சிக்கலான சில கேள்விகளுடன் எனது இந்த புதனின் காலை வணக்கம்: கவிஞர் தணிகை
உடலை இழந்த பிறகும் உயிர் ஆவியாக இருக்கிறதா?
இருக்கிறது என்ற எனது அனுபவத்தின் பதில் பலரால் மறுக்கப் படலாம்
ஆனால் அப்படிப்பட்ட 3 நபர்களிடம் நான் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன். சுமார் 38 ஆண்டுகளுக்கும் மேல் தியானப் பயிற்சியில் இருந்து வருகிறேன் எனக்கு உண்மையைத் திரித்து சொல்லி எவரையும் திசை திருப்பும் எண்ணம் ஏதும் இல்லை என்ற நிலையில் இதை உரைக்கிறேன். இதை அறிவியலோ அல்லது அது பற்றி நம்ப மறுக்கும் எண்ணமுடையோர் மறுக்கலாம் அது அவர்கள் நிலைப்பாடு. அதை நாம் ஒன்றும் குறை சொல்ல வழி இல்லை.
பிற உயிர்களின் அழிவும் ஏன் மற்ற ஜீவராசிகளின் இன அழிவும்
மக்கள் தொகைப் பெருக்கமும் என்ற தொடர்பு பற்றி என்ன தெளிவு இருக்கிறது?
புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய்
பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற
இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான் இன்று உன் பொன்னடிகள் கண்டு வீடுற்றேன்
....திருவாசகம்....மாணிக்க வாசகர்...இவரின் வயது 32 என்கிறார்கள்
மறுபிறப்பு என்ற ஒன்று இருக்கிறதா?
உடலை இழந்த உயிர்கள் எவ்வளவு காலம் ஆவி நிலையில் இருக்கின்றன? அவை எங்கு சென்று மறைகின்றன?மறு பிறப்பு என்ற ஒன்று இருக்கிறதா? இராமானுஜர் தமது மறுபிறப்பு பற்றி முன்னரே சொல்லி இருக்கிறார். அவர் ராமானுஜராக 120 ஆண்டுகளும், மணவாள மாமுனிவராக 80 ஆண்டுகளாகவுமிருந்திருக்கிறார் என்று அவரே கூறியதாக அவர் சார்ந்த ஆன்மீக ஏடுகள் குறிப்பிட்டுள்ளன.
கணியன் பூங்குன்றனார் முதல் கௌதம புத்தர் வரை ஏன் மற்றும் அறிவியல் யாவும் சொல்கிறது: வினை பற்றி(யே) கடவுள் பற்றி அல்ல...
மரணம் பற்றி மரணத்துக்கும் பின் பற்றி எந்த மதங்களாலும் ஏன் அறிவியலாலும் கூட அறுதி இட்டு இன்னும் எதையும் கண்டறிந்து சொல்ல முடியவில்லை.
மரணமிலாப் பெருவாழ்வு பற்றி பல ஞானிகளும் பேசியிருக்கின்றனர்.
இரவும் இருளும் இருந்த போதும் சூரியன் இருக்கிறது
பகலும் வெளிச்சமும் இருக்கிற போதும் விண்மீன்கள் இருக்கிறது
எல்லாம் தோற்றம்...மறைவு...காட்சி, காட்சிகளின் நீட்சி...
எத்தனையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமையும் உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் எனத் தேர்ந்தேன்
அந்த வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ!
என்கிறார் இராமலிங்கர் ...ஏழைகள் பசி தீர்த்தலே ஜீவகாருண்ய ஒழுக்கம் எனச் சொல்லும்
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளும் அருட்பெருஞ்சோதி....என்னும் இராமலிங்கர் சுமார் 50 ஆண்டுகள்... வாழ்ந்தது பூமியில்.
1967ல் பாராளுமன்றத்தில் அறிஞர் அண்ணா முதல் கன்னிப் பேச்சிலேயே நாங்கள் வடக்கில் புகழ் பெற்றார் பெயரை எல்லாம் எங்கள் சாலைகள், பாதைகள், வழிகள், போன்றவற்றுக்கு எல்லாம் சூட்டி ஏன் நினைவாலயங்கள் எல்லாம் வைத்து பாராட்டுகிறோம் ஆனால் எங்கள் பெரியோரை அப்படி வடக்கே இருப்பார் கொண்டாடுகிறீர்களா? என்றார்.... அந்த நிலையே இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்று சொல்லலாம்.
திருவள்ளுவர், பாரதி, இராமலிங்கர் பற்றி எல்லாம் நினைவுக்கு வந்தது...பாரதியை தாகூரை விட வலிமையான கவி என கு.அழகிரிசாமி ஏன் இப்போதுள்ள சாருநிவேதிதா போன்ற முற்கால எழுத்தாளர் முதல் தற்கால எழுத்தாளர் வரை குறிப்பிடுகின்றனர்...ஆனால் பாரதிக்கு சோற்றுப் பஞ்சம் பசி,பட்டினி,பிணி...தாகூருக்கு நோபெல்... பெரும் புகழ்...நாம் எங்கு பிறக்கிறோம் என்பதில் கூட நிறைய தீர்மானங்கள் இருக்கின்றன.
கோவையில் நடந்ததாக ஒரு நபர் ஒரு காணொளிக் காட்சியை பகிர்ந்திருந்தார். தலையில் காசு வைத்து ஆசி வழங்கிய பின் அந்த நபர் தமது பணப்பையை தாமாக எடுத்துக் கொடுத்து விட்டார் என்று...அது ஒரு பிரபலமாகி இருக்கும் காணொளிக் காட்சி...அது போன்று செல்வத்தை இழந்த அனுபவம் எனக்கும் உண்டு... தோற்றத்துக்கு, களப்பணிக்கு வெயில் மறைப்புக்கு என தொப்பி அணிந்து வந்த நான் அதிலிருந்து எப்போதுமே தொடர்ந்து தலைக்கு தொப்பி, அணிய அரம்பித்து விட்டேன்...அந்தக் காலத்தில் பேருந்து இல்லாக் காலத்தில் இரயில் அல்லது கால் நடை பயணம் நமது பெரியோர் கையில் ஒரு தடி, தலைக்கு உருமாலை, கையில் நீருக்கு என ஒரு திருகாணி செம்பு வைத்திருந்தனர். நாம் ஒரு தண்ணீர் பாட்டல், கையில் ஒரு குடை,தலைக்கு ஒரு தொப்பி அணிவதுகூட நல்லதே...
செய்வினை,பில்லி , சூனியம், மந்திரம், மாந்தீரிகம், எல்லாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்...?
இப்படி நிறைய பேச வேண்டிய பேசு பொருள்கள் நிறைய இருக்கின்றன
சிற்பி கொ.வேலாயுதம், விடியல் கு.கருணாநிதி, நூல் வழிச்சாலை நாகச் சந்திரன், குருசூரியப்ரகாஷ் குருசாமி நாம் மறையும் முன் நம்மால் முடிந்ததை நமது நாட்டுக்கும் வீட்டுக்கும் செய்ய வேண்டியது அவசியம். அதே போல சில கேள்விகளுக்கான பதிலை கண்டு கொள்ளும் ஆர்வமும் தெளிவடைய முடியுமா என்ற முயற்சியும் அவசியம் தான்... நீங்கள் எல்லாம் அறிவார்ந்து சிந்திக்கிறீர்கள், கருத்துகளை பகிர்ந்து கொள்கிறீர்கள் எனவே இது பற்றியும் பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும் சில படிகள் படிப்பார் முன்னேற்றம் பெற...
நன்றிகளுடன்...
அத்தேவர் தேவர் அவர் தேவர் என்றிங்கு
பொய்த் தேவுப் பேசி புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாது பற்றற நான் பற்றி நின்று
மெய்த் தேவர் தேவுக்கே சென்றூதாய் கோத்தும்பி..
( கல் ஏன் மலர் ஏன் கனிந்த நல் அன்பே பூஜை என்ற
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே
சினம் அடக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...தாயுமானவர் பராபரக்கண்ணி.
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர் பூஜை கொள்ள வாராய் பராபரமே!
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்றவரவரை கூத்தாட்டும்
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே...
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே...
திருமூலர்
உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...திருமூலர்
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே...அகத்தியர்
அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை எல்லா நூல்களிலுமே மனோ நிக்ரஹமே வழி என்று சொல்லப் பட்டிருபதால் அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை...இரமண மஹரிஷி...
நினைவென்ற ஒன்றை உரித்துப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை...இரமணர்.)
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment