Friday, December 25, 2020

காலை வணக்கம்: மக்களுக்காக சட்டமா சட்டத்திற்காக மக்களா? கவிஞர் தணிகை

 இது எனது காலை வணக்கம்: மக்களுக்காக சட்டமா சட்டத்திற்காக மக்களா? கவிஞர் தணிகை



சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காக சட்டமா? ஒரு மாதம் ஆகிறது எமது பஞ்சாப் மற்றும் சில மாநிலம் சார்ந்த ஒரு கோடிக்கும் மேலான விவசாய சகோதர‌ மக்கள் அங்கே தில்லியில் 3.6 சென்டிகிரேட் இருக்கும் பனிப் பொழுதுகளில் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒர் காலக் கட்டத்தில் கணக்கு வழக்கு காண்பிப்பதற்காக மக்கள் நலப் பணிகளை செய்வதா? அல்லது அந்த மக்கள் நலப் பணிகள் செய்த சான்றுகளை வழங்க கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டுமா?  என்று கேட்டுக் கொண்டிருந்தோம் அதே போல நிறைய கேள்விகள் உண்டு...


கோழியா முட்டையா முதலில் எது? என்பது போன்ற கேள்விகள் நிறைய நானிலத்தில்...


மத்திய அரசு பிரதமர் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றம் பாராளுமன்றம் போன்ற நாட்டின் உச்ச அமைப்புகள் வேடிக்கை பார்த்த படி இருக்கின்றன.


மந்திரி சொல்கிறார். பேச்சு வார்த்தைக்கு அவர்கள் சம்மதித்து இருக்கிறார்கள். அவர்களில் சட்டத்தை திரும்பப் பெறும் கோரிக்கை எல்லாம் இல்லை எனக் கூசாமல் பொய் பேசுகிறார். மற்றும் சில விஷச் செடிகள் அங்கே போராடுவார் எல்லாமே விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் இடைத்தரகர் தாம் விவசாயிகளே அல்ல எனக் கூசாமல் பேசுகிறார்கள்.அம்பானிகளும் அதானிகளும் பெரும் கிடங்குகள் ஏற்படுத்தி காத்திருக்கின்றன‌ நிரம்ப பொருட்களை இருப்பு வைத்த பொருட்களை தக்க நேரத்தில் விற்பனை செய்து மேலும் மேலும் உயரம் சென்று வாழ வழி செய்து காத்திருப்பதாக செய்திகள் இருக்கின்றன.


என்ன நாடா இது?  சட்டத்தை திரும்ப பெற்றால் அரசின் நிறுவனத்திற்கு மிகக் கேடான முன் உதாரணம் ஏற்பட்டு விடும் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். தேர்தலில் மறைமுகமாக உச்ச பதவியை கட்சிகள் மூலம் மட்டுமே தீர்மானம் செய்து எடுத்துக் கொண்டவர்கள் பெரு நிறுவன முதலாளிகளின் வேலைக்காரர்களாகவே போய்விட்டார்கள் மக்களின் வேலைக்காரர்களாக இருக்க வேண்டியவர்கள்.



அய்யாக்கண்ணு போன்றோர் அங்கே சென்று போராட்டக் களத்தில் கலந்து கொள்ள முடியாமல் தடுத்து திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறோம் என்ற ஊடக செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். இன்றைய காலக் கட்டத்தில் ஊடகங்கள் எல்லாம் இந்த செய்தியை முடிந்தவரை பெரிதாக்காமல் அரசு எப்படி எல்லாம் அந்தப் போராட்ட உத்திகளை காயடித்து வீரியத்தை குறைக்கச் செய்து நீர்த்துப் போகச் செய்வது என்பது போன்ற தவறான விளையாட்டுகளைப் பற்றி எல்லாம் அதிகம் வெளிப்படுத்தாமலே வாளாவிருக்கிறது.


தமிழக முதல்வர் தூத்துக்குடி 12 பேர் துப்பாக்கி சூட்டை எட்டிப் பார்த்து கூட பாதிக்கப் பட்டார்க்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் போகாமல் இருந்தது போல பிரதமர் தலைநகரில் போராடும் கோடிக்கணக்கான மக்களை எட்டிப் பார்க்காமல் இருக்கிறார். 



ஆனால் பொற்கோவிலில் சென்று பிரார்த்தனை செய்கிறார்.

பொற்கோவிலில் சென்று பிரார்த்தனை செய்வதை விட விவசாயப் பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றுவதையே இயற்கை அதிகம் நேசிக்கும் என்று சிறிய உண்மையைக் கூட உணராத தலைவர்கள் தாம் நமது ஆட்சி அமைப்பில் உச்சத்தில் அமர்ந்து நமை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். நாமும் நமது வாழ்வை அதன் நலத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றமானது ஒரு நிதி சேர்த்து அங்கே பயணம் சென்று கலந்து கொண்டால் அதில் நானும் கலந்து கொண்டு எனது உயிரையும் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறேன்.அது மட்டுமல்லாமல் ஏன் அந்த போராட்டத்தில் மற்ற ஒத்துழைப்பாளர்கள் சென்று கலந்து கொள்வது தடுக்கப் படுகிறது என உச்ச நீதிமன்றம் வரை செல்லுமாறு ஒரு வழக்கை பதிவை செய்ய வேண்டியதும் சரியான நடவடிக்கைதான். கொரானா 19 புதிய உருக்கள் எடுத்து உலகெலாம் பரவும் இந்தக் காலக்கட்டத்தில் அந்த கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் மக்கள் பற்றி நாடும் நாட்டு மக்களும் சொரணை இன்றி வாழ்ந்து வருவது நமக்கெலாம் இழுக்கு.


இந்த நாட்டில் எனது ஒரு நண்பர் சொல்வது போல மக்கள் எல்லாம் குற்றவாளிகளாக இருப்பதற்கான தளங்களே விரிக்கப் படுகின்றன. இலஞ்சம் வாங்குவாரை பிடித்து செய்தியாக்குவதை விட இலஞ்சம் கொடுப்பாரைத் தான் முதலில் நாடும் சட்டமும் கவனிக்க வேண்டும். ஏன் எனில் ஒரு சட்டம் போடப் படும்போதே அதை எப்படி மீறுவது என்பதை சாமனியனுக்கு கற்றுக் கொடுத்து அதிலும் புறம்பான வருவாயை ஈட்டி விடுகிற ஆற்றல் உள்ள அரசியல் பின்னணி உள்ள அரசு அலுவலர்களும் பொது நாட்டு நலம் பற்றிய அக்கறை சிறு துளியும் இல்லாத மக்களே இந்த நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களாய் நிரம்பிக் கிடக்கிறார்கள்.


பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, மின் துறை, இப்படி இருக்கும் எல்லாத் துறைகளுமே ஊழலின் ஊற்றுக்கண்களாகவே விளங்குகிறது என்பதை தமிழகத்தின் ஆளும் கட்சிகளாக  கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக இருந்த கட்சிகள் ஒன்றை ஒன்று ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் குற்றம் சாட்டி வருவதை நாம் கவனிக்கும் போது இது என்ன அரசியல், என்ன தேர்தல் என்றெல்லாம் இயல்பாக கேட்கவே தோன்றுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


 

No comments:

Post a Comment