Friday, November 7, 2025

என் வீட்டுத் தோட்ட‌த்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை

  என் வீட்டுத் தோட்ட‌த்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை



அந்தப் பீர்க்கங்காய் கொடி எப்படி மண்ணிலிருந்து பிய்ந்து போனதோ தெரியவில்லை,இலைகள் எல்லாம் வாடிக் கொண்டிருந்தன, ஒரு 4 மணி நேரம் அடியேனும் துணைவியாரும் வெளியில் சென்று வந்து திரும்பவும் பார்த்த போது அவர் பார்த்து அதை என்னிடம் தெரிவிக்க, பார்த்தேன்.


இராமலிங்க வள்ளலார் போல வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன், வாடிக் கொண்டிருக்கிறேன் எனவே இந்தப் பதிவு.


அதை மண்ணில் மறுபடியும் பதித்து வைத்துப் பார்த்தேன் வீண் முயற்சி என்று தெரிந்த போதும்.


வெற்றுப் பூக்களாகவே பூத்துக் காய்ந்து விழுந்து கொண்டிருந்த போதும் அது பலனளிக்கும் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒரு பிஞ்சு ஒரு அடிக்கும் குறைவான‌ நீளம் இருக்கும் விட்டிருந்தது. அது இனி பெரிதாக வாய்ப்பில்லை. எனவே அதைப் பறித்து விட்டேன்.


கொத்து அவரைக்காய் (கொத்தவரங்காய்), அவரைக்காய் போன்ற‌ செடிகள் என் வீட்டுத் தோட்டத்தில் பலன் தருகின்றன பலம் தருகின்றன.செடிகளோடு கொடிகளோடு சேர்ந்து நிறைய கண்ணுக்குத் தெரியும் கண்ணுக்குத் தெரியா நிறைய பூச்சி இனம் மற்றும் களைகள் யாவும் பயிர்த் தொழில் எவ்வளவு கடினமானது என எனக்கு விளக்கி வருகிறது.


வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லியபடி சுண்டைக்காய் இலைகளை நிறைய எடுத்து அரைத்துப் பிழிந்து சாறு எடுத்து எல்லா செடிகள் கொடிகள் மேல் எல்லாம் தெளித்தேன், உண்மை, அவர் சொல்லியிருந்தபடி அவரைக்காய்களை சிதைத்துக் கொண்டிருந்த அஸ்வினிப் பூச்சிகள் எல்லாம் அறவே இல்லை.


இரு முறை களைச்செடிகளை சுத்தம் செய்யும் போது எனக்குக் கிடைத்த பரிசாக கையில் முழுதும் மூன்று புள்ளிகளுடன் ஏதோ பூச்சி கடித்து வலது கை முழுதும் நமைச்சல், அரிப்புடன் தழும்புகள் கை நிறைய‌ தொடராக விளைந்து தொல்லை தர ஆரம்பித்து விட்டன ஆனாலும் பயிர்த் தொழிலை செய்யவே ஆர்வம் ஆனால் அது ஆர்வக் கோளாறே.


இரத்தம் உடல் உயிர் உடமை குடும்பம் யாவற்றையும் தியாகம் செய்த எண்ணற்ற இந்திய விடுதலை வீரர்கள் பற்றியோ 78 ஆண்டுகளுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும் இன்றைய அரசியல் பற்றியோ இந்தப் பதிவில் 

 அடியேன் எதையுமே குறிப்பிடவே இல்லை. ஆற்றாமையால் வந்த பதிவு இது இல்லை. ஆற்றியமையால் வந்த பதிவு.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, October 31, 2025

திருமணமும் வரவேற்பும்( நவம்பர் 02 & 03 -2025)

                                                          மணமிகு மலர்கள்

S.G.குமரன் B.E, P. ஹரிணி பிரியாB.E கரம் கோர்க்கும்

கோபால் கனகம் வீட்டுக் குடும்ப விழாவில்

வாழ்த்தமைத்து அதை விண்வெளி

மண் வழி அனைவர்க்கும் சேர்க்க

ஒரு கருவியாக இந்த இணையம்

நமை இணைத்திருக்கிற வேளை

நற்பொழுது .

 

நடைப் பயிற்சி நண்பர்

கோபால் ஒரு மனிதத்தின் மிகச் சரியான பிரதிநிதி

காலா காலத்தில் தவறாது எல்லாவற்றையும் செய்ய

இயற்கையும் குடும்பமும் அவர் முயற்சியுடன்

உறு துணையாகி இருக்கிறது

 

அவருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும்

மணமக்களுக்கும் எல்லா வளங்களையும்

வழங்கி இயற்கை அருள் புரியட்டும்

பிரார்த்தனையுடன் வாழ்த்தையும் இணைக்கிறேன்

அன்புடன் என்றும்

கவிஞர் தணிகை

..வடிவு

..ரா.சு. மணியம்.





















Friday, October 17, 2025

BALAJI ENTERPRISES 19.10.2025

                                                   பாலாஜி எண்டர்பிரைசஸ்



                                  பிரவீன்குமார் என்ற பேர‌மைதிப் பெருங்கடலும்

                                      தினேஷ்குமார் என்ற செயல்புயலும்

                                   சங்கரலிங்கம் என்ற அளப்பரிய சக்தியுடன்.


                                                 உலகெலாம் ஒளி பெறட்டும்

                                                            வாழ்க வளர்க‌

                                                             வாழ்த்துகள்

                                               சொல்லும் வார்த்தைகளும்

                                                    பெருமை பெறுகிறது 

                                                      ஒளி பெறுகிறது

                                                    என்றும் அன்புடன்

                                                   கவிஞர் சு. தணிகை

                                                        குடும்பத்தார்


Saturday, October 4, 2025

அறிவியல் அவசியம் ஆன்மீகம் மனிதத்துக்கு அத்தியாவசியம்:கவிஞர் தணிகை

 அறிவோம் ஹரி ஓம் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஹே ராம் சிவா வாசி வாசிவா: கவிஞர் தணிகை



ராம என்ற இரண்டு எழுத்து மந்திரம் என்கிறார்.இந்த ராம என்ற நாமத்துக்கான இரண்டு எழுத்தையும் "ஓம் நமோ நாராயணாய என்ற பேரில் எடுப்பாகத் தெரியும் உச்சரிப்பான‌ ரா என்ற எழுத்தையும் " ஓம் நமசிவாய" என்ற பேரில் எடுப்பான‌ உச்சரிப்பாக‌ இருக்கும் "ம" என்ற எழுத்தையும் சேர்த்து பெயரிட்டார்கள் என்ற செய்தியைப் படித்திருக்கிறேன் அது அதே சமயத்தில் சைவம் வைணவம் இரண்டும் சேர்ந்த ஒன்றே என்பதைக் குறிப்பதாகவும் அதை கையாள்வதாக சொல்லி இருக்கின்றனர்...


எனக்கெப்படி யதேச்சையாக் காந்தி, தெரஸா, கலாம் என்ற மூவரும் வழிகாட்டியாக இருக்கும் நேரத்தில் மூவரும் மூன்று மதத்தை சார்ந்தாராக வாழ்ந்து வந்து அமைந்ததும். இருப்பது போல...


அறிவோம் என்பதில் ஹரி ஓம் என்ற உச்சரிப்பை சற்றே மாற்றினால் இரண்டும் ஒன்றாக‌ இருப்பதாக எனக்குப் படுகிறது.


கம்பராமாயணத்தில் மிகச் சிறந்த பாடல்களில் சில:


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே "ராம" என்ற இரண்டெழுத்தினால்...


மும்மை சால் உலகெக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்  

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே

இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை 

ராம எனும் செம்மை சேர் நாமம்.


ஜயது ஜயது மந்திரம் ஜன்ம சாபல்ய மந்திரம்

ஜனன மரண விச்சேத பேத கிலேச மந்திரம்

சகல நிகம மந்திரம் சர்வ சாஸ்த்ரைக மந்திரம்

ரகுபதி நிஜ மந்திரம் ராமம் ராமேதி மந்திரம்


என்று சொல்லும் கம்பர்...


நதியின் பிழையன்று நறும்புனலின்மையற்றே

பதியின் பிழைய‌ன்று பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த‌

விதியின் பிழை நீ இதற்கெனை வெகுண்டதென்றான்..


என்று சீதையை இராவணன் தூக்கிச் சென்ற பின் இலக்குவன் சகோதரன் ராமனைப் பார்த்து கடிந்து கொண்ட போது ராமன் சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.


இன்று பிரதோஷம்...சிவனுக்கும், இன்று மூன்றாம் ( புரட்டாசி ) சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானுக்கும் ஒரு சேர வந்துள்ளதால் சைவமும் வைணவமும் வணங்கும் சிறப்பு நாள் எனப்படுகிறது.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவபந்தனாத் ம்ருத்யுர் முச்ய மாம்ருதாத்...என்னும் உயிர் வழங்கும் மந்திரத்தை சிவபெருமானை விபத்துகளில் இருந்து காக்கவும் எல்லா செல்வ வளங்களையும் வழங்க வேண்டி தினமும் வெளியே செல்லும் முன் சொல்லிச் செல்ல வேண்டும் என்ற கருத்து அறிவுரைகளும் உள்ளன...


வாசி என்றால் மனித உடலில் உள் செல்லும் மூச்சுக் காற்று... வாசி அடக்கல் என்பது தியான வழியில் பிராணாயமத்தில் வருகிறது. வாசி வாசி என வேகமாக உச்சரித்துப் பாருங்கள் அது "சிவா" என்று வரும்...சிவம்

உருவமற்றது, வாசி என்றால் குதிரை என்ற பொருளும்  இருக்கிறது தமிழில்: காசினி


காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசியேழுடைய தேர்மேல் ஏறி மஹாகிரி வலம் வந்த‌

தேசிகா எனை இரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி போற்றி

 என்ற ஒரு கதிரை வணங்கும் பாடல் உண்டு. பொருளும் அறிவியலும் இதன் முரண்கள் சொல்லியபோதும்...


நேற்றைய செய்தி: அறிவியல் மனித உடலின் தோல் செல்களை எடுத்து சினைமுட்டையில் இணைத்து கருவுறுதல் செய்திருப்பதாக குழந்தையை அப்படி உண்டு பண்ண முடியும் அதற்கு இனி கணவன், மனைவி காமுறுதல், இணைதல் எல்லாம் தேவை இல்லை இது 10 ஆண்டுகளில் வந்தமையும் என செய்தி...


பிரம்மாவின் தொழிலை மனிதம் எடுத்துக் கொண்டதா?

காக்கும் கடவுள்...அழிக்கும் கடவுள் பற்றி எல்லாம் விரிவாக எழுத வேண்டும் என்ற அவா உண்டு...ஆனல் மனிதம் தமது உடலென்னும் விந்தையான அதிசயத்தையே முழுதும் உணர்ந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் உயிர் பிரிதல் ஆன்மீக முறை பற்றி ஆர்வமுறாமல் செவ்வாய் கோளில் நிலம் வாங்க முயற்சித்து நீர் அடையாளத்தை ஆய்ந்து வருகிறது...


அறிவியல் அவசியம் ஆன்மீகம்  மனிதத்துக்கு அத்தியாவசியம் என்பதை நடந்த‌ நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன‌


ஹே ராம் என காந்தி கோட்ஸேவால் சுடப்பட்டு உயிர் விடும் முன் முன‌கியதாக உள்ள செய்திகளில் முரண் உள்ளன ஆனல் ஹே ராம் படத்தை எடுத்த  கலை ஞானி அவரது கொள்கையான மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்றதையும், அரை மணி சர்வாதிகாரியாக வாய்ப்பு இருந்தால் இந்தியாவின் எல்லா மதுக்கடைகளையும் மூடுவேன் என்ற தேசப் பிதாவின் கொள்கைக்காகவும் நிறைவேற்ற‌ எந்த முயற்சியும் செய்ததாக யாமறியோம். அறிந்தது அவரது தந்தை கூட மது,மாது, புகை போன்றவற்றை தொடக்கூடாது என்று சினிமாத்துறைக்கு சென்ற போது வாக்குறுதி செய்ய வேண்டி கேட்டதாக.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

வாசி: படி...மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே...அகத்தியர்

(சிந்தியுங்கள் சொல்லாத விடயங்களும் புரியும்)



Tuesday, September 30, 2025

பிரார்த்தனையா தியானம் உறக்கமா?: கவிஞர் தணிகை

 பிரார்த்தனையா தியானம் உறக்கமா?



தியானப் பயிற்சியில் ஈடுபடுவோரைத் தவிர வெளிப் பார்வையாளர் இதை பிரார்த்தனை, உறக்கம் என்றும் கூட சொல்வதைக் கேட்டதுண்டு. ஏன் கடவுள் மறுப்பு சிந்தையுடையார் கூட தியானம் கற்கலாம். புத்தர் கடவுள் பற்றிப் பேசவில்லை... வினை தொடரும்...என்பதே அவரது சுருக்கமான தத்துவம்... இன்னும் சொன்னால்  ஆசையே அழிவுக்கு காரணம்...தியான வாழ்வு மேற்கொள்ள உடலை வருத்துவது கூடாது. உடல் ஒரு ஓடம். அதைக் கொண்டுதான் வாழ்வுக் கடலை நாமனைவரும் கடந்தாக வேண்டும்.


எனவே உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோரே...உறக்கம், ஒழுக்கம், உணவு, வாழ்வு எல்லாவற்றையும் உள்ளடக்கியது தியான வாழ்வு முறை. அடுத்த உயிர்க்கு ஊறு செய்யாத நெறிகளும், எல்லா நேரத்திலும் உண்மையைக் கடைப் பிடித்தல் போன்ற நெறிகளும் இதனுள் அடக்கம்...


கோபம், பொய்கள், கவலை, ப‌யம், வெட்கம், வேட்கை யாவற்றில் இருந்தும் மீட்க யமம், நியமம்,ஆசனம், பிரணாயமம், பிரத்யாஹாரம்,தாரனை, தியானம், சமாதி அல்லது உள் அடங்கல் மூலம் மனிதத்தை மேன்மைப் படுத்துவதும் மாட்சிமைப் படுத்திக் கொள்வதும்...


ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாது...ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும்...இயற்பியல் அடிப்படை விதி...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

குடிகாரக் கூத்தாடிகள்: க‌விஞர் தணிகை

 குடிகாரக் கூத்தாடிகள்: க‌விஞர் தணிகை



காமராசர்: கூத்தாடிகளிடம் நாட்டைக் கொடுத்தால் கூத்தியாளிடம் கொடுத்து விடுவர்

காந்தி:  நான் சர்வாதிகாரியாக அரை மணி இருக்க நேர்ந்தால்  இந்தியாவில் மதுக் கடைகளை மூடிவிடுவேன்

பாரதி: எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்


க்ளாப்: ரோல் காமிரா ஆக்சன்,கட் இயக்குனர் சொல்லியபடி ஆடும் கைப்பாவைகள்

இயக்குனர், கதை வசனகர்த்தாக்கள், பாடல் எழுதுவார், இசை,பின்னணி, ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு, ஒட்டல் வெட்டல் இப்படி அனைவரும் ஒருங்கிணையும் சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் ஊதியம் எதற்கு இவ்வளவு?


பிணம் எரிப்பார்க்கும் அடக்கம் செய்வார்க்கும், தூய்மைப் பணியாளர்க்கும் தானே ஊதியம் அதிகம் இருக்க வேண்டும்?


அரசு விழாவில் மதுவை நுகர்ந்த மாமேதைகளைப் பற்றி கூசாமல் பேசுகிறது தமிழக மேடைகள்... அவர்கள் எல்லாம் மானிடப் பிறவியே அல்ல என்கிற வார்த்தெடுப்புகள், வளர்த்தெடுப்புகள்...


இறந்து போன நம் மண்ணின் மைந்தர்களே அவர்கள் என்ன தேவர்களா? தேவதைகளா? அவர்கள் உடலுக்கும் கழிவு உண்டு, துர்நாற்றம் உண்டு, வியர்வை உண்டு பிறர்க்கு ஊறு விளைவிக்க முயலாதவர் வாழ்வை விட வேறு எந்த வாழ்வும் உயர்ந்ததல்ல. மக்களும், அரசும், கட்சிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை பின்னிப் பிணைந்தவை.


யாரது கடவுளா? 

கூட்டத்தில் குடிநீர்ப் பாட்டில்களை வீசினால் முண்டியடிக்க மாட்டார்களா என்ற அடிப்படை அறிவற்றார் கூட நமது தலைவர்களா?


மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற  மகாத்மாவின் சிலைக்கு சாயம் ஊற்றி அசிங்கப் படுத்தல் பற்றிய‌ நடந்த செய்திகள் இன்றும் வந்திருக்கிறது


சாலை விதிகளை கற்றுத் தரவேண்டிய கல்விச் சாலைகள்

உடல் ஆரோக்கியம் உடல் உறுப்புகளின் பராமரிப்பு, உடற்பயிற்சி, உட் கொள்ளல், கழிவு, வாய் சுகாதாரம், ஆசன வாய் சுகாதாரம், பற்றி எல்லாம் கற்றுத் தரவேண்டிய பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதற்கு கூட்டம், எப்படி கூட்டம்....என்ற கட்டுப் பாட்டையும், எவை சிறந்தவை, எவை தாழ்ந்தவை என்பது பற்றி எல்லாம் சொல்லித் தர வேண்டுமல்லவா? உலகுக்கே வழி காட்டும் ,வழி காட்டிய வள்ளுவம் வாழும் நாட்டில் இது யாவர்க்கும் தலைக் குனிவு.


கட்டுப்பாடு இல்லா விடுதலை, ஒழுக்கம் இல்லா சுதந்திரம், தியாகம் இல்லா சாதனை பயனற்றது என்றார் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன், தத்துவ ஞானியும் கூட.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Sunday, September 14, 2025

பேரறிஞர் அண்ணா (துரை): கவிஞர் தணிகை

  பேரறிஞர் அண்ணா (துரை): கவிஞர் தணிகை



டாக்டர் காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை:

15 செப் 1903 முதல் 03.02.1969


இவரின் பிறந்த நாள் நாளை வருகிறது. அதற்காக ஒரு பதிவு செய்யுங்கள் என என் அன்புத் தம்பி மதியழகன் அவர்கள் கேட்டதற்கிணங்க இந்தப் பதிவு.


அவர் ஒரு திறந்த புத்தகம். அவரைப் பற்றி எவருக்கும் தெரியாத விவரத்தை அடியேன் என்ன சொல்லி விடப் போகிறேன் அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு பேரறிஞர்.அவர் உயரம் மனிதத்தின் உச்சம். அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைமைப் பதவி எல்லாம் கூட கிட்டி இருந்தாலும் அதை விட உயரமான‌ ஒரு படியாகவே இவர் வாழ்வு இருந்திருக்கும் இவை யாவற்றையும் விட பேரறிவு பெற்றவர். சிறந்த நிர்வாகி சிறந்த தம்பிகள் உடையார். இவர் முதல்வராக இருந்த காலத்தில்தாம் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்ற பேர் பெற்றது.

 டாக்டர் சி.என் அண்ணாதுரை அவரது மறைவுக்கு கூடிய மனிதக் கடலின்  உலக சாதனையை இன்னும் வேறு எந்த தலைவராலும் மிஞ்சவே முடியாத மறைவு அவரது புகழ் சொல்லும். மக்கள் குடியரசுத் தலைவராக இருந்த  அப்துல்கலாம் படித்த‌ பள்ளிக்கு சிறுவர்கள்தாமே அழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கருதாமல் சென்று அவர் பேசிய பேச்சை கேட்டு உத்வேகம், உற்சாகம் பெற்றதாக மாமனிதர் அப்துல் கலாம் அவர்களே தமது எழுத்துகளில் பதித்து குறிப்பிட்டிருக்கிறார்.


எல்லாவற்றையும் விட தம்பி , தம்பி என எழுதிப் பேசி ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றியவர். வெளிப்பாட்டுத் தன்மை உடைய கண்ணியவான். தமது தவறைக் கூட ஏற்றுக் கொள்பவராகவே இருந்தார். எந்த குயுக்தியும், குள்ள நரித் தனத்தையும் தமது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் பொதுவாழ்விலும் துளியும் பயன்படுத்தாதவர். தோல்வி கண்டு துவளாதவர், பள்ளி இறுதித் தேர்வில் தோற்ற இவர்  கல்லூரியில் சென்று இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவராக பின்னர் தன்னை மாற்றிக் கொண்டவர்.  நன்கு படித்த மேதை.


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை இந்த பூமிக்கு வழங்கி அதன்படியே வாழ்ந்த மாமேதை. எளிமைக்கு காமராசரைச் சொல்வார்கள் அது போலவே இவர் வாழ்வும் மிக எளிமையானதே. மேலை நாடு போகும் போதுதான் கோட், சூட் அணிந்ததாகவும் அதுவும் அன்புத் தம்பி ஒருவர் செலவை ஏற்று தைத்து தந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.


ஒன்றே குலம் ஒருவனே தேவன் , என உலகெலாம் வாழும் மாந்தர் யாவரும் ஒன்று பட வேண்டும் ஒரே கடவுளைக் கருத வேண்டும் என தமது தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் கடவுள் மறுப்பு சிந்தனையிலிருந்து மாறுபட்ட மக்கள் அனைவரும் ஏற்கும் படியான நிலையை எட்டி நாட்டை ஆள பாட்டை போட்டவர்


மேலும் சொல்லிக் கொண்டே போகலாம், நிறைய எழுதியிருக்கிறார். ஒரு சான்று: ஒரே இரவில் ஓர் இரவு என்ற நாடகத்தை எழுதி அது திரைப்படமாகவும் ஆனதெல்லாம் வரலாறு. சூழ்நிலை மறந்து ஆழ்ந்து படிப்பவர் ஒரு அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்தே வேண்டாம் ஒரு புத்தகம் கொடுங்கள் என வாங்கி படித்துக் கொண்டே இருக்க அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டார் என்பதும், சென்னை கன்னிமாரா (அப்போது மாபெரும் நூலகம் அதுவே) நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்தவர் என்பதும் எந்த கருப்பொருளைக் கொடுத்தாலும் எந்தவித தயாரிப்பும் இன்றி மேடையில் பேரூரை நிகழ்த்துவார் என்பதெல்லாம் இவரின் பெருமைக்கு சான்று. கல்கிதான் இவரது உரையைப் பார்த்து இவருக்கு முதலில் அறிஞர் அண்ணா என பட்டம் கொடுத்தார் என்பதும் காலத்தின் பதிவு.


இவரது ஆங்கிலப் புலமையை ஆங்கிலம் மெத்தப் படித்தாரும், ஆங்கிலேயரும் கூட வியந்து பார்த்திருக்கின்றனர் என்பது ஒரு பக்கம். 


பேரறிவு என்பதை ஞானம் என்பார் இவர் தமிழுக்கு கிடைத்த ஞானி.ஆங்கில மொழியை தமது சொற்பொழிவில் ஆட்படுத்தி எழுதி அனைவருக்கும் ஒரு வியப்பை ஏற்படுத்தி விடுபவர் என்பதெல்லாம் சொல்ல சுவையானது.என்ன இவர் அதிக நாட்கள் உயிருடன் இல்லை என்பதும், ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதும் இந்த மண்ணின் விதி. நல்ல தலைமைப் பண்பு கொண்ட நல்ல தலைவர். இவரின் ராஜ்யசபை பேருரை ஆங்கிலத்தில் மிக நல்ல நூல் அடியேனும் கூடப் படித்திருக்கிறேன். 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் இவர் பேச ஆரம்பித்தால் மெய் மறந்து கேட்டுக் கொண்டே இருப்பாராம் பாராளுமன்றத்தில்.எவரையும் தடுக்க அனுமதிக்க மாட்டாரம். தலைமையால் மெச்சத் தக்க பெருந்தலைமை.அறிவு செறிந்தார்க்கு அறிவு செறிந்தாரையே பிடிக்கும். சமய நெறிக்கு விவேகானந்தர் எவ்வளவு பங்களித்தாரோ அதே போல அரசியலில் இவர் பங்களித்திருக்கிறார் மக்கள் வாழ்வு நல்வாழ்வாக மலர தம்மால் ஆனதை எல்லாம் தமது குறுகிய வாழ்நாளில் அரிய உழைப்பால் செய்து சென்று விட்டார்.


பிறந்த நாள் நினைவு நாள் என்பதெல்லாம் இருக்கும் நாம் இவர்களின் சிறப்பு இயல்பை எண்ணிப் பார்ப்பதற்காகத்தானே கொண்டாடுகிறோம் அப்படிப் பார்த்தால் இந்த தமிழகத் தலைவரை உலகெலாம் இவர் தமிழுக்காகவும், ஆங்கிலத்துக்காகவும் கொண்டாடலாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை