Sunday, April 10, 2022

டாணாக்காரன்: கவிஞர் தணிகை

 டாணாக்காரன்: கவிஞர் தணிகை



2 மணி நேரம் 21 நிமிடம் நீளம். நேரம் போனதே தெரியவில்லை இதுவே படத்தின் முதல் வெற்றி. மிகவும் கனகச்சிதமாக தேவைக்கதிமாக காட்சிகள் இல்லாத தொகுப்புப் பணிக்கு அடுத்த வெற்றி... இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.


டாணாக்காரன் என்ற இந்தப் படத்தைப் பற்றி சொல்லியாகவேண்டும் என்ற பாதிப்பு பார்த்த உடன் ஏற்பட்டு இருக்கிறது. இதை டிஸ்னி‍ ஹாட்ஸ்டாரில் 08.04.22 அன்று  ஒளி பரப்பி விட்டார்கள். தியேட்டரில் ரிலீஸ் இல்லை.இதைப் பற்றி எழுத எனக்கு 2 நாள் ஆகி விட்டது. ஆனால் எழுத வேண்டும் என்ற நிர்பந்தமே எழுத வைக்கிறது.


மிக நல்ல அரிய உயரிய படம். தமிழ் என்பவர் எழுதி இயக்கி இருக்கிறார்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் காவல்துறைக்குத் தேர்வு பெற்றவர்களுக்கான பயிற்சியில் நடப்பவை.

ஆனால் இதில் ஒரு வரலாறே அடங்கி இருக்கிறது. நிறைய பேர் இறந்திருக்கிறார்கள் பயிற்சியில் என்கிறது படம்.



இன்னும் நமது சிறைகள் ஆங்கில அடக்கு முறை பாணியில் இருந்தே வெளிவரவில்லை.

அதே போலவே நமது காவல் துறையும் தான்.

விக்ரம் பிரபுவுக்கு பேர் சொல்ல இது ஒரு நல்ல படம்.


லால் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே இயல்பான நடைமுறை நடப்புக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள்  இதுபடத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இயக்குனர் துணிந்து இது போன்ற கருப்பொருளை எவரையும் காயப்படுத்தாமல் கையாண்டிருப்பது அவரது திறமைக்குச் சான்று.


மறுக்க முடியாத உண்மைகள் சில சம்பவங்களாக கோர்க்கப் பட்டிருக்கின்றன. லிவிங்ஸ்டன் காவல் நிலையத்தில் அவமானப்பட்டு உயிரிழப்பது அதன் வாரிசாக வரும் சிறுவன் விக்ரம் பிரபுவாக காக்கி சட்டை சீருடையில் காவலராக வேண்டுமென்பதே வாழ்வின், உயிரின் இலக்காக கொள்வது அதனிடையே நடக்கும் சம்ப்வங்களும் போராட்டக் களமுமே படம்.


 சில காட்சிகள் மட்டுமே அல்லது சிறிது நேரமே இடம் பெறும் போஸ் வெங்கட், காவல் துறையில் பயிற்சி பெறும் காவலர்களுக்கு இலஞ்ச ஊழல் பற்றி பாடம் எடுக்க வரும் ஒரு உண்மையான காவலராக வருவதுடன் படத்தின் அடிநாளத்தை இரத்த ஓட்டத்தை உயிர் நாடியை எடுத்துச் சொல்கிறார்: அது என்னவெனில்: 

விருது, பரிசு வாங்க வேண்டுமென்பதும் அதன் முக்கியம் கருதியும் ஒரு வேலை கிடைத்து விட்டது என்றும், சுயநல குடும்ப பொருளாதார பிரச்சனை களைய பணி என்றும் இது போன்ற‌ காரணங்களுக்காக காவலர் சீருடையை அணிய முனையாதீர் அதை விட முக்கியம் மக்களுக்கு ஒர் பிரச்சனை என வரும்போது அதைக் களைய அங்கு உண்மையான காவலர் தேவை அப்படி ஒரு உண்மையான காவலராய் இருக்க இன்றைய இளைஞர் முன் வர வேண்டும் அந்த நினைவுடன் இருப்பார் மட்டுமே காவலர் தேர்வுக்கும் வர வேண்டும் அதுவே காவலரை பெருமைப் படுத்தும் காவல் துறைக்கு நல் பேரை விளைவிக்கும் என முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறார் தமிழ்.


அது மற்ற படங்களை விட இந்த படத்தை மேல் கொண்டு சென்று இருக்கிறது. லால் என்ற நடிகர் ஈஸ்வர மூர்த்தியாகவே வாழ்ந்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் பதவி உயர்வு கிடைக்காத போலீஸ்காரராக, இப்படியே செல்லும் படத்தில் மலம் கழிக்க வரிசையில் நிற்கும் பயிற்சிக் காவலர்கள் முதல் அதில் அவசரமாக வருவதாகச் சொல்லி கத்திப் பார்த்தும் முடியாமல் அரைக்கால் சட்டையிலேயே கழிப்பவர், பயிற்சியின் கடுமை, கொடுமை, கெட்ட வார்த்தை என்பது கலாச்சாரம் என்பது,  இப்படி எல்லா அவலங்களும் அம்பலப் படுத்தப் பட்டுள்ளது.



மேலும் அந்த பயிற்சியும் துறையும் ஆங்கில ஆதிக்கத்தின் எச்சமாகவே இருப்பது, நமது மண்ணின் மாந்தரை,நமது மனிதர்களை தேர்வு செய்து நம்மையே அடித்து துவைத்து கொன்று குவிக்க ஆங்கிலேயரின் ஏவல் நாய்களாகவே இருந்தாரின் வழித் தோன்றலாகவே இன்றும் ஏன் இந்த காவல் துறை தொடர வேண்டும் என்ற கேள்விகளை பயமின்றி எழுப்பி இருக்கிறார் இதன் இயக்குனர் தமிழ்


ஆனால் இன்னொரு பக்கத்தை எடுத்துக் கொண்டால் காவலர் இல்லை எனில் கையில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக மாறி பொதுமக்களை மிரட்டி வருவாரை எவர் தான் தடுக்க முடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை


இதை எல்லாம் சீர் படுத்த இடையில் ஏதோ ஒன்று தேவை...அதுதான் பக்குவம். பதவியின் பொறுப்பு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு. நமது மக்களுக்கான சேவையில் நாம் இருக்கிறோம் என்ற நல்ல எண்ணம். அதைச் சொல்ல முனைந்து முயன்றிருக்கும் படம். ஒரு நல்ல காவல்காரர் அந்த இடத்தில் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்காதில்ல  போன்ற வசனங்கள் பாராட்டும்படியாக இருக்கிறது.


எமது பகுதியிலேயே கொலை ஒன்று சர்வ சாதாரணமாக நடந்துள்ளது, மேலும் பொது நலம் சார்ந்த வசதி வாய்ப்புகளை எல்லாம் கூட தனிப்பட்ட நபர்களே ஆக்ரமிப்பது, அதை வேறு எவரும் கேட்க முனைந்தால் அவர்களை வன்முறையில் ஈடுபட்டு மிரட்டுவது என்கிற பேர்வழிகளை எல்லாம் காவல் துறை இல்லையேல் வழிக்கு கொண்டு வருவது என்பதுவும் இயலாத காரியம்.


எனவே நல்ல காவலர்களின் சேவையை மெச்சவும் பாராட்டவும் மரியாதை செய்யவும் போற்றவும்

மக்களை  தீயவரின் பேச்சுக்கடிமைப்பட்டு தீயவர் அணியில் இணைந்து கொண்டு துன்புறுத்துவதுமாக‌ செயல்படும் காவலர்களை அகற்றவும் தெரிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனது தனிப்பட்ட மற்றும் கூட்டுக் கடமையுமாகிறது.



டாணாக்காரன் என்றால் காவல்காரன் என்ற பொருள், பொதுவாக ஒரு அமைப்பை, ஒரு கட்டடத்தின் முன் வாயிலில் நின்று கொண்டு காவல் காத்துக் கொண்டு இருப்பவரது நினைவே இந்தப் பேரைக் கேட்டால் வரும். இது ஒரு ஆங்கில ஆதிக்க கால வார்த்தை போல இருக்கிறது. இதை ஏன் தலைப்பாக வைத்தார் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது.


கட்டாயம் 100க்கு 75க்கும் மேல் மதிப்பெண் தர வேண்டிய படம். இதில் எங்கும் ஓட்டை உடைசல், பிசிறு, தவறான சித்தரிப்புகள், முரண்கள் இருப்பதாகவே தெரியவில்லை. எல்லாம் நேர்மையாக இருப்பதையே நேர்மையாகவே காட்டி இருக்கிறார்கள். நல்ல படம். நாட்டுப் பற்றுடன் எடுக்கப் பட்டிருக்கும் படம். இன்றைய மக்களுக்கு மட்டுமல்ல இன்றைய காவல் துறையில் சேர முனையும் இளைஞர் அவசியம் பார்த்து தெரிந்து கொண்டு அதன் பின் பணியில் பயிற்சியில் சேர இந்தப் பட‌த்தைப் போட்டுக் காட்டலாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment