைக்குக் கேட்டதுதானாம்.ஆக சர்வேஸ்வரன் குடும்பத்திலும், அவரது சகோதரர் ஏழுமுகம் குடும்பத்திலும் ஆண் வாரிசு கிடையாது. சர்வேஸ்வரனின் தம்பிக் குடும்பத்தில் மட்டுமே இரு ஆண் சகோதர வாரிசுகள் வெட்டி விட்டாலும் கொஞ்ச நாளில் வெட்டியவன் வெளி வந்து விட்டான். போதிய சாட்சிகள் இல்லையோ அது நம் நாட்டு நீதிமன்றத்துக்கே வெளிச்சம். அந்த வெட்டிய பையனும் அவன் சகோதரும் கூட தண்டபாணியிடம் நன்றாகவே பேசுவார்கள். அவர்கள் லாரித்தொழில் செய்பவர்கள்.

எல்லாம் முடிந்தது. அந்த வழியே நடக்கும்போதெல்லாம் தண்டபாணிக்கு வலித்தது. நம்மிடம் படிச்ச பையனுக்கு இப்படிஆகிவிட்டதே என. சர்வேஸவரனும், அன்னபூரணியும் ஒரு நாள் தண்டபாணியைக் கூப்பிட்டு நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம், அல்லது பள்ளிப் பாளையம், குமாரப்பாளையம் பஞ்சம் பிழைக்கப் போகிறோம். என்றார்கள். மருமகளும், குழந்தையும் அவர்கள் சொந்த வீட்டுக்கு சென்று விட்டார்கள்.

வங்கி வாங்கிய கடனுக்கு இ.எம்.ஐ கட்டச் சொல்லி வற்புறுத்தியது மேலும் இன்னும் சில மாதங்களுக்குள் கட்டவில்லை எனில் வாங்கியவர் இறந்து விட்டதால் ஜப்தி நடவடிக்கை என்றும் ஏல நோட்டீஸ் விட்டு விடுவோம் என்றும் கடையில் நோட்டீஸ் ஒட்டி விடுவோம் என்றும் பயமுறுத்தியது.ஒவ்வொரு தவணையும் 7500 ரூபாய் மாதம் கட்ட வேண்டியது....நிறைய மாதங்கள் பாக்கி இருந்தன.

நீங்கள் கவலைப்படாதீர்கள், பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன் என தண்டபாணியே பிரச்சனையைக் கையில் எடுத்தார். எந்த நீதிமன்றமும் சென்றிருந்தாலும் அவ்வளவு சுலபமாக விரைவாக நலமாக முடிந்திராத வண்ணம் இயற்கை வழிகாட்ட முடித்துக் கொடுத்தார். எப்படி?

முதலில் ‍ஹீரோ ‍ஹோண்டா இரு சக்கர வாகனத்தை விற்றார் 30000 ரூபாய்க்கு அது ஒரு தனிக்கதை விற்றதைப் பற்றிச் சொன்னால். அதன் உரிமம் மனைவி வீட்டில் இருந்தது. யார் சென்று எத்தனை முறை கேட்டாலும் கொடுக்க மறுத்தவர்கள்,தண்டபாணி தன்னுடன் சர்வேஸ்வரன் மற்றும் சொந்தங்கள் சூழ, ஆனால் தன்னைத் தவிர வேறு யாரும் பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் அன்றுதமக்கு காய்ச்சல் என்ற போதும், தனது பள்ளியில் முதல் மாணவனாக மதிப்பெண் பெறும் சிறுவனின் ஆண்டு கணக்குத் தேர்வு மறு நாள் இருந்தபோது மதிய உணவை உண்ணாத போதும் சென்றார்.பொது நல வாதி வெகு ஜன விரோதியாகும் வரை உறைக்காது அல்லவா?

விற்பனை செய்யும் பணத்தில் பாதி கொடுத்து விடுவேன் என உறுதி அளித்தவுடன் முதல் முறையிலேயே உரிமப் புத்தகத்தை தண்டபாணிக் கையில் ஒப்படைத்தார்கள்.



