Monday, February 5, 2024

ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்:உலக மானுடத்துக்காக அன்பை விதைத்த ஒரு ஆய்த எழுத்து. .கவிஞர் தணிகை

 ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்: கவிஞர் தணிகை



672 பக்கமுள்ள பெரிய புத்தகம். தமிழ் படுத்தியது: கி. ரமேஷ் என்பவர்.சி.ஐ.டி.யூ 12 ஆம் மாநில மாநாட்டின் சிறப்பு வெளியீடாக பாரதி புத்தகாலயம் முதல் பதிப்பாக 2013ல் வெளியிட்டுள்ளது.


நெல்சன் மாண்டேலா பேச்சு, ஆப்ரஹாம் லிங்கன், மார்ட்டின்லூதர் கிங் உரை, அறிஞர் அண்ணா ராஜ்யசபா உரைகள்,இப்படி நிறைய தலைவர்கள் உரைத்தன யாவுமே வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்றவைதான். அதில் இதென்ன ஃபிடல் காஸ்ட்ரோ பேருரை மட்டும் உயர்ந்தது என்கிறீர்களா? 


ஆம் உண்மையில் உயர்ந்ததே. ஒரு நாட்டை கட்டி உருவாக்கிய தலைமை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் 600 முறை இவரை கொல்ல யத்தனிப்புகள், அத்தனையும் தோற்றுப் போக 2016ல் இயல்பாக உயிர் நீத்த உன்னத தலைமை.


சே வின் மரணம் 32ஆம் வயதில் நிகழ்ந்தது போல இந்த மனிதரையும்  துப்பாக்கி முனை குத்தி எழுப்பிய நிகழ்வு பற்றி அவரே குறிப்பிடுகிறார்: நாங்கள் தரையில் வேர்கள் மீது பாறைகள் மீது தூங்குவதில் சோர்வடைந்து தென்னை இலைகளால் மறைக்கப் பட்ட தற்காலிகக் கூடாரங்களில் உறங்கி விட்டோம். எங்கள் நெஞ்சை நோக்கி துப்பாக்கிகள் குறி பார்த்திருக்க கண் விழித்தோம். 

ஒரு கறுப்பான லெப்டினன்ட் எதிரி வீரரால் 3 முறை காப்பாற்றப் பட்டதாகச் சொல்கிறார்,அவர் அவருடைய வீரர்களிடம், சிந்தனைகளை உங்களால் கொல்ல முடியாது, சிந்தனைகளை உங்களால் கொல்ல முடியாது என கறுப்பு லெப்டினன்ட் கூறி மற்ற வீரர்களிடமிருந்து முதலில் காப்பாற்றியதில் இருந்து , கழிப்பதை விட கூட்டுவது நல்லது என அந்த லெப்டினன்ட் புரட்சியின் வெற்றிக்கும் பின் அமைந்த கியூபா நாட்டின் குடியரசுத் தலைவருக்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப் படுவதையும் சொல்கிறார்.


இந்த புத்தகம் பற்றி நிறையக் குறிப்பிட வேண்டும் அவை உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்தும் என்பதால் மிகவும் சுருக்கமாக சொல்ல விழைகிறேன்.7 வீரர்கள் 8500 வீரர்களை வென்ற வரலாறு என்கிறார். எப்படி எல்லாம் நிகழ்ந்ததோ. முனைவர் மு.வவின் எழுத்துகள் போல சற்று வறட்சியான எழுத்துகள்தாம் என்றாலும் யாவும் ஃபிடல் பேசியவை என்பதாலும் முடிவிற்கு செல்லச் செல்ல மயிர்க்கூச்செரிய எதையாவது நாமும் இந்த உலகுக்கு செய்ய வேண்டுமே என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அந்த அளவு வீரியமுள்ளவை இவை. மேலும் மொழிபெயர்ப்புக் கவர்ச்சி இல்லாத போதும்.


நான் சொல்ல முற்படுவது:

 பாலர் கல்வி முதல் முனைவர் கல்வி வரை கியூபாவில் கல்வி இலவசம்.

ஒன்பதாம் வகுப்புக்கு கீழ் கல்வி பயிலாதவர் எந்த வயதிலும் இல்லை. 103 வயதுடைய புதிதாக கல்வி கற்றவரை புத்தகம் எழுதச் சொல்கிறார் ஓரிடத்தில் ஃபிடல். 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் வகுப்புகள்.


அனைவர்க்கும் மருத்துவம் இலவசம். அமெரிக்க நாட்டை அதன் தலைமை புஷ் போன்றோருக்கு எழுதுகிறார் , ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தில் 3000 புற்று நோய் நோயாளிகளைக் கூட ஒரு உதவியாளருடன் அனுப்புங்கள் இலவசமாக மருத்துவம் செய்து அனுப்புகிறோம் என்கிறார்.


சராசரி கியூபர்களின் ஆயுள் 76.13.


வேலையின்மை 2.3%


85% சொந்த வீடு, 15% பெயரே வாடகை வீடு, அதிலும் வாடகை வருவாயில் 10%


ஒரே ஆண்டில் கல்வி அறிவின்மையை ஒழித்தது, 

தொழில் கல்வி நுட்பத்தில் 64% பெண்கள்.


அவர்களின் வானொலி, தொலைக்காட்சி அழுகிப் போன சமூக மதிப்புகளை தொழவோ உயர்த்தியோ பிடிப்பதில்லை. தலைவர்களின் படங்களும், சிலைகளும் அனுமதிக்கப் படுவதில்லை. இந்த நாட்டின் தலைவர்கள் மனிதர்கள்தாம் கடவுள் அல்ல. வணிக விளம்பரங்கள் அதில் இடம் பெறுவதில்லை. மாறாக‌ சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் சுற்றுச் சூழல் சிந்தனைகள்  போதைப் பொருள் ஒழிப்பு போராட்டம், விபத்துகள் போன்ற பொதுச் சேவை அறிவிப்புகள் இடம் பெறுகின்றன‌


உயிர் வாழுகின்ற எந்த புரட்சியாளர்க்கும் தனி மனித துதி, சிலை வடிவிலோ, அலுவலக புகைப்படமோ, தெருக்களுக்கு, நிறுவனங்களுக்குக்கும் பெயர் வைப்பதன் மூலமோ செய்யப் படுவதில்லை.


மிக முக்கியமான ஒன்று: மக்களுக்கெதிராக ஒரு போதும் தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.


உலகின் அனைத்துப் புகழும் ஒரு பிடி சோளத்திற்குள் அடங்கி விடும்...என அவரின் முன்னோரான மார்த்தி என்ற வரலாற்று ஆசிரியரை நினைவு கூர்கிறார். 


இன்று உலகம் ஒரு போர்க்களம் என்றும், உலக மயம் ஒரு வரலாற்று விதி என்றும் குறிப்பிடும் ஃபிடல் தினமும் 40,000 குழந்தைகள் பசி பஞ்சம் வளர்ச்சியின்மையாலும் ஊட்டச்சத்து குறிபாட்டாலும் இறந்து கொண்டிருக்கிறது இது 3 நாளுக்கு ஒரு ஹிரோசிமா மேல் குண்டு போட்டு அழிப்பது போல என்கிறார்.


மனிதாபிமானம் எனது தாய் நாடு என்கிறார் மார்த்தி ஃபிடலின் முன்னவர்

ஃபிடல் பாணியில் சொல்லப் புகின் புரட்சி என்பது எல்லையற்ற மனித நேயமே.

ஒரு மனிதனின் சிந்திக்கும் திறனும் பகுத்தறிவு(ம்) திறனும் பாதிக்கப் பட்டால் அவன் ஒரு சமூக விலங்கே என்கிற ஃபிடல் நமது தமிழில் சொல்லப் போனால் உலக மானுடத்துக்காக அன்பை விதைத்த ஒரு ஆய்த எழுத்து.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு:கி.பி: 2006 ஆம் ஆண்டில் ஃபிடலில் 80 வது பிறந்த நாளில் கியூபாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்ஃபிலிப் பெரோஸ் ரோக்  ஃபிடலிடம் இருந்த  பண்புகளாக சிறந்த 15 பற்றி குறிப்பிடுகிறார்:

1. ஒற்றுமை,2. அறநெறி, 3. பாராட்டு, பொருள் பரிசுகளை ஏற்காமை,4. சீரான தன்மை, 5. சுய உதாரணம்

6. உண்மை,7. பரிவுணர்ச்சி, 8.பாசாங்கு பகட்டுத்தன்மை இல்லைமை, 9. தொடர்ந்து கற்றல் 10.தம்மிடம் பேசுபவர் எதைக் கோருகிறார் என்ற உணரல் 11.தோல்வியை ஏற்க மறுப்பது 12 அனைவர்க்கும் நீதி, 13.சிந்தனை வலிமை சுய உறுதிப்பாடு.14.மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை.15. யார் மீதும் எந்த வெறுப்பும் கொள்ளாமல் இருப்பது.

No comments:

Post a Comment