Tuesday, November 8, 2022

இன்டன்ஸிவ் கேர்/கடைசி ரொட்டித் துண்டு. : கவிஞர் தணிகை.

 எதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக எதை எல்லாம் செய்யக் கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.உண்மைதான்

ஆனால் சில போக்கிரிகளும், குறும்பர்களும் எதை எல்லாம் செய்யக் கூடாது என்று தெளிவு படுத்தப் படும்போது எதை எல்லாம் செய்யக் கூடாது என்பவற்றை செய்து பார்த்து விடுவதும் படிப்பினை என்று செய்யக் கூடும். அதன் பிறகுதான் நாங்கள் அவற்றை செய்வதிலிருந்து விடுபட முடியும் என்றும் செய்வதும் சொல்வதும் உண்டு. Learning process.அப்படித்தான் அறிவியல் விஞ்ஞானிகளும் உருவாகிறார்கள் ஆனால் அது எது வரை எந்த வரையறை எவற்றுக்கு எல்லாம் பொருந்தும் என்பதில் கவனம் வேண்டி இருக்கிறது.



பலர் அப்படி வீழ்ந்து போய் விடுவதும் உண்டு. ஆனால் அதை எல்லாம் மீறி நாம் இங்கு சொல்லப் புகுவது:


வேண்டாத பகுதிகளை வெட்டித் தள்ளும்போதுதானே அழகிய உருவச் சிலைகளும், விக்கிரங்களும், அதே போல குரோட்டன்ஸ் செடிகளும்...உருவம் கொள்கின்றன... சரி சொல்ல வேண்டியதை சொல்லும் கவனத்துக்கு வருவோம்...


முதலுதவி என்ற பேரில் தண்ணீர் தெளிப்பது, தண்ணீர் குடிக்க வைப்பது மயக்க நிலையில் உள்ளவர்க்கு செய்யக்கூடாது என்றது நல்ல செய்தியாக இருந்தது.


 ஒரு சிறு காணொளி மூலம் 1. மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு, 2.உடலில் அடிபட்டு இரத்தக் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிச் செல்லும் நிலையில் உள்ளார்க்கு,3,தலையில் அடிபட்டு இரத்தப் போக்கு உள்ளார்க்கு, 4, தீக்காயம் ஏற்பட்டு தண்ணீர் தண்ணீர் என கத்திக் கொண்டிருப்பார்க்கு,5 மாரடைப்பு ஏற்பட்டு உள்ளவர்க்கு குடிநீர் கொடுக்கக் கூடாது என்று அந்த முதலுதவி பயிற்றுநர் சொல்லியதைக் கேட்டபோது எனக்கு எனது தாய் மாரடைப்பு என சிகிச்சை முனையில் இருந்த போது நாங்கள் அளித்த கடைசித் தண்ணீரும், ஒரு சிறிய ரொட்டித் துண்டு அளித்தது பற்றிய நினைவும் வந்தது. 16 ஆண்டுகள் கழித்து  நாங்கள் செய்த தவறு இப்போதுதான் புரிந்தது.


ஏன் எனில் நுரையீரலுக்குள் நீர் புகுந்தால் உடன் மரணம் என்கிறார் இவர். அப்படித்தன் நடந்தன, நடக்கின்றன.

அதனால் தான் சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட வேண்டுமென்பார் பெரியார். சுவாசக் குழாய் எப்போதும் தன் வேலையை செய்ய, உணவுக் குழாய் தேவையான போது திறந்து மூட வேண்டும் என்பதால்...அதனால் தான் படுத்துக் கொண்டே சாப்பிடக் கூடாது என்பர்

கட்டில் மேல் நோயாளிதான் அமர்ந்து சாப்பிடுவர் எனவே கட்டில் மேலும் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பர் காரணம் தெரியாமலேயே நமது பெரியோர்.


காற்றுப் பைகள் காற்றை நிரப்புவதற்கு பதில் நீரை நிரப்பினால் நடப்பதுதான் அசம்பாவிதம்...


ஆனால் இரைப்பை, வயிறு நிறைய‌ சாப்பிடக் கூடாது, அரை வயிறு உணவு, கால் பங்கு குடி நீர், கால் பங்கு வெற்றிடம்( இந்த வெற்றிடம் என்பது ஆகாயத்தில் காற்றில்லாமல் இருக்கும் இடம் அல்ல) அல்லது காற்றுக்கான இடம்  இவையே செரிமானத்திற்கு ஏற்றது என்பதும் நினைவுக்கு வருகிறது.


சில அரிய காணொளிகள் நமக்கு நல் அறிவைக் கொடுக்கின்றன. என்னதான் மிகப் பெரிய அறிவு சார்ந்தாராக தம்மை கருதுவார் இருந்தாலும் கற்றது கைம்மண் கல்லாதது உலகளவு...காணொளிகள் நிறைய செல்பேசியில் இடம் அடைத்து முடியாமல் போகிறது என்று சலித்துக் கொள்வார் கூட இது போன்ற காணொளிகளால் மேன்மை அடையலாம் பிறர்க்கும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து பரிமாறிக் கொள்ளலாம்.


அன்னப் பறவை நீரை விட்டு பாலை பருகும் என தமிழ் இலக்கியம் சொல்வது கற்பனை என்றாலும் கூட அதுபோலத்தான் நாம் கற்க வேண்டும், படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்பது அத்தியாவசியமானது என்கிறார்கள் இரமண மஹரிஷி போன்ற குருமார்கள்.


நல்லது

 நன்றி நண்பர்களே..


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


இன்டன்ஸிவ் கேர்:

No comments:

Post a Comment