Monday, August 4, 2025

ஆடி 18 அன்று மானாத்தாள் ஏரியில் நல்ல கூட்டம்: கவிஞர் தணிகை

 மானாத்தாள் ஏரியில் நல்ல கூட்டம்: கவிஞர் தணிகை



காவிரி உபரி நீர் வீணாவதை ஏரிகளுக்கு நிரப்பும் முகமாக இந்த ஏரி நிரம்பி வழிகிறது.சேலம், ஓமலூர், தாரமங்களம் ஆகிய ஊர்களுக்கு ஏறத்தாழ சம அளவு தூரத்தில் இருப்பது இதன் சிறப்பு. இங்கு உயிர் ஆபத்து நிகழ்த்துமளவு நீர் வன்மை இல்லை. படிகளில் நீர் இறங்கி வழிவதில் குளிப்பதால் எந்த ஆபத்தும் இல்லை.


எனவே ஆடி 18 அன்று ஏகக் கூட்டம். ஆம்புலன்ஸ் முதற்கொண்டு ரெடியாக நிற்க, காவல் துறை சிறப்பு ஏற்பாடுகளை கவனிக்க, எல்லா வகையான உணவுகளும் கிடைக்க, கடைகள் நிறைய எல்லாத் தேவைகளுக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்க, அருகாமையில் உள்ள காடுகளில் நிறுத்தும் வாகனங்களுக்கு அனுமதிக் கட்டணம் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி பாதுகாப்பு இருக்கிறது.


ஆங்கிலேயர் கால்த்திலேயே இந்த ஏரி அமைக்கப் பெற்று படிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன். நிறைய பேர் சாப்பிடுவதும் நீர் விளையாட்டுகள் விளையாடுவதுமாக காலம் கழித்து மகிழ்கிறார்கள். நீர் நிரம்பி இருக்க,ஆடி 18 அங்கே அமோகம். முத்தம்பட்டி, குட்டப் பட்டி மாதநாயக்கன் பட்டி ஆகிய ஊர்கள் அருகே உள்ளன.மானாத்தாள் என்பது கிராமம் பெயர். இந்த ஏரிக்கு அதனால் ஆகு பெயர். மானத்துடன் வாழ்ந்தாள் அந்த ஆத்தாள் என்று இருக்கலாம், அல்லது மான்கள் நிறைய இருந்திருக்கலாம் நீர் பருக அங்கே கூட்டம் கூட்டமாக வந்திருக்கலாம். அதெல்லாம் காரணப் பெயர்களாக இருக்கலாம். மொத்தத்தில் தாரமங்களம் என்ற புகழ் பெற்ற கைலாய நாதர் ஆலயம் அமைந்துள்ள ஊருக்கு இது அருகாமையில் இருப்பதால் இன்னும் சிறப்பு கூடுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு:

நேர்காணலில் அங்கு சென்று வந்த இருவர்  வாய் வழி மொழிக‌ளுடன்

களை இல்லாத இந்த‌ ஆடி 18 (2025): கவிஞர் தணிகை

 களை இல்லாத இந்த‌ ஆடி 18 (2025): கவிஞர் தணிகை



வழக்கம் போல் 3 நண்பர்கள் நடைப் பயிற்சிக்கு செல்லும் நேரத்தில் 16 கண் மதகு வரை சென்று ஆடி 18ஐ கொண்டாட சென்றோம். உபரி நீர் ஏதும் 16 கண் மதகு வழி வெளி அனுப்பப் படவில்லை. அணை நிரம்ப கதவு முடிவு வரை நீர் நிரம்பி இருந்தது.ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் களை கட்டும் அணை மேல் மேட்டூரின் எல்லீஸ் டங்கன் பாலம் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு வேளை நாங்கள் போகும் வழக்கமில்லாத கீழ் மேட்டூரில் கூட்டம் இருந்திருக்கலாமோ? காலை முதல் நிறைய வந்து சென்றிருக்கலாமோ? எல்லா நீர் நிலைகளிலும் நீர் நிரம்பி உள்ளதால் மக்கள் ஆங்காங்கு தங்கள் விழாவை நடத்திக் கொண்டு விட்டனரோ? நீர் வெளியே வராததால் புதிய பாலத்திலும் எவருமே இல்லை மக்களும், கடைகளும். 


இந்த நாள் வருமுன்பே சில முறை நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப் பட்ட நீர்த் திரள் காட்சிகளை கண்டு விட்டதால் ஆர்வம் இழந்து விட்டனரோ...எப்படியோ மொத்தத்தில் கூட்டம் மிகக் குறைவே... மாலை சுமார் 6 மணி அளவில் உள்ளூர் மக்கள் வாகனங்களில் கொஞ்சம் வர ஆரம்பித்தனர், சிறு தூறலும் வர ஆரம்பித்திருந்தது.


நாங்கள் வழக்கம் போல கம்பி வேலி ஓரம் கடைசி வரை நடந்தோம். முடிவில் ஒரு விளக்கேற்றும் மாடம் புதிதாக இருந்தது. கொண்டு சென்ற காது ஓலைக் கருகமணி,கறுப்பு வளையல் வெற்றிலைகள், எல்லாம் வைத்து ஒரு கற்பூரக் கட்டி எங்கள் வீட்டில் கொடுத்திருந்ததை ஏற்றி வைத்தேன். கொளுத்தி வைத்தேன்.(உள்ளூர எப்போதோ: எம் மக்களால் இதுகாறும் கற்பூரத்துக்கு செலவளித்த காசு சேர்ந்திருந்தால் நதிகளை இணைத்திருக்கலாம் கங்கை காவிரியை இணைத்திருக்கலாம் என்று எழுதியது ஏனோ நினைவிலாடியது காரணமின்றி)


ஒரு இராட்டின தூரியுடன் வழக்கத்தை விட மிகக் குறைவான கடைகளே இருந்தன. ஞாயிற்றுக் கிழமையாதலால் அருகிருக்கும் வாரச் சந்தையில் கூட அவ்வளவு நெருக்கமான கூட்டம் காணப்படவில்லை. காலம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறிச் சென்றபடியே இருக்கிறது.


நமைக் கடந்து போகும்  ஒவ்வொரு மணித் துளியும் நாம் மறுபடியும் திரும்பப் பெற முடியாததாய் மாறி விடுகிறது. வளர்ச்சி வண்ணங்களை இழக்க வைக்கிறது.சிறுவராய் இருந்த போது இரவெல்லாம் உறக்கம் வராமல் இருந்து சாலையில் செல்லும் மாட்டு வண்டிச் சத்தங்களும், கறுப்பு சட்டிகளும், சகோதர சகோதரி கைகளைப் பிடித்துக் கொண்டு அணை மேல் நடந்து  கடைசி வரை சென்று வந்ததும், அந்த ருசியான பொறி கடலை, பேரிக்காய்களுடன், ஏதோ ஒரு பலூனோ, விளையாட்டுச் சாமானோ, ஊதலோ, உண்டி வில்லோ, புல்லாங்குழலோ வங்கி வந்த அந்த இனி வராத காலத்தின் நினைவின் வாசம் மட்டுமே காலிப் பெருங்காய டப்பாவாக வாசனை பலமாக வீசியபடியே இருக்கிறது.


ஆற்று நீரில் காலை நனைத்து அந்தப் பழைய புண்களை மீன்கள் வெடுக் வெடுக் என பிடித்து இழுத்து அழுக்கை சுத்தம் செய்து புண் ஆற வத்த காலமும், நவ தானிய பாலிகை எல்லாம் மிக அழகாக பெண்கள் எல்லாம் எடுத்து ஆற்று நீரில் அலையோடு விட்டு வணங்கி வந்ததும், கன்னிமாரும், கன்னிப் பெண்கள் வேண்டுதலும் எல்லாப் புனிதமும் எங்கோ சென்று விட்டன... அட அங்கே இங்கே ஓரிரு கழிப்பறை கட்டி வைக்கலாமே... அதை மக்களை சரியாக பயன்படுத்த கற்று கொடுக்க வைக்கலாமே...அந்த துர் நாற்றம் மட்டும் தவறாமல் வீசியபடியே இருக்கிறது. மறக்க முடியாமல்.


மறுபடியும்  பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



Friday, August 1, 2025

என் மனதை விட்டு அகலாத சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன் : கவிஞர் தணிகை

  என் மனதை விட்டு அகலாத சில செய்திகள்: கவிஞர் தணிகை



1. இது வரை பிரபஞ்சம் விரிந்து கொண்டே செல்வதையும், ஏன் மையமிலா விரிதலில் விரிந்து கொண்டே இருப்பதாகவுமே நமது விண்வெளி அறிவியல் சொல்லி வந்தது. ஆனால் தற்போது ஒரு செய்தி:அது 1.5 பில்லியன் ஆண்டுகள் அதாவது 1500 கோடி ஆண்டுகள் விரிந்து வருவதாகவும் மேலும் 2 பில்லியன் ஆண்டுகள் அதாவது 2000 கோடி ஆண்டுகளில் விரிவதும் அதன் பின் அது சுருங்கி இல்லாமல் போய்விடும் என்று வந்திருப்பது புதிது.


2. அமெரிக்காவில் என்றுதான் நினைக்கிறேன்: பிரசவத்தின் போது ஐந்தரை மாதமேயான உயிருள்ள குழந்தையை பெற்று எடுத்து அதை இப்போது ஓராண்டு  நிறைவுக்கு வந்த போதும் குழாய் வழியே தேவையானவற்றை செலுத்தி உயிருடன் வைத்திருப்பதாக செய்தி.


3. நீங்கள் அறிந்திருப்பீர்: கடந்த சில நாட்கள் முன் ஹைத்ராபாத் இறகுப் பந்து விளையாட்டு மைதானத்தில் 26 வயதான இளைஞர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே விளையாட்டு மைதானத்திலேயே கீழே விழுந்து இறந்ததை.


4. இரண்டு வயது சிறு குழந்தை ஒன்று 3 அடி நீளப் பாம்பைப் பார்த்ததும் ஒரு செங்கல்லை அதன் மேல் விட்டெறிந்ததும், அந்த பாம்பு அந்த சிறுவனின் கையை சுற்றிக் கொள்ள, சிறுவன் அந்த பாம்பின் தலையைக் கடித்துக் கொண்டிருக்க அதன் பின் பெரியவர்கள் வந்து பார்க்க பாம்பு இறந்திருக்க, அதைக் கடித்ததால் சிறுவனுக்கு விஷம் பரவ, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவன் உயிருடன் காப்பாற்றப் பட்டு பிழைத்துக் கொண்டான். மருத்துவர் விஷம் பாதிப்பு இருந்திருக்கிறது ஆனால் அது மரணம் வரும் வரை இல்லை அதற்குள் உரிய நேரத்தில் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதால் எனப் பாராட்டி இருக்கிறார்.


5. காலை 9 மணி முதலே கடும் வெயில் மாலை 4 மணி 5 மணிக்கும் கடும் வெயில்...பருவ நிலை மாறி குளிர் காலம் ஆரம்பிக்க வேண்டிய கட்டத்தில் புவிச் சூடு உயிர்களை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறது.


6. இந்த ஆடி 18 அணைகள் நிரம்பி உள்ளதால்  கூட்டம் நிறைய மகிழக் கூடும் நீர் நிலைகளில் சிறப்பு, மகிழ்ச்சி, நன்றி...

காவிரிக்கு நீர் அழகு, மேட்டூருக்கு அணை அழகு

இதுவே எமது சுவர் எழுத்துகளில்  இடம் பெற்றுள்ள வார்த்தைகள்...


அனைவர்க்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.