Tuesday, December 31, 2019

அந்த ஒரு நொடியில் தான்: கவிஞர் தணிகை

அந்த ஒரு நொடியில் தான்: கவிஞர் தணிகை

விடை தெரியாக் கேள்விகள்.

Image result for at that moment"


எல்லா முடிவுகளுமே அந்த ஒரு நொடியில் ஏற்படுவனதான். அது நேர்மறையாக அல்லது எதிர்மறையாக மனித வாழ்வை, உயிர்கள் வாழ்வைவிளைவுகளை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும்  கொண்டு செல்லும் வண்ணம் அமைந்து விடுகின்றன அமைத்து விடுகின்றன‌.

நட்பிற்கு மட்டுமே நிபந்தனையோ நிர்பந்தமோ இல்லை.

கடந்த 25 கிறிஸ்மஸ் தினமன்று நண்பர் குகன்( எப்படி பொருத்தமான பெயர் இவர் அமைத்துக் கொண்டார்.எப்போதும் நான் வியக்கும் வண்ணம் அந்த இராமாயண குகனைப்போன்றே) என்னை விட்டு விடவே கூடாது என்று நாமக்கல் விதை சிகிச்சை பயிற்சி முகாம் நடைபெற அழைத்திருந்தார்.நானும் எவ்வளவோ 24 இரவு 10 மணி வரை அதை இதை சொல்லி தவிர்த்துவிடவே முயன்றேன் எனினும் நட்பு என்னை தவறவிடவே இல்லை.

எனவே வழக்கம்போல 25  அன்றும் அதிகாலை (அதுதான் விடுமுறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எழுந்து கொள்ளும் பழக்கம் நம்மை 4 மணிக்கு எழுந்தே பழக்கமானதால் தூங்க விடுவதே இல்லையே) 4 மணி முதல் புறப்பட ஆரம்பித்தேன். நிகழ்வு 10 மணிக்கு என ஏற்பாடு. (9.30 மணிக்குள் நாமக்கல் பேருந்து நிலையம் சென்றடைந்துவிட்டேன் என்பது வேறு)

பிரார்த்தனை நேரம் முடிவதற்குள் யேசு யோவானிடம் ( யோவானா அல்லது வேறு ஒரு தலைமைச் சீடரோ அவர் பேர் எனக்கு இப்போது நினைவில் சரியாக இல்லாமலும் இருக்கலாம்)சேவல் கூவும் முன் 3 முறை மறுதலிப்பாய் என்பது போல வேண்டாம், வேண்டாம் , போக வேண்டாம் என 3 முறை தனித்தனியாக ஒலியற்ற வார்த்தைகளாக சொல்லப்பட்டது. (இந்த வார்த்தைகள் எங்கிருந்து, யாரிடமிருந்து எனக்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன அல்லது ஆன்மாவின் குரல் தியான வளத்தால் அதிமாக கிடைக்கிறதா இதெல்லாம் பேராய்வுக்கு உட்படுத்தி ஆயுளை முழுதும் அர்ப்பணித்தாலும் விடை காண முடியாக் கேள்விகள்....தலைப்பு வந்து விட்டதல்லவா?)

எப்படி நண்பருக்கு கொடுத்த வார்த்தையை மாற்றி நம்பிக்கை ஏமாற்றம் அளிப்பது...சென்று வருதலால் எனக்கும் நன்றிக் கடனுக்கு செய்ய வேண்டுமான கைம்மாறு மட்டுமல்ல‌ சிறு பொருளாதார ஈடு உண்டு நானிருக்கும் நிலைக்கு அது உதவியும் கூட ( ஆனால் அதை எல்லாம் எதிர்பார்த்து இந்த முறை நான் சென்று கலந்து கொள்ள எண்ணமிடவில்லை) நண்பரை எப்படி மறுப்பது என அந்த இயற்கை வார்த்தைகளை மீறி சொன்னபடி சென்றேன். நிகழ்வு நல்ல படியாக நடந்தது. என்னால் ஆன உதவிகள் செய்தேன் வழக்கமான விவாதப் போக்கை கைவிட்டு.

வீடு திரும்புகையில் சுமார் 4 அல்லது 5 மணி பயணம்... இரவு 8மணிக்கும் மேல் இருக்கும் சேலம் பேருந்து நிலையத்துள் பேருந்து புகுந்து நிலைப்பாட்டுக்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன் பேருந்து செல்லச் செல்ல ஒருவர் இறங்கினார் சற்று வேகம் எனவே ஓடி சமாளித்தார் நான் அவரை ஏன்  பார்த்து பார்த்து என வாய்விட்டே எச்சரித்தேன்.

அடுத்து வீடு செல்லும் பேருந்தை பிடிக்க எனக்கு அவசரமோ...அதுவும் சுமார் ஒன்னரை மணி நேரப் பயணத்துடன் இருக்கும்...

அடுத்து இன்னும் சற்று தூரத்தில் நானும் இறங்கத் தயாராகி படிக்கட்டில் நின்றபடி வந்தவன் பேருந்து ஒரு வேகத்தடையின் மேல் ஏறவும் நான் அதுவரை பொறுமை காத்தவன் என்ன தோணியது என்று நினைக்கும் நொடிக்குள் வேகத்தடை என்றால் பேருந்து இன்னும் மெதுவாகவே தானே போகும் என எட்டி குதித்திருக்கிறேன். நல்ல வேளை எட்ட எட்டி குதித்திருக்கிறேன். பேருந்து ஒரு ஜெர்க் ஆக ஒரு இடறல் ஆக நானும் எனது கால் பாதமும் அந்த வேகத்தடையின் முன் பாகத்தின் சாய்வில் சரியாக நிலைத்து நிற்க முடியாமல் கீழே விழுந்தேன். பேருந்து போய்விட்டது.

நான் உடனே ஒன்னுமில்ல ஒன்னும் ஆகலை எனச் சொல்லியபடியே எழுந்து கொண்டேன், செல்பேசி வேறு( Shirt pocket) பாக்கெட்டில் இல்லை எப்படியோ விழும்போது தவறி விட்டதோ என பயம் வேறு நல்ல வேளை அது எப்படியோ கையில் இருந்த ஒயர் கூடையுள் இருந்தது, விழுந்திருந்ததோ அல்லது நான் வைத்து இருந்தேனோ அதுவும் மறந்து விட்டது. நல்ல வேளை. இடது கை முட்டி சற்றும் இடது முழங்கால் முட்டி சற்றும் சாலையில் பட்டு அழுத்தப் பதிவைக் காட்டியது. நல்லவேளை பெருத்த காயம் ஏதும் இல்லை. சிறு சிராய்ப்புதான் இடது கை முட்டியில்...அருகே வந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் சார் பார்த்து இறங்க வேண்டும் சார் பின்னால் சக்கரத்தில் சிக்கி இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்றார். உண்மைதான் அவர் சொல்லியது.

நானும் சிறிது நிலை உணர்ந்து கவலை அடைந்தேன். அனைவர்க்கும் அறிவுரை சொல்பவன் நானே இப்படி நடந்து கொண்டது எனக்கு சற்று கூச்சமாகவும், அவமானமாகவும் சொல்லத் தகாததாகவும் உணர்ந்தேன்.எப்போதும் சிறு வயதாகவே நினைப்பில் இருக்கும் எனக்கு ஓ! கலாம் சொன்னது போல நானும் இந்த பூமியுடன் சூரியனை 58 முறை சுற்றி விட்டேனே...என்னதான் சொன்னாலும் உடலுக்கு வயது என்பது ஒரு அடையாளமாகவே இருக்கிறது. உடல் திடம் குறைந்து விட்டது என்பது உறைக்க ஆரம்பித்தது. என்றாலும் நான் அதை அவ்வப்போது துடைத்து போட்டு போய்விடுபவன் என்பது வேறு. என்னதான் கெட்ட பழக்கம் இல்லாவிட்டாலும் என்னதான் நான் இளைமையாகவே உடலை பராமரிக்கிறேன் என்று சொன்னவர்க்கு எல்லாம் கூட....

 அடுத்த பேருந்து ஏறி அமர்ந்தேன். வீடு வந்து சேரும்போது அமாவாசையும் மின் வெட்டுமாக ஒரே இருட்டு. செல்பேசியின் டார்ச் லைட் வெளிச்சத்தில் தான் தடம் பார்த்து பேருந்து நிறுத்தத்திலிருந்து வர முடிந்தது. அந்த இரவில் மின் நிலைய தீ விபத்தால் சுமார் 4 மணி நேரம் மின் விநியோகம் பாதித்தது என அறிக்கை. அடுத்த நாள் உள்ளாட்சித் தேர்தலின் முன் நாள்.


இராமசாமி என்னும் எனது ஒரு இளைய தம்பி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட ட்ரெஸ் என்னும் ஆயின்மென்ட் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது அப்போது இதேபோல ஒரு டிசம்பர் மாதம் தான் என நினைக்கிறேன். புத்தாண்டு அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் முன் இப்படி ஏதாவது நேர்ந்து விடுவது எனக்கு வழக்கம் தான்.இதை பல ஆண்டாக நான் கவனித்து வருகிறேன்.அப்போது எனது சிறுவனாக இருந்த மகனுக்கு நீ ஓடும்போது ஏன் உடலை முன்னோக்கித் தள்ளியபடி ஓடுகிறாய் அப்படி ஓடினால் விழுந்து விடும் நிலை ஏற்படும் என ஓடிக்காட்டி எங்கள் வீட்டுப் பின் கட்டு இரும்புத் தகரக் கதவு மூடி இருக்க அதன் மேல் முட்டி அது திறந்து கொண்டு நான் கீழே விழுந்து முட்டியில் நல்ல காயம் ஏற்பட்டிருந்தது.அப்போது அது சீழ் பிடிக்காமல் இருக்க ட்ரெஸ் போடுங்கள் அண்ணா என ராமசாமி அறிமுகப்படுத்தினான்.அதையே இன்றும் சற்று இடது கை முட்டியில் தடவி வருகிறேன் பெரிதான காயமாக இல்லாதபோதும்
Image result for at that moment"
இப்படித்தான் 2000 ஆண்டுக்கும் முன் ஒரு கிறிஸ்மஸ் தின முன் நள்ளிரவில் பல்லாண்டுகளாக துணையுடன் சென்று சாலையோரத்தில் படுத்துக் கிடக்கும் அனாதைப் பிச்சைக்காரர்களுக்கு  நடுங்கும் குளிர் தவிர்க்க போர்வை கொடுத்து/போர்த்தி  வந்த நிகழ்வுகளில் அன்று அந்த ஆண்டு ஒருவரும் துணைக்கு சேராத நிலையில் தன்னிச்சையாக தானே ஒருவனே தனியாக சென்று பணி முடித்து திரும்புகையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து நல்ல வேளை வீட்டருகே வந்து விழுந்து இடது கை முழங்கை மூட்டை இடம் பெயரச் செய்து கொண்டு அந்த நிலையிலேயே தாரமங்கல அரட்டை அரங்க விசுவின் நிகழ்வில் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டிருந்தேன் கைக்கட்டுடனேயே.

எனவே ஆங்கிலப் புத்தாண்டு, ஆடி மாத வாக்கில் எல்லாம் சற்று நிதானத்துடன் எச்சரிக்கையாகவே இருப்பது வழக்கம். ஏனோ அவை  எனக்கு எப்போதும் நடந்தே விடுகின்றன புத்தி புகட்டுகின்றன‌.

நேற்று ஒரு செய்தி பார்த்தேன் சேலத்திலிருந்து குடும்பத்துடன் திருப்பதி செல்ல ரயில் ஏறுகையில் முன்பதிவில்லாப் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருக்க எல்லாம் ஏறிக் கொள்ள பெற்ற தாயை தன் மகன் ஏறிக் கொள் என அவசரப்படுத்த ரயில் எடுக்க அவரால் ஏற முடியாமல் நடைமேடை இடைவெளி மற்றும் ரயிலின் புறப்பாடு காரமாக விழுந்து திருப்பதி செல்ல வேண்டிய 50 வயது தாய் பர‌லோகம் சென்றடைந்ததாகப் படித்தேன். கட‌வுளை நாம் நமக்குள் தேடலாம் அது மேலும் நமது மனிதத்துக்கு சிறப்பு சேர்க்கும்.

இப்படி நாம் ஏதோ ஒரு சிறு நொடியில் நிதானமிழந்து அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் நம்மை பெரும் துயரத்திலும் ஆழ்த்தி விடுகின்றன. எனவே எப்போதும் பெரியோர் சொன்ன நிதானமே எல்லாவற்றிலும் தானங்களில் எல்லாம் சிறந்ததாக கருதப்படுகிறது.

இந்தப் பதிவு படிக்கும் எல்லாருமே அதை நினைவில் கொள்ள வேண்டியதும் எல்லா நேரங்களிலும் அதைக் கடைப் பிடிக்க வேண்டியுமே இதை எழுதுகிறேன்.

அன்று இரவு நண்பர் செல்பேசியைக் காணோம், உடல் நலத்துக்காக தாய்க்கு வாங்கிய  திரிபலா பல் பொடி காணோம், தொந்தி குறைய வாங்கிய முட்பந்தைக் காணோம் மறந்து விட்டேனே நிகழ்ச்சி நடந்த இடத்திலேயே மறந்து விட்டு விட்டேனே என புறப்பட்ட பிறகு காரில் அலைக்கழிந்தபோது அவருக்கு நான்  அவர் என்னை பேருந்து நிலையத்துக்கு அழைத்து  வழியனுப்ப வரும்போது சொன்ன வார்த்தை எதிலும் ஒரு நிதானம் இருக்கட்டும் அவசரப்பட்டாலே மறதி வரும்...என்றேன். அனைவரிடமும் பிரிந்து அவர்களை வழியனுப்பும்போது நான் டேக் கேர் எனச் சொல்வதும் வழக்கம்.
Image result for at that moment"
அவருக்கு சொல்லிய நான் அன்றைய சில மணி நேரங்களுக்கும் பின்னே நிதானம் இழந்து கீழே விழுந்து எழுந்திருக்கிறேன்... டேக் கேர் இல்லாமலும் நிதானமில்லாமலும்.

இப்படித்தான் ஒரு சிறு நொடிப்பொழுதில் மரணங்களும் நிகழ்ந்து விடுகின்றன‌

எனவே 2020ன் புத்தாண்டுச் செய்தியாக நான் சொல்ல விரும்புவது நிதானமாக இருப்போம் நமது செயல் முடிவுகளில் திடமாக இருப்போம் விபத்தை தவிர்ப்போம்  மேலும் மேலும் வளரும் உலகை ரசிப்போம்.

நன்றி
வணக்கம்
அனைவர்க்கும் எனது 2020ன் வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





2 comments: