Wednesday, December 16, 2020

எனது வாழ்வுப் புத்தகத்தில் கண்ணன் ஒர் அத்தியாயம்: கவிஞர் தணிகை

 எனது வாழ்வுப் புத்தகத்தில் கண்ணன் ஒர் அத்தியாயம்: கவிஞர் தணிகை


அப்போது அவர் ஒரு திருமணமாகாத இளைஞர். அவருக்கு வீடு வாடகைக்கு விடுவது பற்றி இரு வேறு கருத்துகள். எனது அக்கா வீட்டில் ஒரு போர்ஷனில் அவர் வாடைகைக்கு குடியமர்த்தினேன். அவரது இரு சக்கர வாகனத்தை எங்கள் வீட்டில் உள்ள வண்டி செட்டில் நிற்கவும் அனுமதித்தேன். 



தீபாவளி காலக் கட்டத்தில் தனது தையல் பணி முடித்து நேரம் கழித்தும் கூட வருவார். சலித்துக் கொள்ளாமல் அவர் வண்டியை நிறுத்த கதவை திறந்து விடுவேன். அவர் ஹை லுக் என்ற ஒரு சிறிய ரெடிமேட் மற்றும் ஆடையகம் அத்துடன் தையல் பணிகளையும் செய்து வந்தார். சிஸ்கால் எனப்படும் ஜிந்தால் ஸ்டீல் ஒர்க்ஸ் பணியாளர் ஒப்பந்ததாரர்களின் பணி உடுப்புகளையும் ஒப்பந்த அடிப்படையில் செய்து முடித்து கொடுத்து வந்தார். 


என்னிடமும் ஏதாவது பள்ளிகளிடம் உங்கள் நண்பர்கள் வழியே ஆர்டர் வாங்கித் தரமுடியுமா எனக் கேட்பார்.  முயன்றோம் அது பலனளிக்கவில்லை. மேலும் அவருடைய திருமணத்திற்கு எங்களால் ஆன முயற்சி செய்து இரும்பாலை அருகே சோளம்பள்ளம் என்ற இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்தோம். பெண் பார்த்த சில மாதங்களில் இரு குடும்பத்தார்க்கும் ஏதோ வாக்குவாதம் வந்து திருமணம் நடத்த தடையாகி அதன் பின் மறுபடியும் அந்தப் பெண்ணையே கேட்டு முடிக்கலாம் என்ற எமது  முன் வார்த்தை பலிக்க அப்படியே அந்த நன்னிகழ்வு நடந்தது.


அவருக்கு திவாகர் என்றும் ஒரு 4 வயது குழந்தை மற்றும் இப்போது பூங்குன்றன் என்ற ஒரு வயதுக் குழந்தை இரு ஆண்கள். இரண்டாவது குழந்தைக்கு  பெயரை நான் தான் வைத்தேன் என நினைவு வைத்திருப்பார் சொல்கிறார்கள். இதை ஏன் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால் 6 ஆண்டுகள் அல்லது ஏழெட்டு ஆண்டுகள் இருக்கலாம் அவர் எனை அறிமுகப் படுத்திக் கொண்டு. நானும் அவரும் அறிமுகமாகி. ஆனால் அவர் இப்போது இல்லை கடந்த தொப்பூர் கணவாய் விபத்தில் பலியானார்.



குத்புதீன் என்ற ஒரு வட நாட்டுக்கார துரோகியால் சுமார் 15 வாகனங்கள் சேதமாகி அன்றே 4 பேர் அங்கேயே இறந்தனர். 20 பேர் காயம். அந்த துரோகி தனது உயிரை காக்க வேண்டி இத்தனை பெரிய பேரிழப்பை விளைவித்த பெரு விபத்துக்கு காரணமாயிருந்திருக்கிறான். எரிபொருளை சிக்கனம் செய்ய வேண்டி நியூட்ரலில் சிமெண்ட் லோடு ஏற்றிய லாரியுடன் ப்ரேக் பிடிக்காமல் சென்று எல்லா வாகனங்கள் மேலும் இடித்து ...அதில் சேதமானார் கண்ணனும் அவரது இரு சக்கரவாகனம் ஒன்றும் அதில் அடங்கும்..


சிறு குடும்பம்; இரு சிறு குழந்தைகள்.  அப்பாவி மனைவி...பள்ளிப் பட்டி என்ற ஒரு தர்மபுரி மாவட்டத்தில் சிறு அளவிலான நிலத்தில் அவரது தாயும் தந்தையும். அவரது சகோதரி குடும்பமும்.


நாவல் பழம் பறிக்கலாம் என விரயமாக வீண் போவதைக் கண்டு என்னுடன் பறித்த கதை,

பதநீர் சாப்பிடலாம் வாங்க என கருப்பு ரெட்டியூர் கண்ணன் தோட்டத்துக்கு சென்ற கதை,

என் வீட்டில் பின் செடிப்பக்கத்தில் இருந்து சோத்துக் கத்தாழை எடுத்து என் பேச்சைக் கேட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு கருவுற நிகழ்ந்த கதை,


அவருக்கு சில இளைஞர்கள் தொடர்பு சிகரெட், மதுப் பழக்கமும் உண்டு என்றும் தெரியும் .ஆனால் அவற்றால் எல்லாம் எங்களது நாகரீகமான தொடர்பு பாதிக்கவில்லை. பிறர் பேச்சைக் கேட்டு ஓரிரு வருடம் முன் எனது சகோதரி வீட்டைக் காலி செய்து 2 வீடு தள்ளி குடி போனார். அப்போது எனது குடும்பத்தாருடன் அவரது குடும்பத்தொடர்பு அப்படியே தொடர்ந்து வந்தது.


இன்று எனது மகனது பிறந்த நாள். இது போன்ற ஒரு நாளில் அவர் எனது மகனுக்கு ஒரு பேனா வாங்கி பரிசளித்தது நினைவு இருக்கிறது இன்றும். ஆனால் அவர் இல்லை.


கடைசியாக அவருடன் வேடிக்கையாக 5 வழிச்சாலையில் சேலத்தில் இருந்து அவருக்கு அதிகாலை 7 மணி இருக்கலாம் ஒரு போன் செய்து கண்ணன் எங்கிருக்கிறாய், என்ன பேண்ட் எல்லாம் (கால் சட்டை) தைத்துக் கொடுத்தால் புதிதாக தைக்கும் துணியின் பாக்கெட்டில் பணம் எல்லாம் போட மாட்டாயா? என்று கிண்டல் செய்து விட்டு மிக அருமையாக நன்றாக தைத்திருக்கிறாய் எனப் புகழ்ந்தேன். காலையில் ஒரு நல்ல வார்த்தையை என் மூலம் கேட்ட திருப்தி அன்று முழுதும் அவருக்கு தொடருமே என்று...



நல்ல சுறு சுறுப்பான மனிதர். ஒரு முறை என்னுடன் பேசிக் கொண்டே அவர் ஒரு பேண்ட் தைத்த வேகம் அழகு என்னுள் என் நினைவாக இன்னும்.


எனது துணைவியாரை அக்கா என்றே கொண்டிருந்தார். அவர் மற்றும் அவர் சார்ந்த இன்னும் சில பெண்களிடம் துணி தைக்கக் கொடுத்து வாங்கிக் கொண்டு கொடுத்து வியாபார நோக்கில் தொழில் செய்து தைத்த துணிகளை சேலத்து தொழிலதிபருடன் தொடர்பு கொண்டு வரவு செலவு நடத்தி தொழில் முனைவோராக மாற முயன்றதும் உண்டு. 


அதற்காக தனது தொழில் நிறுவனத்தை அரசுத் துறையுடன் பதிவு செய்து எண் பெற்று வங்கிகளில் கடன் பெற முயன்றதும் உண்டு....


ஆனால் தனது இரு சிறு குழந்தைகளை மீளாத் துயரில் விட்டு அந்த கண்ணனில் வாழ்வு மாயமாகிப் போனது. மாயக் கண்ணன் விடை பெற்றான். அனைவரிடமிருந்தும் அவர் ஆன்மா சாந்தி அடையாது. அவரது குழந்தை குடும்பங்களுக்கு அருகிருந்து துணை செய்யட்டும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



 


No comments:

Post a Comment