Saturday, January 31, 2026

S.N.ராஜன்: கவிஞர் தணிகை

 நான‌றிந்த‌ எஸ்.என். ராஜன்: கவிஞர் தணிகை



ஜனவரி 30 காந்தி அமரத்துவ தினம் என்று தினசரி நாட்காட்டிகள் குறிப்பிட்டிருந்தன, சிரிப்புதான் வந்தது, ஏன் எனில் இயல்பாக அமரராகவேண்டிய வயதான ஒருவரை சுட்டுக் கொன்று போட்டு விட்டு இப்போது வணங்கிக் கொண்டு அமரத்துவ தினம் என்கிறார்களே என்று.


இந்த எஸ்.என் ராஜன் போன்ற சிலர் இன்னும் இருக்கிறார்கள், காந்தி மற்றும் காமராசர் பேர்களை உண்மையாகவே மறவாமல் காங்கிரஸ் கட்சியில், இரண்டு பேர் சேர்ந்தாலும் சரி, இருபது, இருநூறு, இரண்டாயிரம் பேர் ஆனாலும் சரி கொடியைக் கையில் பிடித்துக் கொண்டு பொது இடத்தில் அதற்குரிய அஞ்சலிகளை செய்தபடி...


வருடம் பிறந்தவுடன் தினசரி நாட்காட்டியை எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று கொடுத்து வருகிறார். இவர் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் எனில், மிதமாக அமைதியாகப் பேசிடும் ஒரு செயல்வீரர் இயல்பில் நல்லவர்.


ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதை முடிக்காமல் விடக் கூடாது என்ற வீரியம் மிக்க காந்தியவாதி.இவரது முயற்சி புதுசாம்பள்ளி ஊரில் இடம்பெற்ற உதவி மின்பொறியாளர் அலுவலகம் அமைந்ததில் பெரும் பங்கு இருப்பதை எவருமே மறுப்பதற்கில்லாமல். அதற்காக இவர் அடி கூட வாங்கியது எல்லாம் மறக்க முடியாதது.


சில முறை வார்டு பிரதிநிதியாக மக்களால் தேர்வு பெற்று இருந்திருக்கிறார், இம்முறை வென்றிருந்தால் உதவிப் பெரும் தலைவராகவும் வந்திருக்கலாம் என்ற வாய்ப்பில் இருந்தவர்.நல்லதுக்கும் நல்லவர்களுக்கு எல்லாம் காலம் இல்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 


இவரது துணைவியார் ஆசிரியராக இருந்தவர், எனது நூலை விரும்பி வாங்கிப் படித்து அது  அது பற்றி பேசுவதில் நாட்டமுடையவராக இருந்தவர். உண்மையிலேயே ஒரு நல் ஆசிரியராக ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணி செய்தார். இப்போது இல்லை. பல ஆண்டுகள் ஓடிவிட்டன. கோவிலுக்கு சென்றபோது விஷப் பாம்பு தீண்டிவிட அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்து விடுவோம் எனத் தோன்றியதும் காரை நிறுத்தி விட்டு வெளியில் இறங்கி நின்று இவரது(கணவரது) பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு உயிர் விட்ட பதி விரதை. ஊரே அது பற்றி வியந்து பேசியது. அது முதல் சில ஆண்டுகள் மனிதர் அடித்து நொறுக்கப் பட்டது போல வீழ்ந்து கிடந்தார்.


அப்போது ஒரு முறை எனை எங்கள் ஊரின் ஆரம்பத்தில் ஊரின் துவக்க முதலே இருந்து  வரும் வடக்கு பார்த்த காளியம்மன் கோவிலில் , நான் அந்தப் பக்கம் போய் வருகையில் அதன் முகம் பார்த்து செல்வது வழக்கம், ஏன் எனில் கண்டவர்கள் பேச்சு, பார்வை எல்லாம் நினைவில் இருந்து போய் ஒரு நல் நினைவு வர அதன் முகத்தைப் பார்த்து செல்வது என்றிருப்பேன், அவர் இதை எல்லாம் ஏன் சார் கும்பிடுகிறீர்கள் என்றெல்லாம் விரக்தியால் பேசினார் அவ்வளவு இயற்கை மேல் கூட பற்றில்லாமல் இருந்தார். காளி என்றால் காற்று. யாதுமாகி நின்றாய் காளி....


அதன் பின் தேறி அனைவர்க்கும் மீண்டும் தமது சேவைகளை  தொடர்ந்து செய்து வாழ்க்கையை செம்மைப் படுத்தி வருகிறார்.


இவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஒரு நெருக்கம். ஏதாவது ஒன்று என்றால் தேடி வருவார்.அப்படித்தான் ஒரு டிஜிட்டல் சுவர்க்கடிகாரக் கதை(இலக்க முறை நேரம் காட்டி மட்டுமல்ல அதில் வெப்ப நிலை, நாள் , கிழமை பெயர்,காலையா மாலையா என்பது  மாதம், தேதி மணி, நிமிடம், நொடிக் கணக்கு) இப்படி எல்லாம் மின் விளக்கு மூலம் காட்டி வந்தது .அதை எங்களுக்கு அன்பளிப்பு செய்திருந்தார்.அதன் பணி செய்யும் உத்தரவாத அட்டையை ஓராண்டுக்குரியதை எங்கோ வைத்து மறந்து விட்டேன். ஒரு சிறு பல்லி உட் புகுந்து மின் இயக்கத்தில் கோளாறு செய்து இறந்திருக்க‌ அந்தக் கடிகாரம் ஓடாமல் நின்று போக அந்த உத்தரவாத‌ அட்டை கிடைக்கவே இல்லை தேடும் போது.


மனிதர் சலித்துக் கொள்ளாமல், சளைக்காமல் பல முறை அந்த மின் இலக்க சுவர் கடிகாரத்தை எடுத்து சென்று சரி செய்து கொடுத்து இப்போது அவரது நினைவுகளுடன் ஒவ்வொரு நொடியும் நகர எங்கள் வீட்டில் அவரது விடாமுயற்சி பற்றி எடுத்துக் காட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது. அது எங்களுக்கு நினைவில் என்றும் மறக்க முடியாமல்.

 வழக்கம் போல அந்தப் பணி நிறைவு பெற்றது அந்த உத்தரவாத அட்டை கிடைத்து விட்டது வரும் மே மாதம் வரை உத்தரவாத காலம் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொண்டு.அட அப்போது நமது மாநிலத்துக்கு புது மந்திரிசபை வந்திருக்குமே..மே...மே... (எல்லா ஆடுகளும் மே மே என்றுதான் கத்துகிறது) அதற்கு அந்த ஒரே சொல் தான் தெரிகிறதாம் கத்துமாம். பசு மட்டுமே அம்மா என்று தெளிவாகக் கத்துகிறது.

அடச் சே! இப்படித்தான் எழுதும்போதெல்லாம் கூட எண்ணம் மாற்றம், ஏமாற்றம் எல்லாம் ஏற்பட்டு மடை மாற்றம் நடந்து விடுகிறாது. எங்கே விட்டேன் ஆமாம் மனிதர், புனிதர் எஸ்.என் ராஜன் பற்றி பேசிக் கொண்டிருந்தேன் இல்லையா மறந்து விட்டேன் பாருங்கள்... தொடர்பு அறுந்து விட்டது....

 அவர் பற்றி சுருங்கச் சொல்ல வேண்டுமெனில்... . 


எப்போதும் ஒரு தூய வெண்ணிற கதர் ஆடை மதிப்பு மிக்க தோற்றம், எந்தப் பணியானாலும் அதை சேவையாகக் கருதி விடாமல் செய்து முடிக்கும் ஆற்றல், வயது 70ஐக் கடந்த பின்னும் அவருக்குள் சுடர் விடுவதை பாராட்ட மொழி இல்லை.


மனிதர் நீடூழி வாழ என்றும் வாழ்த்துகளுடனும் நன்றிகளுடனும்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




No comments:

Post a Comment