Friday, February 2, 2024

இலக்குகள் பெரிது. அதனால் அடையும் இழுக்குகள் அதிகம்.:கவிஞர் தணிகை

 மலட்டுத் தன்மையுடனான‌ வீரியமற்ற நச்சு விதைகள்: கவிஞர் தணிகை



கற்பனையோ, காவியமோ, கவிதையோ அதன் சொற்சித்திரத்தின் அடர்வில் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதியைத் துகிலுரிய முடியைப் பிடித்து இழுத்து அத்தினாபுரத்து வீதிகளில் செல்லும் போது அனைவரும் நின்று வேடிக்கை பார்த்ததாக புராணம் பற்றிய செறிவுடன் பாரதி "நெட்டை மரங்களென நின்றார்" எனச் சுடர் கொடுத்திருப்பான் ஒரு இருளுக்கு.


சிந்திக்கும் திறனும், பகுத்தறியும் திறனும் அற்ற மனிதர்கள் சமூகத்தில் விலங்குகளே என தற்போது பிடல் காஸ்ட்ரோவின் மொழி பெயர்ப்பு சொற் கோர்வை ஒன்றை கடக்க வேண்டி வந்தது.


மலட்டுத் தனம் அல்லது குழந்தைக்கான கரு உறாமை பல் வேறுபட்ட காரணங்களுடன் இருந்தன அப்போதும்.

அவர்கள் தத்து எடுத்துக் கொண்டனர்.இப்போது அறிவியல் செயற்கை கருவூட்டல் பெரும் வியாபாரமாகிவிட்டது


ஆனால் அது பற்றி நாம்பெரிதாக சொல்ல விரும்பவில்லை.

மாறாக அந்நாளில் இருந்து இந்நாள் வரை வீரியமற்ற விதைகளை, விதைகளற்ற பழங்களை, காய்கறிகளை நமது மண்ணுக்குள் காலப் போக்கு கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறது.அவற்றை விலக்கப் பழகாமல் உள் வாங்கி விட்டது இன்றைய நாடும் மனிதமும். எல்லாவற்றிலும் ஒரு அதி வேக அவசரம்.(வீட்டைப் பற்றி மட்டுமல்ல நாட்டைப் பற்றியும் தாம் சொல்கிறேன்.)


அதன் பலன் ஆண்மையற்ற, வீரியமற்ற உற்பத்திகள். யாரும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டால் அவர் எதிரி எனக் கருதப் பட்டு விலக்கி வைக்கப் படுகிறார் அல்லது ஒதுக்கி வைக்கப் படுகிறார். அல்லது புறக்கணிக்கப் படுகிறார். அவர்களை மேல் எழ விழ முடியாமல் அழித்தொழிக்கப் பார்த்து அடக்கி அமுக்கி நிர்கதியாக்கி விடுகிற வாழ்வின் முறை நிகழ்கிறது.


எதோடு வேண்டுமானாலும் இயைந்து செல்லத் தலைப்படுகிற சமூகச் செறிவு அடையாளமின்றி அழிந்து போகும்.


அமெரிக்காவையும், ஐரோப்பிய மேற்கத்திய இழிவுகளையும் ஏந்தும் ஒரு குப்பைக் கூடையாகிக் கொண்டிருக்கின்றன நாகரீகத்தின் தொட்டில்களான பாரம்பரியமிக்க நிலப்பரப்புகள்.விவசாயம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் கவனம் முழு கவனம் செலுத்தாமல் திசை திருப்பப் பட்டிருக்கும் பார்வைச் சோரங்கள்


எண்ணத்தால் அடிமைகளாகவே இன்னும் வாழத் தலைப்படும் நேர்மையற்ற குணாம்சங்கள்.


கலை, அரசியல், பொருளாதாரம்,கல்வி , வேளாண்மை , மேலும் பல்லுயிர்த்தொழில்கள் யாவற்றிலும் விழிப்படைய வேண்டிய தேவை இன்னும் இருக்கிறது.


மலட்டுத் தனம், வீரியமில்லா விதைகள், நச்சு விதைகள் என எல்லாத் தரப்பிலும் நிறைந்து கொண்டிருக்கின்றன. இவை சரியான பாதையில் செல்லவே இல்லை.


கார்கி, சித்தா  போன்ற படங்கள் கூட தமிழ் மண் கலாச்சாரத்தோடு தொடர்புடையதாக இல்லை.இவை எங்கிருந்தோ இங்கு வந்து புகுந்து கொண்ட நச்சு விதை தூவும் விடயங்களாகவே இருக்கின்றன. இவை எல்லாம் உள் வராதிருந்தாலும் கூட நல்லதே.


உள்ளீடற்ற உப்பிப் பெருக்கும் சமூக பலூனாய் சென்று பெருத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நாம் இல்லாதிருப்போமாக.


எதையோ ஒன்றைச் சொல்ல வந்து சொல்லாமல் இருப்பது போல் தெரிகிறதா? எனக்குள்ளும் அப்படித்தான் இருக்கிறது. சொல்லியும் சொல்லாமல் இருந்து உங்களைச் சிந்திக்கச் செய்வதும் ஒரு வகை எழுத்து முறை.


தாய் தந்தையரை பராமரிப்பு விடுதிகளில் கொண்டு விடுவது பற்றிய பதிவுகளைக் கூட படிக்க மறுக்கிற விரும்பாமை முகில்க்கிற‌ சிந்தை நமது. தந்தைக்கும் பின் தாயுடன் 20 ஆண்டு காலம் ஒருங்கே இணைந்து வாழ்ந்ததால்.சகோதர சகோதரிகள் என்ற குடும்ப நிறுவன அமைப்புக்கு உறுதுணையாக இருந்ததால் மேலும் துணை செய்ததால் அதன் வேர்களுடன் மேலும் வளர்கிற முறையை உட் கொண்டு இருப்பதால் நண்பர்களே நான் ஒரு பழங்கால மனிதன்.


எனக்கு மாபெரும் மனிதராய் உயர்ந்தோர் பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் என்னுள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களால் எல்லாம் எப்படி முடிந்தது? என்னால் ஏன் முடியவில்லை? எனது இலக்குகள் பெரிது. அதனால் அடையும் இழுக்குகள் அதிகம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




No comments:

Post a Comment