Wednesday, November 20, 2019

சாக்குண்ணி என்னும் எனது சீடர் வயது 96: கவிஞர் தணிகை

சாக்குண்ணி என்னும் எனது சீடர் வயது 96: கவிஞர் தணிகை

Image result for big banyan tree"


மனிதர் குடையை ஊன்றிக் கொண்டே மெல்ல மெல்ல நடந்து என்னை நாடி வருவார். அவருக்கு முதலில் நான் செய்து கொடுத்ததை நீண்ட தாளில் முழுதுமாக அச்சடித்து அந்த மின்னகரம் முழுதுமே விநியோகித்தார். அது ஒரு கலைக்கல்லூரி இல்லாத நகரில் அது பற்றி பேசவும், பெரியவர் சிறியவர் என்ற வயது வித்தியாசக் குறைபாடான பண்பாடு கலாச்சார விதிமீறல்களை சுட்டிக் காட்டுவதாகவும் சமுதாய அமைப்பு, குடும்ப நட்பு உறவுகளை செம்மைப்படுத்தி நட்புறவுடன் விளங்கவும் தமது குரலை மட்டுமல்ல அது போன்ற கருத்தொருமித்த பலரின் கருத்தையும் பிரதிபலிப்பதாய் அந்த காலத்தில் அனைவரிடமும் அது ஒரு பேசு பொருளானது.



 அது மட்டுமல்ல அடுத்த முறை நான் அவருக்காக எழுதிய அதாவது அவர் சொல்ல விரும்பியதை பெரிதாக்கி எழுதிக் கொடுத்ததை தையல் கலைஞன் என்ற அவர்களது நூலில் வெளியானது என கொண்டு வந்து காண்பித்தார்.

அதை அடுத்து சில சில சிறு சிறு கையால் எழுதப்பட்ட தப்பும் தவறுமான பிரதிகளைக் நுணுக்கி நுணிக்கி எழுதிக் கொண்டு வந்து படித்துப் பாருங்கள் கருத்தை சொல்லுங்கள், அதை சீர் செய்து எழுதித் தாருங்கள் என எழுதி எடுத்துச் செல்வார்.

அவர் ஆர்வத்தில் நல்ல இளைஞராக இருந்தார். அவரது மகன்களும் மகள்களும் ஆசிரியப் பணி, மேலாண்மைப் பணி போன்றவற்றில் பணி செய்து ஓய்வடையும் நிலையில் இருந்தனர். அவரது துணைவியார் ஏற்கெனவே மறைந்து விட்டார்.

தோட்டவேலை செய்வது, படிப்பது, நடந்தே என்னை வந்து பார்ப்பது அதன் பின் செல்லும்போது எவருடைய இரு சக்கர வாகனத்திலாவது அவரைக் கொண்டு அவரது வீட்டில் விடச் செய்வது இப்படியாக காலத்தை பயன்படுத்தி வந்தார்.

அவரது புதல்வர்களுள் கூட ஒரிருவர் இவருக்கும் முன்னே விபத்திலும், உடல் நலக் குறைவென்றும் மறைந்து விட்டனர். தனது பிள்ளைச் செல்வம் இல்லா தம்பதி புதல்வரைப் பற்றி பேசும்போது கோழி இணைவது போல இணைந்தால் எப்படி பிள்ளை பிறக்கும்,கலவியை உரிய பலத்தோடு செய்ய வேண்டுமல்லவா என அப்பட்டமாகப் பேசுவார்.

அவர் சொல்வதற்கேற்ப அவருக்கு பல பெண் மகவுகளும், பல ஆண்மக்களும் இருந்தனர். அவர் வெறும் ஊசி நூலுடன் மட்டுமே வந்தாரை வாழ்வைக்கும் தமிழகத்தில் குடியேறிய கதையைச் சொல்வார்.

அதன் பின் கையால் தைத்து, தையல் இயந்தரத்தில் தைக்க ஆரம்பித்து, அதன் பின் அவரின் கீழ் சில தையல் கலைஞர்களை பணிக்கமர்த்தி, அதன் பின் சிறிய ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி அதன் வருவாயில் அவருடைய பிள்ளைகளை எல்லாம் நல்ல ஒரு பொருளாதார நிலையை எட்டும் வண்ணம் பணி பெறச் செய்து குடும்பமாக்கி விட்டார்.

அவர் மொழியும் மதமும் மாநிலமும் வேறு என்ற போதும் இந்த மண்ணிலேயே வேர் விட்டார் பூத்துக் குலுங்கினார், காய் கனிகளுடன் நிறைய பெரிய பரப்புகளுடன் விரிந்து பரந்த மரமானார். ஒரு மரம் பல விதைகள் பல மரங்கள் பல பறவைகள் பல குடும்பங்கள்....


அதல்லாமல் ஒரு சொந்த வீடும் கட்டி விட்டார். அதில் தான் சில தினங்களுக்கும்  முன் அவர் வாழ்வு நிறைவடைந்தது. அது ஒரு நிறைவான வாழ்வு. வருத்தப் பட ஏதுமில்லை என்பதே எனது எண்ணம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment