Friday, November 22, 2019

வார்த்தைகளின் கனம்: கவிஞர் தணிகை

வார்த்தைகளின் கனம்: கவிஞர் தணிகை

Image result for strength of uttering words"

வாளை விட எழுத்துக்கு வலிமை அதிகம். எழுத்துகளை விட நல்ல சொற்களுக்கு அதுவும் மேடையில் எழுச்சி ஊட்டும் பேச்சாக வெளிப்படும் சொற்களுக்கு அதிக வலிமையுண்டு. சொற்களே பெரும்பாலும் உறவுகள் நட்பிடையே பிரிவையும் ஒட்டுதலையும் ஏற்படுத்துகின்றன.

சில சமயங்களில் சொற்களை சொல்லாமல் விடுவதாலும் அந்த சொல்லாமல் விடப்பட்ட சொற்களும் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன மௌனமாக இருந்த போதும்.

பொதுவாகவே சொற்களை அதன் வேர்களிலிருந்து, அதன் பிறப்பிலிருந்து அதன் பிறப்பிடத்திலிருந்து அதாவது அதன் பின் உள்ள எண்ண அடித்தளம் என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்வதிலிருந்து முடிவுகள் மேற்கொள்ளப் படும்போது அவை ஒரு போதும் பிசகுவதில்லை.

 தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம் என்கிறது விவிலியம். விவிலியத்தின் மேல் அட்டையில் , வார்த்தை கடவுளாயிருந்தார் என்ற யோவானின் வசனம் நமது மொழியில் சொன்னால் வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

முகமதியத்தில் கூட வார்த்தைக்கு பெருமதிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அதை ஓதுவது பெரும் பணியாய் வைக்கப்பட்டிருக்கிறது.

பகவத் கீதையில் மட்டுமல்ல எல்லா வாழ்க்கை வழிகளிலுமே வார்த்தைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

என்றாலும் முகமதியர்கள், கிறித்தவர்கள் வார்த்தைக்கு அளிக்கும் மதிப்பை விட பல தெய்வ வழிபாட்டைக் கையாள்வோர் வார்த்தைகளை அவ்வளவாக மதிப்பதில்லை. ஆனால் குருமார்கள், சித்தர்கள், ஞானிகள், தவசீலர்கள் துறவிகள் அனைவருமே சொல்லிய வார்த்தைகளை பதியவைக்க கல்வெட்டுகள், புத்தகங்கள், கோவில்கள் என பயனபடுத்தியவை வரலாறாக உள்ளன.

புத்தர் பிறர் கூறும் நீச வார்த்தைகள் தன் மேல் பொழிவதாக இருந்த போதும் அவை தம் மேல் படாதவை என உதறி சென்றுவிட்டால் கோபம் என்ற உணர்வலைகளில் சிக்க வழியே இல்லை என்கிறார். ஆனால் எல்லா நேரங்களிலுமே அப்படி மனிதர்கள் இயங்க முடிவதில்லை. புத்தமும், ஜைனமும் கற்க வேண்டியவைதான்.

என்றாலும் எல்லாவற்றிலும் முரண் இருக்கிறது. ஜைனம் உயிர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது என சாலையெங்கும் பெருக்கிக் கொண்டு போவதும், மூச்சுக் காற்றால் கூட சுவாசத்தில் இருக்கும் உயிரணுக்கள் மடிந்துவிடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகின்றன. பூண்டு, வெங்காயம் போன்றவற்றையும் மசாலாப் பொருட்களையும் கூட உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் உழவு நடக்க வேண்டுமானால் களைகள் பிடுங்கி எறியப்பட வேண்டும். கொசுக்களை அழிக்க வில்லையென்றால் நிறைய வியாதிகள் பரவி மனிதகுலத்திற்கே கேடாய் முடியும்...இப்படி எல்லாமே ஒன்றுக் கொன்று முரண்கள்.

 ஒருவர் எதைச் சொல்லி இருந்தாலும் அதை பிறரிடம் சொல்ல வேண்டியதை மட்டுமே சொல்லி சொல்லக் கூடாததை சொல்லாமல் விடக்கூடிய அறிவு என்பது அனைவர்க்கும் வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட அறிவு மிக்காரையே  நாம் ஞானிகள் என்று சொல்லி விடலாம்.

யாகாராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர்
சொல்லி ழுக்குப் பட்டு.
 என்ற குறள் சொல்வது போல யாரிடமும் வார்த்தைகள் கட்டுப்பாட்டுடன் இருப்பது பொறுமையை கற்றுக் கொடுக்கும் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும்.

வார்த்தைகள் சில உறவுகளை ஆயுள் வரை பிரித்தே வைத்திருக்கின்றன. தூதாகப் போய் வருவார்க்கு உரிய இலக்கணமாக நிறைய சொல்லப்படுகின்றன. ஆனால் அதை எல்லாம் அறிந்து செய்வார் எவரும் இல்லை. இராமாயணத்தில் அனுமன் ஒரு நல்ல தூதனாக விவரிக்கப்படுகிறார். அவரை சொல்லில் செல்வன் அழைக்கிறார்கள். முருகனின் தூதராக வீரபாகு என்னும் கதாபாத்திரம் சொல்லப்படுகிறது.

சொற்களின் கனம் தாளாமல் நிறைய வாழ்க்கை சீர் கெட்டுப் போயிருக்கிறது. அழிக்கப்பட்டிருக்கிறது. ஏன் காதல் என்பதெல்லாம் கூட சேரமுடியா வாழ்வின் கரையோரம் சென்று ஒதுங்கி காணாமல் போயிருக்கிறது.

வார்த்தைகளை மதிக்கக் கற்றுக் கொள்வோமே!.

அதே போல கொடுத்த வாக்குறுதிகளை, வார்த்தைகளை தவறாமல் காப்பாற்றக் கற்றுக் கொள்வேமே...மனிதம் மலரட்டும் அதனுள் கடவுள் உணர்வெலாம் செழிக்கட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



2 comments:

  1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

    ReplyDelete