Wednesday, September 11, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் நான்கு

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் நான்கு



கடந்த பதிவான அத்தியாயம் மூன்றுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு. ஆனால் கால அளவு வேறுபட்டது.இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வளர்ச்சி அலுவலராக அப்போதிருந்த திரு.சௌந்திரராஜன் அவர்கள் அவனை அணுகி மேட்டூர் சதுரங்காடித் திடலில் உள்ள தேசிய வங்கி (முன் சொன்ன அதே வங்கிதான் ஆனால் அதன் மற்றொரு கிளை) மேட்டூர் சதுரங்காடித் திடலில் இருந்தது பெரியது.சொல்லப் போனால் அந்த தாலுக்கா அளவிலான அந்த வங்கிக் கிளைகளுக்கான தலைமைக் கிளையாக அதைச் சொல்லலாம். அந்த வங்கிக் கிளையில் ஒரு கணக்கு ஒன்றை ஆரம்பிக்கச் சொன்னார்.


அவனுக்கு ஏதும் புரியவில்லை. எனக்குத் தான் அதை விட வெறொரு பெரிய தேசிய‌ வங்கிக் கிளையில் கணக்கு இருக்கிறதே என்றான். நீங்க ஆரம்பிங்க சார் என்றார். வலியுறுத்தினார்.நல்ல மனிதர் பண்பான நண்பர்.எனவே ஏன் எதற்கு என்றே தெரியாமல் புரியாமல் நண்பரின் உள் குத்து விவரம் அறியாது, ஆரம்பித்து விடுவோம் என்று சென்றான்.


வங்கி மேலாளர், ஆரம்பிக்க முடியாது என்றார். ஏன்? என்றால் "ரோட்ல போறவன் வர்ரவனுக்கெல்லாம்" விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, என்றார். மறுபடியும் (ஆர்.எம்.பழனியப்பன் )/பிராந்திய மேலாளருக்கு கடிதம். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் எந்த வங்கியிலும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க உரிமையுண்டு. அவர்களுக்குத் தேவை  ஏற்கெனவே அங்கு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அறிமுகம் செய்வதும் அந்த கணக்கு ஆரம்பிக்கிறவரின் சரியான தகவல்களும் என்றிருக்க உங்கள் வங்கி மேலாளர் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை என்ற கடிதம் அனுப்பினான்.


அந்த நிகழ்வின் அடியில்: மேட்டூர் பியர்ட்செல் என்ற இயங்காது நின்றுபோய் இருந்த‌ கலைக்கப் பட்ட‌ ஆலையின் வரவாக நலிவடைந்த தொழிளார்க்கு கணக்குக்கு பணம் வருவதும், அதை அவர்கள் கணக்கு ஆரம்பித்து உடனே வறுமையின் காரணமாக‌ எடுத்துக் கொள்வதும் அதற்காகவே பெரிதான எண்ணிக்கையில் அங்கு மில் தொழிலாளர்கள் கணக்கு ஆரம்பிக்க வருவதாக இருக்கவே அந்த வேலைச் சுமை தாங்காமல் இந்த மேலாளர் அவர்களை எல்லாம் விரட்டி அடித்து நாகரீகமின்றி நடத்தி வருவதும் இருந்திருக்கிறது. 


அது தெரிந்த‌ எமது நண்பர்கள்  மேட்டூர் சமையல் எரிவாயு முகமையில் பணி புரிந்த அன்றைய மேலாளர் தேவகுமார் பேர் அதுதான் என நினைக்கிறேன், அவர் இப்போது இங்கு இல்லை, அந்த முகமையின் உரிமையாளர் பாலசுப்ரமணியமும் உயிரோடு இல்லை.சௌந்திரராஜனை பயன்படுத்தி அவனை கொம்பு சீவி விட்டுள்ளனர் என்பதை அதன் பிறகே அவனால் புரிந்து கொள்ள நேர்ந்தது.


அந்த தேவகுமார், சௌந்திரராஜன் ஆகியோர் எல்லாம் மேல் மேட்டூர் வங்கிக் கிளையில் நிகழ்ந்த மாறுதல் சம்பவங்களின் அடிப்படையில் அவனைத் தூண்டி அங்கே கணக்கு ஆரம்பிக்கச் சொல்லி உள்ளனர். அந்த வங்கிக் கிளை மேலாளர்க்கும் மேல் மேட்டூர் கிளையில் நடந்த சம்பவங்கள் தெரியும் போலும். என‌வேதான் அவரும் அவ்வளவு சூடாக இருந்திருக்கிறார் போலும் தனிப்பட்ட முறையில் அவன் பால்.


விளைவு:சில பல நாட்கள் கடந்த பின் வங்கி தாமாக அவனை அழைத்து கணக்கு ஆரம்பிக்கச் சொல்ல, சென்று அவன் வீர வசனம் எல்லாம் பேசிவிட்டு அந்த வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டிய விண்ண‌ப்ப‌ அறிமுக அட்டையை மடக்கி அவரிடமே திரும்ப அளித்து விட்டு "வங்கி வாடிக்கையாளர்க்கு, பணி புரிபவர்க்கு அல்ல"...  உங்கள் வங்கியில் கணக்கு ஆரம்பிப்பது நோக்கமல்ல,செருக்கு வேண்டாம் என்று புத்தி புகட்டுவதே எமது நோக்கம் என்று மறுபடியும் அந்த வங்கி மேலாளர்க்கு அவருடைய பணி என்ன என நினைவு படுத்தி விட்டுத் திரும்பினான் கணக்கு ஆரம்பிக்காமலேயே.எவன் 8 கி.மீ தள்ளித் தள்ளி உள்ள அந்த வங்கிக்கு சென்று இப்படிப்பட்ட உதவாக்கரைகளுடன் மல்லு கட்டிக் கொண்டிருப்பது என்று.அதற்கு உதவிய‌ பிராந்திய அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு சிறு அதிர்வலைகளை அந்த வங்கியில் ஏற்படுத்தி இருந்தான் இயலாதவர்களுக்காக‌. 


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment