மாபெரும் விவாதம்: கவிஞர் தணிகை
ஆதி சங்கரரைப் பற்றி படித்த நினைவுக் கீற்று ஒன்று நிழலாடுகிறது. ஏனோ தெரியவில்லை
.கி.பி.எட்டாம் நூற்றாண்டில் காலடியில் பிறந்த அருந்தவப் புதல்வர்,32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த தவ சீலர், கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிகளை தமக்கு பசியாற்றிய வீட்டின் மேல் பொழிந்தவர் என்னும் பேறு பெற்றவர்.இளந்துறவி,இப்படி பல... அதுவும் இதுவும் ஒன்று என்று அத்வைதம் செய்தவர்.
காசியில் விவாதித்து வெல்வாரே பெரும் அறிஞர் என்று போற்றப் பட்ட காலத்தில் காசிக்கு சென்று குமரிலபட்டர் என்பவரை வாதுக்கு அழைக்க அவரோ நான் குருத்துரோகம் செய்தவனாக இருக்கிறேன். நீங்கள் மகிஷ்மதி சென்று அங்குள்ள விஸ்வதாசரோடு மோதுங்கள் என்கிறார்.
அங்கு அவரது விஸ்வதாசரின் மனைவியே அபய பாரதி என்னும் சரஸ்வதி அருள் பெற்றவர் அல்லது சரஸ்வதி அவதாரமே இவர்களது விவாத அரங்குக்கும் நடுவராக இருக்கிறார்.17 நாட்கள் கடும் விவாதம்,கழுத்தில் உள்ள மாலை எவருடையது வாடுகிறதோ அவர் தோற்றவராவார்.
சங்கரர் வெல்கிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதன் பின் கூடு விட்டு பாய்தல் தாம்பத்யம் கற்ற பின் வருக எனல், சிருங்கேரியில் ஜல் ஜல் எனும் காற்சலங்கை ஒலி நிற்றல் இவர் திரும்பி பார்த்ததால், இன்னும் சிருங்கேரியில் ஓடும் நதி நீர் மீனை எவரும் பிடிப்பதில்லை என்பதும், பிரசவ வேதனையில் தவிக்கும் தவளைக்கு நாகம் படம் எடுத்து நிழல் தந்த புண்ணிய பூமி என்பதெல்லாம் கொசுறுச் செய்திகள்..
நாவலோ நாவல் என்று வெல்வார் சொல்வதாக மணிபல்லவ இளங்குமரன்...தீபம் நா.பார்த்தசாரதி சொல்வார்,
வைணவ ஆழ்வார்க்கடியான் விவாதம் முடிந்த கையோடு தடி கொண்டு சைவர்களைத் தாக்குவதாக பொன்னியின் செல்வனின் கல்கி புகல்வார்...
அறிவார்ந்த சபையில் விவாதித்தால் அறிவு வளரும், ஞானம் பெருகும்
மூடர்களோடு விவாதித்தால் பகை வளரும் ...இது பைபிள்
நாம் வெகுகாலமாக எழுதுவதையும் பேசுவதையும் வெகுவாக குறைத்து விட்டோம் காரணங்கள் பல.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment