தாரமங்கலம் மாரப்பன் கணேசன்: கவிஞர் தணிகை
வசந்தம் அது ஒரு வசந்தம் எந்நாளும் வாசம் வீசும் சுகந்தம்
டி.எம்.ஜி T.M.G என்று மரியாதையுடன் பிரபலமாக அழைக்கப்படும் T.M.கணேசன் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்பதை விட எந்தவிதக் கெட்ட பழக்கமும் இல்லா இந்திய இராணுவ வீரர் என்பதே சரியாக இருக்கும்.
இளமையில் படிப்பு மேல் ஆர்வம் இல்லை. ஆசிரியர்கள் சித்ரவதை செய்வதாக உணர்ந்த சிறுவன் அடிக்கடி பள்ளியை விட்டு தாரமங்கலத்தில் உள்ள பிரபலமான கைலாய நாதர் ஆலயத்தில் அமர்ந்திருந்து விட்டு பள்ளி விடும் நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவது வழக்கம். (இந்தக் கதை எல்லாம் அவர் வாயிலிருந்தே "மாமா நீங்க எப்படி மிலிட்டிரிக்கு போனீங்க என்று கேட்டதற்கான பதிலில் இருந்து")
வீட்டுக்கு இது பற்றி எல்லாம் தெரிய வர தந்தையை இளமையிலேயே இழந்தவராதலால் இவரது மாமா அந்த ஊரின் பெரிய மனிதரான T.P.அண்ணாமலை முதலியார் என்பவர் இவரைத் தத்துப் பிள்ளையாக வளர்த்திருக்கிறார்.இவர் அந்த ஊரின் செங்குந்தர் பள்ளியின் தாளாளராகவும் இருந்தார். நிறைய சொத்து காடு கழனி தோட்டம், மளிகை இப்படி...
என்னடா கணேசா பள்ளிக்கூடம் போகாம இப்படிப் பண்றே , என்ற சொல் பொறாமல் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்று கேள்விப் பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டு இராணுவ வீரரான கதை எல்லாம் வேறு. அடியேன் சிறுவனாக இருந்து பார்க்கும் நிலையில்: ஆள் 6 அடிக்கும் மேல் நல்ல உயரம்,அழகு. நல்ல பலசாலியானத் தோற்றம், வசீகரமான முகம், சுருள் முடி.இது போன்று ஆட்களைப் பார்ப்பது அரிது என்றபடிதான் இருந்தார்.
எங்களுடைய ஒன்று விட்ட சித்தப்பாS.S பெருமாள் என்பவர் நிறைய பொது காரியங்களில் முன் நிற்பவர், எங்கள் வீட்டுப் பெண்களுக்கு முன் நின்று திருமணம் செய்து வைத்தார். அதில் ஒன்று...இவருடைய மணமும்.
ஒரு நாள் சித்தப்பா வீட்டுக்கு வரும்போது மதிய உணவு வேளை. அவருடன் ஒருவர் வருகிறார். இருவருக்கும் எனது மூத்த சகோதரி மல்லிகேஸ்வரி உணவு பரிமாறுகிறார். பெண்ணைப் பிடித்துவிட்டது. அவரையே மணமுடிப்பேன் எனத் தெரிவித்து மணம் நடைபெறுகிறது.சோதிடம் எல்லாம் பார்த்து செய்தார்களா என்று நினவில்லை. அவர்களுக்குM.G.R எம்.ஜி.ஆர் அதாவது மாரப்பன் கணேசன் இராஜ்குமார் என்னும் மகனும் , ஹேமலதா பழனிவேல்(நல்லாசிரியர் விருது பெற்ற பழனிவேல்தாம்) என்னும் மகளும் இன்று ஐம்பதை விஞ்சிய வயதில் பேரன் பேத்தி எடுத்த நிலையில் வளமாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஏன் இந்த மனிதரை காலத்தின் முன் பதிய வைக்க வேண்டுமெனில், அவ்வளவும் நல்லெண்ணம், பெருமுயற்சி, எடுத்த காரியத்தில் பெரும் ஈடுபாடு,ஈடு செய்ய முடியா கடின உழைப்பு என்பதற்காகத்தான்.
இராணுவ வீரராக இருந்த காலத்தில் ஜமால் பூர், காஷ்மீர், பட்டன்கோட் இப்படிப் பட்ட இடங்களில் இருப்பதாகச் சொல்வார் கடிதம் எழுதுவார் சகோதரியை அழைத்துச் சென்ற காலமும் உண்டு, வீட்டில் விட்டுச் சென்ற காலமும் உண்டு. அவர் வந்தால் சுருக்கமாகச் சொன்னால் எங்கள் வீட்டில் திருவிழாதான்.விதவிதமான தின்பண்டங்கள் எல்லாம் செய்து அவரது நண்பர்களுக்கு என்று எடுத்துச் செல்வார், அதில் எங்களுக்கும் ருசிக்க வாய்ப்பிருக்கும்.அசைவ விருந்துகள், வரும்போது பெட்டி பெட்டியாக அங்கு வாங்கி சேர்த்து வைத்திருந்த கேண்டீன் பொருள்கள், காஷ்மீரிலிருந்து வந்த போது ஒரு பெட்டி நிறைய காஷ்மீர் ஆப்பிள்கள், தேயிலை பெரிதாக இருக்கும் தேநீர் போடும்போது இலை சுருங்கி இருப்பது விரியும். தூள் அல்ல இலை.அவ்வளவு மணம் தரம்.
ஒருவாறாக 16 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்து முடித்து ஓய்வு பெற்ற இராணுவ வீரராக வெளிவந்தவர்க்கு சேலம் இரும்பு உருக்கு ஆலையில் பணிக்கு வாய்ப்பு. நிராகரித்து விட்டு வளர்ப்புத் தந்தை காட்டிய கடையில் ஒரு உணவகம் ஆரம்பிக்கிறார்.அதன் பேர் அண்ணா ஹோட்டல்.( வளர்ப்புத் தந்தை வாழ வைத்த அண்ணாமலை மற்றும் அறிஞர் அண்ணா என்ற பேர்களை இருவாறாக குறிக்கும்).
அடியேன் எப்போதுமே ஒரு எழுத்தாளனாகவே இருக்கிறேன். அப்போது சிறுவனாக இருந்த போதும் அவரை அவரது வாழ்வை உற்று கவனித்திருக்கிறேன். படு சுறுசுறுப்பு சுமார் 10 பேருக்கும் மேல் அவரிடம் பணியில் இருந்தாலும் இவரே எவராவது பணிக்கு வரவில்லையெனில் அந்தப் பணியை தயக்கமின்றி கூச்சமின்றிச் செய்வார், இலை எடுப்பதிலிருந்து, டீ போடுவதிலிருந்து சப்ளை எல்லாமே ஆல் இன் ஆல்,பள்ளிக்கு என்.எஸ்.எஸ் மற்ற நிகழ்வுக்கெல்லாம் இங்கிருந்துதான் உணவு விநியோகம் நடக்கும்.காலையில் தயிர் வடை,சுண்டல் , மசால் வடை, பஜ்ஜி எல்லாம் ஓரிரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து போகும், டிபன், சாப்பாடு, இரவு வரை தொடரும்.
காலையில் டீ போடுவார் வரவில்லையெனில் சைக்கிள் எடுத்துக் கொண்டு அந்த விடியற்காலையில் அவனுக்கு என்ன ஆயிற்று எனப் பறப்பார், பிறகு இவரே போடுவார் பாய்லர் காலம். தாரமங்கலத்தில் காலையில் சொம்பும் டம்ளர் கையுமாக எல்லாக் குடும்பத்திலிருந்தும் தறி நெய்யும் குடும்பத்தார் அனைவருமே டீக்கு வருவார்கள். டீக்கு ஒரே கூட்டமாக இருக்கும். அங்கேயே தேநீர், காப்பி வாங்கி குடிப்பாரும் உண்டு.
நாயர் குக் உணவு தயாரிப்பாளர், அவருடன் எங்கள் சகோதரியும் மன்றாடுவார், எல்லா வித உணவுகளும் அவ்வளவு தூய்மையுடன் , தரத்துடன் இருக்கும், கல்லுக் காட்டுக்காரக் கூட்டம் என்று ஒன்று உண்டு அது தை மாதம் தருவாயில் கர்நாடகாவிலிருந்து சொந்ந்த ஊருக்குத் திரும்பும் அவர்களுக்கு எல்லாம் இந்த உணவகமே மருந்து விருந்து எல்லாம். சகோதரியின் கைப்பக்குவத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு உண்டு. அது உரிய நேரத்தில் வருவார்க்கு கிடைக்கும் இல்லையேல் தீர்ந்திருக்கும். அண்ணா ஹோட்டலின் சுவை ஊரறிந்தது பேரறிந்தது.
எனது பள்ளிப் பிராயம் . உதவிக்காக வெள்ளிக் கிழமை மாலை அங்கு சென்று திங்கள் காலை எல்லாம் கூட திரும்பி வந்து பள்ளி சென்றதுண்டு. பள்ளித் தேர்வு விடுமுறைக் காலங்களில், தந்தை விடமாட்டார் ஆடி ஓடிப் பாடி சுற்றித் திரிய ...அங்கே சென்றால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்குமே என அங்கே செல்லப் பணித்து விடுவார்கள் எம் குடும்பத்தார். அதிக காலம் இருந்தால் சகோதரியும் மாமனும் துணி மணியுடன் அனுப்பி வைப்பார்கள்...ஓ! அந்த நாட்கள் கண்ணீர் வரவழைக்கும் நினைக்கும்போதே...அப்போது அதன் வண்ணம் தெரியவில்லை, இப்போது எண்ணம் தெரிகிறது.
குதிரை மாதிரி ஒரு அல்சேசன் நாய் அதற்கு கறி வாங்கி சமைத்துப் போடுவார் தம் கையாலேயே.சேலம் வியாபார நிமித்தம் சென்று வரும்போது ஹென்றி உல்சியில் கேக் பிரட், மல்கோவா மாம்பழம் என வாங்கி வருவார், இப்போதும் கிடைக்கிறது என்றாலும் அந்த ருசியில்லை. மனிதர் எல்லாவற்றிலும் உச்சம் தொட்டவர் அன்பு காட்டுவதிலும் பிறர்க்கு செய்வதிலும் மனம் கோணாமல், வருடத்தில் ஓரிரு முறையாவது கெடா விருந்து என 2 அல்லது 4 கெடாய்களை வெட்டி கறி விருந்து கொடுப்பார் அனைவரையும் அழைத்து குல தெய்வம், சாமி, மாரியம்மன் பண்டிகை விருந்து என...
ஒரு கட்டத்தில் ஹோட்டல் நடத்தியதைக் கை விட்டு மளிகைக்கு மாறிவிட்டார்கள்...காடு, தோட்டம், தொளசம்பட்டி சாலையில் நாகர் கோயில் எல்லாம் இவர்களுடையது. ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒழுக்கத்துடன் இருந்தால் என்னவெல்லாம் எப்படி எல்லாம் வாழ முடியும் என்பதற்கு இவர் வாழ்வு ஒரு எடுத்துக் காட்டு, கார், வீடுகள், நிலம் தோட்டம் இப்படி யாவும் உண்டு. இவர்களின் சந்ததியினர் எல்லாம் நன்கு வாழ செழுமை செய்து விடுகிறார்கள். இவரின் அன்பு மகன் M.G.R எம்.ஜி.ஆர்(எம்.ஜி.ராஜ்குமார்) அவர்களும் எனது அக்கா பையன் எனது கைகளில் தவழ்ந்தவர் அவருடைய கடமையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.
எனக்கும் கூட திருமணம் தமது செலவில் பண்ணி வைக்க வந்து கேட்டார் மாமா, போங்க ஒங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போங்க என் வேலையை நான் பார்த்துக்கிறேன் என முகத்தில் அறைந்தாற்போல பேசிவிட்டு அதற்காக இன்னும் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் பாருங்கள் அந்த மனிதர் எப்படிப்பட்ட நல்லவராய் இருந்திருப்பார் என.... நமக்கு யார் யார் எதற்கு எதற்கு பேசுகிறார்கள் என்பதே புரிவதில்லையே.
அவர் இல்லாது போயினும் அந்த மனிதரின் மணம் இன்னும் என்னுள், என்றும் என்னுள் வீசியபடியே இருக்கும், இருக்கிறது...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment