Thursday, February 15, 2024

அதிசய மனிதன்: சாதத் ஹசன் மண்ட்டோ தமிழாக்கம்: ராமானுஜம்

 

அவமானம் என்ற சிறு கதைத் தொகுப்பிலிருந்து

 


அதிசய மனிதன்:

 

கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதற்காகப் போலீஸ் பல வீடுகளைச் சோதனை செய்தார்கள்.

 

பயந்து போன மக்கள், கொள்ளையடித்து வந்த பொருட்களை நடு இரவில் ஜன்னல்களுக்கு வெளியெ விட்டெறிந்தார்கள். சட்டத்தின் முறையற்ற நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நேர்மையாக வாங்கிய பொருட்களைக்கூட சிலர் விட்டெறிந்தார்கள்.

 

ஒருவனுக்கு மட்டும் பிரச்சனை இருந்தது. ஒரு மளிகைக் கடை சூறையாடப்பட்ட போது எடுத்து வந்த இரண்டு பெரிய சர்க்கரை மூட்டைகள் அவனிடம் இருந்தன. ஓர் இரவு அவன் எப்படியோ அதை அந்த வட்டாரத்தில் இருந்த கிணற்றுக்கு இழுத்துச் சென்றான். ஒரு மூட்டையைச் சுலபமாகக் கிணற்றுக் குழிக்குள் தூக்கிப் போட்டான். ஆனால் இரண்டாவதைத் தூக்கிப் போடும்போது

அதோடு சேர்த்து அவனும் கிணற்றுக்குள் விழுந்தான்


அவனின் அலறல் எல்லோரையும் எழுப்பி விட்டது. கயிறு கிணற்றுக்குள் இறக்கப்பட்டாலும் பயன் ஏதும் இல்லை. இறுதியாக இரண்டு வாலிபர்கள் உள்ளே இறங்கி விழுந்தவனை வெளியே இழுத்து வந்தார்கள். ஆனால் அவன் அடுத்த சில மணி நேரங்களில் இறந்து போனான்.


அடுத்த நாள் காலை அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்த போது அது மிகவும் இனிப்பாக இருந்தது.


அன்று இரவிலிருந்து அந்த அதிசயமனிதனின் சமாதியில்,விளக்குகள் ஏற்றப்பட்டு பிரார்த்தனை செய்யப் பட்டது.


No comments:

Post a Comment