செத்தவன் வண்டி என நிறைய பேர் வாங்க மறுத்தார்கள் அதை எல்லாம் சரிக்கட்டி தனக்குத் தெரிந்த தன்னைத் தெரிந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவருக்கு விற்றார். ஆனால் பணத்தைப் பிரித்து இரு சாரருக்கும் கொடுத்த அன்று மாலையே வண்டி வேண்டாம் என வாங்கியவர் திரும்பக் கொண்டு வந்து வண்டியை தண்டபாணி வாசலில் நிறுத்தி விட்டார்.பாதி 15000 பெற்ற பணத்தில் இரு மாத‌ தவணையை வங்கியில் கட்டி மேலும் கால அவகாசம் கேட்டு விட்டு கடனை முடித்துக்கொள்கிறோம் என சர்வேஸ்வரனை விட்டே கட்டி வைத்தார். வெங்கட் மனைவி குடும்பத்தின் சகோதரர்கள் வந்து வாங்கிச் செல்லக் கூட வராதவர்களை வலுக்கட்டாயப்படுத்தி வந்து பணத்தைப் பெற்றுச் செல்க இங்கு எந்த‌ பயமும் வேண்டாம் என தைரியப்படுத்தி

ஆனால் வண்டி வாங்கியவர் இதற்கு இன்சூரன்ஸ் கட்டவேயில்லை என்றார், வண்டி அடிபட்டிருக்கிறது என்றார். ஒரு சொந்தக்கார மெக்கானிக் பையனை விட்டு வண்டி நன்றாக இருக்கிறது என்று சான்று சொல்லி, இருதரப்பையும் அழைத்து ஆளுக்கு பாதி 750ரூபாய்+ 750 ரூபாய் கொடுத்து இன்சூரன்ஸ் கட்டிக்கொள்ளக்கொடுங்கள் என்றும் தமக்கு தெரிந்த சேலம் அலுவலகத்தில் அந்த நபரை சென்று பாருங்கள் அவர் எல்லாம் ஏற்பாடும் செய்வார் என அனுப்பி வைத்தார்.வண்டி வாங்கியவர் சமாதானம் ஆகி வண்டியுடன் கிளம்பி விட்டார்.

ஆக மூச்சு விட அவகாசம்....வெட்டப்பட்ட வெங்கட் வீடும், அவன் மனைவி வீடும் அப்படியே அந்த வீட்டை,நகையை அடமானம் வைத்து வாங்கியபெரிய ட்யூசன் சென்டர் கட்ட வாங்கிய‌ நிலத்தையும் விற்று எங்களைக்காப்பாற்றி விடுங்கள் என்றார்கள்.பொறுங்கள் அதற்குமொரு நேரம் வரட்டும் என முயற்சி செய்தார் தண்டபாணி.

தண்டபாணியின் வீட்டு லேன்ட் லைன் மூலம் தான் வெங்கட் தந்தை வெங்கட்டின் மனைவி வீட்டுக்கு பேசும்போதெல்லாம் பேசப்பட்டது. இரு சமபந்தி குடும்பமும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக பேசிக் கொள்வதில்லை.தண்டபாணி தனது கையிலிருந்துதான் செலவு செய்தாரே தவிர பாதிக்கப்பட்ட இரு தரப்பிலுமிருந்தும் எதையுமே எப்போதுமே பெற்றுக்கொள்ளவில்லை. போன் செலவுக்கும் கூட தமது வறுமை தம்முடன் இருக்கும்போதும்.

நிலத்தை யார் யாரோ அரசியல் பிரமுகர்கள் உட்பட எல்லாம் கேட்டார்கள் படியவில்லை. அதற்கு நேரடியான பட்டாவும் வாங்கப்படவில்லை. கடைசியில் தண்டபாணியின் சிறுவயது பள்ளித் தோழர் பட்டு நெசவில் பெரிய வியாபாரம் செய்யும் அரங்கநாதன் ஆர்வப்பட்டார். அத்தாட்சி பற்றி கொஞ்சம் தயங்கினார். ஆனால் எல்லா நம்பிக்கையும் ஊற்றி நிலத்தை அவருக்கே முடித்து பெரும் பணத்தைப் பெற்று அதில் பாதி தொகையைக் கொடுத்து வங்கிக்கடனை அடைத்து இருக்கும் கடை வீட்டை மீட்டு மீதிப்பணத்தை வெங்கட் மனைவிக் குடும்பத்துக்கு நகையை மீட்க கொடுத்து விட்டார்.  எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது.

ஆனால் நிலம் கிரயம் செய்ய போகும் நேரம் நிலத்தை விற்று வீட்டை மீட்டாலும் அது வாடகைக்கு இருப்பதற்கு ஒப்பானதாமே என சர்வேஸ்வரன் முடக்கடி போட்டதும் இதை யார் எப்படி சொன்னார் எனக் கேட்க ,அதை தம் மகள் தன் சொன்னார் என சர்வேஸ்வ்ரன் சொல்ல அப்போதுதான் அன்றுதான் தண்டபாணி சர்வேஸ்வரனை கடுமையாகப் பேசி விட்டார். சந்தேகம் எதற்கு என....



இப்படி எல்லாம் முடிந்ததும் நிலப் பத்திரப் பதிவு முடிந்து ஊர் திரும்புகையில் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் வரும்போதே பெண்ணுக்கு சீர்வரிசையாக கொடுத்த இரும்புக்கட்டில், மெத்தை, பீரோ எல்லாம் எப்போது எடுப்பது? என வெங்கட் மனைவியின் தந்தைக்கேட்க, சர்வேஸ்வரன் வெங்கட் நினைவு நாள் முடியட்டுமென்றுசொல்ல...

அந்தநாள் முடிந்த பின் இருதரப்பிலும் மோதிக்கொண்டார்கள் அதற்காக. ஆனால் அப்போது தண்டபாணிக்கு செய்தி சொல்லப்படவில்லை. எனவே தண்டபாணி அப்படியே விட்டு விட்டார்.

இந்த பெரிய மனுசன் பேச்சைக் கேட்டு எங்க செல்வம் எல்லாம் போச்சு, அவங்களுக்கே எல்லாம் கொடுத்தாச்சு, என்றாள் அன்னபூரணி, இவளை 3 ஆம் வாரிசாகவும், மனைவி முதல் வாரிசாகவும் குழந்தை இரண்டாம் வாரிசாகவும் இவனது மகன் இவளை வைத்திருந்தது தெரியப்படுத்தப்பட்டும், தாயுடன் குழந்தை இருக்க, வெங்கட் மனைவி எதற்கும் சம்மதிக்காமல் கையொப்பம் இடாமல் இருந்தால் இவர்களுக்கு எதுவுமே இந்த நிம்மதியான வாழ்வுக்கே வழி இல்லை என்பதெல்லாம் இந்த தற்குறிக்கு எப்படி புரியும்?

 எனவே எந்த வகையிலும் இவர்களை விட அறிமுகம் இல்லாத குடும்பத்துக்கு எப்படி தண்டபாணி அவ்வளவு தூக்கி கொடுப்பவரா? திருமணமாகி 5 ஆண்டுகளில் வாழ்வு முடிந்து போய் ஒரு கைக்குழந்தைக்கு தாயாக இருப்பவளுக்கு நீதி செய்ய வேண்டாமா?அவர்களுக்கு நிலம் விற்றதில் வீட்டுக் கடன் கட்டியது போக மீதமிருப்பதை அவர்கள் நகையை அடமானத்தில் இருந்து மீட்க தரவேண்டாமா? எல்லாம் முடிந்தவுடன் பார் அவர் தான் எல்லாம் செய்தார் அவரையே இப்படி பேசுகிறார்கள் பாருங்கள் என அடுத்தவர் பேசிய வார்த்தைகளும் காதில் விழாமல் இல்லை தண்டபாணிக்கு.

எப்படி வேண்டுமானாலும் பிழைக்கத் தெரிந்த  மகளிர் ஒருவரின் பேச்சைக்கேட்டு நினைவு நாளில் வெங்கட்டுக்கு படைத்து விட்டு வெற்றிலைப் பாக்குத் தாம்பூலம் அனைவர்க்கும் வழங்க, தண்டபாணிப் பெற்றுக்கொள்ளவில்லை அது அவருக்கு உகந்த பழக்கமாகத் தெரியவில்லை.

என்னதான் இருந்தாலும் வெங்கட்டின் ஆண் குழந்தை உங்களின் வாரிசல்லவா? அதற்காகவாவது அதை பார்ப்பதற்காகவாவது நீங்கள் அவர்களுடன் நல்லுறவு பேணுங்கள் என தண்டபாணி சொன்ன சொல்லுக்கு அன்னபூரணி எங்கள் பையனே எங்களுக்கு ஆகவில்லை அதெல்லாம் என்ன? என்றவர்கள் இப்போது உறவாடுவதாகவும், அந்த வெங்கட் மனைவி வெறொருவரை மணம் செய்து கொண்டதாகவும், கடை அருமையாக வியாபாரமாவதாகவும் அத்தனையும் மகளுக்கு ஆவதாகவும் அறிந்து கொண்டார் தண்டபாணி.

உங்களுக்கு என் கையால் ஒரு நாளாவாது எங்கள் வீட்டில் ஒரு நேரம் சோறு சமைத்து போடவேண்டும் எனச் சொல்லி சொல்லி ஆதங்கப்பட்டாள் அன்னபூரணி வெளியில் எங்கும் சாப்பிடாத தண்டபாணிக்கு.

தண்டபாணி தமது மனைவியிடம் ஏற்கெனவே சொல்லி இருந்தார். அவர்கள் வேலைமுடிந்து விட்டது இனி அவர்களுடன் அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது என...

அதற்கேற்ப ஒரு நாள் தண்டபாணியின் மனைவி சண்முகா அந்தக் கடை வீதி வழியேதான் நாளும் நடக்க வேண்டும். சண்முகா அப்படி ஒரு நாள் செல்லும்போது சர்வேஸ்வரன் தமது மனைவியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தவர் இடித்து பேசுவதை நிறுத்தி விட்டாராம்.அவர்கள் பேசுவதை தண்டபாணி மனைவி கேட்டு தண்டபாணிக்குடும்பம் மறைந்த வெங்கட்டின் மனைவி குடும்பத்தாருக்கு போனில் தகவல் சொல்லி விடுகிறார்கள் அவர்களைப்பற்றி  என்றெல்லாம் சந்தேகம் கொள்கிற படியால் அவர்களுக்குத் தெரியும்படி ஏதும் பேசவேண்டாம் என எச்சரிக்கை செய்தாராம் தமது மனைவியை இடித்து....




இப்போது சண்முகா தண்டபாணி அவரது மகன் தவிர வேறு எல்லாமே அந்தக் குடும்பத்திடம் நல்லுறவில் இருக்கிறார்கள் பேச்சு வார்த்தையுடன். தண்டபாணியின் சகோதரர் தேவேந்திரன் குடும்பம் உட்பட.மளிகைக் கடையில் நல்ல வியாபாரம் நடக்கிறது. மேலே வேறு ட்யூசன் சென்டருக்கு வெங்கட் பேரிலேயே வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.

தண்டபாணி எப்போதும் போலவே இருக்கிறார். தற்கொலை செய்து கொள்வதாக சொன்னவர்கள், ஊரை விட்டே போகவிருப்பதாகச் சொன்னவர்கள் வெங்கட் கதை முடிந்த பிறகும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். காலச் சக்கரம் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. தண்டபாணியின் சகோதரியின் பெண்கள் இருவரும் நல்லபடியாக வாழ்ந்தபடியே ஆசிரியர்களாகவே பணி புரிந்து அரசுப் பணிக்கு சென்று விட்டார்கள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்தக் கதையில் இருக்கும் தண்டபாணி நீங்கள் நன்கு அறிந்தவர்தான். அவர் அனுபவித்த, செய்த உண்மைச் சம்பவமே இந்தக் கதை.






No comments:

Post a Comment