அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்ற நண்பர்களுக்கு: கவிஞர் தணிகை
27.08.2020ல் மாலை நடைப் பயிற்சியின் போது அமரக்குந்தி லெனின் கண்ணன் என்னுடன் பேசிய பேச்சால் ஏற்பட்ட எண்ண அதிர்வலைகள் இன்னும் என்னுள். எனவே அனைவர்க்கும் அதை அஞ்சலிடுகிறேன்.
சுமார் அல்லது ஏறத் தாழ 40 ஆண்டுகள் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என இந்த அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்த அதே சகோதர நண்பர் கொ.வேலாயுதம் இப்போது அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்றம் என ஒருங்கிணைத்துள்ளார். நிறுவனர் என்று சொல்வதில் ஒன்றும் குறை இல்லை.
சின்னப்பையன் சேலம் வடக்குத் தொகுதி மதுவிலக்கு வேட்பாளாராகி போட்டி இட்டார் அவர் இன்று இல்லை.சசி பெருமாள் தமிழக இலட்சியக் குடும்பத்தின் விதையெனப் புறப்பட்டு காந்தியவாதி மதுவிலக்குப் போராளி எனப் பேர் வாங்கி சென்றவர் அவர் இன்று இல்லை. செயல் வீரரான அன்புத் தம்பி பொறியாளர் மணி இன்று இல்லை. இவர்கள் எல்லாம் தியாக தீபங்கள் தான். மணியை சேலத்து மேயர் என்றெல்லாம் சொன்னோம்...கலாம் கண்ட கனவு 2020 பலிக்க வில்லை, புறா(நகரிலிருக்கும் எல்லா வசதிகளையும் கிராமத்திற்கு கொண்டு செல்லும் கலாமின் திட்டம் புறாவும்) தோல்வி என அரசே சொல்லி விட்டது.
அவர்களோடு எல்லாம் சேர்ந்து தோளோடு தோள் நின்று பயணப் பட்டும்,பல்வேறு நிலைகளிலும் இயக்கம் வளர உறு துணையாகி உரைவீச்சை நல்கி உழைத்த நிகழ்வு எல்லாம் நினைவிலாட முரண்பட்ட நிலைகளில் சில நச்சு விதைகளை களையெடுக்கவும் குரல் கொடுத்த பின் ஏன் எங்கு எப்படி எல்லா முயற்சிகளும் எதிர்பார்த்த அளவில் பரிமளிக்காமல் போனதே என நினைவிறுத்தும் போது விடியல் குகன் என்ற நண்பரையும் கொ.வேலாயுதம் என்ற மூத்த சகோதர நண்பரையும் இணைக்கும் சிறு முடியாகி இந்த இன்றைய அன்பு வழி மக்கள் ஒளி மன்றம் உருவாக காரணமானேன் என்ற திருப்தியும் மகிழ்வும் எனக்குண்டு.
ஏன் எனில் தமிழக இலட்சியக் குடும்பங்கள் கலைக்கப் படும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணையட்டும் என நிறுவனர் சொல்ல நாம் தான் இயங்கவில்லை என இயக்கத்தை கலைத்தாயிற்றே அதன் போக்கில் அவரவர் விருப்பப் படி அவரவர் செல்லட்டும் விட்டு விடுங்கள் காங்கிரஸ் மிகவும் நலிவடைந்து கொண்டிருக்கிறது என்ற எனது கருத்தை முன் வைத்தேன். இதனிடையே இயக்க ஆற்றின் போக்கில் நீர் மொண்டு பருகி தவறிப் போன வெள்ளாடுகள் பற்றி எல்லாம் நான் இங்கு குறிப்பிட்டால் இந்தப் பதிவு வெகுவாக நீளும். இப்போது மறுபடியும் ஒரு குடை உருவாகி இருப்பது பற்றி மகிழ்வும் திருப்தியும் .
இப்போது மறுபடியும் பூக்கும் என அன்பு வழி இன்ப ஒளி மக்கள் மன்றம் என பூத்திருக்கிறது.
இந்தியாவின் பல்வேறுபட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மலைவாழ் மக்கள் சேவை பிரிவினர் என்ற மக்களுக்காகவும் சுமார் 10 ஆண்டுகள் கடுமையான உழைப்பு எனக்கு சாலையோரத்தில் படுத்துறங்கும் நிலையையும் இந்த நாட்டின் உன்னத குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம், உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி பிரபல்ல குமார் நட்வர்லால் பகவதி அவர்களுடனும் சேர்ந்து சென்ற தருணங்களையும், எழுதிய 11 புத்தகங்களில் முதல் புத்தகம் உலகின் மாபெரும் அமெரிக்க நூலகக் கூட்டத்தில் வாழ்க்கை குறிப்போடு இடம் பெற்றமையும் இப்படி பல்வேறு பட்ட பரிமாணங்களில் சேவையும் உழைப்பும் ஒரு சேர எனது வாழ்வு பயணித்த படி இருக்கிறது. யாருக்கு எந்த மக்களுக்கு செய்தாலும் அது மக்கள் சேவைதான். அது இயக்கம் தழுவியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். இவை பற்றி சொல்லப் புகின் அதுவும் இந்த பதிவை நீட்டி விடும்.
சுருங்கச் சொல்லின்: கீழ்த் தட்டு மக்களுக்கான உழைப்பு, தியாகம், நடைப் பயிற்சி, இலஞ்ச ஊழலுக்கு எதிரான எனது தனித்துவமான போராட்டங்கள், தவறான வழியில் செல்லாமை கொள்கை மாறாத வாழ்க்கை, முழுமையான மதுவிலக்கு, முழு மத மறுப்பு அல்லது மத நல்லிணக்கம் போன்றவை எனது கொள்கை பிடிப்புகள். கலாமை, அன்னை தெரஸாவை, காந்தியை ஏதோ ஒரு கைப்பிடியில் தொட்டு செல்லும் வாழ்க்கையுடன் நானும் எனது செயல்பாடுகளும் எப்போதும்.
நண்பர்களுக்கு எல்லாம் சொல்ல வேண்டுவது என்ன வெனில்: கொள்கை நெறிக் குழு, வழிகாட்டுதல் குழு, உயர்மட்டக் குழு, ஆலோசனைக் குழு, எல்லாமே இருக்கட்டும். சிறப்பு ஆலோசகர்கள், ஆலோசகர்கள், கௌரவத் தலைவர்கள், எல்லாமே ஒரு இயக்கம் வளரத் தேவைதான்.
இயக்கம் என்பது தனிமனித மூளைகளை விட மேலான ஒரு மையம். தன்னிச்சையாக செயல்படுவதிலிருந்து மாற்றிக் கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழி.
இப்போது தேவை ஒரு தீ அது எங்கும் பரவ வேண்டியது பெரும் தீயாக வேண்டியது
இப்போது தேவை பெரு மழை எங்கெங்கும் பெய்ய வேண்டியது
இப்போது தேவை ஒரு பெரும் புயல் எங்கும் வீச வேண்டியது
இப்போது தேவை ஒரு தூயக் காற்று எங்கெங்கும் சுவாசமாக நிறைய வேண்டியது
அதற்கு சசிபெருமாள் போல சின்ன பையன் போல ஓடித் திரியும் நபர்களே தலைமை ஏற்க வேண்டும் அமர்ந்து எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் தலைமையகங்கள் அல்ல வாகனத்தில் அல்ல ஏதும் வசதி வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலும் நடந்தாவது சென்று மாநிலம் எங்கும் திரியும் சரியான தலைமை அவசியம்.
கொடியை அடையாளத்தை சின்னத்தை ஏற்படுத்தி அமைத்து வடிவமையுங்கள்... நல்லோரை எல்லாம் ஒருங்கிணைக்க கொரானா கோவிட் 19 தீ நுண்மி காலம் தணிந்ததும் இயக்கம் புறப்படட்டும்....
சசிபெருமாள், சின்ன பையன்,அன்புத் தம்பி பொறியாளர் மணி போன்றோர்க்கு அடுத்த களப் பலியாக தயாராக இருக்கிறேன். இனி செயல்பாட்டை நிறுத்த நினைக்கும் உடலை எப்போதோ போயிருக்க வேண்டிய உயிரையும் மறுபடியும் அர்ப்பணிக்க சிலராவது முன் வரும் போதாவது அங்கிருந்தாவது பற்றிக் கொள்ளுங்கள் பரவச் செய்யலாம்... பேராசிரியர் பழனித்துரை சொல்லியதை தனது உரை நடை வீச்சில் குறிப்பிட்டதை தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் என்ற எனது சிறு நூலில் பதினைந்து ஆண்டுகளுக்கும் முன்பே 2005ல் நான் குறிப்பிட்டதை எனது அந்த நூலை இப்போதும் வைத்து இருப்பார் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் ஆன்மத் தியாகம் செய்யத் தயாராகாத வரை வெற்றி வராது.
விவேகானந்தர் சொல்லியது போல சாதிக்க வேண்டுமானால் சாகவும் தயாராக இருக்க வேண்டும். நான் தயாராக இருக்கிறேன். அப்படித்தான் தனியாக இருக்கும்போதும் இயக்கமாக ஆனாலும் வாழத் தலைப் பட வேண்டும்.
அவ்வளவுதான் சொல்ல முடியும்.
இதை எல்லாம் தகுதிக் குறைவு என்று நினைத்தால் பிறகு உங்கள் விருப்பம்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
அப்படித்தான் சசிபெருமாளிடமும் சொல்லியதாக நினைவு.
ReplyDelete