Friday, December 18, 2020

தலைமைப் பண்பு: தலைமை: கவிஞர் தணிகை

 தலைமைப் பண்பு: தலைமை: கவிஞர் தணிகை



1. சேக் தாவுத்,2,செந்தமிழ்த் தேனீ,3. ரம்யா அசோக்,4. இளம் பேச்சாளர் ராஜி.

தலைமைப்  பண்பு என்றவுடன் அப்துல் கலாம் என்ற தீபத்தை அணையாமல் காத்து வெளிக்காட்டிய விக்ரம் சாராபாய் இந்திய இஸ்ரோ குழுவினர் முதல் திட்டத்தில் தோல்வியை சந்தித்த போது தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு அந்த தோல்விக்கு தாமே காரணம் என்றதும் மிஷன் வெற்றி பெற்றதும் கலாமை முன்னிறுத்தி ஊடகத்தினருடன் கலந்துரையாட வைத்ததும் முதல் குறிப்பாக நினைவில் நிற்கிறது.(பேராசிரியர் சதீஸ் தவான் is right here it is not டாக்டர் விக்ரம் அம்பாலால் சாராபாய் எனக் குறிப்பிட்டது தவறு...பேராசிரியர் சதீஸ் தவான் என்பதே சரி...))

இங்கு இந்த தமிழ் நாடு அன்பு வழி நற்பணி மன்றத்தின் பயிற்சிக்கான பாடத்திட்டத் தயாரிப்புக்கான 4 குழுவினருள் எமக்கு தலைமைப் பண்பு என்ற பாடத் தயாரிப்பு வழங்கப் பட்டிருப்பது எமக்கெலாம் பெருமை மிகு மகிழ்வே காலத்தின் பதிவே.

இதன் தலைமை ஏற்று இருக்கும் கவிஞர் தணிகையாகிய அடியேனும் எமது குழுவில் மிகவும் இளையோராகிய இளம் பேச்சாளர் ராஜி அவர்களை முன்னிருத்தி இந்த பாடத் திட்டத்திற்கான தலைமைப் பண்பு என்ற தலைப்புக்கான பாடத் திட்ட வடிவை சமர்ப்பிக்கலாம்  என முடிவெடித்து அவர் மூலம் எங்கள் குழுவின் சார்பாக சமர்ப்பிக்கிறோம்.

உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை காலச் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் இடம் பெறாதவர்கள் பற்றியும் இந்தக் காலக் கட்டத்தில் நினைத்துப் பார்க்கிறோம் எங்கள் தலைப்பை ஒட்டி எண்ணிறந்த தலைவர்களின் பெயர்களும் அவர்களின் குணாம்சங்களும் குறை நிறைகளும் எஙகள் மனதில் பெரும்புனலாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

அலெக்ஸாண்டர் உலகையே வெல்ல எத்தனித்து கையில் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை என்று தனது உயிரற்ற உடலை எடுத்துச்  செல்லும் போது தனது கரத்தை வெளியில் காண்பிக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற தனது இறுதி விருப்பத்தை வெளிப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது.

ஆங்கிலேயர் உலகையே தனது குள்ள நரித் தந்திரத்தின் மூலம் வளைத்து விடலாம் என மனப் பால் கொண்டிருந்தனர் அவர்கள் பேராசையும் மண்ணாய்ப் போனது என்பதை உலக சரித்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறது.








அக்பர் (பள்ளி சென்று பாடம் பயிலாதவர்)

3ஆம் வகுப்பு வரை படித்தவர் ஆண்ட காலம் பொற்கலாம் என்று சரித்திரத்தில் நாம் படித்து வந்தோம், காமராசரும் தமிழகத்தை ஆண்ட காலம் மிகவும் முக்கியமானது எனக் கருதப் படுகிறது. அவர் படிக்காத மேதை என்று புகழப் படுகிறார்

. சித்தார்த்தர் என்னும் இளவரசர் கௌதம புத்தராகி ஞானம் பெற்று மனித குலத்தின் துன்பம் எல்லாம் தீர ஆசையே அழிவுக்கு காரணம் என்ற ஞானோபதோசேத்தை வழங்கி துறவின் வழி சென்றார்.உயரிய அறிவு சிகரம் எட்டுவதையே ஞானம் எனலாம் மனித குலம் அப்படிப் பட்ட நிலையை எட்டுவது என்பது இலக்கு என்றான போதும் பசி வந்திடப் பற்றும் பறந்து போம் என்ற பழமொழிக்கேற்ப உடற் பசியா அறிவுப் பசியா என்று கேட்கும் போது உடற்பசி தீர்த்தலே முன் வந்து நிற்கிறது இங்கு நாம் சொல்லப் புகுவது வயிற்றுப் பசி . உண்மையில் உடற்பசி என்பதும் கூட உணர்வுப் பசியாக‌ வந்து விட்டால் அறிவுப் பசி அல்லது அறிவு என்பதும் பின்னுக்குத் தள்ளப் படுவது என்பது காமத்தில்.

காமம் என்பது அறிவை சிதைக்கிறது எனவே அதைக் கைவிட்ட ஞானிகளும் உண்டு,அதை அளவாகப் பயன்படுத்தி மனித குலத்துக்கு புதிய பிறப்பென புதிய ஆக்கபூர்வமான‌ சக்தியாக மாற்றி மனித குலத்தின் துன்பம் துயர் தீர்க்க மனித சக்தியாக மாற்றி புனிதம் தேட வேண்டும் என முயன்ற தலைவர்களும் உண்டு மகாத்மா காந்தியின் காமத்தின் வழி விளைந்த அதன் வழி விழைந்த அதை ஆற்றொழுக்குப் படுத்திய அதிலிருந்து மீண்ட அத்தியாயங்கள் மனிதர்கள் கற்க பாடமாகும்.

தலைவர் அல்லது தலைமைப் பண்பு என்பது எவ்வாறு இருக்க வேண்டும், ஆள்வது அதாவது மக்களுக்கான நல் வாழ்வைத் தர நிர்வாகம் செய்வது

உழைப்பது என்பது மட்டுமே ஒரு தலைவருடைய வேலையாக ஏன் இருக்க வேண்டும்?




ஏன் என்றால் விண்வெளி, பூமி, உயிர்களின் தோற்றம், மனித குல வரலாறு என்பதையெல்லாம் கவனிக்க ஆரம்பித்தால் உயிர்கள் என்றான பின் பசி என்பது மனிதரை மட்டுமல்ல உயிர்களை எல்லாம் வாட்டும் ஒரு இன்றியமையாத் தேவையாகிறது. எனவேதாம் இதை பசிப் பிணி என்றார் ஆன்றோர். எனவேதாம் பசிப் பிணி தீர்த்தலையே தமது தலையானப் பணியாக இராமலிங்க வள்ளலார் என்ற புனிதர் தமது புனிதப் பணியாகவும் முதற் பணியாகவும் ஏற்றுக் கொண்டு பசிப் பிணி தீர வடலூரில் அணையா அடுப்பு ஏற்படுத்தி நாடிச் செல்லும் அனைவர்க்கும் உணவு வழங்கி அருட் பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை என்றும் வாடிய பயிரைக் கண்டபோதெலாம் மனம் மிக வாடினேன் என்று மனிதத்தின் சிகரம் ஏறி உச்சியில் வீற்றிருக்கிறார். அதையே தமது முதல் குறிக்கோளாக தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றமும் கொண்டிருக்கிறது என்பதை நாம் சொல்லாமல் மேற் செல்ல முடியாது.






Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.” Mahatma…

புவியில் உள்ள அனைத்து உயிர்களின் தேவைக்கும் பூமியில் போதுமான வளம் இருக்கிறது ஆனால் பேராசைக்கு எந்த கிரகத்தில் குடியேறினாலும் அவை யாவும் போதாது. (இது மகாத்மா முன் சொன்ன வார்த்தைகளின் புது வடிவம்)




ஆக தலைமைப் பண்பு என்பதில் புவி உயிர்க்கெலாம் பசி தீர்த்தல் என்பதோடு மட்டும் 

தலைவரின் உழைப்பும் பணியும் தீர்ந்து விடாது,அதற்காக உயிர்களை நெறிப் படுத்தல்

 வேண்டியதும் அவசியம். அதற்கு முதலில் தலையாய உயிரான மனித உயிர்களை ம

னித குலத்தை அதற்கேற்றவாறான அடிப்படைத் தளத்தில் ஏற்றியாக வேண்டும். அப்ப

டிப் பட்ட செயல்பாடுகளின் போது குற்றம் செய்வாரை தண்டிப்பதும் அதன் மூலம் மறு

படியும் குற்றம் நேராதபடி சமுதாய அமைப்பு குலையாத படியும் பார்த்துக் கொள்ளல்

 அவசியம். எனவே அந்த தலைவரே முதலில் அதற்கேற்றவாறான நெறியாளராக இரு

க்க வேண்டியது அதி அவசியம். அப்போதுதான் சரியான தொண்டர் படை ஏற்பட வழி 

பிறக்கும் இல்லாவிட்டால் குண்டர் படை ஏற்படும். ராஜிவ்காந்தி சதைத் துகளாக மனித

 வெடிகுண்டால் பிய்த்தெறியப் பட்ட பின்,இந்திரா சீக்கியரால்  பாதுகாவலராய் இருந்

தே சுடப்பட்ட

பின்,

 காந்தியின் சௌரி சௌரா கலவர அமைதிப்படுத்த முயன்ற‌ கதை, இந்திய சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட இந்து முஸ்லீம் வேற்றுமைக் கலவரங்கள்,அதை அமைதிப்படுத்த காந்தியாரின் நவகாளி யாத்திரை, இப்படி பல் வேறுபட்ட காரணங்களால் ஏதோ ஒரு காரணத்தால் மனித குலம் அழிக்கப் படும் குண்டர் படையால்.

அதன் பேர் உலகப் போராய் இருக்கலாம், அமெரிக்காவின் இரட்டைக் கோபுர அழிப்பாய் இருக்கலாம், ஈழத்து இனப் படுகொலையாக இருக்கலாம்,சீனத்து தியானன்மென் போராட்ட அடக்குமுறையாக இருக்கலாம் அல்லது ஜப்பானின் நேரந்தவறாமையைக் கடைப்பிடிக்க பள்ளியின் இரும்புக் கிராதி உள்ளே வர முயன்ற பூம்பஞ்சுக் குழந்தையின் சிறு உயிராய் இருக்கலாம், கும்பகோணத்து பள்ளியின் தீ விபத்தாய் இருக்கலாம், பஞ்சாப் படுகொலையாக இருக்கலாம் அல்லது பல்வேறுபட்ட உயிர்க் கொள்ளை போகும் விபத்துகளாய் இருக்கலாம் இப்படி பல்வேறுபட்ட வடிவங்களில் அவை நடக்கும் அவற்றுக்கு எல்லாம் பின்னால் தலைமை தாங்கும் மூளையின் வெறித்தனம் இருக்கும். ஆனால் இதில் எல்லாம் தொன்று தொட்டு மடிவதும் மாய்வதும் கோடிக்கணக்கான‌ அப்பாவி மனித உயிர்களே...




 ஆல்ப்ரட் நோபெல் வெடிமருந்தைக் கண்டு பிடித்தது முதலில் ஆக்கபூர்வமான பணிகளுக்கு மட்டுமே என்றார் இப்போது அமைதிக்கான நோபெல் பரிசு கொடுக்கப் படும் போதும் உலகெங்கும் அமைதியும் அறப்பணியும் இல்லாமல் உலகெங்கும் உயிர்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, பிணிக்கு மருந்தின்றி, இளையோர்க்கு கல்வியின்றி வேலையின்றி,அடிப்படைத் தேவையைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாமல் கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், பட்டினி,மது, புகை,போதை ,எனத் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன பல் வேறுபட்ட பாதைகளில்.

ஆனால் எல்லா நாடுகளிலும் மக்களாட்சி முறை என்ற பேரில் கட்சிகளும் ஆட்சிகளும்

 தலைவர்களும் இருப்பதாக பேர் இருக்கின்றன.மன்னராட்சியும், பிரபுத்துவ ஆட்சியும், முதலாளித்துவ ஆட்சியும் மறைந்துவிட்டன எனச் சொல்லப் படுகின்றன. ஆக ஒரு சரி

யான மக்களாட்சி முறையை ஏற்படுத்த

வேண்டிய நெறி ஒரு தலைமைப் பண்பு இருப்பார்க்கு எல்லாவற்றையும் விட தலையாய பணியாகி விடுகிறது.

தலைமைப் பண்பு அல்லது ஒரு தலைவருக்கு என்ன என்ன பணிகள் என இது வரைக் குறிப்பிட்டிருக்கிறோம் எனில்: 

1.உயிர்களின் உறு பசிப் பிணி தீர்த்தல்

 2. மக்களை அறநெறிப் படுத்தல். 3. அதற்கான தொண்டர் படையை உருவாக்குதல். 4. உண்மையான மக்களாட்சி, நிர்வாகம், ஆகியவற்றை ஏற்படுத்தல் ,

5. அது மட்டுமல்ல எல்லாருக்கும் சம வாய்ப்புகள் ஏற்படும் வண்ணம் பொருளாதார முறைகளை வகுத்தெடுத்தல் சம வாய்ப்புகளை உண்டாக்கித் தருதல் ஆகியவற்றை இப்போதைக்குச் சொல்லலாம்.

இது போன்ற முயற்சிகளுக்காகவே சோசலிசம், கம்யூனிசம் போன்ற தத்துவங்களும் ஏற்பட்டன, ஏன் ஆன்மீகம் எல்லாவித கட்சி, மதம் , போன்ற  அமைப்பு வழிகளிலுமே மனிதர்களின் துன்பம் துயர் துடைத்தலே இலக்கு என சொல்லப் பட்டு துவங்கப்பட்டு இலக்கு நோக்கி போகாமலே பயணம் செய்து கொண்டுள்ளன. பிறகு ஏன் அந்த இலக்கை தொட முடியவில்லை...மறுபடியும் நாம் சுழற்சியின் தொட்ட இடத்திற்கே வரலாம்: நல்ல தலைவர் இல்லாமையும், நல்ல தலைமைப் பண்பு உள்ள நல்ல தலைமைகள் ஏற்படாமையும் அல்லது கிடைக்காமையும் அல்லது அப்படிப்பட்ட தலைமைகள் இருப்பதை மக்கள் கூட்டம் தெரிந்து புரிந்து உணர்ந்து அவர் பின் அணி திரளாமையும். 

மக்கள் சாதாரணமாக ஒரு தலைமையின் பின் அணி திரளமாட்டார்கள்.

இது இன்று நேற்றல்ல: சாக்ரடீஸ் காலத்தில் இருந்தே மக்களது வாக்கு என்பது அவர் சாக வேண்டுமா உயிருடன் விட்டு விடலமா என்ற வாக்கு எடுப்பு நடத்திய காலத்தில் இருந்தே வாக்கு எடுப்பு அவருக்கு எதிராக இருந்ததாலேயே அவர் நஞ்சுக் கோப்பையை சீடர்களின் விருப்பத்துக்கும் மாறாக ஏந்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.' காமராசர் என்னும் மாமனிதரும் வாக்களிப்பு முறையில் தோற்கடிக்கப் பட்டவர்தான்.

சரி அதனால் என்ன  தோற்றவர்கள் எல்லாம் சரியான தலைவர்கள் இல்லையா? வென்றவர்கள் அனைவருமே சரியான தலைவர்கள்தாமா? ஒரு தலைவர் தன்னுடைய வாழ்நாளில் தேர்தலில் தோற்றதே இல்லை. ஆனால் அவர் பேர் பின் அவர் பேரப் பிள்ளைகள் தலைமை ஏற்றிருந்தும் அந்தக் கட்சி ஏன் பின்னடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் பேசப் பட வேண்டியவைதாம். அவர் நாம் இலக்கணப் படுத்த வேண்டும் என்ற தலைமைப் பண்புடன் இல்லை. ஆனாலும் அவர் பின் ஒரு மாபெரும் கூட்டம் இருக்கிறது. கூட்டம் என்பதற்கும் மக்கள் என்பதற்கும் மாக்கள் என்பதற்கும் வேற்றுமைகள் நிறைய உள்ளன. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது மன்னராட்சி பழமொழி. மக்கள் எவ்வழி ஆள்வோர் அவ்வழி இது மக்களாட்சி புது மொழி. இங்கு நமது பாடம் மக்களைப் பற்றி சொல்வதல்ல தலைமைப் பண்பு என்று தலைமையைப் பற்றி சொல்வது எனவே தலைப்பை ஒட்டியே செல்ல முயல்வோம்.

சரி அப்படி  எனில் தலைவர்களே இது வரை உலக வரலாற்றில் தோன்றவே இல்லையே என்றால் எண்ணிலடங்கா தலைவர்கள் தோன்றியுள்ளனர். உலகைத் திருத்தும் உத்தமர்கள் அவதரித்துள்ளனர்.  தேசத் தலைவர்கள் வழி நடத்தியுள்ளனர். எந்த நாட்டுக்கும் இல்லாத சிறப்பாய் உலகுக்கே ஒரு உன்னத வழியில் காந்தி தேசம் அஹிம்சை சத்யம் சத்யாக்ரகம் என்ற வழிகளால் உயிர்ப்புற்று சுதந்திரம் அடைந்தது. அதற்கு தியாகம் செய்த கோடிக்கணக்கான தலைவர்கள் வரலாற்றில் நிறையப் பக்கங்கள் தேடி எடுக்க முடியாமலே காலத்தின் இயற்கையோடு கரைந்து போயின. அவர்கள் பேர் ஊர் விலாசம் தெரியாத போயினும் அவர்கள் செய்த இலட்சியப் பணி நம்முடன் இன்றும் சுடர் விடுகிறது.

சில தலவர்களை மட்டும் தொட்டுச் செல்வோம்: இந்தியாவின் மகாத்மா காந்தி, அப்துல் கலாம் ,அன்னை  தெரஸா அமெரிக்காவின்: அப்ரஹாம் லிங்கன், வாஷிங்டன், கென்னடி, மார்ட்டின் லூதர் கிங்,ரசியாவின் லெனின்,அந்த கம்யூனிச தத்துவம் தந்த ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்த  கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், கிரேக்கத்தின் சாக்ரடீஸ்.,வியாட்நாமின் ஹோசிமின், சீனத்தின் மாவோ,க்யூபாவின் பிடல் காஸ்ட்ரோ ,சேகுவாரா,துருக்கியின் கமால் பாஷா, அறிவியல் விஞ்ஞானி கலிலியோ.சிங்கப்பூரின் லீ குவான் யூ,ஜப்பானின் அஹிகிட்டோ, இப்படி முக்கியமாக நாடாண்ட தலைமைகளில் இருந்து பல்வேறு பட்ட துறைகளில் உலகை திருத்திய உத்தமர்கள் ஏராளம்...அவை எல்லாம் சொல்லில் சொல்லி மாளாது...

சரி நாம் நல்ல தலமைப் பண்பு என்று சொல்வது எவற்றை எல்லாம் என்றால்:

தற்போதைய காலத்துக்கும் தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்திற்கும் ஏற்றவராக இருக்க வேண்டுமெனில்:

1. புகைக்காதவராக புகையிலையை பயன்படுத்தாதவராக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அது அவரை அவரது உடலை மட்டுமல்ல அதனால் அவரது குடும்பத்தை ஏன் பொது இடங்களில் பயன்படுத்துவதால் காற்று வெளியை பொதுச் சுற்றுச் சூழலைக் கெடுப்பதால்  அவர் நல்ல தலைமைப் பண்புடன் இருப்பவராக ஏற்றல் முடியாது...

2.மது அருந்தாதவராக இருத்தல் வேண்டும்: அப்படி மது அருந்துவோராக இருந்தால் அந்த அரக்கன் அவரை மட்டுமல்ல அவரது குடும்ப, நாடு அனைத்தையுமே நரகமாக்கி விடுவான். மதுவுக்கு எதிராக போராட வேண்டும் ஏன் எனில் மது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது சமுதாய பின்னடைவுக்கும் சமுதாய தீமைகளுக்கும் ஆணிவேராக இருப்பதால்.

3. போதைப் பொருட்கள்: குட்கா பான் பராக் பான் மசாலா:போன்றவை உட்பட: இவற்றின் பயன்பாட்டை ஏற்காதவராகவும் இதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாதாராகவும் இருக்க வேண்டும். (கஞ்சா, அபின், எல்.எஸ்.டி போதை மாத்திரைகள், மார்ஜ்வானா,போதை மருந்துகள், போன்ற எந்த வடிவத்தில்இருந்தாலும் )

மேற்சொன்ன 3 மனித அழிவுகளில் ஏதாவது ஒன்றிலும் விற்பனையிலும், உபயோகிப்

பதற்கு உதவியாகவும் இந்தப் பயன்பாட்டில்  பிறரை ஊக்குவிப்பதல் போன்றவற்றிலும்

 இதற்கான ஆலைகள் உடைமையாக வைத்திருப்பதிலும், அல்லது பணி புரிவதிலும் இ

ருந்தாலும் அவர் நல்ல தலைமைப் பண்பு இருப்பார் என்று ஏற்க முடியாது இப்போது நா

ம் சொன்னதைல் நிறைய எதிர்க் கட்சிகளும் ஆளும் கட்சிகளும் அதன் தலைவர்களும்

 தலைமைகளும் நல்ல தலைமையின் கீழ் வர வழியே இல்லை.அவர்களிடம் தலை

மைப்  பண்பு இல்லை என்பதும் தெள்ளென விளங்கி இருக்கும். இவர்கள் எல்லாம் சமு

தாயத் துரோகிகளாக கருதப் படல் வேண்டும். சமுதாயக் கிருமிகளாக, சமுதாயக் க

ளைகளாவார்கள்

இவர்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்பது இதன் கருத்தல்ல..இவர்களிடம் இருக்கும் தீய வழக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது என்ற காரணத்தால் இவர்களிடம் இருக்கும் பழக்கத்தை துரத்தி அடிக்க ஆவன செய்தாக வேண்டும். இவர்கள் இந்தப் பழக்க வழக்கத்தில் இருப்பார் ஒருக்காலும் தலைமைப் பண்பாளராக இருக்க முடியாது...அவர்களை தலைவர்களாகவும் ஏற்பதற்கில்லை ஏற்கவும் கூடாது.அது என்னதான் பெரிய எழுத்தாளராயும், இலக்கியவாதியாயும், கலைஞராகவும் இருந்து உலகெலாம் அவரது படைப்பைக் கொண்டாடிய போதும் அவரை கலைஞராகவேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும் இவ்வுலகு ஆனால் தலைவராக எடுத்துக் கொள்ளவே கூடாது.

4. இலஞ்சம் வாங்குவாராகவோ கொடுப்பாராகவோ இருக்கக் கூடாது. இந்த இலஞ்ச ஊழல் நாட்டின் தீர்க்க முடியா எல்லாத் துறைகளிலும் இருக்கும் பெரும் பிணி...இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்பது உண்மையானதாக இருக்க வேண்டுமெனில் முதல் விதியாக இதைக் கொள்ள வேண்டும். இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற சொற்களை நினைவில் கொள்வோம்.இப்படி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாலும் சொல்லாலும் செயலாலும் ஈடுபடுவார் நல்ல தலைமைப் பண்புக்கேற்றார் அல்ல.

5. அமைப்பை ஒருங்கிணைப்பவராகவும், உழைப்பு என்று வந்தால் முதல் பணியாளராகவும், தியாகத்தில் முதல் நபராகவும் இருப்பாராக வேண்டும்..இராணுவத்தில் இருக்கும் கேப்டன் போல போர்க்களத்தில் முதலில் நின்று களப்பலியாக துணிச்சல் உடையாராக வேண்டும் திருப்பூர் குமரன் போல... 

அனைவரையும் காட்டிக் கொடுத்து பலிகடாக்களாக்கி தாம் தப்பித்துப் போகிறவராய் இருக்கவே கூடாது.

6.  நான் ஏற்கெனவே குறிப்பிட்டு சொன்னது போல வெற்றி  புகழ் என்று வந்தவுடன் தனது தலையையும் தோளையும் நீட்டுபவராகவும்  தோல்வி இகழ்ச்சி வரும்போது மற்றவரைக் காரணம் எனச் சுட்டாமல் தோல்வியை தாங்குவாராகவும் வெற்றிக்கு தாம் காரணமல்ல என வெற்றி வரும்போது தமது இளையோரைத் தூக்கி விடுவாராக இருத்தல் வேண்டும்.

7. இதனை இவன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறளுக்கேற்ப இந்தப் பணியை இவர் செய்வார் என தெரிந்து தெளிந்து அவரை அந்தப் பணிக்கு நியமிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் அடுத்தவருக்கு வரும் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாதவராகவும் அதை தடுப்பாராகவும் இருத்தல் கூடாது.

8. காலம் இடம் அறிந்து செயல்படுவாராக இருத்தல் அவசியம்: ஏன் எனில் முகமது பின் துக்ளக் நல்ல அறிவாளி என்றாலும் அவரது தலைநகர் மாற்றம் தோல்வியில் முடிய இது போன்ற காலம் அறிந்து இடமறிந்து செயல்படாமை காரணமாயிற்று என்கிறது சரித்திரம்...அனைவரின் அங்கீகாரம் பெற வேண்டியதும் அந்தப் பணி வெற்றி பெற அவசியம்.

9. சரியான தூதாக கம்பன் இராமயணத்தில் அனுமனை சுட்டிக் காட்டுவது போல எங்கு அனுப்புவதானாலும் தேர்ந்து அனுப்பவும் வேண்டும்...

10. தம்மை விட இயக்கத்தின் நன்மையும் பேரும் பெரிது என உருவாக்கம் தெரிய வேண்டும். எமது தோழர் சசிபெருமாள் இந்த ஒழுக்கக் கட்டமைவில் உள் அடங்காத நிலை இதைச் சொல்ல காரணம். அவர் எமது இயக்கத்தை தமது ஊடகச் செய்தியின்போதும் அவரின் செயல்பாடுகளின் போதும் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்பதும் அதை அவரின் மேல் எப்போதும் வலியுறுத்தி வந்தவன் என்ற உரிமையில் இங்கே பதிவிட வேண்டியது எனது கடமையாகிறது ஏன் எனில் அவரை அடுத்து இயக்கம் வலிமைபெற வழித்தோன்றல்கள் தொடர அவை வழி வகுக்கும் என்பதால்..

11. தனி மனித மகாத்மியம் எவ்வளவு பெரியதாக இருந்த போதும் இயக்கம் மற்றும் அதன் முறைமைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அடக்கமுடைமை வேண்டும் அது சரியான தலைமைப் பண்பாக இருக்கும்.

12. சுற்றுச் சூழல் ஆர்வலராகவும், மரம் நடுதல், இயற்கை இரசிகராகவும், இருந்தால் அவருக்கு நிலம் நீர் நெருப்பு, காற்று ஆகாயம் ஆகியவற்றின் அருமை தெரியும் அற்புதம் புரியும் இல்லாதார் தலைமப் பண்பு இல்லாதாரே...

13. புதிய நவீன கலைகள் கற்கும் ஆர்வம் உள்ளவராயும், கணினிப் பயிற்சி உள்ளவராயும் இருந்தால் மட்டுமே நடப்பு உலகிலும் வரும் காலத்திற்கேற்றவாறும் தாக்குப் பிடிக்க முடியும்..

14. கல்வி கலைகளில் தேர்ச்சி மிக்காராகவும், நூல் பல கற்பாராகவும் இருக்கும் போது அந்த அனுபவங்கள் அவர் அறிவைச் செறிவூட்டி சமுதாயத்தை பல படிகள் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சேர்க்க முடியும்

15. அந்த அந்தக் காலக் கட்டத்தில் மாறிக் கொண்டிருக்கும் செய்திகளுக்கு செவி சாய்த்து எது சரி எது தவறு எது பொய் எது மெய் என்று தேர்ந்து கண்ணோட தெரிந்தவராக இருத்தல் வேண்டும். கால‌ நடப்புகள் பற்றி அறிந்தவராயும் அதில் நாட்டமுடையாராகவும் இருத்தல் வேண்டும்.

16. யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்டு அமைதியாகச்  செவியுற்று அதை நடுநிலையுடன் அணுகி சகிப்புத் தன்மை கொண்டு எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறியும் அறிவு கொண்டாராய் இருத்தல் வேண்டும்.

17. ஆண் பெண் மூன்றாம் பால் இன பேதமின்றி அனைவரையும் சமமாக பாவித்து மகளிருக்கு எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும் சம பங்கு 50 சதவீதம் பகிர பாடுபடுவாராய் இருத்தல் வேண்டும்.

18. நதி நீரை இணைத்து நாட்டில் நீர்ப் பஞ்சம் ஏற்படாது உலகில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் நெஞ்சமுடையாராக இருக்க வேண்டும்.

19.  ஏழை எளியார்க்கும் கீழ்தட்டு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, குடி நீர், மருத்துவம் , சுகாதார மற்றும் கழிப்பிட‌ வசதிகளும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் எண்ணமுள்ளவராயும் அதில் வேறுபட்ட கருத்து இல்லாராக  இருக்க வேண்டும்.

20. நாட்டின் நல்ல திட்டங்களை நிறைவேற்ற எடுத்துக் காட்டாக : ஒர் முறை பயன்பாட்டுக்கான நெகிழியை தடுத்தல், மதுவை ஒழித்தல், புகைத்தலை தடுத்தல், பொது இடங்களில் புகைத்தல், உமிழ்தல் போன்றவற்றை முளையிலேயே வேருடன் கெல்லி எறியும் எண்ண ஆற்றல் உள்ளவராயும் அதற்கு போராடத் தயாரானவராகவும் இருத்தல் வேண்டும்...

21. புகை மது போன்ற உற்பத்தி தொழிலகத்தையே உரிமம் இல்லாமல் செய்வாராகவும், ஆபத்து உள்ள தொழில்களான பட்டாசு போன்ற  தொழில் செய்வாரை மடை மாற்றம் செய்ய ஆர்வமுடையாராகவும் செயல்பாட்டாளராகவும் இருக்க வேண்டும். ஏன் எனில் கொள்வார் இல்லையேல் கொடுப்பார் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இங்கு இவை இருப்பதால் கொடுப்பார் இருப்பதால் கொள்கிறார்கள் என்பது பொருள் முதல் வாதம் இரண்டிலுமே மனிதர் கெட்ட வழிக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதால் மேதமை இருப்பார் சொன்னால் திருந்துவார், சிற்றறிவு மிக்கார் இல்லாது போனால் மட்டுமே திருந்துவார். குழந்தை மனம் அடம்  பிடிக்கும் குரங்கு மனமும் தறி கெட்டுப் போகும். அவற்றை எல்லாம் நெறிப்படுத்தும் கடமை தலைமைப் பண்பாளர்க்கு உண்டு. மொத்தத்தில் கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற நிலையை இராமலிங்கர் சொன்னது போல நாமும் சொல்லாமல் இருந்தால் நல்லதே..

22. ஆடை அணிகலன்களில் ஆடம்பரங்களில் அக்கறை இல்லாராகவும், தோற்றப் பொலிவுக்காக போலிப் பூச்சுகளை பூசிக்கொள்ளாதவராகவும் பொய்களாகவும் போலிகளாகவும் தோன்றுதல் இல்லாராகவும் இருக்க வேண்டும்.




23.  உடல் ஓம்பும்முறைகளில் நாட்டமுடையாராகவும், உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபாடு உள்ளாராகவும் இருந்தால் மட்டுமே நீண்ட ஆயுள் ,நிலைத்த செயல்பாடு, வழிகாட்டல் எல்லாம் தோன்ற வழி வகுக்கும் எனவே அவற்றில் மனம் செலுத்துவாராக இருக்க வேண்டும்.

24. பெண் வழிச் சேர்க்கை ஆண் வழிச் சேர்க்கையில் ஒரு கட்டுப் பாட்டு நெறியையும், சமூக நெறிகளுடனான ஒழுக்க முறைகள் கடைப்பிடிப்பாராகவும் இருத்தல் அவசியம்.

25. இயற்கைக்கு மாறான ஆண் பெண், ஆண் ஆண் பெண் பெண் போன்ற இனச் சேர்க்கைகள் எல்லாம் மனித மாண்புகளுக்கு அப்பாற்பட்டவை என்ற உணர்வுடையாளராக இருந்து அதன் பால் வழிகாட்டுவாராக இருக்க வேண்டும்

26. பாலியில் கல்வி, அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு, நவீன அறிவியல் புடைக்க வைக்கும் செல்பேசி கலாச்சாரம், நீலப்படம் ஆபாசப் படம் போன்றவைகளில் இருந்து இளைய சமூகத்தை நல்வழிப் படுத்துவாராக அக்கறை கொள்வாராக இருத்தல் வேண்டும்.

27. தலைமைப் பண்பின் கீழ் நாம் என்ன நினைக்கிறோம் எனில்: கொள்வார் இல்லையேல் கொடுப்பார் இல்லை என்ற அடிப்படையில் புலால் மறுத்தல் அல்லது மரக்கறி உணவை ஏற்பதும் விவசாயத் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்து அதை மேம்படுத்துவதும் தலையாய பணி என்கிறோம்.

28. பெப்ஸி கொக்கோ கோலா போன்ற பானங்கள் இல்லாமல் செய்து மாறாக இளநீர், பதநீர் , நீசத் தண்ணீர் பழஞ்சோறு போன்றவற்றை உருவாக்குதல் நல்ல பண்பாக இருக்க சிறு தானியப் பயிர்களை மறுபடியும் கொண்டு வந்தால் பரவலாக்கினால் உயிரின் கால நீட்சி அதிகமாகும் எனவே அதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

29. மொத்தத்தில் கைத்தொழில்களான நெசவு, கிராமியத் தொழில்கள், போன்றவற்றை ஊக்குவிக்க வேன்டும். கிராமியச் சேவையும், கிராமியச் சார்பும் , கிராமியச் சமுதாயமும் உருவாக பாடுபடுபவராய் இருக்க வேண்டும்.

30. நாட்டின் பின் தங்கிய கிராமத்திற்கென தமது உழைப்பை நல்கியவராக  நல்குவதில் ஆர்வமுள்ளாராக இருத்தல் வேண்டும்.

31. நாட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாரின் குடும்பங்கள் பற்றி அக்கறை கொள்வாராக இருத்தல் வேண்டும்.

32.கொள்கை ரீதியாக தோழர்களோ, மக்களோ நியாயமான கோரிக்கைகளுக்கு பாடுபடும்போது துணை நிற்பாராய் இருக்க வேண்டும்.. இயக்கத்தை அதன் பின் அணி திரளச் செய்ய வேண்டும்.

33. தர்மச் சிந்தனையுடன் இருத்தல் வேண்டும்.

34. போராட்டங்களைக் கையில் எடுப்பதில் தயங்காதாராகவும் தேவையான அறிவு சார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வதுடன் அதை நேர்மறையாக அணுகுவதுடன் ஒருங்கிணைப்பு போக்கில் சார்புடையாராக இல்லாமலும் தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நபர்களைத் தேர்வு செய்யாமல் அவரவர் தகுதி திறமைக்கேற்ப அவர்களை முன்னிறுத்தி இயகக்த்தை மேற்செலுத்துவாராகவும் இருக்க வேண்டும்.



35. இவை எல்லாம் மீறியதாக வள்ளுவர் வழியில் சொல்லப் போனால்: அவை அஞ்சாமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை,உழவு,ஊக்கம் உடைமை,ஒற்றாடல், கள்ளாமை, கள்ளுண்ணாமை,கூடா நட்பு,கொடுங்கோன்மை, கொல்லாமை,சிற்றினம் சேராமை, சான்றாண்மை, சூது, செங்கோன்மை செய்ந்நன்றி அரிதல்,சொல்வன்மை, தவம், தீ நட்பு, நடுவு நிலைமை, நாட்டுப் பற்று, பயனில சொல்லாமை,புலால் மறுத்தல்,புறங்கூறாமை, பெரியாரைத் துணைக்கோடல், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

  36.மக்களை சிறு சேமிப்பு போன்ற நல்ல பழக்க வழக்கங்களில் ஊக்குவிக்கவும்,  இளையோர், குழந்தைகள், ஆண்கள் ,பெண்கள், கிராம சபை போன்றவற்றை உருவாக்குபவராக இருக்க வேண்டும். அதன் வழியே செயல்பாடுகளை கொண்டு செலுத்த வழி வகை செய்வாராக இருக்க வேண்டும்.

37. தேர்தல் முறைகளில் மாற்றம் செய்ய சமுதாய அமைப்பை மாற்றி அமைக்க முயல்வாராக இருக்க வேண்டும்.எடுத்துக் காட்டாக: விகிதாசார வாக்கெடுப்பு முறை, தேர்வு செய்யப் பட்டார் சரி இல்ல எனில் திரும்ப அழைக்கும் முறை ,நல்ல மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க மக்களை ஒருங்கிணைக்கும் கலை போன்றவற்றில் முயற்சி, நாட்டம், ஈடுபாடு, விடாமுயறி உடையாராய் இருத்தல் வேண்டும்.

38. தியான வழிகளில் சொல்வது போல:

   1. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருக்க வேண்டும்

     ( கொசுக்களைக் கொல்லுதல் கூட பாவம்...ஆனால் கொசு இல்லாமல் சுத்தமாக சுற்றுப் புறத்தை வைத்திருப்பது பாவமில்லையே)

   2. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல்

   3. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பூரணமான உண்மையைக் கடைப்பிடித்தல்

   4. பிரமசாரிய விரதம் காத்தல்

   5. பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல்...

இவையும் ஒரு சிறந்த தலைமப் பண்புக்கான அடக்கமான அழகான பண்புகளாகும். சத்தியம் நேர்மை, நம்பிக்கை  விடாமுயற்சி, அஹிம்சை, சத்யாக்கிரகம் ஆகியவை ஏற்பவராக இருக்க வேண்டும்.

39.மகாத்மா டால்ஸ்டாயிடம், ரஸ்கினிடம், குருதேவ் ரவீந்தரநாத்திடம், கோபால கிருஷ்ண கோகலேவிடம் இப்படி யாவரிடமும் கற்றது நமது தமிழ் இடத்தில் இருந்தல்லவா...

40.பொய்யாமை பொய்யாமையாற்றின் அறம் பிற‌

செய்யாமை செய்யாமை நன்று

மனத்துக் கண் மாசிலன் ஆதால் அனைத்தறன்

ஆகுல நிர பிற...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண‌

நன்னயம் செய்து விடல்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று....

பகுத்துண்டு பல்லுயிர்  ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை...

 தன்னல மறுப்பு/தியாகம்
விடாமுயற்சி
பிடிவாதமின்மை
எங்கிருந்து கிடைத்திடினும் ஏற்புடையதெனின் ஏற்றுக் கொள்ளல்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு....

மறுபடியும் பூக்கும் வரை
'கவிஞர் தணிகை


Wednesday, December 16, 2020

எனது வாழ்வுப் புத்தகத்தில் கண்ணன் ஒர் அத்தியாயம்: கவிஞர் தணிகை

 எனது வாழ்வுப் புத்தகத்தில் கண்ணன் ஒர் அத்தியாயம்: கவிஞர் தணிகை


அப்போது அவர் ஒரு திருமணமாகாத இளைஞர். அவருக்கு வீடு வாடகைக்கு விடுவது பற்றி இரு வேறு கருத்துகள். எனது அக்கா வீட்டில் ஒரு போர்ஷனில் அவர் வாடைகைக்கு குடியமர்த்தினேன். அவரது இரு சக்கர வாகனத்தை எங்கள் வீட்டில் உள்ள வண்டி செட்டில் நிற்கவும் அனுமதித்தேன். 



தீபாவளி காலக் கட்டத்தில் தனது தையல் பணி முடித்து நேரம் கழித்தும் கூட வருவார். சலித்துக் கொள்ளாமல் அவர் வண்டியை நிறுத்த கதவை திறந்து விடுவேன். அவர் ஹை லுக் என்ற ஒரு சிறிய ரெடிமேட் மற்றும் ஆடையகம் அத்துடன் தையல் பணிகளையும் செய்து வந்தார். சிஸ்கால் எனப்படும் ஜிந்தால் ஸ்டீல் ஒர்க்ஸ் பணியாளர் ஒப்பந்ததாரர்களின் பணி உடுப்புகளையும் ஒப்பந்த அடிப்படையில் செய்து முடித்து கொடுத்து வந்தார். 


என்னிடமும் ஏதாவது பள்ளிகளிடம் உங்கள் நண்பர்கள் வழியே ஆர்டர் வாங்கித் தரமுடியுமா எனக் கேட்பார்.  முயன்றோம் அது பலனளிக்கவில்லை. மேலும் அவருடைய திருமணத்திற்கு எங்களால் ஆன முயற்சி செய்து இரும்பாலை அருகே சோளம்பள்ளம் என்ற இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்தோம். பெண் பார்த்த சில மாதங்களில் இரு குடும்பத்தார்க்கும் ஏதோ வாக்குவாதம் வந்து திருமணம் நடத்த தடையாகி அதன் பின் மறுபடியும் அந்தப் பெண்ணையே கேட்டு முடிக்கலாம் என்ற எமது  முன் வார்த்தை பலிக்க அப்படியே அந்த நன்னிகழ்வு நடந்தது.


அவருக்கு திவாகர் என்றும் ஒரு 4 வயது குழந்தை மற்றும் இப்போது பூங்குன்றன் என்ற ஒரு வயதுக் குழந்தை இரு ஆண்கள். இரண்டாவது குழந்தைக்கு  பெயரை நான் தான் வைத்தேன் என நினைவு வைத்திருப்பார் சொல்கிறார்கள். இதை ஏன் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால் 6 ஆண்டுகள் அல்லது ஏழெட்டு ஆண்டுகள் இருக்கலாம் அவர் எனை அறிமுகப் படுத்திக் கொண்டு. நானும் அவரும் அறிமுகமாகி. ஆனால் அவர் இப்போது இல்லை கடந்த தொப்பூர் கணவாய் விபத்தில் பலியானார்.



குத்புதீன் என்ற ஒரு வட நாட்டுக்கார துரோகியால் சுமார் 15 வாகனங்கள் சேதமாகி அன்றே 4 பேர் அங்கேயே இறந்தனர். 20 பேர் காயம். அந்த துரோகி தனது உயிரை காக்க வேண்டி இத்தனை பெரிய பேரிழப்பை விளைவித்த பெரு விபத்துக்கு காரணமாயிருந்திருக்கிறான். எரிபொருளை சிக்கனம் செய்ய வேண்டி நியூட்ரலில் சிமெண்ட் லோடு ஏற்றிய லாரியுடன் ப்ரேக் பிடிக்காமல் சென்று எல்லா வாகனங்கள் மேலும் இடித்து ...அதில் சேதமானார் கண்ணனும் அவரது இரு சக்கரவாகனம் ஒன்றும் அதில் அடங்கும்..


சிறு குடும்பம்; இரு சிறு குழந்தைகள்.  அப்பாவி மனைவி...பள்ளிப் பட்டி என்ற ஒரு தர்மபுரி மாவட்டத்தில் சிறு அளவிலான நிலத்தில் அவரது தாயும் தந்தையும். அவரது சகோதரி குடும்பமும்.


நாவல் பழம் பறிக்கலாம் என விரயமாக வீண் போவதைக் கண்டு என்னுடன் பறித்த கதை,

பதநீர் சாப்பிடலாம் வாங்க என கருப்பு ரெட்டியூர் கண்ணன் தோட்டத்துக்கு சென்ற கதை,

என் வீட்டில் பின் செடிப்பக்கத்தில் இருந்து சோத்துக் கத்தாழை எடுத்து என் பேச்சைக் கேட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு கருவுற நிகழ்ந்த கதை,


அவருக்கு சில இளைஞர்கள் தொடர்பு சிகரெட், மதுப் பழக்கமும் உண்டு என்றும் தெரியும் .ஆனால் அவற்றால் எல்லாம் எங்களது நாகரீகமான தொடர்பு பாதிக்கவில்லை. பிறர் பேச்சைக் கேட்டு ஓரிரு வருடம் முன் எனது சகோதரி வீட்டைக் காலி செய்து 2 வீடு தள்ளி குடி போனார். அப்போது எனது குடும்பத்தாருடன் அவரது குடும்பத்தொடர்பு அப்படியே தொடர்ந்து வந்தது.


இன்று எனது மகனது பிறந்த நாள். இது போன்ற ஒரு நாளில் அவர் எனது மகனுக்கு ஒரு பேனா வாங்கி பரிசளித்தது நினைவு இருக்கிறது இன்றும். ஆனால் அவர் இல்லை.


கடைசியாக அவருடன் வேடிக்கையாக 5 வழிச்சாலையில் சேலத்தில் இருந்து அவருக்கு அதிகாலை 7 மணி இருக்கலாம் ஒரு போன் செய்து கண்ணன் எங்கிருக்கிறாய், என்ன பேண்ட் எல்லாம் (கால் சட்டை) தைத்துக் கொடுத்தால் புதிதாக தைக்கும் துணியின் பாக்கெட்டில் பணம் எல்லாம் போட மாட்டாயா? என்று கிண்டல் செய்து விட்டு மிக அருமையாக நன்றாக தைத்திருக்கிறாய் எனப் புகழ்ந்தேன். காலையில் ஒரு நல்ல வார்த்தையை என் மூலம் கேட்ட திருப்தி அன்று முழுதும் அவருக்கு தொடருமே என்று...



நல்ல சுறு சுறுப்பான மனிதர். ஒரு முறை என்னுடன் பேசிக் கொண்டே அவர் ஒரு பேண்ட் தைத்த வேகம் அழகு என்னுள் என் நினைவாக இன்னும்.


எனது துணைவியாரை அக்கா என்றே கொண்டிருந்தார். அவர் மற்றும் அவர் சார்ந்த இன்னும் சில பெண்களிடம் துணி தைக்கக் கொடுத்து வாங்கிக் கொண்டு கொடுத்து வியாபார நோக்கில் தொழில் செய்து தைத்த துணிகளை சேலத்து தொழிலதிபருடன் தொடர்பு கொண்டு வரவு செலவு நடத்தி தொழில் முனைவோராக மாற முயன்றதும் உண்டு. 


அதற்காக தனது தொழில் நிறுவனத்தை அரசுத் துறையுடன் பதிவு செய்து எண் பெற்று வங்கிகளில் கடன் பெற முயன்றதும் உண்டு....


ஆனால் தனது இரு சிறு குழந்தைகளை மீளாத் துயரில் விட்டு அந்த கண்ணனில் வாழ்வு மாயமாகிப் போனது. மாயக் கண்ணன் விடை பெற்றான். அனைவரிடமிருந்தும் அவர் ஆன்மா சாந்தி அடையாது. அவரது குழந்தை குடும்பங்களுக்கு அருகிருந்து துணை செய்யட்டும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



 


Tuesday, December 8, 2020

அகில இந்திய சிறுவர் பல்மருத்துவர் சங்கம்‍ ஆசிரியர் தின விழாப் போட்டி முதல் பரிசு: கவிஞர் தணிகை

 அகில இந்திய சிறுவர் பல்மருத்துவர் சங்கம்‍ ஆசிரியர் தின விழாப் போட்டி முதல் பரிசு: கவிஞர் தணிகை



 அகில இந்திய சிறுவர் பல்மருத்துவம் மற்றும் பல் நோய் தடுப்புப் பிரிவு சங்கம் (இதன் தலைமையகம் உத்திரப் பிரதேசத்தில் மீரட் நகரில் உள்ளது) நடத்திய  இந்திய தேசிய அளவிலான ஆசிரியர் தின விழாச் சிறப்புப் போட்டியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி முதல் பரிசை வென்றுள்ளது. இந்த முடிவை 30.11.2020 அன்று அகில இந்திய சிறுவர் பல் மருத்துவர் சங்கம் அறிவித்தது.



1. விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி சேலம் தமிழ் நாடு

2, யெனபோயா பல் மருத்துவக் கல்லூரி மங்களூர் கர்நாடகா

3. ஜே.என்.கபூர் டி.ஏ.வி(சி) பல் மருத்துவக் கல்லூரி யமுனா நகர் ஹரியானா

4. சுபார்த்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை மீரட்

5. கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிகல் சைன்ஸ் மஹாராஸ்ட்ரா (ஆறுதல் பரிசு முதல் இடம்)

6. பீப்பிள் ஆப் டென்டல் சைன்ஸ் போபால் ( ஆறுதல் பரிசு இரண்டாம் இடம்).



 அகில இந்திய அளவில் நடந்த இந்த மாபெரும் போட்டியில் மேற்சொன்ன  6 கல்லூரிகள் பரிசு பெற்றுள்ளன. அதிலும் இரண்டு ஆறுதல் பரிசுகள். மற்ற 4 கல்லூரிகளே பரிசுக்குரியவை அதிலும் எங்களது விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்கல்லூரி முதல் பரிசை வென்றுள்ளது என்பது மகிழ்வுக்குரியது.


இந்தப் போட்டியில் ஈடுபட கல்லூரியின் டீன் பேராசிரியர் மருத்துவர் ஜா.பேபிஜான் பெரிதும் ஊக்குவித்ததுடன் மட்டுமல்ல இங்கு  பள்ளி ஆசிரியர்களுக்கு இடையே நடத்திய பல் மருத்துவத்தில் பள்ளி ஆசிரியர்கள் பங்கு பணி என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடைபெற்ற கவிதைப் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு தலைமேயேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.




இந்த அரிய போட்டியை அசோசியேட் டீன் பேராசிரியர் மருத்துவர் சுரேஷ்குமார் அவர்கள் ஒருங்கிணைத்து ஆரம்பத்தில் இருந்தே எனைப் போன்றோருடன் கலந்து பேசி நிகழ்வை வெற்றிகரமாக இறுதி வரை நடத்தி முடித்தார். சரியான கடமையும் பொறுப்புணர்வுடனும் பணி செய்தாலே போதும் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாசகம் உண்மையில் எத்தகையது என்று நிரூபணம் செய்ய இந்தப் போட்டிகளில் முதல் பரிசை பெற்றதே சான்றாகும். ஏன் எனில் இதில் ஈடுபட்டோர் அனைவருமே அவரவர் கடமையை செவ்வனே செய்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


இந்தப் போட்டிகளில் பங்கு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் ஆங்கிலம் மற்றும் தமிழ்க் கவிதைகளை பல் மருத்துவம் அதிலும் சிறுவர் பல் மருத்துவம் எவ்வளவு சமுதாயத் தேவை உள்ளது என்பதை உணர்ந்து எழுதி போட்டிகளில் கலந்து கொண்டமை வெகுவாகப் பாராட்ட பெருமையுறத் தக்கது ஏன் எனில் அவர்களின் பங்கெடுப்பு இல்லை எனில் இந்த நிகழ்வு இவ்வளவு சிறப்பாக நிகழ்ந்தேறி இருக்காது.


மற்றும் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் சிறுவர் பல் மருத்துவப் பிரிவின் மருத்துவர்கள்: ப்ரதீப் டேனியல் கைன்னஸ், நந்தினி, சாந்த ரூபன் மற்றும் முதுகலை,பயிற்சி மருத்துவர்கள் போன்ற அனைவரும் அவரவர்களால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தனர்.


இந்த அரிய மேன்மை மிகு குழுவினருடன் எனது பணியும் இணைந்திருந்தது என்று சொன்னால் மிகையாகாது. கல்லூரியின் பொது உறவு அலுவலர் என்ற முறையிலும் கவிஞர் தணிகை என்ற பதிவிலும் இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்து என்னால் இயன்ற பங்கெடுப்பை செலுத்தி, போட்டியின் முடிவுகளை மதிப்பீடு செய்து பரிசறிவித்து,ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்து கலந்து கொண்டிருந்த கவிதைகளின் முத்தாய்ப்பு வரிகளை எடுத்தாண்டு நிகழ்வில் எனது கவி உரை வீச்சுடன் பங்கெடுத்துக் கொண்ட நினைவும் எனக்கு இனியதே...



இதே போல கல்லூரியின் அனைத்துப் பிரிவினரும் அவரவர் கலந்து கொள்ளும் போட்டிகளிலும் துறைகளிலும் முன்னணியினராய் விளங்கி வருவது மேலும் மேலும் பெருமைப் பட வேண்டிய காலக் கட்டமாய் இருக்கிறது. இதன் அணித் தலைவராய் இருந்து வரும் கல்லூரியின் டீன் ஜா.பேபிஜான் இந்த அரும்பணியை செய்ய  வழிகாட்டியாயும் கேப்டனாகவும் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.


கோவிட் 19 நுண்ணியிர்க் கொல்லி அலைவீச்சில் உலகே தடுமாறிக் கொண்டிருக்கிற விளைவையும் விடாமுயற்சியுடன் பின் தள்ளி இந்தப் போட்டிகளை காணொளிக் காட்சிகள் வழியாகவே நடத்தி இந்த அகில இந்திய அளவிலான போட்டிகளில் முதல் பரிசை வென்றிருப்பது பேருவகை கொள்ளத் தக்கதே...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.









Saturday, December 5, 2020

வடநாட்டுக்காரர்களின் போர்வை வியாபாரம்: கவிஞர் தணிகை

 வடநாட்டுக்காரர்களின் போர்வை வியாபாரம்: கவிஞர் தணிகை



தீரன் அதிகாரம் ஒன்று போல மிகப் பெரிய த்ரில்லரோ,சஸ்பென்ஸ் , போராட்ட கதையோ இல்லை ஆனால் இதுவும் உண்மைச் சம்பவம் அதுவும் உண்மைச் சம்பவம் என்று அந்த காவல் துறை அலுவலர் சொல்லியது உங்கள் நினைவுக்கு.


காலை சுமார் 10 மணி இருக்கும்.பழைய பாய்கள் கோரைப் பாய்கள் தாம் பழையதாகி விட புதிதாக ஒரு கோரைப்பாய் வாங்கலாமா என்ற எண்ணம் எழுந்தது


அந்தப் பாய் பாய் என பாய் விற்றுக் கொண்டு சென்ற குரலால் எழுந்த விளைவால்...


உடனே மிதி வண்டியில் 3 பாய்களை எடுத்து வந்திருந்த  பாய் விற்பவர் இளைஞர் தாம் வாசல் வந்து எல்லாப் பாய்களையும் மொத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் 1300ரூ கொடுத்து விடுங்கள் என்றார்.


இப்போதெல்லாம் ஒரு காலம் வந்துள்ளது இது போன்ற விற்பனையாளர்கள் எல்லாம் தேவைக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு எனத் தம் பொருட்களை விற்பது போல் இல்லை. அப்படியே கொண்டு வந்ததை மொத்தமாக விற்பனை செய்து செல்லவே எண்ணம். காரணமும் பாதிப்பும் கொரானா...


என்னடா வடநாட்டுக்கார போர்வை வியாபாரம் பற்றிச் சொல்கிறேன் என்றவர் பாய்கள் பற்றி பேச ஆரம்பித்துள்ளாரே என்று நீங்கள் நினைக்கலாம்.


ஆமாம், அப்போது பாய் விலை படிந்து வாங்கும் முன்னே, வடநாட்டு இளைஞர் இருவர், முதலில் ஒருவர் வந்தார் அதன் பின் அவருடன் மற்றொருவரும் அந்தப் போர்வையைக் கொண்டு வந்தவரை விட வலிமை அதிகம் உயரம் உள்ளவராக...



எனக்கு முற்காலத்தில் ஒரு முறை இரண்டு பேர் போத்திக் கொள்வதற்கு போதுமான ஒரு கம்பளியை  நியாயமான விலைக்கு வாங்கியதும் அது இன்றும் பயன்பட்டு வருவதும் நல்ல நினைவிலாடும் விடயம் எப்போதும் எனவே பாய்க்காரரை சற்று பொறுக்கச் சொல்லி விட்டு வடநாட்டுக்காரரை கவனிப்போம் எனச் சொன்னேன். பாய்க்காரர் நமது பக்கத்து ஊரான சின்ன திருப்பதி தான் என்றும் சொல்லி இருந்தார்.


எனவே அந்த வட நாட்டு இளைஞர்களைக் கேட்டேன் விலை...எனது வீட்டு எஜமானியம்மாவையும் அழைத்தேன். ஏன் எனில் அவர்தாம் ஒரு போர்வையும் தேவை மகன் வந்தால் சரியான போர்வை இல்லை அவனுக்கு என்றும் சொல்லியவர்


போர்வை விலையைக் கேட்டுக்கொண்டே அதை வைப்பதற்கு ஒரு இருக்கையை எடுத்தும் போடச் சொன்னேன் போட்டார்கள். போர்வையை சரியாக ஒன்றின் விலையைச் சொல்லாமலே ட்யூவில் தருவதாகச் சொன்னார். எதற்கு ட்யூ, (தவணை) இதை போய் யாராவது ட்யூவில் எடுப்பாரா என்று கேட்க, ஒன்று என்றால் 1300 எல்லாம் அதில் 6 போர்வை இருந்தது...2300 எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார், மேலும் இதென்ன ஒரு  போர்வை 1300 எல்லாம் சேர்ந்து 2300 என்கிறானே என அனைவரும் அதாவது நான், பாய்காரர், எனது வீட்டு எஜமானியம்மா எல்லாம் முரண்பட்டோம்.


எஜமானியம்மா போர்வையைப் பார்த்து விட்டு, என்னை உள்ளே வாருங்கள் , உள்ளே வாருங்கள் என்றார். நான் நமது வாசல்படியில் தானே நாம் அமர்ந்திருக்கிறோம், ஏன் உள்ளே வாருங்கள் எனக் கூப்பிடுகிறாய், இங்கேயே சொல்வது தானே என எனக்கும் அவர்க்கும் அங்கேயே தர்க்கம்...


நான் உள்ளே போகத் தயாராக இல்லை...


அந்த வட நாட்டு ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லா போர்வைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் ரூபாய் 2000 தாருங்கள் போதும் என்றனர். சத்தம் கூடியது...நானும் எனது பக்கத்துக்கு ( நாம் தாம் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நள்ளிரவில்  தவறாமல் தொடர்ந்து பல ஆண்டு சாலையோரத்தில் உறங்கும் அனாதைப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கி இடது கை முழங்கை மூட்டை இடம் பெயர்த்துக் கொண்ட வள்ளல் ஆயிற்றே ) நானும் வாங்கலாம் என என்ன இவனுங்க சவால் விடறாங்க எங்க வந்து சவால் விடறாங்க எனக் கொக்கரிக்க  வீட்டுக்கார எஜமானியம்மாவின் பிடிவாதத்தால் முடிந்தது...அவன்கள் அப்புறம் செல்ல ஆரம்பித்தார்கள் அந்த இருவரில் ஒருவன் கொடுக்க முடியாது அந்த விலைக்கு என்பதாக எடுத்துச் செல்ல ஆரம்பித்திருந்தான் 


வேண்டாம் என மறுக்கப் பட்டது. யார்ரா நீங்க இங்க வந்து என்னடா செய்கிறீர்கள்? என கோபம் வந்தது எனக்கு.


பாய்க்காரரும், வீட்டு எஜமானியம்மாவும் வேண்டாம் என்றது எனக்குக் கேட்கவே இல்லையாம்...சவாலை முறியடிக்கவே நான் முயன்றேனாம். அது அவர்கள் குற்றச் சாட்டு.


அடுத்து தான் கதை  ஆரம்பம்: ஏற்கெனவே ஆறுபடை வீடு எனச் சொல்லப் படும் ஆறு சகோதரர்கள் வீட்டில் இப்படித்தான் குறைந்த விலைக்கு கொடுப்பதாகக் கொடுத்து விட்டு அதன் பிறகு வந்து சண்டை செய்து மறுபடியும் காசு கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அங்கே ஒரே தகராறு...என்றார் வீட்டுக்காரம்மா...


ஏன் அவங்க நிறைய பேர் இருப்பார்களே அடித்து துரத்த மாட்டார்களா என்றேன்...


சார் மெதுவாகப் பேசுங்க சார் அவங்க இன்னும் போகவில்லை என்றார் பாய்க்காரர்.


அட இந்த நாட்டில என்னடா இது பேசக் கூட விடாம அதுவும் நான் பிறந்து வளர்ந்த 60 ஆண்டுகால சுவாசமா இருக்கிற வீட்டில...என்னால் தாள முடியவில்லை...



அடுத்து பாய் வியாபரம் விலை படிந்தது....சார் சீட்டுக் கட்டணும் சார் பார்த்துக் கொடுங்க சார் என்றார். பாய்க்காரர். நான் 500க்கு கேட்க எண்ணும்போது வீட்டுக்கார அம்மா 600 என்றார். பாய்க்காரர் சேர்த்துக் கேட்க பஞ்சாயத்து பேசி இருசாரர்க்கும் பொதுவாகப் பேசிய நியாயப் படி மேலும் ஒரு 100 ரூ என 700 என முடிவாகியது அதன் மேல் பசிக்கு சாப்பிட எனக் கேட்க சனிக்கிழமையாக இருக்கிறதே என ஒரு 50 ரூ சேர்த்து 3 பாய்களுக்கும் 750 ரூ கொடுத்து சென்று சாப்பிடு என அனுப்பி வைத்தோம்.


வியாபாரம் என்றால் என்ன, விலை தோதுப்பட்டு வந்தால் கொடுப்பதும் வாங்குவதும் முடியும் அதற்கு மேல் அதில் பேச என்ன இருக்கிறது. சொல்லும் விலை, கேட்கும் விலை இரண்டும் ஒத்துப் போனால் தானே வியாபாரம். அதற்கும் மேல் என்ன இருக்கிறது...


இவனுங்க பற்றி அன்றைய நடைப்பயிற்சியின் போது ஒரு நண்பர் சொன்னார், மாடு மேய்க்கும் இடத்தில் எனது அம்மாவிடம் எங்கள் காட்டில் வந்து போர்வையை வைத்து விட்டு, நாயைப் பிடித்து கட்டுங்கள், நாயை துரத்துங்கள் போர்வையை எடுத்துக் கொள்ளுங்கள் என இவனுங்க தொல்லை பெரியதாக வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள் இல்லையேல் காசே கிடையாது பார்க்கலாமா என்று மிரட்ட போர்வையை எல்லாம் எடுத்துக் கொண்டு போனதாக...


இப்படிப் பட்ட சூழ்நிலையில் இவனுங்க உண்மையிலேயே போர்வை விற்கத்தான் வருகிறார்களா? அப்படி என்றால் ஒரு போர்வை விலை சொல்லி தர மறுக்கும் காரணம் என்ன எடுத்தால் அரை டஜன் 6 அல்லது ஒரு டஜன் 12 என்றுதான் கொடுப்பார்களாம் அது எதற்கு> போர்வையை போய் எதற்கு யார் தவணை முறையில் வாங்குவார் இப்படி எல்லாம் கேள்விகள்...


அண்மைச் செய்தி: ஒரு வட நாட்டுப் பிச்சைக்காரர்க்கும் தமிழ் நாட்டுப் பிச்சைக்காரர்க்கும் சண்டை வந்து தமிழ்ப் பிச்சைக்காரரை வட நாட்டுப் பிச்சைக்காரர் அடித்தே கொன்றதாக செய்தி படத்துடன் படித்தோம்..


மேலும் வீட்டு வாடகைக்கு விடும் வீட்டுக்காரரை கொல்வதான செய்திகள்...

இப்படி பல வகையான குற்றப் பின்னணி செய்திகள் இருக்கின்றன...இவனுங்களைத் தான் நம்ம அரசு வேலைக்கு தமிழர்களை விலக்கி விட்டு எடுப்பதாக செய்திகள்...மேலும் எந்த வேலையானாலும் குறைந்த கூலிக்கு வேலைக்கு வருகிறார்கள் என வேலை...


போக்குவரத்தில் கூட அவர்கள் முரட்டுத் தனம் தெரியும். நாகரீகம் தெரியாது...

வடநாட்டு குற்றங்கள் தமிழ் நாட்டை ஆக்ரமிப்பதும் தீய பழக்கங்களான பான் பராக், மசாலா பான் போன்றவை தமிழ் நாட்டின் மண்ணில் அதிகம் உமிழப் படுவதும், துணையாக மதுக் கலாச்சாரமும் அரசுகளும் துணை போவதும் தமிழ் மக்கள் நிம்மதி தொலைந்து போக நெடு நாள் இல்லை எனக் கருத வாய்ப்புண்டு...


பாய்: நாம் மலை வாழ் மக்கள் சேவை செய்து வரும்போது பாய் நெசவுக்கு வட்டி இல்லாக் கடனுதவி செய்த போது பாய் தயாரிப்பதை பார்த்த நினைவும் இன்றும் மறையவில்லை..


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, December 4, 2020

காவல் துறை உங்கள் நண்பன்: கவிஞர் தணிகை.

 காவல் துறை உங்கள் நண்பன்: கவிஞர் தணிகை.



வெற்றி மாறனின் காவல் துறை உங்கள் நண்பன் விசாரணையை அடுத்து வந்துள்ள போலீஸ் ஸ்டோரி. ஆர் டி எம் இயக்கம். இந்தப் படத்தை சினிமா என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு காட்சியும் உண்மையை பறை சாற்றுகிற அன்றாட வாழ்வில் இளைஞர்கள் சந்திக்கிற நிகழ்வாக கோர்க்கப் பட்டு எடுக்கப் பட்டுள்ளது. 


ஆங்கிலப் படங்களில் அல்லது அயல் நாட்டு அந்நியப் படங்களில் தான் இது போன்று தத்ரூபமான உண்மை நிகழ்வை வைத்து படங்கள் படமாக பார்ப்பது போல அல்லாமல் எடுப்பது வழக்கம் அதே போல இந்தப் படம் தயாரிக்கப் பட்டுள்ளது.


இது போன்ற படத்திற்கு நிறைய நிறைய இன்னும் நிறைய வெளிப்பாடு தேவை என நான் நினைக்கிறேன் ஏன் எனில் கொரானா கோவிட். 19 நுண்ணியிர்க் கொல்லி காலத்தில் எல்லாத் துறைகளும் அடிவாங்கிய மாதிரி சினிமாத் துறையும் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளதால் இது போன்ற நல்ல படங்களும் இந்த ஒரு காலக் கட்டத்திலிருந்து விதிவிலக்காகமல் பெரிய அளவில் வெற்றி நிகழ்த்தி போட்ட முதலீட்டை எடுத்து வியாபார உத்திகளில் பலனடைந்திருக்குமா என்று சொல்ல முடியாது.


ஆனால் இது ஒரு பெரிய அளவிலான ஸ்டார் வேல்யூ அல்லது பெருத்த பொருட்செலவில் உருவான கதையுடனான படம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் இது இன்றைய சமுதாயத்திற்கு இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாக பரிணமித்திருக்கிறது.


சாதாரணமாக உணவை கொண்டு சேர்க்கும் ஒரு கேட்டரிங் மெசஞ்சர் பாய் கேரக்டர் உள்ள ஒரு இளைஞர் ஐ.டி கம்பெனியில் பணி புரியும் ஒரு பெண். இருவரும் கணவன் மனைவி. வீட்டார் ஒத்துழைப்பின்றி வாழ முயல்கின்றனர். முனைகின்றனர்.


அவள் தனியாக ஒரு நாள் வீட்டுக்கு இரவு நேரத்தில் வரும்போது 3 திருடர்களால் வழி மறிக்கப் பட்டு  பொன் பொருளை இழப்பதுடன், அந்த 3 பேரில் ஒரு  திருடன் அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடிக்கவும் ஆசை கொண்டு கட்டிப் பிடித்தும் அனுப்பி வைக்கிறான்.


கணவன் வந்ததும் நடந்தவை பற்றி மனைவி சொல்லக் கேட்டு அவர்களைத் தேடி நடந்த சம்பவத்தின் இடத்துக்கு சென்று அவர்கள் அங்கு இல்லாததால் தேடி நகரத்தில் அலையும் போது வேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது காவல் துறை குறுக்கிடுகிறது. அதிலிருந்து அந்த இளைஞர் வாழ்க்கையில் புயல் அடிக்க ஆரம்பிக்கிறது. மனைவியின் தாயைக் கூடப் போய்ப் பார்க்கலாம் என்று பேசிய திட்டமெல்லாம் தவிடு பொடியாகிறது. இந்த  இளம் தம்பதிகள் அதன் பின் தங்கள் கனவு வாழ்க்கையை இழந்து யானையின் காலடியில் நொறுங்கிய துகள்களாகி அள்ள முடியாமல் துவம்சம் செய்யப் படுகிறார்கள் என்று சொல்ல வேண்டும் ஏன் எனில் அந்த உணர்ச்சி அலைகளை அப்படியே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்கும் ஆவல் குறைந்து விடும்.


காவலர் அவன் வண்டியைக் குறுக்கிடும்போது அந்த இளைஞர் சுரேஷ் ரவி அந்த இளங் கணவராக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அவர் பேசும் ஒரே வார்த்தை: அறிவு இருக்கா? இப்படி செல்லும் வண்டியின் குறுக்கே வருகிறாயே? என்பதே... அதிலிருந்து அவரது வாழ்வின் விதி மாறி சொல்ல முடியாத பெரும் துன்பம் பெரும் சோக நிலைக்கு தள்ளப் படுவதை காவல்துறை உங்கள் நண்பன் என்ற இந்த வாழ்க்கைப் பாடம் போதித்திருக்கிறது.


ஒரு கட்டத்தில் ஒரு அனேமேதயக் கால் வருகிறது அது அவரது பாஸ்போர்ட் தொடர்பாக காவல் நிலையத்தில் அழைப்பதாக அதைக் கூட அவரால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாமல் அவ்வளவு பெரும் பீதி நிலவுகிறது என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என‌ அவர் ஆழ் மனதில் காவல் துறை பற்றிய அழிக்க முடியாத பெரும் படிவம் படிந்து விடுகிறது.


இன்னொரு கட்டத்தில் அவரது வாழ்க்கைத் துணையைப் பற்றி இன்ஸ்பெக்டர் மைம் கோபி என்பவர் இவரும் காவல் துறை இன்ஸ்பெக்டர் என்ற கயவராக வாழ்ந்து அந்த கேரக்டராகவே மாறி செய்திருக்கிறார். அவர் தரக்குறைவாக சொல்ல, இந்த இளைஞர் நீ தான் விளக்கு பிடித்தாயா என்று தமது மனைவி பற்றி தரம் தாழ்த்தி பேசும்போது குறுக்கிட்டு பேசி விடுகிறார். இவை இரண்டு வார்த்தைகள்தான் அவரை வாழ விடாமல் செய்து விடுகிறது. 


மேலும் இப்படி நடக்கும் கயவர் கூட்டம் பற்றி மேலிடத்தில் நீதி கிடைக்கும் நியாயம் கிடைக்கும் தர்மம் கிடைக்கும் என தமது பிரதிநிதித்துவம் பற்றி எடுத்துச் செல்ல முயல்கிறார். அங்கேயும் நயவஞ்சகத்தால் வீழ்த்தப் படுகிறார்.


மொத்தத்தில் காவல் துறை சார்ந்தவரிடம் பகைத்துக் கொள்ளக் கூடாது, எதிர்த்துப் பேச கூடாது அப்படி நடந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என சாத்தான் குளம் சம்பவம், தூத்துக்குடி ஸ்டெரிலைட் சம்பவம் போன்றவற்றுடன் காலம் காலமாக என்ன வேண்டுமானாலும் நடந்து வருகிறது , நடக்கும் என்ற கருத்துகள் துணிச்சலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதை எல்லாம் காவல் துறை எப்படி எடுத்துக் கொள்கிறது எப்படி இந்தப் படத்தை உலவ விட்டது என்பன போன்ற கேள்விகள் நமக்குள் வருகின்றன. மிகுந்த துணிச்சலாக இந்தப் படக்குழு இந்த நடைமுறை எதார்த்தங்களை உண்மைச் சம்பவங்களை சினிமாவாக திரைக்கு கொண்டு வந்துள்ளது.


அதிலும் ஒரு மனசாட்சி உள்ள போலீஸ்காரர் இருக்கிறார். அவர் காவல்துறை நிலையங்களின் வாயில் படியை மிதிக்கவும் கூடாது. அப்படி ஏதாவது செய்வதானால் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் எனச் சொல்லாமல் சொல்லி அறிவுரை செய்து எங்கேயேவது உனது கணவரைக் கண்டால் வந்து என்னிடமும் சொல்லு என்பதாகச் சொல்வதை வைத்து படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.


பெரும் பாதிப்படைய வைத்திருக்கிறது என்னை இந்தப் படம். ஆங்கிலேய காலத்தின் எச்சங்களாகவே இந்த நாட்டின் ஆட்சி முறைகளும், அரசு அலுவலகங்களும், நீதிமன்றங்களும், சிறைக்கூடங்களும் காவல் நிலையங்களும் சின்னங்களாகவே விளங்குகின்றன அதற்கு தக்க அடிப்படையை அரசியல் அமைப்பு சார்ந்த சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும் அமைத்துக் கொடுக்கின்றன.


மக்களாட்சி என்ற பேரில் கோல் எடுத்தவன் எல்லாம் கொண்டைக்காரன், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பதாக வேலை கிடைக்காமல் இருக்கும் வரை மக்கள் நல்வாழ்வு என்பது பற்றி எல்லாம் சிந்திக்கும் அதே நபர்கள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பாக அரசுப் பணி என்று கிடைத்தவுடன் மக்களும் அவர்களும் எந்த அளவு அந்நியப்பட்டு முரண் பட்டு மிருகத்தை விட கேவலமாக பிரிந்து கொடுமைக்காரர்களாக மாறி விடுகிறார்கள் மாற்றி விடுகிற சமூக அமைப்பு என்ற காட்சிகளை இந்தப் படம் தெளிவாக ஒரு காட்சி கூட விரயமின்றி விவரித்து விடுகிறது.


அன்றைய இரவு என்னால் உறங்க முடியவில்லை. இது போன்ற எத்தனையோ எண்ணிலடங்கா உணமைகள் நடந்து வரும் நாட்டு நடப்பை நம் போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எனைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்த காரணமே விழியுறக்கமின்மை.



அதே நேரம் சமூகத் தீமை சக்திகள் எவ்வாறு ஆட்சி அதிகாரம் அரசுத் துறைகளுடன் கரம் சேர்க்கின்றன என்பதையும் நன்றாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். காவல் துறையுடன் அந்த  திருட்டுப் பயல்கள் கொண்டிருக்கும் சிநேகம், மேலும் ஏற்கெனவே மதுக் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த அதே நபர்கள் மது குடித்திருக்கிறார்களா என்று பரிசோதனைக் கருவியில்  அந்த பழைய குழலை எடுத்து விட்டு புதித்தாகக் கொடுத்து எனை சோதனை செய்யுங்கள் அப்போது நான் ஊதுகிறேன் வாயை என நாயகன் பிடிவாதம் பிடிப்பது, அதனால் ஏற்படும் எரிச்சல் சொல்வதைக் கேட்க மறுக்கிறானே என அவன் மேல் மாபெரும் குரோதம் பாராட்டி காவல் துறை அவன் வாழ்வை நிர்மூலமாக்குவது... 

அவன் அடி வாங்கிய காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட அவனது வாழ்க்கைத் துணையின் கர்ப்பம் கலைந்துபோவது ...இதை எல்லாம் சேர்த்துப் பார்த்துச் சொன்னால் " என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்"? என்ற பாரதியின் வரிகளும், நெஞ்சு பொறுக்குதிலையே... என்ற வரிகளும்..தேடிச் சோறு நிதம் தின்று என்ற வரிகளையும் நினைக்கத் தோன்றுகிறது.


இது போன்ற படங்களை எல்லாம் பாரெங்கும் ஒளி வீசச் செய்து அனைவரையும் பார்க்கும்படி செய்யவேண்டியது அவசியம். இது போன்ற படங்களைப் பார்த்த பின் காவல் துறை பற்றி மக்களின் சிந்தனை எப்படி இருக்கிறது ஏன் இப்படி கலைவடிவங்களில் சொல்லப் படுகிறது என ஆட்சி அமைப்பு முறை சார்ந்தோர் எல்லாம் விவாதம் செய்து இந்நிலை மாறுபட தங்கள் உழைப்பைக் கொடுத்து நிலையை சீர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆங்கிலேயரின் கொடுமைக்கும் இப்போது ஆள்வோரின் நிலைக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை என்பது உண்மை உண்மையாகவே உணர்வுடன் இருக்கும். 


குறிப்பு: இந்தப் படம் சாத்தான் குளம் சம்பவங்கள் அரங்கேறும் முன்பே எடுக்கப் பட்டு வந்ததாக இந்தக் குழுவினர் சொல்லி இருப்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டியது. மனித உரிமை ஆணையம் சர்வே தேச மனித உரிமை ஆணையம் எல்லாம் சக்தி இல்லா அமைப்பாக இருப்பது இது போன்ற  நிகழ்வுகள் மூலம் மனித மூளைகள் எப்படி துருப்பிடித்து குற்றவியல் நடைமுறைகளில்  மூழ்கிவிட்டன என்பதற்கான சாட்சியப் பதிவுகளாகி விடுகின்றன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.