Sunday, November 20, 2022

எண்ணூறு கோடியில் ஒருவன்: கவிஞர் தணிகை

 எண்ணூறு கோடியில் ஒருவன்: கவிஞர் தணிகை



லேட் பட் லேட்டஸ்ட் என்றால் அது பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த எண்ணூறு கோடியைத் தொட்ட குழந்தைதான்.


எமது குடும்பத்தில் அடியேன் கூட எட்டாவது குழந்தைதான்.புதியதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் அணுக்கள் எண்ணிக்கையில் குறைபடுவதும் உரு சிதை மாற்றமும், வளர் சிதை மாற்றமும் வளர்தலில் தளர்தலும் நிகழும் மனிதம் என்பது இயற்கையின் கொடை, பரிசு, பதிப்பு, வாய்ப்பு.


18.11.22 வ.உ.சியின் நினைவு நாள் மட்டுமல்ல எனது தந்தையின் நினைவு நாளும் கூட. அன்று பெற்றவர்களை ஒட்டு சேர்த்து வணக்கம் செலுத்திய நாள். அன்று மட்டுமா? என்றுமே எப்போதுமே நாம் அவர்தம் பிரதிதானே?மனிதச் சங்கிலி நீள்கிறது விவேகானந்தா சொல்லியது போல மனித அலை ஒன்றின் தொடர்ச்சியாய் மற்றொன்று தொடரும்...


என்னுள் இருக்கும் அணுக்களும் வெடித்துச் சிதறும் முன்னே ஒரு பதிவவசியம். தாயிடம் இருந்து வந்த பிண்டமும் தந்தை கொடுத்த விந்தணுவும் வளர்கிறது உருப் பெருகிறது. பாரதி சொல்லி இருப்பது போல ...


நான் என்றோர் தனிப் பொருள் இல்லை

நானெனும் எண்ணமே வெறும் பொய்.


என்னுள் இருக்கும் பெற்றோர், உற்றார், உறவுகள்,சகோதர சகோதரிகள், வாழ்க்கைத் துணை, நட்பு ஊர்கள் இப்படி எல்லாவற்றின் கலவையும் சேர்ந்தே இருக்கிறது பிறப்பால் விளைந்த இரத்தம் சதை அணுக்களுக்கும் அப்பாற்பட்டு அல்லது உள்ளடங்கியும் குறிப்பிட்டுச் சிலரை சொல்ல வேண்டுமெனில் வேலாயுதம் , மாதவன் , மல்லிகா, மணியம், குகன்,பிரவீன்,இரத்தினவேல்,ஒரே தங்கை இப்படி என்னுயிருக்கு உறுதுணையாக இருந்து பிரிந்து போகாமல் இன்னும் இருக்கும்படி அந்த அந்த காலக் கட்டத்தில் முக்கியமாகத் தெரிந்து அதன் பின் தொலை தூர இடைவெளியுடன் இருந்த இருக்கும் நிறைய முகங்கள் இருக்கின்றன...


எவற்றை நான் விடுவது? எவற்றை எல்லாம் நான் எப்படிக் குறிப்பிடுவது...நினைவோட்டம் உங்கள் நேரத்தை வீணாக்கும் எனவே விட்டு விடுகிறேன்.


இந்தியா மக்கள் தொகையில் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை விஞ்சும்...இந்தியாவும் சீனாவும் சேர்ந்தால் எண்ணூறு கோடியில் முன்னூறு கோடிக்கும் மேலாகிவிடுகிறது. இந்த மனிதத்தில் தான் எத்தனை இனம், இரகம், நிறம், மாறுதல்களுடன்...


செயலே புகழ் பரப்பும்... வாய் அல்ல...


தாயைப் போல நிறத்தில் இருக்கும் எனை கிறித்தவன், முகமதியன், தலித், இப்படி நிறைய காலக் கட்டங்களில் கலகக் கட்டங்களில் நிறைய பேர் சொன்னதும் உண்டு நினைத்ததும் உண்டு.ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நீ யார் என்ற கேள்விக்கு மனிதன் என்றே இருக்க வேண்டும் என்பார் அது போல...நான்.


இந்திய இனம், ஆப்பிரிக்க இனம், இப்படிப் பார்க்கப் போனால் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, அமெரிக்காவில் இருக்கும் இனம் யாவற்றின் பிறப்பிடம் பெரும்பாலாக பொதுவாகப் பார்க்கப் போனால் இங்கிலாந்து. அதன்றி மீதி இருக்கும் எல்லா இனத்தின் கூட்டுத் தொகையைக் கணக்கிட்டால் அது மிகவும் குறைவே.


கறுப்பு நிறத் தோலை இன்னும் மனிதம் மகத்துவமாக எளிதில் நினைக்க மறுக்கிறது. மகாத்மா கூட ஒரு கறுப்பர்தாம். எனினும் விதிவிலக்குகளும் அடர்த்தியான அங்கீகாரமும் கவர்ச்சித் தோற்றத்திற்கு இன்னும் சிவப்பு, வெள்ளைத் தோலை நம்பிக் கொண்டிருக்கின்றன.35 துண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நல்ல நிறக் காதலியை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பார்க்கிற நிலையில் மனித இனம் இழிந்து போகும் நிலையில் தோற்றத்தில் ஒன்றும் இல்லை செயலில் யாவும் இருக்கிறது என்ற அறிதல் புரிதல் தெரிதல் தெளிதல் பட்டறிவு கூட இல்லாதார் மனிதர்.


மேலை நாடுகளில் இன்னும் கழிப்பிட ஊன் தூய்மை உடல் தூய்மை பாலின இணைதல் தூய்மை, ஏன் திருமூலர் சொல்லியபடி ஊனுடம்பு , உன்னுடம்பு ஆலயம் எனும் நினைப்பு வர வழியே இல்லாதிருக்கிறார்கள்...மேலும் கள்ளப் புலனைந்தும் காணா மணிவிளக்கு, காளா மணி விளக்கு என்பதறியாத படியே மனிதம் பிறந்து மறைந்து வருகிற நிலையில் இராமலிங்கர் போன்ற ஞானிகள் சிலரே திருமூலர் போன்ற சில அரியரே உடல் எப்படிப் பட்டது என்ற உண்மையை உலகுக்களிக்கின்றனர்.


சொல்லப் போனால் தமிழர் என்ற ஒரு இனத்திற்கே அறிவு சார்ந்த தொன்மை சிறப்புகள் நிறைய உண்டு.

எனைப் பார்த்து பழகியவரில் ஒருவர் நான் பள்ளியில் ஒரு முறை பழைய ஆடையை உடுத்த வேண்டிய நிலை வந்தது என்ற உண்மையைக் குறிப்பிட்டதால் பழைய ஆடையை என்றுமே உடுத்துபவன் என்று தப்புக் கணக்கு போட்டு கேட்டதுண்டு... கல்லூரியில் பணி புரிந்த காலத்தில் எனது ஆடைகள் தரட்டுமா என்று? நான் அந்த ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நாளில் ஏழைகளுக்கு புத்தாடை குளிர் நீக்க வழங்கி உயர்ந்த நிலையிலும்....நாம் பேசும் பலவற்றை செய்யும் பலவற்றை வாய்ப்பாக சிலர் மறந்து விடுகிறார்கள்.அறிவாளிகளா? அறிவிலிகளா?


பிறப்பால் இயல்பாக அமைந்த சகோதரிகளையும்,அவர் தம் நிறத்தையும்( தந்தை வழி பெண்கள் எங்கள் வீட்டின் வண்ணங்கள்) அவர்தம் பொருள் பலத்தையும் காண்பித்தால் மட்டுமே ஓ! இவரும் உயர்ந்த மேனிலையாளர்தாம் பூவோடு சேர்ந்த‌ நாரும் மணக்கும் என்ற புரிதலே சுருக்கமாக சில மனிதர்க்கு வருகிறது போலும்...ஆனால் அந்தக் காலக் கட்டங்கள் எல்லாம் விரைவாக ஓடி மறைந்தன அவை குறிப்பது அவர்க்கு இருக்கும் குறுகிய மனம் பற்றியதே, அறிவின் சுருக்கம் பற்றியதே அன்றி எமை அவை யாவும் பாதிக்காது... விரிவாக அவை பற்றி சொல்ல ஏதுமில்லை...


பூக்களுக்கு விலையுண்டு நார்களுக்கும் வேர்களுக்கும் மதிப்பு இல்லை அவையே  மருந்தாகும் என்ற நிலையை தெரியும் ஞானம் வரும் வரை...


18.11.2022 அன்று துணைவியின் செல்பேசி சீராகி விட்டதா என கடையில் விசாரித்தேன்... அங்கிருந்த கடை சார்ந்த ஒரு பெண் எனக்கு அறிமுகம் இல்லார், நீங்கள் தாமே அந்த சுவர் வாசகம் எல்லாம் எழுதுவது , முட்டைக்காரர் கம்பெனியில் பணிபுரிந்து இப்போது மின்வாரியத்தில் பணி புரியும் வனிதா அக்கா உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்... அந்த கபாலீஸ்வரர் கோவில் உருவாக்கத்திற்கே நீங்கள் தாம் முக்கிய காரணம் என்றும் சொல்லி இருக்கிறார், தொப்பியும், கண்ணாடியும் அணிந்திருப்பார் என்றார், நான் நீங்கள் நடைப்பயிற்சி செல்லும் போது தினமும் ஒரு முறையாவது எங்காவது பார்க்கும் வாய்ப்பு இருக்கும் எனவே கேட்கிறேன் என்றார்.


மேலும் கடையின் உரிமையாளர் பெண்: எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததற்கே இவர் தாம் காரணம் இவர் எழுதிய புத்தகமே எங்களுக்கு வழிகாட்டி. நிறைய புத்தகம் எல்லாம் எழுதி இருக்கிறார், வாங்கிப் படித்துப் பார் எல்லாம் தெரியும் என்றார்...


அடியேன் தாம்...அது...கலாம் அவர்கள் தொடர்பில் இருந்திருக்கிறேன்...அவர் எனக்கு கடிதமே கூட எழுதி இருக்கிறார், 


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவையில் பேசுமளவு வாய்ப்பெல்லாம் கிடைத்தது.


இந்த நாட்டில் மலை வாழ் மக்கள் மேம்பாட்டுக்காக‌ சுமார்  பத்தாண்டுகள்  உழைத்திருக்கிறேன் திட்ட அலுவலராக என்று சிறு குறிப்பளித்தேன். எனைப் பற்றி சொல்லிக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்ற போதிலும்...


அவர்கள் எனக்கு பெரும் தொகை எதையும் தரவில்லை, நானும் அவர்க்கு தரும் நிலையில் இல்லை... ஆனால் நான் தொய்வடையும் கால நேரத்தில் எல்லாம் இயற்கை இப்படி எதையாவது காட்டி எனது பிறப்பை இருப்பை வாழ்வை பொருள் பொதிந்ததாக மாற்றி விடுகிறது...


நல்லதை மட்டும் செய்வோம் அடையாளம் தெரியா நபர்களாலும் அடையாளம் காணப் படுவோம்.செல்கையில் எவரும் அறியாமல் சென்று சேர்வோம்... நமது வாழ்வு என்றும் எங்காவது தொடர்ந்தபடியே இருக்க...


அல்லவை தேய அறம் பெருகட்டும்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



 



No comments:

Post a Comment