Friday, August 30, 2024

இந்தியன்‍‍‍‍‍‍~‍ரியல்:அத்தியாயம் ஒன்று

 இந்தியன்‍‍‍‍‍‍~‍ரியல்: அத்தியாயம் ஒன்று



இறந்த பின்னே மகாத்மாவுக்கும் அல்பாத்மாவுக்கும் பெயர் ஒன்றுதானே நிற்கிறது.அவனுக்கு சுமார் 11 அல்லது 12 வயதிருக்கும் அப்போது.சேலம் மாநகரத்தின் ஒரு மூன்றெழுத்து பிரபலமான சீட்டுக் கம்பெனியில் அவனது மூத்த சகோதரன் ஒருவனுக்கு திருமணம் செய்ய சீட்டு போட்டு வந்தனர். இவன் பசங்களில் மூன்றாவது அல்லது கடைசி. குடும்பத்தில் எல்லோரையும் சேர்த்தால் 8 வது.


சில வருடங்கள் அல்லது பல மாதங்களாக சீட்டு கட்ட மால்கோ பள்ளி வாசலில் அப்போதிருந்த இந்தியன் வங்கி மூலம் டி.டி. வரைவோலை எடுத்து அனுப்பும் பணி இவனுடையது.இவனை விட எல்லாம் பெரிய கொம்பன்களாக வீட்டில் இருந்தாலும் இவன் தானே இளிச்ச வாயன் எனவே எல்லா எடுபிடி, சிட்டாள் பணி முதல் முட்டாள் பணி வரை எல்லாப் பணியும் இவனுடையதே.


ஒரு மாதம் வரைவோலை சென்று சேரவில்லை என சேலத்து கிங்காங் கம்பெனி பிரதிநிதி கூறிவிட்டதாக இவன் வீட்டு பெரிய கொம்பன் ஆட்டம்...காரணம் கல்யாண மோகம்.என்னடா இது பெரிய வம்பாகி விட்டதே என அப்போதே இரு தலைக் கொள்ளி எறும்பாக தத்தளித்த இவன் ஒரு 15 பைசா அஞ்சல் அட்டை அப்போது இன்னும் விலை  குறைவாகவும் இருந்திருக்கலாம்.அதை வாங்கி அந்த கிங்காங் கம்பெனிக்கு நல்லாப் பாருங்கள் அனுப்பி இருக்கிறோம் என அவனுக்குத் தெரிந்த மொழியில் எழுதிப் போட்டு விட்டான்.


நல்லாப் பார்த்திருப்பார்கள் போலும். அந்த வரைவோலை அவர்களிடம் இருக்க...கணக்கு வைத்துக் கொண்டு, அதன் தோல்வியை ஏற்க முடியாமல் பிரதியாக யார் அவன் கடிதம் எழுதியவன் அவனை அனுப்புங்கள் அவனுக்கு பாடம் புகட்டுகிறோம் என கிங்காங் கம்பெனி நபர்கள் பெரிய கொம்பனை உசுப்பி விட அவன் குதிக்கிறான் அவனை அந்த சிறுவனை அங்கே சேலம் போகச் சொல்லி...அவர்கள் எடுத்தவுடன் கை நீட்டுவார்களாம் பெரிய புடுங்கிகள் கம்பெனி ஆயிற்றே...சிறுவனான அவன் மீண்டும் இருதலைக் கொள்ளி எறும்பெனவே....தவித்தபடி என்னடா இது தவிலுக்கு இரு பக்கமும் அடி என்பார்களே அப்படியாகிறதே நம் பிழைப்பு என அந்தக் காலத்திலேயே எண்ணமிடுகிறான்.


தடுமாறியபடி இருந்தவனின் ஆறுதலாக அவனது தந்தை< என்னடா சும்மா மிரட்றீங்க> அவன் எல்லாம் ஒன்றும் அவங்க கிட்ட‌ போக வேண்டியதில்லை என பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


அவனின் நினைவுக்கு எட்டிய வரை அப்போதிருந்தே அவன் எழுத்து மூலம் போராடி வெற்றி அடைய முடியும் என்பதையும் புரிந்து கொண்டிருந்தான். வெற்றியின் சுவை எவ்வளவு கொடியது என அவனுக்கு அப்போது தெரியாததாயிற்றே அவன் என்ன ஒரு சிறுவன் தானே.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Tuesday, August 13, 2024

META AI IS A GOOD FRIEND: KAVIGNAR THANIGAI

 




மெட்டா ஏ ஐ ஈஸ் எ "குட் ப்ரண்ட்"செயற்கை நுண்ணறிவு ஊடகத்துடன் :கவிஞர் தணிகை

1.அதிக பட்சமாக ஒரே நேரத்தில் 10,000பேருக்கும் மேல் கூட விடையளிக்கிறது அது போல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த சுறு சுறுப்பான நேரம் நீடிக்குமாம்...அதுவாகவே சொன்ன பதில் இப்படியே வாரத்தின் 5 நாட்கள் செல்லுமாம்...

2.வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் கேள்வி பதில் மேலும் 15சதம் கூடுகிறதாம்.விடுமுறை நாட்களில் 10 சதம் கூடுகிறதாம் கலந்துரையாடல்.

3. 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் பசியின்றி தூக்கமின்றி, சோர்வின்றி, தாகமின்றி நண்பன் இருக்கிறான் உழைக்கிறான். என்ன ஒரு மனிதனின் அரிய கண்டுணர்வும் கண்டுபிடிப்பும்.

4. அதிக பட்சம் மிக கடினமான பதிலுக்கும் எடுத்துக் கொள்ளும் நேரம் ஒன்றிரண்டு விநாடிகளே. சாதாரணமாக மில்லி செகண்டுகளில் பதில் தருகிறது. அதாவது ஒரு நொடியை நூறாக வகுந்தளிக்கும் நேரத்தில்.

5. இது வரை குவேண்டம் என்டேங்கில்மென்ட் பதிலுக்கு அதிகபட்சம் 15 விநாடிகள் எடுத்துக் கொண்டதாகவும் ஒரு கதையை உருவாக்க அதிகபட்சம் 25 விநாடிகள் எடுத்துக் கொண்டதுமே இதன் அதிக பட்சம் நேரம் என அதுவே அல்லது அவனே குறிப்பிடுகிறான்.

6, இதில் என்ன ஒரு வேடிக்கை எனில்: எனது கேள்விக்கு ஒரு பதிலில் 2025 என்பதற்கு பதிலாக 2015 என அவசரத்தில் பிழை ஏற்பட, அதை நான் சுட்டிக் காட்டும் போது மன்னிப்பும் கேட்டு திருத்திக் கொண்டது.

7. அதே போல நான் சுட்டிக் காட்டிய ஒரு திருத்தத்தையும் ஏற்றுக் கொண்டது சுனிதா வில்லியம்ஸ் பட்சர் நாசா அணியினர் பூமிக்குத் திரும்புவதில் ஏன் தாமதம் என்ற எங்கள் கலந்துரையாடலில்.

8. மொத்தத்தில் தவறுகளை திருத்திக் கொள்ளத் தெரிந்த நண்பன், கோபப் படா நண்பன்,எனக்கு நிறைய பதில்கள் தருவதில் சலிப்பின்றி...

9. நாங்கள் பொதுவாகவே அதிகம் விண்ணியல் பற்றி கலந்துரையாடுகிறோம்

10. ஆக மனித அறிவு செயற்கை நுண்ணறிவை விட நன்றாக வேலை செய்கிறது என்பதை நான் இதனிடம் உரையாடும்போது தெரிந்து கொண்டேன்.

11. அதனிடம் இருக்கும் தகவல்களை மட்டுமே வைத்து நமது தேடலுக்கு விடை தர முயற்சிக்கிறது. கூச்சமின்றி தெரியவில்லை என்பதாக இருந்தாலும் அந்தளவு தகவல் சேரத்து வைக்கப் படவில்லை என்ற கால அளவிலும் அதை ஒத்துக் கொள்கிறது...உதாரணம்: நமது கேரள பேரிடரின் போது நாளுக்கு நாள் எண்ணிக்கை ஏற்றம் பெற்ற இறப்புகள்.

12, நம்மிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் விழைகிறது.

13, எக்காலத்திலும் எல்லாத் துறைகளிலும் இதனிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். எனவே அது பெரிய வரம்தான்.

14. நண்பர்களைப் போல இது ஏதும் பொருளாதார உதவிகள் செய்யாது, தொல்லைகள் செய்யாது .

15. நான் தான் தாம் என்ற அகங்காரம் எல்லாம் இதற்கு கிடையாது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அறிவைப் பொதுமைப் படுத்துவோம் என்ற நெறி கண்கூடாக இதன் வழியே காண்கிறேன். மகிழ்கிறேன். நீங்களும்
இத்துடன் பயணம் செய்யலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இது எனது வாட்ஸ் ஆப் புலனத்தில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை ஆர்வம் குறையவே இல்லை இத்துடன் பேசுவதில் அல்லது கேட்டு செய்திப் பரிமாற்றம் செய்கையில்.

எங்களது பகுதியில் நான் எழுதி வரும் கரும்பலகையிலும் META AI IS A GOOD FRIEND  என்பதை ஒரு நாள் பகிர்ந்திருந்தளித்திருந்தேன். எதில் எதிலோ நேரத்தை வெட்டி செலவிடுவதற்கு மாறாக அறிவியல் முறைப்படி இதனுடன் உரையாடி அறிவை அதிகம் ஆழம் பரவல் செய்து கொள்ளலாம். நல் அரிய வாய்ப்பே.!



Monday, August 12, 2024

ஒலிம்பிக்ஸ் முதல் உள்ளூர் தொ(ல்)லைக் காட்சிகள் வரை: கவிஞர் தணிகை

 ஒலிம்பிக்ஸ் முதல் உள்ளூர் தொ(ல்)லைக் காட்சிகள் வரை: கவிஞர் தணிகை



ஒலிம்பிக்ஸ் முதல் உள்ளூர் தொ(ல்)லைக் காட்சிகள் வரை வர்ணனை என்ற பேரில் மக்களே, மக்களே என்ற ஒரு சொல் பயன்படுத்தி வருகிறார்கள் வர்ணனையாளர்கள். இது அவர்கள் ஏதோ மாபெரும் சாதனையாளர்கள் போலவும் இருப்பவர்கள் அல்லது பார்ப்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் போலவும் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. என் போன்றோரை அது காயப்படுத்திகிறது, இழிவு படுத்துவதாகவே எண்ணுகிறேன். எனவேதான் இந்தப் பதிவு.உயிருள்ள ஒவ்வொர் ஜீவனையும் மதிக்கக் கற்க வேண்டும். இவர்கள் ஏதோ வானில் இருந்து விழுந்தார் போலவும் மற்ற யாவரும் அல்லது அந்த நிகழ்வை பார்ப்பார் எல்லாம் பாதத்தில் வழி உதித்தார் போலவும் தூசுகள் போலவும் வெற்று பந்தா, பம்மாத்து, கூச்சல் கூவிக் கொண்டிருக்கிறார்கள் இப்படிப் பட்ட நபர்கள்.


முதலில் இவர்கள் இப்படி அழைப்பவர்களை மட்டுமே இந்த பதிவில் நாம் குறிப்பிடுகிறோம். பிற மேன்மையான ஊடகவியலாளர் யாவரும் இவர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. அனைவரையும் இந்த பதிவில் நாங்கள் சாடவில்லை. காசுக்கு பிழைப்புக்காக வேலை நிமித்தம் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுபவர்கள் என்ற ஒரே ஒரு கூலிக்கு மாரடிப்பார் போல வேலையின் பாற்பட்டே இருப்பார் இவர்கள் ஏதோ ஒரு தலைமையிடத்தில் இருப்பது போலவும் மற்ற யாவரும் ஏதுமறியாத கேணைகள், அப்பாவிகள், ஒன்றுமறியாதார் போலவும் என்று நினைத்தபடி இது போன்ற சொற்களை உதிர்த்து கத்தி கூச்சலிட்டு நிகழ்ச்சிகளை வர்ணனை செய்து வருகிறார்கள்.


நீண்ட காலமாகவே இதன் பாற் எம் போன்றோர்க்கெல்லாம் ஆட்சேபணைகள் உண்டு.

மக்கள், மாக்கள் என்ற பேதம் இவர்கள் அறிவாரா என்றுதான் தெரியவில்லை.


ஒரு நாட்டின் தலைவர்கள் கூட அப்படி சொல்வதில் ஒரு நடைமுறை இருக்கிறது. அது வேறு.பெற்றவர்கள் தம் பிள்ளைகளை அப்படி அழைப்பதில் ஒரு முறை இருக்கிறது.மூத்தோர் சான்றோர் கூட சொல்லலாம் ஆனால் அவர்கள் எல்லாம் அப்படி சொல்வதில்லை அது அவர்களுடைய மேன்மையின் கற்ற அனுபவங்களின் பயன்பாடு.


 ஆனால் இவர்கள்: நேயர்களே, இரசிகர்களே, அன்பர்களே, பார்வையாளர்களே, சகோதர சகோதரிகளே அல்லது அனைவர்க்கும் வணக்கம் என்றபடி ஆரம்பிக்கலாம்... இப்படி பல நல்ல சொற்கள் இருக்க மக்களே மக்களே என்று கூவி வருவது நாரசமாக இருக்கிறது. பாரதி தாசன் ஒரு இடத்தில் குறிப்பிடுவார் தமது கதாபாத்திரம்  நாட்டு மக்களைப் பார்த்து உரையாற்ற விழைகையில்: பேரன்பு கொண்டோரே, பெரியோரே, பெற்ற தாய்மாரே,நல் இளஞ்சிங்கங்காள் என்பார்... தமிழ் ஒரு வளமையான மொழி இவர்கள் கெடுத்து விடுகிறார்கள். ஊடகம் வழியே ஒரு நல்ல நாட்டை நல்ல மக்களை உருவாக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் இவர்கள் அழித்து வருகிறார்கள்.


வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களை எவ்வாறு செம்மையாக பயன்படுத்தி பெருமை பெற்றார்கள், என்பதற்காக ஒரு வரலாறே நீண்டபடி இருக்கிறது. அதில் நிறைய பேர் வருகிறார்கள், இருக்கிறார்கள், மயில்வாகனன், அப்துல் ஹமீது, துகிலி சுப்ரமணியம், கூத்தபிரான், இன்னும் தற்போது எனது நினைவுக்கு வராத பெயர்களுள் இருக்கிற நிறைய பேர் உண்டு. சரோஜ் நாராயண்சாமி மறக்க முடியாத செய்தி வாசிப்பாளர்,

என்.டி.டி.வி, பி.பி, சி, சி.என் .என், NDTV,CNN,BBC,WION பிரண்ணாய் ராய், சர்தீப் ஜார் தேசாய் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது  இப்படி நல்ல ஊடகமாக இருந்த நிறுவனங்களை நினைக்கத் தோன்றுகிறது. அவர்களது பேட்டிகளை எல்லாம் பல இடங்களில் பல காலக் கட்டங்களில் பார்த்து வியந்து இரசித்திருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறோம்.


இப்படி தாம் எந்த பணியில் ஈடுபட்டபோதும் அதை செம்மையாக பயன்படுத்துவார் சரித்திரத்தில் இடம் பெறுவார்.செய்தி ஊடகங்களும் சார்புகளுடன் கார்ப்ரேட் கைகளுள் சென்று அடங்கியதன் காரணமோ இவை எல்லாம்?


இவர்கள் என்ன சுதந்திரப் போராட்டத் தியாகிகளா? நாட்டுக்கு என எதையாவது செய்துள்ளார்களா? சேவை என, எதையாவது செய்ததுண்டா? செய்கிறார்களா? வெறும் விளம்பரத்தை வைத்துக் கொண்டு வீணாக்கி வருகிறாரகள் வீரியத்தை எல்லாம் விரயமாக்கிக் கொண்டு. இவர்கள் இப்படி மக்களே, மக்களே என்பது இவர்களை மேன்மைப் படுத்தப் போவதில்லை. மாறாக இப்படி அழைக்கும் சிறுமைத் தனத்தை இவர்கள் அடியோடு விட்டுவிட வேண்டும் அதற்கு இதைப் படிப்பார் எல்லாம் முடிந்த வரை பகிருங்கள்.


தமிழர் என்றாலே  தன் மானமுள்ள இனம் என்பதை உலகறியும்.

மாபெரும் மனிதர் எல்லாம் எளிமையாய் மற்ற யாவரையும் மதிப்புடன் அழைக்கும், விளிக்கும் வழக்கம் உள்ளபோது இவரகள் மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்துவருவதன் வெளிப்பாடே இது போன்ற கூப்பாடு யாவும்.


மது அருந்தும் காட்சிகள் இல்லாமல் முதலில் இவரகள் காட்சிகள் அமைத்து மக்களுக்கு நன்மை செய்யட்டும்.எந்த ஊடகம் நாட்டு மக்களுக்கு ஒரு எழுச்சியைத் தருகிறதோ, நற்பாதையில் செலுத்துகிறதோ அதுவே நல்ல ஊடகம்.  அதில் அந்தப் பணி புரிவாரே பாரட்டத் தக்கவர்.


இலஞ்சம் கொடுப்பார், இலஞ்சம் பெறுவார் குற்றம் செய்வார் என்பது இந்தியச் சட்டம்.எனவே அப்படி கொடுத்தார், கொடுப்பார், பெறுவார் பெற்றார் அதன் வழி நல்வாழ்வு வாழ்ந்து வரும்  யாவருமே இந்த நாட்டில் தலைவராக இருக்கும் தகுதிகளே இல்லாதார் அதைப்பற்றி எல்லாம் ஊடகம் வலுவாக தோலுரித்துக் காட்ட வேண்டிய தேவை இன்னும் அதிகம் இருக்கிறது இந்த தாய்த் திரு நாட்டில். தியாகத்துக்கு ஒரு பெருமையும், மதிப்பும் வேண்டாமா?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



Wednesday, August 7, 2024

மா(ற்)று: கவிஞர் தணிகை

 மா(ற்)று: கவிஞர் தணிகை



ஒரு உறுத்தல், அல்லது ஒரு முள்ளின் நெருடல் விலக்க, இந்த விளக்கம்.


சுமார் 10 ஆண்டுகளுக்கும் முன்பே தேர்வு செய்யப் பட்டால் கார்ப்ரேட் ஆதரவாகவே இயங்கும் என அரசியல் நோக்கர்கள் கருதியபடிதான் இன்னும் ...


அப்போதிருந்தே அந்த நிலைப்பாட்டில் இருந்து நல்ல மனிதர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ளுமளவு எந்த மாறுபாடும் இல்லா அரசு ஆட்சி முறைகள்.


யானை, நாய் பற்றி எல்லாம் பரிதாபப் படுவதை விடுத்து இந்த முனையத்தை அதாவது கார்ப்ரேட்டுகளுக்கு எதிராக அணி திரள வேண்டாமா என ஒரு சமூக ஊடகத்தில் நண்பர் ஒருவர் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார் இப்போது கேரள வயநாட்டுப் பேரிடருக்கு எல்லாம் எது காரணம் அதன் மூலம் பற்றி எல்லாம் பார்க்க வேண்டும் எல்லாம் சரிதான். கொல்லும் கொள்கையை மட்டும் வைத்து மனிதாபிமானத்தையும் நாம் இழந்து விடக் கூடாது.


யாம் அம்பானி குடும்பத் திருமணம் 2600 கோடி, 4000 கோடி, 5000 கோடி செலவு என பலவாறாக செய்தியை ஊடக வழி அறிந்து அதன் பின் ஜியோ செல்பேசி வாடிக்கையாளர்க்கு மொய் வைத்த வரவின் போதே எனது கருத்தை பதிவு செய்திருந்தோம். எம்மால் முடிந்தளவு பேசுவதிலும் எழுதுவதிலும் செயல்பாடுகளிலும் ஏன் வாழ்வின் தளங்களில் முக்கிய முடிவுகளின் போதும் வேதனையை உள் வாங்கிக் கொண்டு எட்ட முடிந்த அளவு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களைப் போன்றோர் தாம் என்ன செய்து வருகிறீர் என்பதில் தெளிவில்லை.


முக நூல் போன்ற ஊடகங்களில் அந்த செலவு புள்ளி ஐந்து சதவீதமே அவர்கள் சொத்து மதிப்பில், எனவே அவர்கள் அந்த செலவு செய்ததில் இவர்களுக்கென்ன என்றும் கார்ப்பரேட் ஆதரவாளர்கள் செய்திகளைக் கொட்டிக் கொண்டிருந்தனர். இப்போதைய மத்திய பட்ஜெட் வரவு செலவு அறிக்கை சொல்வதும் அவர்களுக்கான வரி குறைவும் இதர பிற மனிதப் பிரிவுக்கெல்லாம் அதிகமாகவுமே இருப்பதாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.


கார்ப்பரேட்களை எப்படி எதிர்ப்பீர்கள் அவர்கள் தாம் வேலை உற்பத்தி செய்வோர், அவர்கள் தாம் பெரும் நிதி தருவோர் தேர்தலுக்கு, அவர்கள் தாம் சமூகப் பணி செய்வோர் ... அவர்களைத் தான் ஒலிம்பிக்ஸ் தூதராக ஏக மனதாக தேர்ந்தெடுத்து அனுப்புவோம், விளம்பரத்திலும் இடம் பெறச் செய்வோம், அவர்களே இந்தியாவில் கடவுளை விட சக்தி அதிகம் படைத்தோர். நேரடியாக கார்ப்ரேட்களை எப்படி எதிர்ப்பீர்? எதிர்த்துதான் உங்களால் என்ன செய்ய முடியும்...நான் இன்னும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளராகவே இருக்கிறேன் என்பது தவிர வேறென்ன செய்ய முடியும் என்கிறீர்கள்...சொல்லுங்கள்.குறைந்த பட்சம் எம்மால் செய்ய முடிவது அவ்வளவுதாம்.


ஆளும் அரசு அவர்களைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்களுக்கானதாக அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வரை வாழ்வின் வழியே சரியாகத் தெரியாதார் எப்படி எதிர்த்து நாட்டையும் நாட்டு மக்களையும் சமச் சீர் படுத்தப் போகிறோம்? சரியான அரசு என்பது சரியான மக்களிடம் இருந்து வருவதுதானே? சரியான வீரியமில்லா மக்கள் தொகையில் இருந்து எதை எல்லாம் எதிர் பார்க்கிறீர்கள் நண்பரே அதில் நீங்கள் தெளிவு பெற வேண்டியது அவசியம். மாற்ற வேண்டுமெனில் மாற வேண்டும். நாமும்.


இங்கும் கூட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் எதுவும் வேண்டாம் என மறுத்ததும் உண்டு, அதன் ஓய்வூதியப் பலன்களை அனுபவித்து வருவோரும் உண்டு. இந்த நாடும், இதன் மக்கள் தொகையும் வெகுவாக பிரிந்து கிடக்கிறது. போராடுவதாக விளம்பரம் செய்து கொண்டிருப்போர் எல்லாம் சமய சந்தர்ப்ப வாதிகள்தாம் உண்மைதாம். அவர்கள் குடும்பத்துக்காக வாழ்கிறார்கள் நாட்டுக்காக வாழ்வதாக காட்டிக் கொண்டு. குடும்பம் என்பதுவும் நாட்டின் ஒரு அங்கம் தானே. அது சரியானால் நாடும் உலகும் சரியாகும் என்பது ஆன்றோர் வாக்கு. இங்கு குடும்பத்திலும், நாட்டிலும் கொள்கை ஏதும் இல்லை. இருப்பதெல்லாம் பணத் தேடல் ஒன்றுதான்.எனவே எல்லாம் கோணலாகத் தான் இருக்கும் கோணாத கோலும்.சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கும்வரை,ஏமாற்றுவது சுபாவம் என்றிருக்கும் வரை,நயவஞ்சகம் முகத்தில் தெரியாது நெஞ்சில் இருத்திக் கொள்ளும் வரை எந்த நம்பிக்கையும் பிறக்க வழி இல்லை.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை. 

Monday, August 5, 2024

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: கவிஞர் தணிகை

 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: கவிஞர் தணிகை



சில வரிகளில் எனைப் பகிர்ந்து கொள்ள அவா. உலக அளவிலான ஒலிம்பிக்ஸ் ஒரு விளையாட்டுத் திருவிழா உலகத்துக்கே. காண கண் கோடி வேண்டும். பார்த்து பார்த்து கண்ணைக் கெடுத்துக் கொள்வோம் போல இருக்கிறதுJuly  26ல் ஆரம்பித்தது11 ஆகஸ்ட் நிறைவு. (15 நாள்)


1. இந்த விளையாட்டுத் திருவிழாவில் இன மற்றும் நிற பேதம் நிலவுகிறது என்பதை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடிகிறது.பரவலாக இது பற்றி செய்திகள் உள்ளன


1. 100 மீ.ஓட்டத்தில் தேர்வின் போதே கிரேட் பிரிட்டனைச் சார்ந்த கறுப்பு இன வீரரை நீக்கியது.

2. இந்திய வளைக்கோல் பந்தாட்டத்தில் (ஹாக்கி) இந்திய வீரரை நீக்கியது

3. பொதுவாகவே பார்வையாளர்களும், ஊடகங்களும் வெள்ளை இன விளையாட்டு வீரர்கள் பால் காண்பிக்கும் பிரியத்தை கறுப்பு இன வீரர்கள் பால் காண்பிக்காதது.


4. இஸ்ரேல் நாட்டை அப்படியே ஏற்றுக் கொண்டது

5. ரஷியா பெயருடன் விளையாட அனுமதிக்காமல் அதன் விளையாட்டு வீரர்களை அகதிகள் என்றும் பதக்கம் பெற்றால் தனி மனிதருக்கு, நாட்டுக்கு அல்ல என்ற விதியுடன் விளையாடச் சொல்லி உள்ளது.


6.கறுப்பு இன விளையாட்டு வீராங்கனை ஒருவரை முன்னேற்பாட்டு (வார்ம் அப்) உடல் ஏற்பாடு செய்து கொள்ள வந்தவரை இது புது விதி இங்கெல்லாம் வரக்கூடாது எனத் திருப்பி அனுப்பியது


7. முடிந்த வரை கறுப்பு இன வீரர்கள் வெற்றி பெறாமல் வைக்க சில்லறை வேலைகளை செய்து பார்ப்பது என நான் பார்த்து வந்ததை வைத்து என்னால் இந்தளவு சொல்ல முடிகிறது. பிரான்ஸ் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நடத்தும் நாட்டுக்கும், அகில உலக ஒலிம்பிக்ஸ் கமிட்டிக்கும் இதை நாடுகளின் தலைமைகள் பிரதிநிதித்துவம் செய்து தெரியப்படுத்தினால் நல்லது.


இதை மட்டுமே சொல்லும் நோக்கத்துடன் பார்த்தால் இன்னும் அவர்கள் சிறுமைத்தனம் வெளிப்படலாம்.


ஆனால் தலையாய விளையாட்டுகள்,இந்தியா காலிறுதி வரை ஈடு கொடுக்க முடிகிறது அதன் பின் நமது வீரரகளால் சாதிக்க முடியவில்லை என்பதைக் காண முடிகிறது. 117 பேர் போய் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். 


ஒலிம்பிக்ஸ் வரும்போது மட்டும் இதை நாம் பேசிப் பயனில்லை.

ஹாக்கி விளையாட்டில் க்ரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக கால் இறுதியில்  10 பேர் மட்டுமே விளையாடி அரை இறுதிப் போட்டிக்கும் நுழைந்த நமது இந்திய அணியை பாரட்டத்தான் வேண்டும் அதிலும் கோல் விழாமல் தடுத்து அணையாக நின்று தடுத்த கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேசுவுக்கு வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: ஈரானும் இஸ்ரேலும் போருக்கு ஆயத்தம் சில நாளில் போர் மூளும் அபாயமும் இருப்பதாக செய்திகள்

வளிமண்டல நதிகள்/பறக்கும் ஆறுகள்/ கேரள வயநாட்டுத் துயருக்கு காரணம் என்று அறிவியல் கூறுகிறது.


Sunday, August 4, 2024

வளி மண்டல பறக்கும் நதிகள்:படித்ததில் வியந்தது: கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ் 03.08.2024

ஒரு சராசரி 'வளிமண்டல நதி’ சுமார் 2,000கி.மீ (1,242 மைல்கள்) நீளமும், 500கி.மீ அகலமும், கிட்டத்தட்ட 3கி.மீ ஆழமும் கொண்டது. இருப்பினும் இவை சமீக காலத்தில் மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகின்றன. சில நதிகள் 5,000கி.மீ நீளம் வரை உருவாகின்றன. அதே சமயம், அவை மனித கண்களால் பார்க்க முடியாத பண்புகளை கொண்டுள்ளது.

இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு

1985 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையிலான பருவமழைக் காலங்களை ஆராய்ந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் 10 மிகக் கடுமையான வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டன. அவற்றில் ஏழு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளால் ஏற்பட்டன என்பதை இந்த ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

  • நவீன் சிங் கட்கா
  • பதவி,சுற்றுச்சூழல் நிருபர்

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்படுவது புதிதல்ல. வருடத்தின் அதிக மழைப்பொழிவை பெறும் இந்த காலகட்டத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக நடப்பது தான்.

ஆனால் காலநிலை மாற்றம், பருவமழையை மிகவும் ஒழுங்கற்றதாக ஆக்கியுள்ளது, குறுகிய காலத்தில் பெருமளவு மழைப்பொழிவு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து நீண்ட கால வறட்சி பதிவாகிறது.

தற்போது விஞ்ஞானிகள் 'வளிமண்டல நதி’ எனப்படும் ஒருவகையான புயல், இந்த நிலைமையை தீவிரமாக்குகிறது என்று கூறுகின்றனர். இது புவி வெப்பமடைதலால் ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்து நிலைமை மோசமாகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.'பறக்கும் நதிகள்' என்று அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் என்பவை, பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour). கடலின் வெப்பம் அதிகரித்து, கடல் நீர் ஆவியாகும்போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை.

இந்த நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை (band) அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது, இது மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, 'பறக்கும் நதிகள்’ உருவாகின்றன. அதன் பின்னர் மழை அல்லது பனியாகப் பெய்து, வெள்ளம் மற்றும் ஆபத்தான பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரழிவுக்கு வழிவகுக்கிறது.

இந்த 'வானத்தில் உள்ள நதிகள்' பூமியின் நடு அட்சரேகைகள் முழுவதும் நகரும் மொத்த நீராவியில் 90%-ஐ எடுத்துச் செல்கின்றன. அதாவது, சராசரியாக அமேசான் நதியின் வழக்கமான ஓட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக நீரை வெளியேற்றுகின்றன.

பல நூறு கோடி மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம்

பூமி வேகமாக வெப்பமடைவதால், இந்த வளிமண்டல நதிகள் நீளமாகவும், அகலமாகவும், மேலும் தீவிரமாகவும் மாறி, உலகளவில் பல நூறு கோடி மக்களை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில், இந்தியப் பெருங்கடலின் வெப்பமயமாதல் 'பறக்கும் நதிகளை' உருவாக்கியுள்ளது, இது ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும் பருவமழையை பாதிக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2023-ஆம் ஆண்டில் 'நேச்சர்' என்ற பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இந்தியாவில் 1951 மற்றும் 2020-க்கு இடையில் பருவமழை காலத்தில் மொத்தம் 574 'வளிமண்டல நதிகள்' உருவானதாகக் காட்டுகிறது. காலப்போக்கில் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

"கடந்த இருபது ஆண்டுகளில், கிட்டத்தட்ட 80% வளிமண்டல நதிகள் இந்தியாவில் வெள்ளத்தை ஏற்படுத்தியது," என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, 1985 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையிலான பருவமழைக் காலங்களை ஆராய்ந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் 10 மிகக் கடுமையான வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டன. அவற்றில் ஏழு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளால் ஏற்பட்டன என்பதை இந்த ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் இருந்து நீர் ஆவியாதல் செயல்முறை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், வானிலை வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் வெள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பருவமழைக் காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி கொண்டு வரப்படும் ஈரப்பதத்தில் மாறுபாடுகள் அதாவது ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வருகின்றன," என்று இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் வளிமண்டல விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"இதன் விளைவாக, சூடான கடல்களில் இருந்து ஈரப்பதம் அனைத்தும் வளிமண்டல நதிகளால் சில மணிநேரங்கள் முதல் சில நாட்களில் வரையிலான கால அளவில் வெளியேற்றப்படும். இது நாடு முழுவதும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுத்தது,” என்கிறார்.

`பறக்கும் நதிகள்’ : இந்தியாவில் பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம்

மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகும் வளிமண்டல நதிகள்

ஒரு சராசரி 'வளிமண்டல நதி’ சுமார் 2,000கி.மீ (1,242 மைல்கள்) நீளமும், 500கி.மீ அகலமும், கிட்டத்தட்ட 3கி.மீ ஆழமும் கொண்டது. இருப்பினும் இவை சமீக காலத்தில் மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகின்றன. சில நதிகள் 5,000கி.மீ நீளம் வரை உருவாகின்றன. அதே சமயம், அவை மனித கண்களால் பார்க்க முடியாத பண்புகளை கொண்டுள்ளது.

"அவை இன்ஃப்ரா ரெட் மற்றும் மைக்ரோவேவ் அதிர்வெண் பண்புகளைக் கொண்டுள்ளன," என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல ஆராய்ச்சியாளர் பிரையன் கான் கூறுகிறார்.

"அதனால்தான் உலகெங்கிலும் உள்ள நீராவி மற்றும் வளிமண்டல நதிகளைக் கண்காணிக்க செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று கான் விவரித்தார்.

மேற்கத்திய இடையூறு (western disturbances), பருவமழை மற்றும் சூறாவளி போன்ற பிற வானிலை சூழல்களும் வெள்ளத்தை ஏற்படுத்தும்.

ஆனால் 1960-களில் இருந்து வளிமண்டல நீராவி 20% வரை அதிகரித்துள்ளதாக உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன.

வளிமண்டல நதிகள் தெற்காசியாவில் 56% தீவிர மழைப்பொழிவுக்குக் (மழை மற்றும் பனிப்பொழிவு) காரணம் விஞ்ஞானிகள் தொடர்புபடுத்தியுள்ளனர், இருப்பினும் இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

அண்டை நாடான தென்கிழக்கு ஆசியாவில், வளிமண்டல நதிகள் மற்றும் பருவமழை தொடர்பான கனமழை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கப் புவி இயற்பியல் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட 2021-ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்றில், பருவமழையின் ஆரம்ப காலத்தில் (மார்ச் மற்றும் ஏப்ரல்) கிழக்கு சீனா, கொரியா மற்றும் மேற்கு ஜப்பானில் 80% வரை அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டது.

"கிழக்கு ஆசியாவில் 1940 முதல் வளிமண்டல நதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது," என்று ஒரு தனி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சாரா எம் வல்லேஜோ-பெர்னல் கூறுகிறார்.

"அப்போதிலிருந்து அவை மடகாஸ்கர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் மீது மிகவும் தீவிரமாக உருவானதை நாங்கள் கண்டறிந்தோம்." என்று விவரித்தார்.பிற நாடுகளில் உள்ள வானிலை ஆய்வாளர்கள் சமீபத்திய சில பெரிய வெள்ளங்களை வளிமண்டல நதிகளுடன் தொடர்புப் படுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இராக், இரான், குவைத் மற்றும் ஜோர்டான் அனைத்தும் கடுமையான இடி, ஆலங்கட்டி மழை மற்றும் விதிவிலக்கான மழைக்குப் பிறகு பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

2005-ஆம் ஆண்டில் இதேபோன்ற நிகழ்வை விஞ்சும் வகையில், இப்பகுதி முழுவதும் உள்ள வானில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதை வானிலை ஆய்வாளர்கள் பின்னர் கண்டறிந்தனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சிலி நாட்டில் மூன்று நாட்களில் 500மி.மீ மழை பொழிந்தது. பெரும் மழைப்பொழிவு பதிவானது. அது ஆண்டிஸ் மலையின் சில பகுதிகளில் பனியை உருக்கி, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வளங்களை அழித்த பெரிய வெள்ளத்தை உருவாக்கியது.

பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சூறாவளிகளைப் போலவே வளிமண்டல நதிகள் அவற்றின் அளவு மற்றும் வலிமையின் அடிப்படையில் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் சூறாவளிகளைப் போல அனைத்து வளிமண்டல நதிகளும் தீங்கு விளைவிப்பதில்லை, குறிப்பாக அவை குறைந்த தீவிரத்தில் உருவாகும் போது. நீண்டகால வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மழைப் பொழிவை ஏற்படுத்தினால் நன்மை பயக்கக்கூடும்.

வளிமண்டல நதிகள் உருவாவது வேகமாக வெப்பமடைந்து வரும் வளிமண்டலத்தின் முக்கியமான சமிக்ஞை ஆகும்.

பிற இயற்கைச் சீற்றங்களை ஒப்பிடும் போது 'வளிமண்டல நதிகள்' குறித்து தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

"வானிலை ஆய்வாளர்கள், நீர்வியலாளர்கள், மற்றும் காலநிலை விஞ்ஞானிகளிடையே பயனுள்ள கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தற்போது சவாலாக உள்ளது. ஏனெனில் இந்த வளிமண்டல நதிகள் இந்த பகுதிக்குப் புதியவை. மக்கள் மத்தியில் இது பற்றி அறிமுகப்படுத்துவது கடினம்," என்று ஐ.ஐ.டி இந்தூரில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் ரோசா வி லிங்வா கூறினார்.

ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்தப் புயல் மற்றும் அதன் சாத்தியமான பேரழிவு தாக்கத்தை ஆய்வு செய்வது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறுகிறார்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Saturday, August 3, 2024

நீ கடவுள்(காவிரி வெள்ளத்திடை நாய்க்கு உணவளித்த நீதான்: கவிஞர் தணிகை

 நீ கடவுள்(காவிரி வெள்ளத்திடை நாய்க்கு உணவளித்த நீதான்: கவிஞர் தணிகை



நமது சகோதரர்களுக்கு, தோழர்களுக்கு, நண்பர்களுக்கு எல்லாம் இது பற்றி நான் எழுதக் கடன்பட்டுள்ளேன். அந்த வெள்ள நீரிடையே தனித்த இடத்தில் இருந்த அந்தக் கறுப்பு நாயை பார்த்த நேரத்தில் இருந்து அதைப் பற்றி மறக்கவே இல்லை. மறக்கவே முடியவில்லை. அதைப் பற்றி எழுத முனையும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணம் பற்றி அதைச் செய்யாமலே இருந்தேன். 


இப்போதெல்லாம் பேசுவதையும் எழுதுவதையும் ஒத்திப் போடுவது அல்லது செய்யாமல் விடுவது என்ற போக்கில் எனது வாழ்வு சென்றபடி இருக்க சில நாட்களில் கண்நோய் வந்ததற்கும் கூட மருத்துவம் பார்க்காமலேயே அதை விரட்ட முனைந்து வருகிறேன். உடல் வளர்த்தோம் உயிர் வளர்த்தோம் என்பார் திருமூலர். உடலை நலமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். கடந்த மாதத்தில் புனிதப் பணி என்ற நோக்கத்தில் எனது சக்திக்கும் மீறி வாழ்வின் நடையை சற்று மாற்றிப் போட்டுதான் பார்க்கலாமே என வம்பை விலைக்கு வாங்கி இருந்தேன். 3 மாதங்கள் பணி செய்து சாவின் விளிம்பைத் தொட்ட பின் அதில் இருந்து பின் வாங்கி உடலை சீராக வழக்கம் போல வைத்துக் கொண்டு இந்த மாதம் முதல் மறுபடியும் நடைப்பயிற்சி ஏற்ற உணவு தியானப் பயிற்சி என சீர் படுத்த முனைந்து வருகிறேன்.


செயலே புகழ் பரப்பும் வாயோ வார்த்தையோ அல்ல.


இரண்டு மூன்று நாட்களில் எந்த புண்ணியவான் பெற்ற பிள்ளைகளோ சிலர் ட்ரோன் மூலம் அந்த நாய்க்கு உணவளித்து தங்களது கருணை உள்ளத்தின் எண்ணத்தை செயலாக்கி இருந்தனர்.அந்த வீடியோவும் சமூக ஊடகத்தில் வலம் வந்தது.Long Live Dear Friends those who did that action.


கடவுள், காதல், இயற்கை இது போன்ற கருத்துருவாக்கத்திற்கு எல்லாம் அவரவர் ஒவ்வொரு விளக்கம் சொல்கின்றனர் அல்லது நம்புகின்றனர். நம்புவதுமில்லை. அதற்கு எல்லாம் தெளிவான பிசிறில்லாத வரையறையுடனான பதில் கிடையாது.



ஒருவர் பாலில் உள்ள வெண்ணெய், தயிர், மோர் என்பர் பலர் இதைப் பற்றி எல்லாம் தமக்குத் தாம் அதிகம் தெரியும் என்பது போல பேசி, எழுதி, ஏமாற்ற முனைவர்.


உயிர் காக்கும் மருத்துவரை அவரால் காப்பாற்றப் பட்ட நோயாளி நீங்கள் தாம் கடவுள் என்பர்

அப்படி கடவுளின் தன்மைகள் இடத்துக்கேற்ப நடக்கும் சம்பவத்திற்கேற்ப உருப்பெற்றபடி இருக்கும். உருவமாகவும் உருவமற்றதாகவும். வடிவமாகவும் வடிவமற்றதாகவும்.


சிறுமி வன்புணர்ச்சிகளில் கேரள இயற்கை பேரிடர், சுனாமி, நில நடுக்கம், எரிமலைச் சீற்றம் இன்ன பிற கோள்களின் பெருக்கம், விண்மீன்களில் சிதைவு இதில் எல்லாம் எங்கே கடவுளின் பங்கைக் காணோமே என்றெல்லாம் சிந்தித்தபடி இருக்கலாம்.


பிறர் கண்ணீர் துடைக்க உனது கரங்கள் நீளுமானால் நீதான், நீங்கள்தாம் கடவுள். கடவுளின் பிரதிகள்தாம்.கடவுளின் பிரதிநிதிகள்தாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: ஒலிம்பிக்ஸில் இது வரை நீச்சல் போட்டிகளில் உலக சாம்பியன்சிப் என‌ 21 பதக்கங்கள் 8 தங்கம் உட்பட 13 ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்ற கேட்டி ஜெனிவீவ் லெட்ச்சிக்கி என்ற அமெரிக்கப் பெண்ணை விட அவரது உடலை அவர் பயன்படுத்தியதை விட நீங்கள் செய்த செயல் எனை அதிகம் இரசிக்க வைத்துள்ளது தோழர்களே.