Monday, February 26, 2024

இருபதாம் நூற்றாண்டு சிறு கதைகள் நூறு:கவிஞர் தணிகை

 இருபதாம் நூற்றாண்டு சிறு கதைகள் நூறு:கவிஞர் தணிகை



சீர் வாசகர் வட்டத்தின் முதுகெலும்புடன் வீ. அரசு என்னும் பதிப்பாளர் மலிவு விலையில் தமிழ் சிறு கதை  வட்டத்தை நிமிர்ந்தெழ வைத்திருக்கிறார்.அதற்கு என தமிழ் ஆர்வலர்கள் பலர் நிதி உதவி செய்துள்ளனர். இல்லையேல் பரிசுக்குரிய நூல்களாக முதலில் ரூ.300 விலையிலும் அதை அடுத்து ரூ.500 விலையில் 1064 பக்கங்கள் தொகுத்து 100 சிறுகதைகளை அற்புதமாக வழங்கி உள்ளனர்.2016 ஆம் பதிப்பில் 1214 பக்கங்கள் விலை ரூ.599 என தற்போது இணையத் தேடலில் இருக்கிறது.


இதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வில்லை எனில் எனக்கு அது நெடு நாட்கள் நெருடலாக இருக்கும். இப்போதே சில நாட்கள் ஓடி விட்டன. மிக அரிய பணி . பாராட்ட வாய் வார்த்தைகள் போதா. கை எழுத்துகளும் போதா. என்னாலும் சில சிறு புத்தகங்களை தமிழ் உலகுக்கு கொடுத்தருள இயற்கை உதவி இருக்கிறது என்பதாலே இந்த நேர்த்தியான பெரிய நூலை இவர்கள் கொண்டு வர எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என என்னால் உணர முடிகிறது.


ஹோமம் , நாயனம், போன்ற கதைகள் நெஞ்சிலிருந்து மறையவே மறுக்கின்றன. சில கதைகள் பெயர் மறந்த போதும் அதன் மாந்தர்கள் என்னுள் இன்னும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். அதைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும் ஆனால் நீங்கள் படிக்க முனைவதே சிறந்தது.


புதுமைப் பித்தன் முதல் ஜெயகாந்தன் மற்றும் அந்தந்தக் காலக் கட்டத்தில் அவரவர் கைவண்ணத்தில் நேர்த்தியாக வடிவமைந்த‌ கை தேர்ந்த சிறுகதைகள் நூறை தெரிவு செய்து தொகுத்துள்ளனர். சில கதைகள் நேரம் பொழுது போக்க, சில கதைகள் படித்த மனதிலிருந்து கனத்தை எடுத்து வெளி எறிய முடியாமல், சில எரியம் விளக்கெனவும், வெளிச்சம் பரவச் செய்கின்றன.


சில கதைகள் ஏற்கெனவே படித்தவையும் இருக்கின்றன. எ.கா: ஜெயகாந்தன், புதுமைப் பித்தன், தி.ஜ.ர, மௌனி. நிறைய கதைகள் நான் மேலும் படிக்காதைவயே. முடிந்தவரை எல்லா எழுத்தாளர்களையும் கொண்டு வந்திருக்கின்றனர். அல்லது கொண்டு வர முயன்றிருக்கின்றனர் இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் பங்கெடுப்பில். எஸ். ரங்கராஜன் என்னும் சுஜாதாவின் கதைகள் ஏதும் இடம் பெறவில்லை என்பதில் எனக்கு சிறு குறையே.


காலத்தை 10, வருடம், 20 வருடம் எனப் பிரித்து வைத்து இருபதாம் நூற்றாண்டின் கதை கொண்ட பூ மாலை ஆக்கியுள்ளனர். நிறைய இது பற்றி எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா மிகையுறினும் எழுதும் மகிழ் இழைகள் அதிகம் மலராத ஒரு காலக்கட்டத்தில் எனது வாழ்வுப் பிரதேசம் மூழ்கி இருப்பதால் இத்துடன் இந்த பகிர்வுப் பதிவை நிறைவு செய்திருக்கிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment