Wednesday, August 7, 2024

மா(ற்)று: கவிஞர் தணிகை

 மா(ற்)று: கவிஞர் தணிகை



ஒரு உறுத்தல், அல்லது ஒரு முள்ளின் நெருடல் விலக்க, இந்த விளக்கம்.


சுமார் 10 ஆண்டுகளுக்கும் முன்பே தேர்வு செய்யப் பட்டால் கார்ப்ரேட் ஆதரவாகவே இயங்கும் என அரசியல் நோக்கர்கள் கருதியபடிதான் இன்னும் ...


அப்போதிருந்தே அந்த நிலைப்பாட்டில் இருந்து நல்ல மனிதர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ளுமளவு எந்த மாறுபாடும் இல்லா அரசு ஆட்சி முறைகள்.


யானை, நாய் பற்றி எல்லாம் பரிதாபப் படுவதை விடுத்து இந்த முனையத்தை அதாவது கார்ப்ரேட்டுகளுக்கு எதிராக அணி திரள வேண்டாமா என ஒரு சமூக ஊடகத்தில் நண்பர் ஒருவர் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார் இப்போது கேரள வயநாட்டுப் பேரிடருக்கு எல்லாம் எது காரணம் அதன் மூலம் பற்றி எல்லாம் பார்க்க வேண்டும் எல்லாம் சரிதான். கொல்லும் கொள்கையை மட்டும் வைத்து மனிதாபிமானத்தையும் நாம் இழந்து விடக் கூடாது.


யாம் அம்பானி குடும்பத் திருமணம் 2600 கோடி, 4000 கோடி, 5000 கோடி செலவு என பலவாறாக செய்தியை ஊடக வழி அறிந்து அதன் பின் ஜியோ செல்பேசி வாடிக்கையாளர்க்கு மொய் வைத்த வரவின் போதே எனது கருத்தை பதிவு செய்திருந்தோம். எம்மால் முடிந்தளவு பேசுவதிலும் எழுதுவதிலும் செயல்பாடுகளிலும் ஏன் வாழ்வின் தளங்களில் முக்கிய முடிவுகளின் போதும் வேதனையை உள் வாங்கிக் கொண்டு எட்ட முடிந்த அளவு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களைப் போன்றோர் தாம் என்ன செய்து வருகிறீர் என்பதில் தெளிவில்லை.


முக நூல் போன்ற ஊடகங்களில் அந்த செலவு புள்ளி ஐந்து சதவீதமே அவர்கள் சொத்து மதிப்பில், எனவே அவர்கள் அந்த செலவு செய்ததில் இவர்களுக்கென்ன என்றும் கார்ப்பரேட் ஆதரவாளர்கள் செய்திகளைக் கொட்டிக் கொண்டிருந்தனர். இப்போதைய மத்திய பட்ஜெட் வரவு செலவு அறிக்கை சொல்வதும் அவர்களுக்கான வரி குறைவும் இதர பிற மனிதப் பிரிவுக்கெல்லாம் அதிகமாகவுமே இருப்பதாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.


கார்ப்பரேட்களை எப்படி எதிர்ப்பீர்கள் அவர்கள் தாம் வேலை உற்பத்தி செய்வோர், அவர்கள் தாம் பெரும் நிதி தருவோர் தேர்தலுக்கு, அவர்கள் தாம் சமூகப் பணி செய்வோர் ... அவர்களைத் தான் ஒலிம்பிக்ஸ் தூதராக ஏக மனதாக தேர்ந்தெடுத்து அனுப்புவோம், விளம்பரத்திலும் இடம் பெறச் செய்வோம், அவர்களே இந்தியாவில் கடவுளை விட சக்தி அதிகம் படைத்தோர். நேரடியாக கார்ப்ரேட்களை எப்படி எதிர்ப்பீர்? எதிர்த்துதான் உங்களால் என்ன செய்ய முடியும்...நான் இன்னும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளராகவே இருக்கிறேன் என்பது தவிர வேறென்ன செய்ய முடியும் என்கிறீர்கள்...சொல்லுங்கள்.குறைந்த பட்சம் எம்மால் செய்ய முடிவது அவ்வளவுதாம்.


ஆளும் அரசு அவர்களைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்களுக்கானதாக அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வரை வாழ்வின் வழியே சரியாகத் தெரியாதார் எப்படி எதிர்த்து நாட்டையும் நாட்டு மக்களையும் சமச் சீர் படுத்தப் போகிறோம்? சரியான அரசு என்பது சரியான மக்களிடம் இருந்து வருவதுதானே? சரியான வீரியமில்லா மக்கள் தொகையில் இருந்து எதை எல்லாம் எதிர் பார்க்கிறீர்கள் நண்பரே அதில் நீங்கள் தெளிவு பெற வேண்டியது அவசியம். மாற்ற வேண்டுமெனில் மாற வேண்டும். நாமும்.


இங்கும் கூட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் எதுவும் வேண்டாம் என மறுத்ததும் உண்டு, அதன் ஓய்வூதியப் பலன்களை அனுபவித்து வருவோரும் உண்டு. இந்த நாடும், இதன் மக்கள் தொகையும் வெகுவாக பிரிந்து கிடக்கிறது. போராடுவதாக விளம்பரம் செய்து கொண்டிருப்போர் எல்லாம் சமய சந்தர்ப்ப வாதிகள்தாம் உண்மைதாம். அவர்கள் குடும்பத்துக்காக வாழ்கிறார்கள் நாட்டுக்காக வாழ்வதாக காட்டிக் கொண்டு. குடும்பம் என்பதுவும் நாட்டின் ஒரு அங்கம் தானே. அது சரியானால் நாடும் உலகும் சரியாகும் என்பது ஆன்றோர் வாக்கு. இங்கு குடும்பத்திலும், நாட்டிலும் கொள்கை ஏதும் இல்லை. இருப்பதெல்லாம் பணத் தேடல் ஒன்றுதான்.எனவே எல்லாம் கோணலாகத் தான் இருக்கும் கோணாத கோலும்.சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கும்வரை,ஏமாற்றுவது சுபாவம் என்றிருக்கும் வரை,நயவஞ்சகம் முகத்தில் தெரியாது நெஞ்சில் இருத்திக் கொள்ளும் வரை எந்த நம்பிக்கையும் பிறக்க வழி இல்லை.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை. 

No comments:

Post a Comment