Thursday, February 5, 2026

திருவில்லிப் புத்தூர் இரத்தின வேல் அய்யா: கவிஞர் தணிகை

 திருவில்லிப் புத்தூர் இரத்தின வேல் அய்யா: கவிஞர் தணிகை



அரிய இந்த மனிதரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இணையத்தில், வலை தளத்தில், முக நூலில் கிடைத்த ஓர் நல் முத்து.இவர் மாதிரி இணையத்தை நல்லதுக்குப் பயன் படுத்தி வரும் நாயகன் எவருமே இல்லை எனச் சொல்லலாம். பெரியவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்.நிறைய அறிவார் சார்புடைய சபைத் தொடர்பு. இவர் போன்ற மனிதரைக் காண்பதரிதிலும் அரிதே.


எல்லாரையுமே மகள், மகன், என்று அழைத்துக் கொண்டு, எல்லோரிடமும் அன்பு மழை எப்போதும் பொழிந்து கொண்டு சூல் கொண்டு உயிர் மேகமாய் வாழ்ந்து வரும் ஒரு ஆற்றல் மிக்க மனிதர்.சொல்லை விட செயலை விரும்பும் செயல் வீரர்.மென்மையான மேன்மையான செயல்பாட்டாளர் பொறுமை நிதானத்துக்கு சொந்தக்காரர் அவர் நீடூழி வாழ இந்தப் பதிவு வாழ்த்துகிறது. முதுமை அல்ல இவருடன் இருப்பது நிறைய அனுபவத்துடனான இளமை.


நானறிந்த வரை எதையுமே, எவரையுமே இவர் புறம் தள்ளுவதே இல்லை. ஆண்டாள் உற்சவம் திருவில்லிப் புத்தூரிலிருந்து இவர் உலகெலாம் தொடர்பேற்படுத்திக் கொள்வதைக் காண முடிகிறது, சிவகாசியில் ஒரு தீப்பெட்டி உற்பத்தித் தொழிச் செய்வதாக அறிந்தேன். இவரின் வாரிசுகள் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். நாங்கள் இது வரை நேரில் சந்தித்ததே இல்லாத போதிலும் மிகவும் அணுக்கமான நண்பர்களாகவே இருக்கிறோம் எப்போதும்.


இவர் வழியாக சில புதிய‌ புத்தகங்கள் எனக்கு கிடைத்தன. அவை பற்றி எனது வலைப்பூவில் எழுதினேன்.எனது நூல்களையும் வாங்கி என்னைப் பெருமைப் படுத்தினார். வெளியே சொல்லக் கூடாது என்று என்னிடம் உறுதி மொழி வாங்கியபடி எனக்கு சில முறை எனது முக்கியமான கட்டங்களில் எனது மகனின் கல்விச் செலவுக்கு உதவிய மாமனிதர்.


சுஜாதா தமது இரத்தம் ஒரே நிறம் நாவலுக்கு இவரிடம் ஆதாரங்கள் பெற்றமை பற்றியும், அவர் எழுதிய கடிதத்தையும் பெருமையாகக் கூறுவார். அவருக்கு சுஜாதாவுக்கு நான் எனது நூல்களை அனுப்பி வந்தமை பற்றியும் அவர் எனை எனது பேரை ஒரு நூலில் (சிறு கதை நாவலில்) கதையின் நாயகனாக வைத்தது பற்றியும், கலாம் எனக்கு எழுதியிருந்தது பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டமையின் போது ஏற்பட்ட இடைவெளியைக் கூட ஏன் உங்களைக் காணவில்லை என்பதற்கு பதிலாக‌ குறிப்பிட்டிருந்தார்.


இவரது விலாச அட்டையில் இவரது தர்மபத்தினி துணைவியுடன் இருப்பது எப்போதும் எம் கண்களில் நிற்கிறது. நட்பு என்பதும், அன்பு என்பதும் உலகின் எந்த மூலையிருந்தாலும் மலர்வதே மணம் பரப்ப, மனிதம் மனித நேயம் எப்போதும் உயிர்ப்புடன்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment