Sunday, September 10, 2023

உயிர் பிரிதல் (அ) விதை விந்தை சிந்தி: கவிஞர் தணிகை

 உயிர் பிரிதல் (அ) விதை விந்தை சிந்தி: கவிஞர் தணிகை



ஒவ்வொரு காலத்தின் அணுத் துகளிலும் (உண்மையிலேயே காலம் என்ற ஒன்று இருக்கிறதா? எல்லாம் கணக்கீட்டுக்காகத்தான்) பிறப்புகள் இறப்புகள்.


கழிவகத்தில் ஒரு சிறு தவளையைப் பார்த்தேன் நேற்று இரவு அதற்கு முயற்சி இருந்தது வெளியேறிச் செல்ல வேண்டி... எனவே கதவைத் திறந்து வழி செய்தேன். அது வெளியேறிற்று...


ஆனால் இரவு முடிந்து அதிகாலையில் அங்கு செல்ல நேர்கையில் அது அந்த மலத் தொட்டியுள் கிடந்தது. ஆராய்ந்தேன் இறந்து இருந்தது.


சின்னத் திரை நடிகர் எதிர்நீச்சல் மாரிமுத்து ஆதி குணசேகரனாகவே வாழ்ந்து மறைந்த செய்தியை அவர் செய்த அலப்பறையை மறக்க முடியாமல் தமிழ் உலகம் அவரது அதிர்வலைகளை இன்னும் கொண்டிருக்கும் நீர்க்குமிழி காலச் சூழலில்...


நாம் விடும் மூச்சுக் காற்றினால் கூட அணுத்திரள் அழிகிறது என்று நுட்பமாகச் சொல்கிறார்கள்.

கடைசி மூச்சுவிட முடியாமல் காற்றில் எங்கும் நிரம்பியுள்ள உயிர் வளியில் பிராண வாயுவை எடுத்துக் கொள்ள முடியாமல் மரணத்தின் கடைசிப் பக்கங்கள் எழுதப் படுகின்றன.


பிறப்புக்கு ஒரு வாயில்.

இறப்புக்கு எண்ணிறந்தன பிரபஞ்ச வெளியின் மாயம் போல...


நாம் ஏற்கெனவே மரணத்தின் விசித்திரத் தொடுகை பற்றி பதிகையில் ஹுமாயூன் மரணம், ட்ராக்டர் இயக்கத்தால் ஏற்பட்ட சோகங்கள்,கழுகின் காலிடுக்கில் இருந்து தப்பித்து விழுந்த நாகத்தால் ரெயில்வே கேட் அருகே ரயில் செல்ல வேண்டி காத்திருந்த கணவன் மனைவி இருசக்கர அமர்வில்  மனைவி கண்ணருகே கணவன் தலையில் நாகம் தீண்டிய மரணம்... இப்படி பல பகிர்தல்கள் இந்த மறுபடியும் பூக்கும் இதழைத் தொடர்ந்து படிப்பார்க்கு பகிர்ந்த நினைவாட...


உயிர் பிரிதலை ஒத்திப் போடுவதற்குத் தான் வாழ்க்கையும் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும்...


இல்லை இல்லை அதெல்லாம் இல்லை இரவு 7.50 வரை பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்த எனது மகன் இருக்கிறான் 7.55க்கு அவன் இல்லை...காரணம், பருவத் தேர்வில் 2 பாடங்களில் தேர்ச்சியின்மையைச் சுட்டி இப்படி எல்லாம் இருந்தால் எப்படி ? பிழைக்க முடியும் என தந்தை செல்வம் மென்மையாகச் சொல்லியதே என்றார் என்னிடம்...


மேலும் இருவர் சென்று சோதிடம் பார்த்தோம் அவன் பிறந்த போது...கோனார் மிகச் சரியான சோதிடர். பெண் பிறக்க வேண்டிய நேரத்தில் ஆண்... என இழுக்க... எதையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு அவர் மழுப்பி விட...


அவன் இறந்த பிறகு அன்று என்னுடன் வந்த நண்பர் மறு நாளே தனியாகச் சென்று கேட்டதற்கு அந்தக் குழந்தைக்கு ஆயுள் அவ்வளவுதான் என்றதற்கு...ஏன் என்னிடம் சொல்லவில்லை அது பற்றி என்றதற்கு உனது மகன் நன்றாக இருக்கும் போது அதை எப்படி வந்து உன்னிடம் சொல்ல முடியும் ? என்று நண்பர் சொல்லி விட்டதாக , நடைப்பயிற்சி செய்து மட்டும் என்ன ஆகப் போகிறது என்ற முடிவில் இருப்பதாக சொல்லியது என்னுள் வெவ்வேறு அதிர்வலைகளை எழுப்பியது.


ஈரோடு புத்தகக் கலைவிழாவில் சூரியா, கார்த்தியின் தந்தை சிவகுமார் பகிர்ந்து கொண்டதை நான் நேரிடையாகக் கேட்டேன் அவரது தந்தை ஒரு நல்ல ஆசிரியர் மட்டுமல்ல சோதிடக் கணிப்பாளர் என்று இந்த நாளில் நான் இருக்க மாட்டேன் என ஏற்கெனவே குறித்து வைத்திருந்தாராம். அதன் படியே சிவகுமார் குழந்தையாக இருந்த போதே அவர் மறைந்ததாகவும் குறிப்பிட்டார்.


சொல்லத் தோன்றியது


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


  

No comments:

Post a Comment