காவல் துறை உங்கள் நண்பன்: கவிஞர் தணிகை.
வெற்றி மாறனின் காவல் துறை உங்கள் நண்பன் விசாரணையை அடுத்து வந்துள்ள போலீஸ் ஸ்டோரி. ஆர் டி எம் இயக்கம். இந்தப் படத்தை சினிமா என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு காட்சியும் உண்மையை பறை சாற்றுகிற அன்றாட வாழ்வில் இளைஞர்கள் சந்திக்கிற நிகழ்வாக கோர்க்கப் பட்டு எடுக்கப் பட்டுள்ளது.
ஆங்கிலப் படங்களில் அல்லது அயல் நாட்டு அந்நியப் படங்களில் தான் இது போன்று தத்ரூபமான உண்மை நிகழ்வை வைத்து படங்கள் படமாக பார்ப்பது போல அல்லாமல் எடுப்பது வழக்கம் அதே போல இந்தப் படம் தயாரிக்கப் பட்டுள்ளது.
இது போன்ற படத்திற்கு நிறைய நிறைய இன்னும் நிறைய வெளிப்பாடு தேவை என நான் நினைக்கிறேன் ஏன் எனில் கொரானா கோவிட். 19 நுண்ணியிர்க் கொல்லி காலத்தில் எல்லாத் துறைகளும் அடிவாங்கிய மாதிரி சினிமாத் துறையும் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளதால் இது போன்ற நல்ல படங்களும் இந்த ஒரு காலக் கட்டத்திலிருந்து விதிவிலக்காகமல் பெரிய அளவில் வெற்றி நிகழ்த்தி போட்ட முதலீட்டை எடுத்து வியாபார உத்திகளில் பலனடைந்திருக்குமா என்று சொல்ல முடியாது.
ஆனால் இது ஒரு பெரிய அளவிலான ஸ்டார் வேல்யூ அல்லது பெருத்த பொருட்செலவில் உருவான கதையுடனான படம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் இது இன்றைய சமுதாயத்திற்கு இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாக பரிணமித்திருக்கிறது.
சாதாரணமாக உணவை கொண்டு சேர்க்கும் ஒரு கேட்டரிங் மெசஞ்சர் பாய் கேரக்டர் உள்ள ஒரு இளைஞர் ஐ.டி கம்பெனியில் பணி புரியும் ஒரு பெண். இருவரும் கணவன் மனைவி. வீட்டார் ஒத்துழைப்பின்றி வாழ முயல்கின்றனர். முனைகின்றனர்.
அவள் தனியாக ஒரு நாள் வீட்டுக்கு இரவு நேரத்தில் வரும்போது 3 திருடர்களால் வழி மறிக்கப் பட்டு பொன் பொருளை இழப்பதுடன், அந்த 3 பேரில் ஒரு திருடன் அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடிக்கவும் ஆசை கொண்டு கட்டிப் பிடித்தும் அனுப்பி வைக்கிறான்.
கணவன் வந்ததும் நடந்தவை பற்றி மனைவி சொல்லக் கேட்டு அவர்களைத் தேடி நடந்த சம்பவத்தின் இடத்துக்கு சென்று அவர்கள் அங்கு இல்லாததால் தேடி நகரத்தில் அலையும் போது வேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது காவல் துறை குறுக்கிடுகிறது. அதிலிருந்து அந்த இளைஞர் வாழ்க்கையில் புயல் அடிக்க ஆரம்பிக்கிறது. மனைவியின் தாயைக் கூடப் போய்ப் பார்க்கலாம் என்று பேசிய திட்டமெல்லாம் தவிடு பொடியாகிறது. இந்த இளம் தம்பதிகள் அதன் பின் தங்கள் கனவு வாழ்க்கையை இழந்து யானையின் காலடியில் நொறுங்கிய துகள்களாகி அள்ள முடியாமல் துவம்சம் செய்யப் படுகிறார்கள் என்று சொல்ல வேண்டும் ஏன் எனில் அந்த உணர்ச்சி அலைகளை அப்படியே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்கும் ஆவல் குறைந்து விடும்.
காவலர் அவன் வண்டியைக் குறுக்கிடும்போது அந்த இளைஞர் சுரேஷ் ரவி அந்த இளங் கணவராக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அவர் பேசும் ஒரே வார்த்தை: அறிவு இருக்கா? இப்படி செல்லும் வண்டியின் குறுக்கே வருகிறாயே? என்பதே... அதிலிருந்து அவரது வாழ்வின் விதி மாறி சொல்ல முடியாத பெரும் துன்பம் பெரும் சோக நிலைக்கு தள்ளப் படுவதை காவல்துறை உங்கள் நண்பன் என்ற இந்த வாழ்க்கைப் பாடம் போதித்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் ஒரு அனேமேதயக் கால் வருகிறது அது அவரது பாஸ்போர்ட் தொடர்பாக காவல் நிலையத்தில் அழைப்பதாக அதைக் கூட அவரால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாமல் அவ்வளவு பெரும் பீதி நிலவுகிறது என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என அவர் ஆழ் மனதில் காவல் துறை பற்றிய அழிக்க முடியாத பெரும் படிவம் படிந்து விடுகிறது.
இன்னொரு கட்டத்தில் அவரது வாழ்க்கைத் துணையைப் பற்றி இன்ஸ்பெக்டர் மைம் கோபி என்பவர் இவரும் காவல் துறை இன்ஸ்பெக்டர் என்ற கயவராக வாழ்ந்து அந்த கேரக்டராகவே மாறி செய்திருக்கிறார். அவர் தரக்குறைவாக சொல்ல, இந்த இளைஞர் நீ தான் விளக்கு பிடித்தாயா என்று தமது மனைவி பற்றி தரம் தாழ்த்தி பேசும்போது குறுக்கிட்டு பேசி விடுகிறார். இவை இரண்டு வார்த்தைகள்தான் அவரை வாழ விடாமல் செய்து விடுகிறது.
மேலும் இப்படி நடக்கும் கயவர் கூட்டம் பற்றி மேலிடத்தில் நீதி கிடைக்கும் நியாயம் கிடைக்கும் தர்மம் கிடைக்கும் என தமது பிரதிநிதித்துவம் பற்றி எடுத்துச் செல்ல முயல்கிறார். அங்கேயும் நயவஞ்சகத்தால் வீழ்த்தப் படுகிறார்.
மொத்தத்தில் காவல் துறை சார்ந்தவரிடம் பகைத்துக் கொள்ளக் கூடாது, எதிர்த்துப் பேச கூடாது அப்படி நடந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என சாத்தான் குளம் சம்பவம், தூத்துக்குடி ஸ்டெரிலைட் சம்பவம் போன்றவற்றுடன் காலம் காலமாக என்ன வேண்டுமானாலும் நடந்து வருகிறது , நடக்கும் என்ற கருத்துகள் துணிச்சலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை எல்லாம் காவல் துறை எப்படி எடுத்துக் கொள்கிறது எப்படி இந்தப் படத்தை உலவ விட்டது என்பன போன்ற கேள்விகள் நமக்குள் வருகின்றன. மிகுந்த துணிச்சலாக இந்தப் படக்குழு இந்த நடைமுறை எதார்த்தங்களை உண்மைச் சம்பவங்களை சினிமாவாக திரைக்கு கொண்டு வந்துள்ளது.
அதிலும் ஒரு மனசாட்சி உள்ள போலீஸ்காரர் இருக்கிறார். அவர் காவல்துறை நிலையங்களின் வாயில் படியை மிதிக்கவும் கூடாது. அப்படி ஏதாவது செய்வதானால் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் எனச் சொல்லாமல் சொல்லி அறிவுரை செய்து எங்கேயேவது உனது கணவரைக் கண்டால் வந்து என்னிடமும் சொல்லு என்பதாகச் சொல்வதை வைத்து படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.
பெரும் பாதிப்படைய வைத்திருக்கிறது என்னை இந்தப் படம். ஆங்கிலேய காலத்தின் எச்சங்களாகவே இந்த நாட்டின் ஆட்சி முறைகளும், அரசு அலுவலகங்களும், நீதிமன்றங்களும், சிறைக்கூடங்களும் காவல் நிலையங்களும் சின்னங்களாகவே விளங்குகின்றன அதற்கு தக்க அடிப்படையை அரசியல் அமைப்பு சார்ந்த சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும் அமைத்துக் கொடுக்கின்றன.
மக்களாட்சி என்ற பேரில் கோல் எடுத்தவன் எல்லாம் கொண்டைக்காரன், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பதாக வேலை கிடைக்காமல் இருக்கும் வரை மக்கள் நல்வாழ்வு என்பது பற்றி எல்லாம் சிந்திக்கும் அதே நபர்கள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பாக அரசுப் பணி என்று கிடைத்தவுடன் மக்களும் அவர்களும் எந்த அளவு அந்நியப்பட்டு முரண் பட்டு மிருகத்தை விட கேவலமாக பிரிந்து கொடுமைக்காரர்களாக மாறி விடுகிறார்கள் மாற்றி விடுகிற சமூக அமைப்பு என்ற காட்சிகளை இந்தப் படம் தெளிவாக ஒரு காட்சி கூட விரயமின்றி விவரித்து விடுகிறது.
அன்றைய இரவு என்னால் உறங்க முடியவில்லை. இது போன்ற எத்தனையோ எண்ணிலடங்கா உணமைகள் நடந்து வரும் நாட்டு நடப்பை நம் போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எனைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்த காரணமே விழியுறக்கமின்மை.
அதே நேரம் சமூகத் தீமை சக்திகள் எவ்வாறு ஆட்சி அதிகாரம் அரசுத் துறைகளுடன் கரம் சேர்க்கின்றன என்பதையும் நன்றாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். காவல் துறையுடன் அந்த திருட்டுப் பயல்கள் கொண்டிருக்கும் சிநேகம், மேலும் ஏற்கெனவே மதுக் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த அதே நபர்கள் மது குடித்திருக்கிறார்களா என்று பரிசோதனைக் கருவியில் அந்த பழைய குழலை எடுத்து விட்டு புதித்தாகக் கொடுத்து எனை சோதனை செய்யுங்கள் அப்போது நான் ஊதுகிறேன் வாயை என நாயகன் பிடிவாதம் பிடிப்பது, அதனால் ஏற்படும் எரிச்சல் சொல்வதைக் கேட்க மறுக்கிறானே என அவன் மேல் மாபெரும் குரோதம் பாராட்டி காவல் துறை அவன் வாழ்வை நிர்மூலமாக்குவது...
அவன் அடி வாங்கிய காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட அவனது வாழ்க்கைத் துணையின் கர்ப்பம் கலைந்துபோவது ...இதை எல்லாம் சேர்த்துப் பார்த்துச் சொன்னால் " என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்"? என்ற பாரதியின் வரிகளும், நெஞ்சு பொறுக்குதிலையே... என்ற வரிகளும்..தேடிச் சோறு நிதம் தின்று என்ற வரிகளையும் நினைக்கத் தோன்றுகிறது.
இது போன்ற படங்களை எல்லாம் பாரெங்கும் ஒளி வீசச் செய்து அனைவரையும் பார்க்கும்படி செய்யவேண்டியது அவசியம். இது போன்ற படங்களைப் பார்த்த பின் காவல் துறை பற்றி மக்களின் சிந்தனை எப்படி இருக்கிறது ஏன் இப்படி கலைவடிவங்களில் சொல்லப் படுகிறது என ஆட்சி அமைப்பு முறை சார்ந்தோர் எல்லாம் விவாதம் செய்து இந்நிலை மாறுபட தங்கள் உழைப்பைக் கொடுத்து நிலையை சீர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆங்கிலேயரின் கொடுமைக்கும் இப்போது ஆள்வோரின் நிலைக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை என்பது உண்மை உண்மையாகவே உணர்வுடன் இருக்கும்.
குறிப்பு: இந்தப் படம் சாத்தான் குளம் சம்பவங்கள் அரங்கேறும் முன்பே எடுக்கப் பட்டு வந்ததாக இந்தக் குழுவினர் சொல்லி இருப்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டியது. மனித உரிமை ஆணையம் சர்வே தேச மனித உரிமை ஆணையம் எல்லாம் சக்தி இல்லா அமைப்பாக இருப்பது இது போன்ற நிகழ்வுகள் மூலம் மனித மூளைகள் எப்படி துருப்பிடித்து குற்றவியல் நடைமுறைகளில் மூழ்கிவிட்டன என்பதற்கான சாட்சியப் பதிவுகளாகி விடுகின்றன.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment