Wednesday, April 18, 2018

இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து:கவிஞர் தணிகை

                   இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து

நாள்: 20. 04. 2018                        இடம்:வசந்தம் திருமண மண்டபம்
நேரம்: 7.30  9.00                          மேற்கு மாம்பலம்.சென்னை.

மணமகன்: ச. பரத் எம்.டி.எஸ்           மணமகள்:ரம்யா(எ)அபூர்வா எம்.டி.



Related image





Related image




நேர்மையின் இலக்கணம்
பரதன் எனச் சொல்லும் இராமாயணம்...

இனி டாக்டர் பரத்தின் பேச்செலாம் ஒளிரும் இந்த ரம்யாயாணம்.
அரிதான இந்த அபூர்வமான மருத்துவர்கள் சேர்க்கையில்
எனது எழுத்துகள் என்ற பூக்களுக்கு நாராகிறது இவரின் பண்பு

பரத் ஒரு அடக்கமான அழகு
அழகான அடக்கம்.

ஒரு கால் மணம் என்று சென்னையிலும்
மறு கால் வரவேற்பு என புனேவிலும் வைக்கும் வாமணன்

இவர்களின் சேர்க்கைக்கு சாட்சியாய் யாவும் நிற்கிறது
இயற்கையின் எல்லாம் ஒளிர்கிறது...

இவர்களின் புத்தம் புது வாழ்வுக்கு
ஒரு பூச்சொரிதல் நிகழ்வாக எனது வார்த்தைகளும்
வலம் வருகிறது.. வாழ்வாங்கு வாழ , பதினாறும் பெற்று பெரு வாழ்வாக‌

Related image





என்றும்
வாழ்க

கன்றுகள் புவியினைக் கீறி உங்களது புகழைக் கூற

வாழ்த்துகள்
அன்புடன்

Image result for rose flower paths to new married couples


கவிஞர் தணிகை
த.சண்முகவடிவு
த.க.ரா.சு.மணியம்.

Tuesday, April 17, 2018

டாக்டர் வாசவய்யா எழுதிய‌ வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்: கவிஞர் தணிகை

 டாக்டர் வாசவய்யா எழுதிய‌ வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்: கவிஞர் தணிகை
Image result for veterinary science


கால்நடை மருத்துவர் டாக்டர் வி. வாசவய்யா அவர்கள் எழுதி  2010 ல் வெளியிட்ட வாய்  இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும் என்ற நூலை நான்  பொது மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து வரும் பல் மருத்துவக் கல்லூரியின் துணை   முதல்வரும் பேராசிரியருமான டாக்டர். வா. சுரேஷ்குமார் வழங்கி படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.

நான் எப்போதுமே ஆர்வத்துடன் ஒரே முச்சில் ஒரு புத்தகம் படிக்க அவாவுறுகிறேன் என்றாலே அந்தப் புத்தகம் நல்ல நடையில் நல்ல சமூகப் பயன்பாட்டுடன் சொல்லப்பட்டிருக்கிறது  என்றே பொருள்.

இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் வாசவய்யா  இந்த நூலை  தமது காலப் பதிவாக தந்துள்ளார்.  ஒரு வயதான மூதாட்டி காக்கா தூக்கிக் கொண்டு வந்து தவறிப் போட்ட கோழிக்குஞ்சை காப்பாற்றச் சொல்லி  வேண்டுகோள் கொடுத்ததை துச்சமென கருதாமல் உயிராக கருதி மருத்துவ சிகிச்சை கொடுத்தது முதல் பல்வேறுபட்ட சூழலில் பல்வேறுபட்ட கோழி ,பறவை, கால்நடைகள் யானை உட்பட சிகிச்சை அளித்தவரை மட்டுமல்லாமல் கிண்டி அறிவியல் பூங்காவில் பல் வேறுபட்ட மிருகங்கள் சிங்கங்கள் முதல்  சிற்றுயிர்கள் வரை தம்மால் உயிருதவி பெற்றதையெல்லாம் மறக்காமல் பதிவு செய்துள்ளார் மனிதர் என்னும் பெருந்தன்மையுடன்.

இத்தனைக்கும் அடித்தளம் அவரின் அம்மா போட்ட பிள்ளையார் சுழியே என்றும் தெரிவித்துள்ளார். அவரின் அம்மாவே, அவர் என்ன மேல் படிப்பு படிக்கலாம் என்று கேட்டதற்கு : வாயில்லா ஜீவன்களுக்கு மருத்துவ சேவை செய்யும் படிப்பைப் படி என்றாராம்.

அந்தப் படிப்பை அவர் தேர்வு செய்து படித்ததும் அதன் மூலம் கால் நடை மருத்துவரான பின் அவரின் வாழ்க்கை போன பயணமும் மிகவும் சுவாரஸ்யமானவையும் ருசிகரமாயும் அவருடைய எண்ணத்தை எழுத்தாக்கி நமக்கெல்லாம் தந்து  இருக்கிறார்.
Image result for hen and animals


உயர்ந்த அனுபவம், செறிந்த கருத்துகள், தேர்ந்த வெளிப்பாட்டுடன் உண்மை உள்ளீடாக அமையும் எந்தப் படைப்பும் வணங்கத் தக்கதாகிவிடுகிறது. அதில் இயற்கை குடி கொண்டு விடுவதால்... உன்னத நிலை அடைந்து விடுகிறது.

பல்வேறுபட்ட ஊர்களில் பல்வேறுபட்ட அனுபவங்கள்...நட்டத்தில் இயங்கிய அரசுக் கோழிப்பண்ணையை முன் மாதிரியான இலாபத்துடன் இயங்கும் அரசுக் கோழிப்பண்ணையாக்கியது, மேலும் அரசாங்கத்தின் கெடுபிடி மீறி செய்யும் நல்ல செயல்கள், இலஞ்சம் ஊழல், அரசியல் பம்மாத்துகளை எல்லாம் மீறி செய்யும் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நல்ல முறையில் நியாயமாக விளக்குகிறார்.

இவர் இந்த புத்தகத்தை இன்னும் நல்ல முறையில் விரிவாகச் செய்து செதுக்கி இருந்தால் கால்நடைக் கல்லூரி பல்கலைக் கழகங்களுக்கு பாடமாகவே வைத்திருக்கலாம்.

Image result for good ground work to uplift society


இது போல அடித்தட்டில் களப்பணியாளராக இருந்து நியாயமாக நேரமையாக  செயல்புரிவோர்தாம் நல்ல ஆட்சி அதிகாரத்தில் இருந்திருப்பின் நல்ல பணிகளை செய்து மக்களுக்கு அற்புதமான நற்செயல்களை புரிய ஒரு காரணமாக அமைந்திருக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத கருத்து.

கால்நடைகள் எப்படி உணர்வு பூர்வமானவை என்பதை இவரது பசுவும் பஸ்ஸும் என்ற அத்தியாயத்தில் காணலாம். இது நீதி மன்றம், வழக்கு என்று கூட போனதாகவும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி உள்ளார். தனது கன்றுகுட்டியை இடித்து விடுமோ என்று இந்தப் பசு பஸ்ஸை சென்று முட்டி விடுகிறது அதனால் அதற்கு கொம்பு வளைந்து விடுகிறது. பசுவுக்கு நட்ட ஈடு தருவதா பஸ்ஸுக்கு நட்ட ஈடு தருவதா என்று நீதிபதிகள் தீர்ப்பு சொல்லப் புகும்போதுதான் அந்த உண்மை வெளிவருகிறது. அதாவது பேருந்து பசுவை இடிக்கவில்லை, பசுதான் போய் பேருந்தை இடித்திருக்கிறது என்று...

கால் நடைகளுக்கு சேவை செய்த இவரது இலட்சியம் இலக்கு இளைஞர்கள்  உள்ளத்து உறுதியுடன் நாட்டை மாற்றுவார்கள் என்பதே...

நூலின் விலை 60 , பக்கம்: 80. மூங்கில் பதிப்பகம், 82, கூலண்ணன் தெரு கம்பம் 625516. அச்சிட்டோர்: வைகை பிரிண்டர்ஸ் மதுரை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, April 15, 2018

சில மழைத் துளிகள்: கவிஞர் தணிகை

சில மழைத் துளிகள்: கவிஞர் தணிகை


Related image


எங்கு பார்த்தாலும் ஏமாற்று, வஞ்சகம், பொய், வன்முறை, கடத்தல், அரசியல் புலைத்தனம், சிறுமி வன்புணர்ச்சி, நீர்ப் பங்கீட்டுக்கு எதிர் வினைகள்,மத்திய மாநில அரசுகளின் கையாலாகாத் தனம்... இப்படி சொல்லொணாத் துயரங்களும், துன்பங்களும் தலைவிரித்தாடுகையில் கொடும் கோடையின் தாக்கமும் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்து சேர்ந்து விட்ட நிலையில்...

அண்மைக் காலத்தில் சில செய்திகள் நல்லனவற்றையும் காண நேர்ந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக: அவற்றுள் சில:

Image may contain: Vaa Manikandan, eyeglasses

வா . மணிகண்டன் என்னும் முக நூல் நண்பர் தம் வழியே சுமார் அரை கோடி வந்ததாகவும் அதை அப்படியே ஏழை எளிய தேவைப்படுவார்க்கு திருப்பி விட்டதாகவும் அதன் கணக்குகளை அப்படியே கொடுக்க எந்தவித கடினமும் இல்லை அப்படியே பாஸ்புக்கின் கணக்கை காட்டி விட்டேன்.. என மிக எளிமையாக சொல்லி இருக்கிறார். அதுதான் சரியான கணக்கு.

அப்படிப்பட்ட நபர்கள் தாம் நமது சமூகத்தின் தற்போதைய தேவைகள். எனகும் கூட அது போன்று செய்யவேண்டும் என்ற உந்துதல் இருந்தது உண்மை ஆனால் எனது வட்டம் வேறு வழி சென்று கொண்டிருக்கிறது...

அட நம்ம 21 காமன்வெல்த் கோல்ட் கோஸ்ட்  2018ன் விளையாட்டுகளில் இந்தியா 26 தங்கப்பதக்கங்களுடன்  66 மொத்தப் பதக்கம் பெற்று ஆஸ்திரேலியா , இங்கிலாந்து போன்ற வல்லரசுகளுக்கும் அடுத்து  3 ம் இடத்துக்கு வந்துள்ளது 71 நாடுகள் பங்கேற்றதில் கனடா போன்ற நாடுகள்  இந்தியாவுக்குப் பின் வர....
Image may contain: 2 people
வழக்கமாக ரத்னவேல் அய்யா திருவில்லிப்புத்தூர் தமது சேவையை வயது ஒரு பொருட்டின்றி ஒருங்கிணைப்பு செய்து வருவதும்...


சினிமா புதிய தமிழ் சினிமாக்கள் வராமல் நிறுத்தப்பட்டதும், ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு எதிரான ஒரு இயக்கம் ஏற்பட்டதும்... அது தமிழகத்துள் விளையாட்டு அரங்கத்துள் நடக்கக் கூடாது என்றதும்...

பாடகர் சீனிவாசன், பாலாஜி, ஸ்ரீக்காந்த் போன்றோருக்கு அது பிடிக்காமல் போனால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்? ஐ.பி.எல் போன்ற வியாபார நோக்கத்துடன் நடத்தப்படும் விளையாட்டுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என லலித் மோடிக் காலத்திலேயே நமது பதிவுகள் வந்திருப்பதை என்னை நினைவில் வைத்திருப்பார் மறந்திருக்க முடியாது..

நாம்  20 ஓவர் மேட்சை விட 10 ஓவர் மேட்ச் ஆடுங்கள் என எழுதி இருந்ததையும் நினைவு படுத்திப் பார்ப்பார்க்கு தெரியும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 14, 2018

சேலத்து விளம்பி: கவிஞர் தணிகை

சேலத்து விளம்பி: கவிஞர் தணிகை

Related image


தமிழ் ஆண்டுகளில் இது முப்பத்தி இரண்டாம் ஆண்டாக வருகிறதாம் இந்த விளம்பி ஆண்டு. விளம்பல் என்றால் சொல்லியதைச் சொல்லல், அல்லது சொல்லுதல் பிறர் எழுதியதன் மேல் மேலும் மேலும் திரும்பத் திரும்ப எழுதல் என்ற பொருள்படும்.

நேற்று சேலத்தை சேலம் சந்திப்பு முதல் கன்னங்குறிச்சி வரை சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சேலம் வெகுவாக வளர்ந்திருக்கிறது. எல்லா இடங்களிலும் பெரும் கூட்டம்.

கட்டடங்கள் மாறி இருக்கின்றன. ஆனால் கன்னங்குறிச்சிக்கு சுமார் 10 அல்லது 10.30 மணிவரைதாம் பேருந்து தொடர்பில் இருக்கிறதாம். அதே கோவிலைச் சுற்றித்தான் பேருந்து வந்து நிற்கிறது. கோவிலைச் சுற்றி பயணிகள் காத்திருப்போர் அமர என ஸ்டீல் நாற்காலிகள் இருக்கைகளாக போடப்பட்டிருக்கிறது நல்ல வசதி...

மதுவிலக்கு எம்.எல்.ஏ  வேட்பாளராக எங்களால் நிறுத்தப்பட்டு சுமார் எண்ணூறு சொச்சம் வாக்குகளைப் பெற்று கட்டிய இருப்புத் தொகையை இழந்து போனாலும் எமக்கு அதுவும் ஒரு வெற்றிதான்...சசிபெருமாள் உயிரை விட்டு புகழ் பெறுமுன்பே இந்த  பரீட்சையை நாங்கள் நிகழ்த்தி இருந்தோம்...அந்த எம்.எல்.ஏ வேட்பாளரான சின்ன பையன் அவர் 70 வயதுக்கும் மேல் வாழ்ந்த பெரிய மனிதர்...உண்மையான காமராஜர் வாரிசுதாம் எங்களைப் பொறுத்தவரை கன்னங்குறிச்சி என்றால் அது சின்னபையன் தான். சின்னபையன் இல்லா கன்னங்குறிச்சிக்கு நான் சென்றது சில வாரங்களுக்கு முன் இடுப்பு சேர்க்கை எலும்பை செயற்கையாக வைத்து அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் எனது மூத்த சகோதரி ஒருவரைப் பார்க்கும் பொருட்டுதாம்.

சின்ன பையன் கதர் வேட்டி, கதர் சட்டை காலில் செருப்பில்லாமல் ஓடி ஆடித்திரிந்த ஒர் குடும்பமில்லா கட்டை பிரம்மசாரி, கைப்பந்து பயிற்சியாளர் வேறு அவருக்காக அவர் கோரிக்கைக்காக அவர் வேண்டுதலுக்காக பல முறை பல்வேறு சம்பவங்களில் அவர் ஊர் சென்று நான் உரையாற்றி இருக்கிறேன். அவருக்கு எனது பேச்சு என்றால் அவ்வளவு பிடிக்கும்.

எனது சகோதரி ஓய்வெடுக்க என்று இருந்த வீட்டில் அவரை கவனித்து பாதுகாத்து வரும் ஒரு மங்கை அவர் தமது மகளுக்காக ஒரு சிறு நீரகத்தை பரிசளித்தவர், மேலும் மகளின் சரி இல்லாத குடும்ப நிலைக்காக மாதா மாதம் தனது கணவரின் மறைவுக்காக கிடைத்து வரும் ஓய்வூதியத் தொகையிலிருந்து சுமார் பத்தாயிரம் மாதம் வழங்கி வாழ வைத்து வருபவர்... என அவரைப்பற்றி நிறைய தகவல்கள்.

அஸ்தம்பட்டியில் கொஞ்சம் பழங்கள் வாங்கலாம் என கடை தேடி ஒரு சிறிய கடையைப் பிடித்து வாங்கிக் கொண்டேன் அங்கே விலை அதிகமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன்.... சாத்துகுடி 3, ஆரஞ்சு 3, ஆப்பிள் 3 எல்லாம் சேர்ந்தே ரூஉ: 180...
Image result for selam and tamil new year
கொண்டு சென்றதை சகோதரிக்கு கொடுத்து விட்டு, தேறுதல் சொல்லிவிட்டு திரும்பி கன்னங்குறிச்சி கோவிலிலிருந்தே பேருந்து ஏறிக் கொண்டேன். நகர பேருந்து நிலையம் நோக்கி.

அங்கொரு கடையில் சித்திரக் கனிக்கென சிறிய அளவில் அதாவது மகனும் வெளியூரில், இருப்பதால் வழக்கமாக செய்வதை காரணமாகக் கொண்டு சிறிய அளவில் செய்யலாம் என விலை கேட்டால் ஆப்பிள் கிலோ விலை ரூஉ.180 ஆம் கிலோ. எடையும் தெளிவாக நமக்கு வாங்குவார்க்கு தெரியாதபடியே இருக்கிறது. அரை கிலோ போதும் என்றால் 3 பழம் கொடுத்து அது முக்கால் கிலோ என 130 ரூ எடுத்துக் கொண்டார். சாத்துகுடி, ஆரஞ்சு ஆகிய பழங்களும் சிறிய அளவில் இருந்த போதிலும் அதுவும் 180, 170 எனச் சொன்னதால் வாங்க மறுத்து, பிளாஸ்டிக் பை வேண்டாம் எனச் சொல்லி அந்த 3 பழங்களை எனது அலுவலகப் பையிலேயே வைத்துக் கொண்டு திரும்பினேன். அவருக்கு இல்லையே அஸ்தம்பட்டியில் ஒரு கடைக்காரர் ஆரஞ்சு கிலோ ரூஉ `100 என்றும், சாத்துகுடி ரூஉ. 80 என்றும் தான் சொன்னார்கள்...இப்படி விற்றால் வாங்குவார் , வேலை செய்வார் அவ்வளவுதான் எனச் சொல்லி விட்டு வர முற்படுகையில் மற்றொருவர் வந்து பழங்கள் விலை கேட்க என் முன்னாலே அந்தப் பக்கம் விலை ரூஉ.180, இந்தப்பக்கம் ரூஉ. 170 என்கிறார், ஒருவேளை ஆளைப்பார்த்து அவர் உடை பார்த்து விலை சொல்பவராய் இருக்கிறாரோ..இவர் போன்றவர்க்கெல்லாம் ஒரு அழுக்கு வேட்டி கட்டித்தான் கடைக்கே போய் இருக்க வேண்டும் போலிருக்கிறதே...என அந்த மனிதன் எவ்வளவு போலியாக நம்மை ஏமாற்றுகிறான் எனத் தெரிந்தபடியே நொந்தபடியே வந்தேன்.

சற்று நகரப் பேருந்து உள் வந்ததும் ஒரு அம்மாவும் , மகனும் சிறிய அளவில் ஒரு தட்டத்தில் பெரும் சாத்துகுடிபழங்களையும் ஆரஞ்சு பழங்களையும் கிலோ ரூஉ: 80, மற்றும் 100 என்று அஸ்தம்பட்டிக் கடைக்காரர் சொன்ன அதே விலையை சொன்னார்கள்...அங்கும் பிளாஸ்டிக் பை வேண்டாம் எனச் சொல்லி...அது எரித்துவிடலாம் எனச் சொன்ன அவர்களுக்கு அது எரித்தாலும் சுவாசிக்க கேடுதாம் என்று சொல்லி விட்டு.. வாங்கிக் கொண்டேன்.

அந்த அஸ்தம்பட்டி கடைக்காரர் எவ்வளவு நியாயமாக விற்பனை செய்தார் ஏன் இந்த நகரப் பேருந்து நிலையம் வெளியே இந்த கடைக்காரர் இவ்வளவு அழிய விலை சொல்கிறார் என எண்ணப் பொருமல்...வீட்டில் வந்து பார்த்தால்...அந்த 3 ஆப்பிள் பழங்களில் ஒன்று அழுகிய பழம். மாற்றி கொடுத்திருக்கிறார்...ஆக அந்த நன்றாக இருந்த இருக்கும் என நினைத்து வரும் 2 பழங்களுக்கு ரூ. 130 ரூ  நல்ல வியாபாரம். குலம் விளங்குமா?

இதற்காகத்தான் நான் எப்போதும் பழங்கள் எல்லாம் வாங்க முற்படுவதேஇல்லை. என்றாலும் சில நேரங்களில் இப்படித்தான் மறுபடியும் ,மறுபடியும் நேர்ந்து விடுகின்றன....

சரவணா பேக்கரீஸ் வந்து ஒரு  டப்பாவில் அடைத்து 12 ஆம் தேதியிட்ட கீ பிஸ்கட் (வெண்ணெய் பிஸ்கட் வாயில் வைத்தாலே கரையுமே அதுதான்) அதுவும்  இரண்டு  மில்க் கேக் வாங்கி அதற்கு மோடி சர்க்காரால் போடப்பட்ட ஜி.எஸ்.டி வரியை 14 ரூபாயும் சேர்த்து கட்டி விட்டு...

மோடியும் அந்த பாழாய்ப்போன திருட்டு எண்ண வியாபாரியாய் இருந்த  அந்த நபரையும் சபித்துக்கொண்டே எனது விளம்பி ஆண்டு அல்ல அல்ல சித்திரைப் பிறப்பை சித்திரக்கனியை இந்த ஆண்டும் நகர்த்தி விட்டேன்...

ஏழைக்கெல்லாம் இனி நியாயமாக சம்பாதித்து வாழ்க்கையை நகர்த்துவார்க்கு எல்லாம் எந்த திருவிழாவும் இல்லை...ஆமாம் தை தமிழ் ஆண்டு பிறப்பா...சித்திரையா ஜெவா, மு.கவா...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, April 8, 2018

திரும்பி வராக் காலமும் திரும்பக் கிடைக்கா அந்த உலகும் : கவிஞர் தணிகை

திரும்பி வராக் காலமும் திரும்பக் கிடைக்கா அந்த உலகும் : கவிஞர் தணிகை

பன்றி மேய்க்கும் அந்த மனிதன் தலைமுடிக்கு ஈயம் என்றுதான் அவன் சொன்னது, அதாவது அலுமினியப் பாத்திரம் தருவதாக வீடு வீடாக வீதி வீதியாக கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தான். இப்போதுமா இந்த வியாபாரம் இருக்கிறது?
Image result for no time returns no world reverse

எனது நினைவின் வீச்சு விரிந்தது.

அரை நூற்றாண்டு ஓடிவிட்டது.

இதே வீடு, இதே சந்து ...வீட்டில் அம்மாவுடன் 6 பெண்கள் , கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் நன்னீர் ஓடையில் வழி அனுப்பப் பட்டதால் முடி எல்லாம் கொட்டுகிறது என ...நீண்ட கூந்தலில் இருந்து உதிரும் தலைமுடியை எடுத்து பத்திரமாக ஒரு மஞ்சப் பையிலும், ராட்டையில் நூல் நூற்று அதற்காக வாங்கிய கதர்ப் பையிலும் போட்டு நிறைய வைத்திருப்பார்கள்.

ஒரு நாள் சவுரி கட்ட என இந்தப் பெண்கள் வருவார்கள்...அன்று முழுதும் வெகுவான வேடிக்கையாக இருக்கும். வாயெல்லாம் வெற்றிலை எச்சில் வழிந்தோட... வீட்டில் சேர்த்து வைத்திருந்த தந்த சொந்த முடியில் சவுரி கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

இடையில் அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நீராகாரம், அதாவது கம்பங் கூழ், களி கரைத்தது, அல்லது நெல்லஞ்சோற்று நீர் ஊறுகாயுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும்.

அந்த சவுரிகளை கட்டி முடிக்க கொடுக்கும் கூலியில் இதெல்லாம் அடங்காது.

என் அம்மா கூட சிறியதாக நைஸாக ஒரு சவுரியை வைத்து கட்டி சிறியதாக ஒரு குடுமியிப் போட்டிருப்பார்கள். பெரிய பெரிய சவுரி எல்லாம் நல்ல விலைக்கு விற்பனையும் நடக்கும். உடன் அக்கம் பக்கம் பெண்கள் எல்லாம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சவுரி கட்டிக் கொள்ள வருவார்கள், அல்லது சவுரி வாங்க வருவார்கள்...


இது உதிர்ந்து விட்ட ரோமம், நெடுஞ்செழியன் அம்மா ஜெ கதை அல்ல...

வளையல் போட என்று இலட்சுமி என்று ஒரு அம்மா வயதுடைய ஒரு பெண் வருவார் ஒரே கூத்தும் கும்மாளமாயும் இருக்கும், அவளே இவளே, அடியே என்றுதான் பேசுவார் கொஞ்சம் முன்னால் துருத்திய பற்கள் மேல் தெரு சுப்ரமணிய சாமி கோவில் வீதி....அதுவே அப்போது மிகத் தொலவில் இருப்பதாகத் தோன்றும்...இப்போது நினைத்தால் அது மிக அருகே இருப்பதாகத் தோன்றுகிறது அங்கேதான் அவர்கள் வீடு....ஆனால் வீடு தேடி வந்து வளையல் போடுவார்...

கண்ணாடி வளையல், ரப்பர் வளையல் என்று விதவிதமாக உயர உயரமான வட்ட வடிவ அட்டைகளில் போட்டு நிற்க வைத்து  கூடை நிறையக் கொண்டு வருவார் அதிலும் கட்டுக் கட்டி கூடை நிறைய வளையல் கட்டுகளும், விலை உயர்வு என அட்டைப்பேட்டிகளிலும் செட் வளையல்கள் இருக்கும்...அதின் உச்சமாக நான் ஹைதராபாத்தில் தலைமை இடத்தில் பணிபுரியும்போது ஹைட்ராபேட் பேங்கல்ஸ் என்று மிகவும் பிரபலமான வளையல்கள் எல்லாம் வாங்கி வந்தது வரை....நினைவுதான்...

ஆனால்...அந்தக் காலத்தில் இலட்சுமி அம்மா அவளும் எங்க வீட்டுப் பெண்கள் போல சிவந்த நிற ராசிப் பெண் தாம். சிவப்பு நிறம் என்றாலே அழகு என்று நம்புகிறார்கள் இன்னும் இந்தியாவில்...அந்த நம்பிக்கையை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிய முடியவில்லை அல்லவா...எங்கள் வீட்டிலும் 5 அழகிய பெண்கள்...அழகில் குறைச்சல் என்றால் அது நாங்க 3 பசங்களாகத்தான் இருக்க வேண்டும்..அதிலும் நான் கடைசிப் பையன். எனக்கும் ஜடை போட்டு, நடு வகிடு எடுத்து அழகு பார்த்த குடும்பம் என்னுடையது...அவ்வளவு நீண்ட முடியிருக்கும் எனக்கும்...

எப்போது பார்த்தாலும் ஏதாவது விசேஷம் இருக்கும், யாராவது ஒரு பெண் வயதுக்கு வந்திருப்பது, ஒருவர்க்கு மணம் நிச்சயம், ஒருவர்க்கு திருமணம், ஒருவர் முழுகாமல் இருக்கும் வளைகாப்பு, ஒருவர்க்கு பிள்ளைப் பிரசவம் என எப்படியும் அடிக்கடி ஒரு விஷேசம் வைபவம் வந்து கொண்டே இருக்கும். அல்லது ஆடி 18, தீபாவளி, பொங்கல் என திருவிழாக்கள்...எல்லாமே பெண்கள் அதன் அலங்காரங்கள் என்று பேர் சொல்லத்தானே...

இந்த இலட்சுமி அம்மா வளையல்காரி வளையல் போட்டு விட்டால் அது மறுமுறை அழைத்து போடும் வரை பொலிவு குறையாமல் இருக்கும்... அக்கம் பக்கம் வீட்டுக்காரப் பெண்டு பிள்ளைகள், உறவினர் பெண்கள் எல்லாம் வந்து வளையல் போட்டுக் கொள்வார்கள்.... ஏன் பிரேமா டீச்சர், விஜயா அக்கா, வேடர்பட்டியிலிருந்து சிதம்பரத்தை மணமுடித்து எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாக இருந்த தேவகி எல்லாம் கூட வளையல் அணிந்து கொள்ள இந்த வீட்டுக்குத்தான் வருவார்கள்...இவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது இல்லை...

Related image


அவரைப் (இலட்சுமி அம்மா செட்டியார் இனத்தை சேர்ந்தார் என நினைக்கிறேன்) பொறுத்த வரையிலும் கூட காசு வாங்குவது கொடுப்பது பெரும் வர்த்தகமாக இப்போது நினைத்தாலும் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது அது தான் பிரதானம் என்றிருந்தாலும் அந்த நடைமுறை...அந்த அன்னியோன்யம் அந்த குடும்பப் பாங்கு...இதெல்லாம் தான் முன்னே நினைவில் நிற்கிறது... நிறைய காசு பணத்துக்கு வளையல் வாங்கப்பட்டிருக்கிறது...இப்போது அதன் தேவை எல்லாம் தங்கத்தில் இருந்தாலும் நல்ல முக்கியமான குடும்பத் தேவைக்கு  திருவிழாக்களுக்கு வளையல் இடம்பெறுவது என்பது மட்டும் ஒரு அடையாளமாக இருக்கிறது...

தயிர்க்காரி அல்லது மோர் விற்கும் அந்த சிவந்த நிறப் பெண்ணும் பொட்டனேரி அது மேச்சேரி அருகே இருக்கிறது...அங்கிருந்து வருவார்...மோர் தயிர் விற்று முடித்து வீட்டில் கொஞ்சம் அமர்ந்து அப்படி என்னதான் இருக்குமோ முதலியார் வீட்டம்மா, அதன் பெண்டு பிள்ளைகள்  எனப்  பார்க்காமல் போகவே மாட்டாள்...அவர் எல்லாம் இப்போது இருக்க வாய்ப்பே இல்லை...ஆனால் அவரின் உருவம் அப்படியே தக தக என நினைவில் நின்ற போதும் அவரின் பேர் கூட மறந்து விட்டது...


Image result for milk and butter milk curd

பால்கார ஐத்தா இவர் மாநிறம், வெற்றிலை, புகையிலை போடும் கறை படிந்த பற்கள்,,, புற்று நோய் வந்த பிறகு முடி கொட்டி முடி உதிர்ந்து விட்ட நிலையில் கூந்தலில் முடி குறைவாகவே இருக்கும்... தண்ணீர் கலக்காமல் அவ்வளவு அருமையாக பால் கொண்டு வந்து தவறாமல் ஊற்றுவார், குடும்பத்தோடு அவ்வளவு நெருக்கம், ஒட்டுதல் , தாய் பிள்ளைகளாகவே பழகினர், எப்படி இந்த அந்நிய மக்களோடு எல்லாம் அவ்வளவு ஒட்டுதல் இருந்தது , எப்படி அப்படி ஒரு சொந்தங்கள் எல்லாம் உண்டாயிருந்தது என்று இன்று நினைத்தாலும் நம்ப அரிதாக இருக்கிறாது.

 இவரது கணவரை அவ்வளவு அருமையாக கவனித்துக் கொண்டார்...அவள் தம்மை கவனிக்காமல் விட்டு சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்து விட்டாள். அவள் கணவன் சரியான கில்லாடி அவள் இறந்த பிறகு வெளியே எங்குமே ஒரு வார்த்தை கூடப் பேசாமல்  ஊமாண்டி (ஊமையாண்டி)   போல இருந்த அவன் சரியான அமுக்கன், இன்னொரு பொண்டாட்டி கட்டி இன்று வரை வசதி வாய்ப்போடு வாழ்ந்து வருகிறான்..

அடுத்து கட்டில் கடைக்காரி இந்த அம்மா பேரும் இலட்சுமிதான்...ஒரு சிறிய கட்டில் போட்டு அதில் சில பாட்டில் மூடிகளில் மிட்டாய், முறுக்கு, போன்ற தின்பண்டங்கள், குச்சிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் பருவகாலங்களில் பனங்கிழங்கு போன்றவற்றையும் வேகவைத்து விற்பனை செய்தவர், எப்படியோ ஒரு சாலை போன்ற வீட்டிலேயே காலம் தள்ளி வெகு காலம் வாழ்ந்தார். அந்த கட்டில் கடையில் தாமும் சாப்பிட்டு, தமது மில்லில் வேலை செய்த மகன் குடும்பத்துக்கும் மருமகள் சரியில்லை, மகனை அடித்து விடுகிறார் என கதை கதையாகச் சொல்லிக் கொண்டே தமது செலவுக்குப் போக மீதி ஆகும் காசை தமது மகனுக்கு கொடுத்து உதவுவார்...அவரும் இப்போது இல்லை...ஏன் எனது தாய் தெய்வானை போயே 12 வருடம் ஆகிவிட்டதே...

ஏன் ஆண்டியப்பன் நாவிதர், முடி திருத்தும் கடைக்காரரின் வயதான தந்தை வீட்டுக்கு வந்து பசங்க எங்கள் மூவருக்கும், தந்தைக்கும் முடி திருத்திச் செல்வது அப்போது வழக்கம்...அப்போதிருந்த மரத்தடிகளும் அதன் அடியில் அமர்ந்து முடி வெட்டிக் கொண்டதும், முடி வெட்டும்போது சுருள் சுருளான மயிர்க்கற்றைகளும், முன்பக்கம் தோள்பட்டை இறங்கி நேராக இறங்கும் கால்சட்டையின் நாடாக்களும் பின் முதுகில் ஆங்கில எக்ஸ் X வடிவத்திலான பட்டை செல்வதும் பசுமயான இனிமையான நினைவோட்டம்...

நாளடைவில் அவர் பெரியவர் வராததால், மகன் ஆண்டியப்பன் கடையில் முடி திருத்த எனச் சென்று...சாண்டில்யன் கதை குமுதம், தமிழ்வாணன் கல்கண்டு போன்றவற்றை போட்டி போட்டு படிக்க ஆரம்பித்து, அது ஆனந்த விகடன், கல்கி, குங்குமம், மங்கையர் மலர், தினமணி கதிர் , என வளர்ந்து நிறைய நிறைய எழுத்தாளர்கள்  நிறைய நூலகங்கள், நிறைய மொழிபெயர்ப்புகள், நிறைய நாடுகளின் உலகின் பிரபஞ்ச அளவிலான தொடர்புகளுடன் பரிச்சயமாகி...தொடர்பாகி,,,இன்று அடியவனே....11 நூல்கள்... கொடுத்த நிறைவில்...

அப்போது கிருஷ்ணனும், குட்டியும் ம்க்கூம், பேப்பர் படிக்கத்தான் இங்க வர, முடி வெட்டவோ, டீ சாப்பிடவோ இங்க வர மாட்ட...என அப்போதே என்னுடன் சிலர் சலித்துக் கொள்வார்கள்...என்ன செய்வது நன்றாக முடி  வெட்டுவோர்   அல்லது அவரவர் எங்கு விருப்பமிருக்கிறதோ அல்லது எங்கு மிகவும் நீட்டாக சுற்றுப்புறம் விரும்பும்படியாக இருக்கிறதோ அங்கேதானே அல்லது வீட்டில் பெற்றோர் எங்கு செல்லச் சொல்கிறாரோ அங்கேதானே சென்று முடி வெட்டிக் கொள்ள முடியும் அன்றைய நாளில்...அதேபோல இன்று வரை டீ, காபி அருந்தும் வழக்கம் இன்று வரை கூட என்னிடம் இல்லை என்று சொல்லலாம் என்று பார்த்தால் அவர்கள் இருவரும் இன்று இல்லை...

அவர்களின் தலைமுறைகள் அவ்வப்போது நம்முடன் தொடர்பில் உள்ளார்கள்...ஜெராக்ஸ் காபி எடுத்து கொடுப்பார்களாக...திருமண நிகழ்வில், விழாக்களில் நாகஸ்வரம்  வாசித்து மிக முன்னேறிய அளவில் நாடெல்லாம் தெரியுமாறு பிரபலமாயும் இருக்கிறார்கள்...அவர்களிடம் எல்லாம் இது பற்றி சொல்ல முடியாது...சொல்ல அவசியமும் இல்லை... சொல்ல வேண்டியதும் இல்லை.

Image result for milk and butter milk curd

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Thursday, April 5, 2018

கமலுக்கும் எனக்கும் உள்ள மையப்புள்ளிகள்: கவிஞர் தணிகை

கமலுக்கும் எனக்கும் உள்ள மையப்புள்ளிகள்: கவிஞர் தணிகை
Image result for kamal at trichy meeting train travel



1. 8 கிராமங்களை தத்து எடுத்து அதில் முன்னேற்றப்பணிகளை செய்து அவற்றை முன் மாதிரியாகக் கொண்டு தமது சேவைப்பணிகளை தொடரவிருப்பதாக சொல்லி இருக்கிறார்.

நான் சுமார் 10 ஆண்டுகள் கிராமிய  முன்னேற்றத்திற்காக‌  இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களிலும் எளிதில் எட்ட முடியாத கிராமங்களில் தங்கி பயிற்சி எடுத்து தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ்மக்களுக்கு பணிச்சேவை செய்து பெயர் பெற்றவன். தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், சேவைப் பிரிவைச் சார்ந்த மக்களோடு நானும் ஒருவராக நின்று சேவயாற்றி உடல் பிணி பல பெற்றவன்.

2. கமல் ஹாசன் அப்துல்கலாம் பிறந்த இடத்திலிருந்து தமது அரசியல் பயணத்தை துவக்கினார்.


Image result for apj memorial place


எனக்கும் அப்துல் கலாம் குடியரசு தலைவராக விளங்கும்போதே ராஷ்ட்ரபதி பவனிலிருந்து கடிதம் எழுதியுள்ளார், அவரை 3 முறை பார்த்திருக்கிறேன். எனது புத்தகங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன.
Related image

எனவே இருவரும் மதிக்கும் மாமனிதராக அப்துல் கலாம் உள்ளார்.

3. நேற்று திருச்சி மாநாட்டில் தமது உரையின் போது...கமல் ஹாசன்  தமது ரயில் பயணம் பற்றி பேசும்போது காந்தி ரயில் பயணத்தின் வழிதான் நாட்டின் நாடித் துடிப்பை உணர்ந்ததாகவும் எனவே தாமும் காந்தியின் வழியில் ரயில் பயணத்தை மேற்கொண்டதாகவும், மேலும் 48 பேர் 48 காரில் பயணம் வருவதை விட இது பாதுகாப்பு ஏற்பாட்டை மிகவும் குறைவாக  செய்து கொள்ள ஏற்றதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

காந்தி எழுதிய 60000 பக்கங்களையும் படித்தவன் என்ற முறையிலும், மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் இணைப்பில் உள்ள வள்ளியம்மாள் கல்வி நிறுவனத்தில் காந்திய நூல் வழிக்கல்விக்கான முதல் பரிசைப் பெற்றவன் என்பதாலும், காந்திய கிராமியப் பல்கலைக் கழகம் காந்தி கிராமத்தின் பயிற்சி பெற்றவன் என்ற முறையிலும்,  நானும் எனது நண்பர் ச.மே.சிற்பி ஆகியோரும் இணைந்து நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற இயக்கங்கள் நடத்தி: சின்னபையன், சசிபெருமாள் (ஆம் அந்த மது விலக்குப் போராளியாகி இறந்த அதே சசிபெருமாள்தாம்) போன்ற நல்ல காந்திய மனிதர்கள் உருவாக பயிற்சி அளித்து உறுதுணையாக நின்றதாலும்...

இப்போது வாழ்வின் தேவை கருதி தினமும் ரயிலில் பயணம் செய்து கல்லூரி சென்று வருகிறேன் என்பதாலும்..


இதுவரை கமல்ஹாசன் வெளிப்படுத்திய 3 புள்ளிகள் எமக்கும் அவருக்கும் மையப்புள்ளிகளாக இருக்கின்றன...இனி எதிர் வரும் காலங்களிலும் நிறைய இது போன்ற மொட்டவிழ்தல்கள் நிகழும் என்றே நம்புகிறேன்...

அலை நீளம் ஒத்துப் போகிறது..கமல்ஹாசன் கவர்ச்சி காட்டி ஏதும் பேசவில்லை களப்பணியாளராகவே மாறிக் கொண்டிருக்கிறார். எனவே அவர் போன்றோர் மேலும் மேலும் வாய்ப்புகளின் போது வெளித்தெரிவார்கள், மிளிர்வார்கள் என்றே நம்புகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, April 1, 2018

யூதாஸ் காரியாஸ் துரோகியா? புரட்சிக்காரனா? கவிஞர் தணிகை

யூதாஸ் காரியாஸ் துரோகியா? புரட்சிக்காரனா? கவிஞர் தணிகை

Image result for Judas Iscariot jesus christ


படித்ததில் பிடித்தது. இன்றைய நாளை உலகே யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது காலை எனக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அது உண்மையா? கதையா? எனத் தெரியாத போதும் பெரும்பாலான மனிதர்கள் அதை நம்பப் போவதில்லை என்றாலும் அந்தக் கோணம் எனக்குப் பிடித்திருக்கிறது.

அதாவது ரோமானியப் பேரரசு இஸ்ரேலை , யூதர்களை அடிமையாக நடத்தி வந்தபோது ரோமானியப் பேரரசுக்கு எதிராக எழுந்தவர்களில் இந்த யூதாஸ் காரியாஸ் மற்றும் பர்ணபாஸ் என்னும் ஒரு வாள் வீரன். இந்த வாள் வீரனை அழைத்தபடி ஜீஸஸ் இடம் சென்று எங்களையும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள் என யூதாஸ் கேட்டபோது பர்ணபாஸைப் பற்றிக் கேள்விப்பட்ட யேசு , வாள் எடுத்தவனுக்கு வாளால் தான் சாவு, என்று சொல்லிவிட்டு பர்ணபாஸை சேர்த்துக் கொள்ள மாட்டேன் எனத் திருப்பி அனுப்பி விட்டு யூதாஸ் (ஜுடாஸ் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்) காரியாஸை மட்டும் இணைத்துக் கொள்கிறார் சீடராக...12 வது சீடராக.

பேரதிசயங்களை செய்து காண்பிக்கும் யேசுவால் ரோமானியப்பேரரசை அழிக்க முடியும் அதிசயம் நடக்கும் என நம்பும் யூதாஸ் அதற்காக காத்திருப்பதாகவும். அது நடந்தேறாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் உணர்கிறார்

இடையே ஒரு முறை ஜூலியஸ் சீசர் தலையிட்ட நாணயம் ஒன்றை  வரியாக கட்டுகிறார், தம்மிடம் காசு இல்லாதபோது அவரை வரி கட்டச் சொல்லி காவலர்கள் நிர்பந்திக்கும்போது இவர் என்ன செய்யப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும்போது, கடலின் அடி ஆழத்தில் இருந்து மீன் வலையிட்டு தமது சீடரைப் பிடிக்க வைத்து மீனிடமிருந்து அந்த நாணயத்தை வரித்தண்டலரிடம் கட்டும்போதும் கூட  ஆண்டவரின் நாணயம் ஆண்டவருக்கும் அரசின் நாணயம் அரசுக்கும் (அதாவது சீசர் தலை பொறித்த நாணயம் சீசர் ஆட்சிக்கும் என்று) என்று சொல்லி வரியைக் கட்டி விடுவதாக பைபிள் சொல்கிறது.

ஆக உலகின் நாயகன் ஆட்சிக்கு அதன் நியதிக்கு உட்பட்டு வரி கட்டுவதாக எந்த வித முரணையும் தெரிவிப்பதாக இல்லை.

இதனிடையே இவரால் பேரதிசயம் நிகழும் என்று நம்பி வெம்பும் யூதாஸ் காரியாச் உலகின் மேய்ப்பராக அவதரித்த யேசுவான‌ இவருக்கு கோபம் வந்தாலாவது இவரால் அந்த ரோமானிய ராஜ்ஜியத்துக்கு கேடு வந்து அழியும் என நம்பியே 30 வெள்ளிக் காசுகளுக்கு இவரைக் காட்டிக் கொடுப்பதாக பைபிள் சொல்வதும் , காவலர்கள் இவரை சிறை பிடிப்பதும், மன்னர் இவர் மேல் அப்படி ஒன்றும் தவறு இல்லை நீங்கள் என்ன சொல்கிறீர் எனச் சபையைப் பார்த்துக் கேட்பதும் திருடனைக் கூட விட்டு விடலாம் இந்த அரசுத் துரோகியை மனித துரோகியை கொல்லும் கொல்லுமென  அவைக்கூச்சலிட இந்த பழியும் பாவமும் தம்மைச் சாராது என அந்த ரோமானிய மன்னர் அங்கிருந்து எழுந்து சென்றுவிட...யேசு சிலுவையில் ஏற்றப்படுவதாகவும்

ஏலி ஏலி லெமா செபக்தானி, இறைவா, இறைவா அல்லது ஆண்டவா, ஆண்டவா அல்லது தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் ? என அரற்றியபடி யேசு சிலுவையில் உயிர் மரிப்பதாகவும் பைபிள் சொல்கிறது..அதன் பின் பெரும் பாறையை உருட்டியபடி இவர் உடல் இருந்த குகையுள் இவர் உடல் இல்லாமல் இவர் அங்காங்கே திரிந்தார், கண்ணில் பட்டார் எல்லாம் இவர் தெய்வீகத்தை உணர்ந்தார் பரப்பினார்...அந்த 11 சீடரும் உலகின் மாபெரும் மதமாக இன்று விரிந்திருக்கும் கிறித்தவத்தை பரப்பினார் என்பதெல்லாம் செய்திகள்

ஆனால் அந்த யூதாஸ் காரியாஸ் அந்த 30 வெள்ளியையும் தூக்கி எறிந்து விட்டு சென்று மரத்தில் தூக்கிட்டுக் கொண்டு இறந்தார் அவர் உடல் கிழிந்து குடல் எல்லாம் வெளி வந்தன..அங்கு இரத்தம் சொட்ட அந்த நிலமே பாவ நிலம் இரத்த நிலம் எனப் பேர் பெற்றது என்றும் கூற்றுகள் உள்ளன.

இதில் சொல்லப்பட்ட இன்றைய யூதாஸ் காரியாஸ் ரோமானிய அரசுக்கு எதிராக அடிமை விலங்கை அகற்ற உதவுவார் என்ற எண்ணத்தில்தாம் அப்படி கோபமூட்ட யேசுவைக் காட்டிக் கொடுத்தார் கோபம் வந்தாலாவது யேசு அந்த ரோமானிய அரசை அழிப்பார் என நம்பிய‌ அதுவும் பலனளிக்காமல் போகவே தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணம்  சொல்லப்பட்டிருந்தது. அது எனக்குப் பிடித்திருக்கிறது. அது உண்மையா நடந்த இவை யாவும் சரித்திரப் பதிவுகளா?
அல்லது கதையா...எதுவும் தெரியவில்லை....

இதைப் பற்றி தெரிந்தவர் பகிர்ந்து கொள்ளலாம், எனக்கு வந்த வாட்ஸ் ஆப் பதிவுடன் எனக்கு உள்ள பைபிள் படித்த அறிவை பயன்படுத்தி இந்தப் பதிவை செய்திருக்கிறேன்...அந்தப் பதிவை அனைவர்க்கும் அல்லது தேவைப்படுவார்க்கு உணர்வின் மிகுதியால் அனுப்ப அவர் அதை தவறாக இன்று புரிந்து கொள்வரோ என்று உடனே எனது செல்பேசியிலிருந்தும் அழித்துவிட்டேன்..ஆனால் அதை யார் அனுப்பியது, அது வேறு எங்காவது இருக்கிறதா என பல மணி நேரம் தேடியும் கிடைக்காததால் அதைப் படித்த நினைவு உள்ள வரை, எனது சொற்களாலும் எனக்குண்டான பைபிள் அனுபவத்தாலுமே இந்த பதிவை இட்டிருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.