இருவர்: மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன்கள்: கவிஞர் தணிகை
நீண்ட காலமாகவே ஒரு கரையான் கூட்ட எண்ண அலைகள் எனை அரித்து வருவதை எடுத்தெறிய இந்தப் பதிவு.
1. 2016 முதல் சமூக பல் மேம்பாட்டுத் துறைத் தலைவராக தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பல் மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன் அவர்களை அறிவேன். அந்தக் கல்லூரியிலிருந்து நான் வெளிவந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது.நான் மறவாத நபர்களுள் இவரும் ஒருவர். ஏன் கடந்த இந்த ஆண்டுகளில் எனக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் கூட இல்லை என்றாலும் இவரைப் பற்றி இந்த அதிகாலை உங்களுக்குள் பகிர நினைக்கிறேன் எனில் அந்தளவு திறம் உள்ள மனிதர்.
எனது பிறந்த நாளை கொண்டாட நினைத்த மனது இவருடையது. நான் அது போன்ற பழக்கங்களை எல்லாம் விரும்புவன் அல்ல என்ற போதும் அந்த நல்ல உள்ளம் அந்தக் கல்லூரியின் கலாச்சார முறைக்குட்பட்டு எனது நாளையும் சிறப்பு செய்ததை நினைத்துப் பார்க்கிறேன் இன்றும்.
ஒரு முறை எனக்கு மிகக் கடுமையான வேலைப் பளு. முடித்து மதிய உணவு அருந்தி விட்டு அல்லது அதற்கு முன் அவருடைய துறையில் இருந்து அழைப்பு. அவர் நிலை (என்னிலை) உணராமல் ஏதோ பேச, நான் மிகக் கடுமையாக அவரை அன்று மற்றவர் முன்னிலையிலும் பேசி விட்டேன் என்றாலும் கூட பொறுத்துக் கொண்டார் பெரிய மனது.
இருவரும் வேடிக்கையாக அந்த அந்த கால( தற்கால) அரசியலை ஏட்டிக்குப் போட்டியாக பேசியபடி இன்பம் அடைவோம். அவரை நண்பர் என்று சொல்வதை விட அவர் எனக்கு ஒரு சகோதரராகவே அந்தக் கல்லூரி வாழ்வில் இருந்தார்.அவருக்கு என்றும் எனது அன்பு உரித்தாகும்.
எத்தனையோ முறை இவர் தமது வாகனத்தில் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் எனை எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லத் துணை புரிந்தார்.சொல்லாமல் பிரிவது நட்புக்கழகு என்பார். அப்படித்தான் பிரிந்தேன் அங்கிருந்து ஆனால் நான் எப்போதும் எவரிடமிருந்தும் பிரிவதில்லை.
2. முனைவர் முதல்வர் சரவணன்:
ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பணி புரிகிறார். மிக்க கடின உழைப்பாளி. எனது எழுத்துகளைப் பார்த்து நுகர்ந்து தமது கல்லூரிகளில் பாடம் நடத்தியதாக இவருடைய முகாம்களில் வெளிப்படையாகச் சொல்லி வருவார். நல்ல மனிதர். நல்ல ஆசிரியர். பொறுப்பான அமைதியான அடக்கமான உருவத்துக்கு சொந்தக்காரர்.தற்காலத்தில் பேசி கூட காலம் வெகுவாக ஓடி விட்ட போதிலும் நாங்கள் என்றும் நண்பர்களாகவே இருக்க பல காரணங்கள் உள்ளன.
தாமறிந்ததை பிறர்க்கு பயனாவதை பகிர்ந்து கொள்ள இவர் என்றுமே தயங்கியதில்லை. நல்ல படிப்பாளி முனைவர் பட்டம் பெற்று வெகு காலம் ஆன பிறகே இவருக்கு முதல்வர் பொறுப்பு கிடைத்தது. நல்ல பொறுப்பான மனிதர் மேலும் மேலும் வளர்வார் வாழ்த்துகள்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment