என் நட்பின் நனி சிறந்தவர்கள் 9. ஆவின் செல்வராஜ் மின்னியல்: கவிஞர் தணிகை.
உயரம் குறைவான அடிக்கடி வாய் விட்டு சிரிக்கும் சுபாவம் உடைய தொப்பையுடன் இருந்த இளைஞர்.இவர் மூலம் தான் நான் செம்பண்ணன் போன்றோரை அறிமுகம் செய்து கொண்டது...இவர் அப்போதே சிகரெட் புகைக்கும் வழக்கத்தில் இருந்தார். இப்போதும் அந்தப் பழக்கம் நீடிக்கிறதா என்பது தெரியவில்லை. கையில் ஒரு ஸ்டீல் செயின் போட்ட வாட்ச் வலது கையில் கட்டி இருப்பார். சிவாஜி கணேசன் சில படங்களில் இருப்பது போல.
இவர் இளங்கோ, செம்பண்ணன், சுந்தரம், மதியழகன், இவர்களுடன் நான் தாரையில் சில இரண்டாம் ஆட்டக் காட்சிகள் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது.
இவர் ஒரு பேப்பர் அரியர் என நினைக்கிறேன் பின்னர் முடித்து சேலம் ஆவின் நிறுவனத்தில் உதவிப் பொறியாளர் என்ற பணியில் அமர்ந்து விட்டதையும் அவர் மூலமே அறிந்தேன்.
இவரது தந்தை செங்குந்தர் மகாஜன மேல் நிலைப்பள்ளியில் எழுத்தர் பணி. எப்போதும் வெள்ளை உடையில் இருப்பார் கண்ணாடி போட்ட உருவம் இப்போதும் எனது கண்ணில் இருந்து மறையவில்லை
அந்தப் பள்ளிக்கு எனது மாமா (அக்காள் கணவர் ஓய்வு பெற்ற ஒழுக்கமுடைய ராணுவ வீரர்) அண்ணா உணவகம் என தாரையில் நடத்தி வந்தபோது மிலிட்டிரிக்காரர் ஓட்டல் என்றும் சொல்வார்கள்...இவரது வளர்ப்புத் தந்தை பெயர் அண்ணாமலை என்பதாலும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் தாரைக்கும் பெருந்தொடர்பு இருந்ததாலும் தனது உணவகத்துக்கு அண்ணா ஓட்டல் என்று பேர் வைத்து நடத்தி வந்தார். அந்த வளர்ப்புத் தந்தையான அண்ணாமலை என்ற பெரியவர் செங்குந்தர் பள்ளியின் தாளாளராகவும் இருந்தார். அந்தப் பள்ளியின் தேசிய மாணவர் படை வாரம் ஒரு முறை நடக்கும் வகுப்புகளுக்கு சிற்றுண்டி எங்களது மாமா கடையில் இருந்துதான் போகும். அதன் பில்லை செட்டில் செய்ய வருவார் இவனது தந்தையாகவே இருக்கும்.கொண்டு வந்து தந்து விட்டுப் போவார்கள். மாமா சென்றெல்லாம் கேட்கவே மாட்டார்.
செம்பண்ணன் மட்டுமல்ல என் வாழ்வில் திசை திருப்பக் காரணமாக இருந்த நபரையும் அறிமுகப்படுத்தியவன் இவன் தான். என்னுள் இருந்து என்னை எழுப்ப, என்னைக் கிளர்ந்தெழச் செய்ய, என்னை மலரச் செய்யக் காரணமாக இருந்தவன். எனவே இவனை மறக்கவும் முடியாது. இவனைப் பற்றி எழுத மறுக்கவும் முடியாது. பல்வேறுபட்ட காரணங்களால் நான் வெளிப்படையாக ஏதாவது எழுதி அது பல்வேறுபட்ட முரண்களை தோற்றுவித்து விடுமோ என்றே பல முறை எழுதலாமா வேண்டாமா என்று சிந்தித்து சிந்தித்து இவனைப்பற்றி எழுதாமல் மிகவும் தாமதமாக்கி விட்டேன்.
இவனது சகோதரர் அவரும் ஏதோ கல்லூரியில் படித்து முடித்தவர்தாம் தாரை எண் கோண வடிவ தாமரை இதழ் வடிவ குளத்தின் அருகே அண்ணா சிலை அருகே ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தார்கள். அதில் மாடுகளுக்கான கயிறு எல்லாம் முன்னால் தொங்க வைத்திருப்பார்கள்...
இவனை நான் அங்கு பார்க்கப் போகும்போது சில சமயம் கடையில் இருந்து அவனது மூத்த சகோதரர் வந்து கடையில் அமர்ந்து மாற்றிக் கொண்டு விடுவிப்பார். அதன் பின் நாங்கள் பெரும்பாலும் ஒரு நடைப்பயிற்சி அல்லது கைலாய நாதர் ஆலயம் சென்று அங்குள்ள நீண்ட பிரகாரத்தில் நண்பர்கள் வட்டம் அனைவரும் வந்து அமர்ந்து பேசிக் களித்துக் கொண்டிருப்போம்.
இப்போது இவர் எனது வாட்ஸ் ஆப் வட்டத்துள் இருக்கிறார்.
காற்று இருப்பது தெரிவதில்லை. ஆனால் இருக்கிறது அது இல்லையெனில் நாம் இல்லை. அது போல சில பேர் இருக்கிறார்கள். வெளித் தெரிய மாட்டார்கள். ஆனால் அடிப்படையாய் வேரைப்போல சில உறவுகளுக்கு அவர்கள் தாம் காரணமாக இருந்திருப்பார்கள். அப்படி வேர் போன்ற நட்பு இந்த கட்டையன் செல்வராஜ் நட்பும் எனக்கு.
அவனையும் எனது வாழ்வையும் மறந்து விடவே முடியாது. எனது வாழ்வை அசை போட்டுப் பார்த்தால் அதில் இவனால் மாற்றி அமைக்கப்பட்ட இரு வழியும் என்னுள் எனக்குத் தெரியும் .ஆனால் எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது .சொல்லில் விட முடியாது
ஏன் எனில் அப்படி சொல்லி விட்டால் : வார்த்தைகள்தான் ஆதாரம் உறவுக்கும் பிரிவுக்கும் என்ற எனது அடுத்த பதிவு பற்றி இப்போதே சொன்னதாகிவிடும்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: பால் போல தூய்மையுடன் வெள்ளை உள்ளத்தோடு கலகலப்பாக சிரித்து அப்பட்டமாகப் பேசித்திரிந்த இவன் ஆவின் பால் நிறுவனத்தில் பணி பெற்று இருந்தது கூட இவனுக்கு மிகப் பொருத்தமானதே. இப்போது பணி ஒய்வை நெருங்கி இருப்பான் என்றே எண்ணுகிறேன்.
No comments:
Post a Comment