2026 ஆடிப் 18ஆம் பெருக்கும் மேட்டூர் அணைக் காவிரியும்: கவிஞர் தணிகை
நீர் குறைந்தாலும் காவிரி காவிரிதான், அது நம் முகவரிதான்...
என்றபடி வழக்கம் போல கரையோரம் நடந்தேன் சுமார் இரண்டே முக்கால் மணி நேரம்.
தாயின் மாரில் மடியில் பால் வரவில்லை என்றாலும் தாய் தாய் தானே அது மாறாததுதானே!
காதோலைக் கருகமணி, கறுப்பு வளையல், வெற்றிலைப் பாக்கு சகிதம் எங்கள் குடும்ப வழக்கமான கன்னிமார் கும்பிட 16 கண் பாலம் வரை சென்று நீரேற்றிகளின் கடைசி முனையில் உள்ள அதற்கென்றே உள்ள இடத்தில் கற்பூரம் ஏற்றினேன்.
கிராமப்புற காவல் தெய்வங்களின் கோயிலில் உள்ள கத்தி, கடப்பாரை, ஈட்டி, போன்றவை கழுவி எடுத்து வர இந்நாள். முனியப்பனின் ஆண்டுக்கொரு நாள் திருவிழாவும் இந்த நாளையொட்டியே இருக்கும் தீர்த்தக் குடம் கொண்டு வந்து நீராட்டி கிடா வெட்டிக் கும்பிடுகிறார்கள்.
நிறைய அறிமுகமான முகங்களை சந்தித்தேன், தம்பி மதியழகன், எம்.எஸ். மாதப்பன் தோழர் ராஜு தம்பதியர், ஆசிரியை மைதிலி கார்த்தி அவர் தம் குடும்பம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தோர். அதற்காகத் தானே நடந்தே போவது...மேலும்
அறிமுகமாகாத கரூரிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பம் 4 பேர், பெற்றோர் இருவர், ஆண், பெண் குழந்தைகள் இருவர் என்னிடம் தன்னார்வத்துடன் பேசி அணை பற்றி பேசி புள்ளிவிவரங்கள் பெற்றும் எனது ஓரிரு வரிகளின் அறிமுகத்துடன் உடல் சுத்தம், நீரின் அத்தியாவசியத் தேவை, நீர்ப்பாசனத் தந்தை சர். ஆரதர் காட்டன் என சில நிமிடங்கள் பேசினேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க மகிழ்வுடன் நன்றி சொன்னார்கள்.
தங்கமாபுரி பட்டணம் சேலம் கேம்ப் இணைக்கும் புதுப் பாலத்தில் கொஞ்சம் கூட்டம்...6 காவலர்கள் இருக்க...
அவ்வளவாக பெரிதாக மக்கள் வெள்ளமோ, கடைகளின் எண்ணிக்கையோ இல்லை. சேலம் கேம்ப் பகுதியில் 2 கடைகளில் நல்ல கூட்டம் வியாபாரம்.
நாம் எப்போதுமே மேட்டூர் 16 கண்மாய் பாலத்துடன் நம்து உலாவை நிறுத்துக் கொள்வதுதான், என்றாலும் கீழ் மேட்டூரிலிருந்து சேலம் செல்லும் பேருந்துகளில் திரும்புகையில் நல்ல கூட்டம் இருப்பதை பார்க்க முடிந்தது.. எனவே கீழ் மேட்டூரில் நிறைய மக்கள் வந்திருந்திருப்பார்கள் எனக் கருதுகிறேன்.
இதெல்லாம் ஒரு சோகம் இழையோட இருந்தது. ஏன் எனில் ஒரு புறம் காவிரி வெள்ளம் கரை புரள, மறுபுறம் மக்கள் தலைகள் வெள்ளமாக ஆடிப் பெருக்கில் இருக்கும் இடத்தில் இப்படி... எனது சகோதர சகோதரிகளுடன் கைகளைப் பிடித்தபடி அணையின் மேல் ஏறிச் சென்ற காலம் முதல் இப்போது வரை என்னவெல்லாமோ நினைவிலோடியது. ஆனாலும் இன்று அந்தக் காலம் எல்லாம் கலைந்த மேகங்களாய்...எல்லாம் மனிதத் தளையீடுகள்...
எந்த தலைவர் ஒருவர் நதி நீர் இணைப்பை இந்தியாவில் செய்கிறாரோ அவரே இந்த நாட்டின் தலைவிதியை மாற்றுவார். அஸ்ஸாமில் வெள்ளம் உயிர் சேதம், தமிழகத்தில் குடிநீருக்கே பாடாகப் பட இதுதான் நமது ஒரே இந்தியா என்றும் உபகண்டமென்றும் உலகெலாம் புகழ் பெற்ற தேசம் என... இதற்கு மேல் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை..
சொல்ல நிறைய இருந்தாலும் வாயைத் திறந்தபடி எப்போதும் பேசிக் கொண்டே இருக்க மனிதரால் எவ்வளவுதான் முடியும்?
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
சூப்பர் நல்ல நினைவலைகள்
ReplyDelete