Monday, August 12, 2024

ஒலிம்பிக்ஸ் முதல் உள்ளூர் தொ(ல்)லைக் காட்சிகள் வரை: கவிஞர் தணிகை

 ஒலிம்பிக்ஸ் முதல் உள்ளூர் தொ(ல்)லைக் காட்சிகள் வரை: கவிஞர் தணிகை



ஒலிம்பிக்ஸ் முதல் உள்ளூர் தொ(ல்)லைக் காட்சிகள் வரை வர்ணனை என்ற பேரில் மக்களே, மக்களே என்ற ஒரு சொல் பயன்படுத்தி வருகிறார்கள் வர்ணனையாளர்கள். இது அவர்கள் ஏதோ மாபெரும் சாதனையாளர்கள் போலவும் இருப்பவர்கள் அல்லது பார்ப்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் போலவும் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. என் போன்றோரை அது காயப்படுத்திகிறது, இழிவு படுத்துவதாகவே எண்ணுகிறேன். எனவேதான் இந்தப் பதிவு.உயிருள்ள ஒவ்வொர் ஜீவனையும் மதிக்கக் கற்க வேண்டும். இவர்கள் ஏதோ வானில் இருந்து விழுந்தார் போலவும் மற்ற யாவரும் அல்லது அந்த நிகழ்வை பார்ப்பார் எல்லாம் பாதத்தில் வழி உதித்தார் போலவும் தூசுகள் போலவும் வெற்று பந்தா, பம்மாத்து, கூச்சல் கூவிக் கொண்டிருக்கிறார்கள் இப்படிப் பட்ட நபர்கள்.


முதலில் இவர்கள் இப்படி அழைப்பவர்களை மட்டுமே இந்த பதிவில் நாம் குறிப்பிடுகிறோம். பிற மேன்மையான ஊடகவியலாளர் யாவரும் இவர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. அனைவரையும் இந்த பதிவில் நாங்கள் சாடவில்லை. காசுக்கு பிழைப்புக்காக வேலை நிமித்தம் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுபவர்கள் என்ற ஒரே ஒரு கூலிக்கு மாரடிப்பார் போல வேலையின் பாற்பட்டே இருப்பார் இவர்கள் ஏதோ ஒரு தலைமையிடத்தில் இருப்பது போலவும் மற்ற யாவரும் ஏதுமறியாத கேணைகள், அப்பாவிகள், ஒன்றுமறியாதார் போலவும் என்று நினைத்தபடி இது போன்ற சொற்களை உதிர்த்து கத்தி கூச்சலிட்டு நிகழ்ச்சிகளை வர்ணனை செய்து வருகிறார்கள்.


நீண்ட காலமாகவே இதன் பாற் எம் போன்றோர்க்கெல்லாம் ஆட்சேபணைகள் உண்டு.

மக்கள், மாக்கள் என்ற பேதம் இவர்கள் அறிவாரா என்றுதான் தெரியவில்லை.


ஒரு நாட்டின் தலைவர்கள் கூட அப்படி சொல்வதில் ஒரு நடைமுறை இருக்கிறது. அது வேறு.பெற்றவர்கள் தம் பிள்ளைகளை அப்படி அழைப்பதில் ஒரு முறை இருக்கிறது.மூத்தோர் சான்றோர் கூட சொல்லலாம் ஆனால் அவர்கள் எல்லாம் அப்படி சொல்வதில்லை அது அவர்களுடைய மேன்மையின் கற்ற அனுபவங்களின் பயன்பாடு.


 ஆனால் இவர்கள்: நேயர்களே, இரசிகர்களே, அன்பர்களே, பார்வையாளர்களே, சகோதர சகோதரிகளே அல்லது அனைவர்க்கும் வணக்கம் என்றபடி ஆரம்பிக்கலாம்... இப்படி பல நல்ல சொற்கள் இருக்க மக்களே மக்களே என்று கூவி வருவது நாரசமாக இருக்கிறது. பாரதி தாசன் ஒரு இடத்தில் குறிப்பிடுவார் தமது கதாபாத்திரம்  நாட்டு மக்களைப் பார்த்து உரையாற்ற விழைகையில்: பேரன்பு கொண்டோரே, பெரியோரே, பெற்ற தாய்மாரே,நல் இளஞ்சிங்கங்காள் என்பார்... தமிழ் ஒரு வளமையான மொழி இவர்கள் கெடுத்து விடுகிறார்கள். ஊடகம் வழியே ஒரு நல்ல நாட்டை நல்ல மக்களை உருவாக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் இவர்கள் அழித்து வருகிறார்கள்.


வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களை எவ்வாறு செம்மையாக பயன்படுத்தி பெருமை பெற்றார்கள், என்பதற்காக ஒரு வரலாறே நீண்டபடி இருக்கிறது. அதில் நிறைய பேர் வருகிறார்கள், இருக்கிறார்கள், மயில்வாகனன், அப்துல் ஹமீது, துகிலி சுப்ரமணியம், கூத்தபிரான், இன்னும் தற்போது எனது நினைவுக்கு வராத பெயர்களுள் இருக்கிற நிறைய பேர் உண்டு. சரோஜ் நாராயண்சாமி மறக்க முடியாத செய்தி வாசிப்பாளர்,

என்.டி.டி.வி, பி.பி, சி, சி.என் .என், NDTV,CNN,BBC,WION பிரண்ணாய் ராய், சர்தீப் ஜார் தேசாய் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது  இப்படி நல்ல ஊடகமாக இருந்த நிறுவனங்களை நினைக்கத் தோன்றுகிறது. அவர்களது பேட்டிகளை எல்லாம் பல இடங்களில் பல காலக் கட்டங்களில் பார்த்து வியந்து இரசித்திருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறோம்.


இப்படி தாம் எந்த பணியில் ஈடுபட்டபோதும் அதை செம்மையாக பயன்படுத்துவார் சரித்திரத்தில் இடம் பெறுவார்.செய்தி ஊடகங்களும் சார்புகளுடன் கார்ப்ரேட் கைகளுள் சென்று அடங்கியதன் காரணமோ இவை எல்லாம்?


இவர்கள் என்ன சுதந்திரப் போராட்டத் தியாகிகளா? நாட்டுக்கு என எதையாவது செய்துள்ளார்களா? சேவை என, எதையாவது செய்ததுண்டா? செய்கிறார்களா? வெறும் விளம்பரத்தை வைத்துக் கொண்டு வீணாக்கி வருகிறாரகள் வீரியத்தை எல்லாம் விரயமாக்கிக் கொண்டு. இவர்கள் இப்படி மக்களே, மக்களே என்பது இவர்களை மேன்மைப் படுத்தப் போவதில்லை. மாறாக இப்படி அழைக்கும் சிறுமைத் தனத்தை இவர்கள் அடியோடு விட்டுவிட வேண்டும் அதற்கு இதைப் படிப்பார் எல்லாம் முடிந்த வரை பகிருங்கள்.


தமிழர் என்றாலே  தன் மானமுள்ள இனம் என்பதை உலகறியும்.

மாபெரும் மனிதர் எல்லாம் எளிமையாய் மற்ற யாவரையும் மதிப்புடன் அழைக்கும், விளிக்கும் வழக்கம் உள்ளபோது இவரகள் மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்துவருவதன் வெளிப்பாடே இது போன்ற கூப்பாடு யாவும்.


மது அருந்தும் காட்சிகள் இல்லாமல் முதலில் இவரகள் காட்சிகள் அமைத்து மக்களுக்கு நன்மை செய்யட்டும்.எந்த ஊடகம் நாட்டு மக்களுக்கு ஒரு எழுச்சியைத் தருகிறதோ, நற்பாதையில் செலுத்துகிறதோ அதுவே நல்ல ஊடகம்.  அதில் அந்தப் பணி புரிவாரே பாரட்டத் தக்கவர்.


இலஞ்சம் கொடுப்பார், இலஞ்சம் பெறுவார் குற்றம் செய்வார் என்பது இந்தியச் சட்டம்.எனவே அப்படி கொடுத்தார், கொடுப்பார், பெறுவார் பெற்றார் அதன் வழி நல்வாழ்வு வாழ்ந்து வரும்  யாவருமே இந்த நாட்டில் தலைவராக இருக்கும் தகுதிகளே இல்லாதார் அதைப்பற்றி எல்லாம் ஊடகம் வலுவாக தோலுரித்துக் காட்ட வேண்டிய தேவை இன்னும் அதிகம் இருக்கிறது இந்த தாய்த் திரு நாட்டில். தியாகத்துக்கு ஒரு பெருமையும், மதிப்பும் வேண்டாமா?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment