Monday, October 15, 2018

தியானம் தரும் மனிதர்க்கு உன்னத ஆற்றல் கவிஞர் தணிகை

கடந்த 14.10.2018 அன்று வெளியிடப்பட்ட கலைடிஸ்கோப் என்னும் விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் 2018‍..19 ஆண்டு விழா மலரில் எனது கீழ் வரும் கட்டுரை வெளியிடப்பட்டது பெருமைக்குரியதாகவும் நன்றிக்குரியதாகவும் அமைந்துள்ளது. 76 பக்க மலரில்  இரண்டே முக்கால் பக்கம் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.

நன்றி

விழா மலர் வெளியீட்டுக் குழுவினர்க்கு.


தியானம் தரும் மனிதர்க்கு உன்னத ஆற்றல்
கவிஞர் தணிகை

Image result for meditation positions and stages

 தலையாயமனிதர்க்கு ஆயகலைகள் 64  என்பர் அதில் தலையானது யோகப்பயிற்சி ஆகும்.
யோகப் பயிற்சிகள்: மந்திர யோகம், இலய யோகம், ஹட யோகம் , ராஜ யோகம் அல்லது ராஜாங்க யோகம்  என  இருக்கின்றன.
 பகவத் கீதையில் கர்ம யோகம், பக்தி யோகம், ஞானயோகம் இப்படி  18 அத்தியாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு பலரும் பல வகையான விளக்கங்களை அவரவரது அனுபவங்களுடன் புரிதலுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். நாம் அவற்றைப் பற்றி இங்கு சொல்லப் புகவில்லை.

மந்திர யோகம்: மந்திரங்கள், பஜனைகள், கீர்த்தனைகள் மூலம் இறைநிலையை நெருங்கவும் இயற்கையில் மனிதம் சிறு துகள் என்ற உணர்தலும் இதில் அடங்கும்
இலய யோகம்: அதாவது இலயித்திருத்தல், எல்லா செயல்களையும் இறைக்கர்ப்பணித்தல்.
ஹட யோகம்: 108 நிலையில் உள்ள யோகாசனங்களின் வகையும்,ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள், கிரியையகள் பற்றியும் சொல்கின்றன.
Image result for meditation positions and stages


ராஜயோகம்: அஷ்டாங்க யோகம்... இருக்கும் கலைகள் எல்லாவற்றுள்ளும் இதுவே தலைமையிடம் பெற்றிருப்பதால் ராஜயோகம் என்றும், இதில் 8 உட்பிரிவுகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்றும் வழங்கப் பெறுகிறது.
பொதுவாகவே தியானம் என்பது கற்றுக் கொடுக்க முடியாத கலை. ஆனால் ஆர்வமுடையவர்கள் தாமாக கற்றுக் கொள்ளும் கலை.தனியிடத்தில் அமர்ந்தவனாகி என ஒரு சொல் இதில் இடம்பெறும் இதை தனியான ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு கற்று வருவதுதான் சிறந்தது. அதை எப்படி கற்க வேண்டும் என முழுமையாகச் இந்த சிறு வாய்ப்பில்  சொல்ல வழியில்லை. ஆனால் அது பற்றி ஒரு சிறு அறிமுகம் தருவதே இங்கு எனது நோக்கம்.

புறக் கண்களை மூடி அமர் உனது அகக் கண் திறந்து உலகை கவனிக்க,
புறக்கண்கள் திறந்து பார்க்கும்போது உலகைப் பற்றிய கவலையை மறந்து விடு.

அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகள்: யமம், நியமம், ஆசனம், ப்ரணாயமம், பிரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி நிலை.. இந்த எட்டு நிலைகளையும் ஒவ்வொரு நிலையாக ஒவ்வொரு படியாக விவேகானந்தர் சொல்வது போல லீச் என்னும் ஒருஅட்டைப் புழு எப்படி தான் நகரும்போது முன்னால் உள்ள உடலின் பகுதியை பின்னால் உள்ள பகுதியைத் தூக்கி வைத்து  நகர்த்தி முன் செல்லுமோ அது போல முன்னேறிச் செல்ல வேண்டும் என்பார். ஒரு புல்லை உறுதியாகப் பற்றும் வரை ஏற்கெனவே  பற்றிய புல்லை விடாது அது போல ஒரு நிலையை மறு நிலையை உறுதியாகப் பற்றும் வரை விடக்கூடாது.
பொதுவாக எல்லா மதங்களிலுமே சில ஒத்த கருத்துகள் உள்ளன அவை:

Image result for meditation positions and stages


யமம்: இது மனிதர்களின் ஒழுக்கம் பற்றி பேசுவது.
1. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களை துன்புறுத்தாதிருத்தல்
2. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல்
3.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பூரணமானபிரமசாரிய விரதம் காத்தல்
4.  நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பூரணமான உண்மையைக் கடைப்பிடித்தல்
5. பிறரிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல்...
பொதுவான இந்த 5 அம்சங்கள் தியானம் கற்க வேண்டியவர்க்கு அடிப்படைக் குணங்களாக சொல்லப்படுகின்றன. இதில் பிரமசாரிய விரதத்தை கடைப்பிடிப்பது மிகவும் கடினமானது எனவேதான் தவசீலர்களும் ஞானிகளும், சித்தர்களும், யோகிகளும், புத்தர்கள், சித்தர்கள் ஆகிய மாமனிதர்கள் தனிமையைத் தேர்ந்தெடுத்து கானகம், அடவி, போன்ற காடுகளில் பழம் காய் கறிகள் உண்டு வாழ்ந்து அதில் 12 ஆண்டுகள் இருந்த பிறகு நாட்டிற்குள் வாழ, துணிந்து வந்து மனிதகுலத்துக்கு சேவை செய்தது.இந்தக் காலக் கட்டமே இவர்களின் தயாரிப்புக் காலமாக இவர்கள் ஒதுக்கிக் கொண்டது.
இந்த  5 குணங்களில் சில குணங்களாவது அவசியம் இருந்தால் ஒழிய தியானம் சித்திக்காது.

Related image
நியமம்: இதில் உடல் ஓம்பும் முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அளவான உறக்கம், அளவான உணவு, உடல் தூய்மை ஆகியவை அவசியம் தியானம் கற்க அவசியம் என்பது பற்றி சொல்கிறது.

ஆசனம்: நாம் அமர்ந்து இருக்க வேண்டிய இடம், உடலை அமர்த்தும் நிலை, இடுப்பும் தோளும் தலையும் நேராகவும் முதுகு தளர்வாகவும் இருக்க அமர வேண்டும். ஆசனம் என்பது அந்தக் காலத்தில் புலித் தோலில் அமர்ந்தால் அவர் ராஜரிஷி என்றும் மான் தோல் மேல் அமர்வார் துறவி என்றும் உண்டு. புல்லால் ஆன ஒரு பாய், அதன் மேல் இது போன்ற தோல் ஆனால் இந்தக் காலத்தில் தோலை நீங்கள் சேகரித்து அதன் மேல் ஆசைப்பாட்டால் விலங்கு தடுப்பு வதை சட்டத்தின் மூலம் பிணையில் வெளிவர முடியா தண்டனைக்கு உள்ளாகி சிறையில் கொசுக்கடியில் தியானமே அமர முடியாது போகலாம்...எனவே காலத்துக்கேற்ப ஒரு புல்லாலன பாய் அதன் மேல் ஒரு வெண்ணிறமான தூய்மையான வேட்டி போன்றவற்றை விரித்து அதன் மேல் அமர்ந்து பயில்வது உகந்தது. இது மட்டுமல்ல இந்த ஆசனத்தில் நாம் பத்மாசன முறையில் சின் முத்திரையுடன் அமர்வதும் நல்லது. தியானம் செய்துவிட்டு கடைசியில் புற உலகில் புகு முன் சாந்தி ஆசனம் அல்லது சவ ஆசனம் செய்து நிறைவு செய்து கொள்ளலாம்.

பிராணாயாமம்: மூச்சை அடக்குதல்...இந்தப் பயிற்சியில் சிறந்து விளங்குவார்க்கு தியானம் எளிதில் கைவசப்படும். ஆனால் இதற்கு நல்ல உடல் தேக உறுதியான நிலை வேண்டும். எரிவாயு கொள்கலத்துக்கு எப்படி ஒரு இரும்பாலன காப்பு மேலுறை இருக்கிறதோ அப்படி காற்றை அழுத்தமான காற்றை தேக்கி வைக்குமளவு உடல் திறம் வேண்டும்.

பூரகம்: மூச்சை உள்ளிழுத்தல்
கும்பகம்:மூச்சை உள்ளிருத்தி வைத்தல்
ரேசகம்: மூச்சை வெளிவிடுதல்
பொதுவாக தியான செய்ய ஏற்ற நேரம் என்பது இரவும் பகலும் ஒன்று கூடும் அந்திப் பொழுதே என்பார்கள்.ஆனால் காலை அல்லது மாலை உங்களுக்கு உகந்த நேரத்தை அல்லது இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வைத்துக் கொள்வது சிறந்தது.
சுவாசம் இடது நாசி வழியாக ஓடும் நேரம் இளைப்பாறும் நேரம், வலது நாசி வழியாக செல்லும்போது அது செயல்புரிவதற்கு உரிய நேரம், இரு நாசிகள் வழியாக போகும்போதே தியானம் செய்வதற்குரிய நேரமாகும்.
Image result for meditation positions and stages

பிரத்யாஹாரம்: மனதை உள்முகமாகத் திருப்பி அதை வெளிச் செல்வதை தடுப்பது அல்லது நிறைய எண்ண அலைகள் தோன்றுவதைக் கட்டுப்படுத்த முனைதல்.

தாரணை: ஒரு பொருள் பற்றி சிந்தித்து மனதை ஒருமைப்படுத்துதல்.

தியானம்:

சமாதி: நமது முயற்சிகள் அனைத்திற்கும் முடிவு உள்ளொளி பெறுதல். ஆன்மாவோடு இலயித்திருத்தல்.
இது போல முயற்சி செய்யும்போது  உங்களுக்கு பிறர் கருத்தறிதல்தூர தேசத்தில் நடப்பன அறிதல், முக்காலமுணர்தல் போன்ற பக்க விளைவுகள் தோன்றும்... ஆனால் எக்காரணம் கொண்டும் பில்லி, சூனியம், மந்திரம், மாந்திரிகம் செய்யும் போலிச் சாமியார்கள் பக்கமே திரும்பிப் பார்க்கவே கூடாது என்பார் ரமணர். இப்படி ராமகிருஷ்ணர், விவேகாநந்தர், நிவேதிதா,பாரதி, பாரதிதாசன், சுரதா போன்ற குரு பாரம்பரியம், அரவிந்தர், அன்னை, ரமண மஹரிசி போன்றோரும்  சொல்வதெல்லாம் நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை என்பதும்,அளவற்ற நூல்களைப் படிப்பதால் பலனில்லை எல்லா நூல்களிலுமே மனோநிக்ரஹம் (மனதை அடக்குதல், எண்ணங்களை இல்லாது செய்தல், மனம் என்பதே இல்லை என்பதுமே.

 மனஸ் என்றால் சமஸ்கிருதத்தில் அசைந்து கொண்டிருப்பது என்ற பொருள் ...மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு என்கிறது வீ.சீத்தாராமன் என்பார் எழுதிய தமிழ்ப் பாடல். அந்த மனக்குரங்கை சரி செய்யும், அந்த அடர்ந்து வளரும் குரோட்டன்ஸ் செடியை அழகுபடுத்தும், வாழ்வில் தேவையில்லாத பகுதிகளை வெட்டி நல் உருவமாக்கி வாழ்வை அழகுபடுத்துவது தியானமே..

சு. தணிகாசலம்
பொது மக்கள் தொடர்பு அலுவலர்
விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி.
சேலம்.No comments:

Post a Comment