பட்டாசு சத்தத்திடையே ஒரு பசு மரத்தாணி: கவிஞர் தணிகை
யானைப் போர் குன்றேறி பார்த்தது போல உயரமான இடத்தில் இருந்து நேற்று மாலை வாண/ வான வேடிக்கை பட்டாசு வெடிப்புகளை ஆபத்தின்றி அழகாக செலவின்றி இரசித்தேன்.என்னதான் முயன்றாலும் மனிதம் இயற்கையை வெல்ல முடியுமா?
பனிக்காலம் ஆரம்பித்து விட்டது.பாஸ்பரஸ், பொட்டாஷ்,சல்பர் இப்படி இரசாயனக் கலவையால் ஏற்பட்ட நச்சுப் புகைக் கூட்டம் மேல் ஏற முடியாமல் புவியின் மிகக் குறைந்த உயரத்திலேயே சுவாசத்துக்கு இடையூறானது.முகக் கவசம் அணிவது அவசியமானது. தலைக்கு தொப்பி கண்ணுக்கு கண்ணாடி எல்லாமே தேவைதான். தெருவெங்கும் சாலை எங்கும் ஒரே குப்பை. அதில் வேறு அமாவாசை எலுமிச்சைகளும், இப்போதுதான் சாலைகளில் ஆயுத பூஜைக்கு உடைத்த பூசணிக்காய்களின் நினைவு துடைத்து எறியும் முன்பே அடுத்த அலை...
கடந்த ஈராண்டாக கோவிட் 19 காரணமாக கொண்டாட தடையில் இருந்ததாலோ ஒரே வேடிக்கை மயம். பொருளாதாரக் கரிகள் நிறைய இந்த ஆண்டு பெருத்து விட்டன.என்னதான் அரசு காலை 6 மணி முதல் 7 வரை மாலை அல்லது இரவு 7 மணி முதல் 8 மணி வரை என்று எச்சரித்த போதும் அவரவர் விருப்பப் படி கொண்டாட்டம்.
இடையே குடும்பத்து உறுப்பினர் இறந்து போன குடும்பங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்ற நினைவும்...
என்ன செய்வது சிறு பிள்ளைகளை இதற்காக எல்லாம் கால நேரம் அனுசரிகாமல் வெடிக்கிறார் என்று கூர்ம சிறார் பள்ளிகளுக்கு கொண்டு சென்று அடைக்கவா முடியும்? பெரியவர்களே தங்கள் சுற்று வீட்டு இடங்களை விட்டு விட்டு வெளியில் சிறு நீர் கழிப்பதும், நாயை வெளிக்கு போகச் செய்வதுமான நாடாயிற்றே இது?
சட்டம் நீதி ஒழுங்கு யாவும் கடைப்பிடிக்காத நாட்டுக் கூட்டம் நம்ம கூட்டம் அதைக் கண்டுங்காணாது போய்க் கொண்டிருக்க வேண்டிய நிலை அரசுக்கு....
பறவைக் கூட்டமும், வீட்டு விலங்குகளும் இறகு விரிக்காமல் வாலை ஒட்ட சுருக்கிக் கொண்டன.
பெரியார் கூட ரஷியா சென்று இந்த சனியனைப் பார்த்து வாங்கி வந்து இங்கே பயன் படுத்தியதாகக் கேள்வி.
தொன்று தொட்டு நமைத் தொடரும் பழக்கத்தை எல்லாம் தொடரவேண்டிய நிர்பந்தம் இந்த அறிவியல் யுகத்துக்கு உலகுக்கு உண்டா? அதில் நமது நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் என்ன செய்து வருகிறோம்? தத்துவ அறிஞர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்லியது போல எல்லாமே கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் சென்று கொண்டிருக்கிறது...சிந்திப்போம்.
இனி அமெரிக்க ஐக்கிய குடியரசில் கூட நியூ யார்க் போன்ற நகரில் தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் அரசு விடுமுறை .
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூட இந்த தொழிலுக்கு மடைமாற்றம் செய்து இந்த தொழிலாளர்களுக்கு வேறு தொழிலுக்கு மாற்றி விட்டு விடாதிருப்பது...அவரது சராசரி அரசையே பிரதிபலிக்கிறது அல்லாமல் அவர் பட்டாசு விற்பனைக்கு மஹாராஷ்ட்ரா மும்பையில் பட்டாசு விற்பனை வேண்டி கோரிக்கை விட்டிருந்ததும் கவனிக்கப் பட வேண்டியதாயிற்று...
மது விற்பனை பல கோடிகள் எகிறி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லி இருக்கின்றன
அந்தக் காலத்தில் போக்குவரத்து , தொடர்பு இடைவெளி இருந்த காரணத்தால் வாண வெடிகள் இறந்தார் வீடுகளில் சவம் எடுக்கும் போதும், அல்லது காரணங்களோடு வெடிக்கப் பட்டன...
தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கம் என்பதால் நாம் அனைத்தையுமே தொடரத்தான் வேண்டுமா?
நானும் ஒன்றும் யோக்யனல்ல...சிறு வயதில் ஏங்கி,இராணுவ வீரரான எனது மாமா எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத T.M. கணேசன் தாரமங்களத்தில் சின்னப்பம்பட்டியில் வாங்கி வந்த திரி சிறியதாக இருக்கும் யானை வெடிகளை வெடித்து அனுபவித்தவன் தான்... பட்டுத் திருந்தியவன் தான்...
ஆனால் அவை யாவும் காலக் கல்வியால் ஒதுக்கித் தள்ளப் பட்டு புரிதல், அறிதல் உணர்தல் நிகழ்ந்து எங்களது குடும்பம் இதில் இருந்து மீண்டு விட்டது...
இனிப்புகள், புதுத் துணி, பட்டாசு இவை யாவும் பழக்கம்...இல்லாதார் இருப்பாரைப் பார்த்து ஏங்க...அல்லது கடன் வாங்கி கடன்காரராகி...எல்லாம் வியாபார உத்திகள்...அதில் சினிமா வேறு ஒரு கேடு...தீபாவளி சினிமாக்கள் காலம் என்பது நல்ல வேளை மலையேறிவிட்டது...பண்டிகை இனாம் வேறு...நிரம்பி வழிந்த கடைகளுக்கான கூட்டம் போய் இனி மருத்துவ மனைகள் நிரம்பி வழியும்...
மேலும் கண்ணன் காலம் முடிந்து இன்று முதல் கந்தன் காலமாம் ... மாமனைப் போன்றே தாய் மாமனைப் போன்ற சாயல் கந்தனுக்கும் உண்டாம்... ஆண்டெல்லாம் திருவிழா காண்பது எல்லாம் வியா பாரமாக பரமாக இல்லாமல் இருந்தால் சரி...
அடுத்து அறுவடைத் திருநாள்/ பொங்கல் ....திருவிழாக்கள் அவசியம்தான் ஆனால் அதில் கூட ஒரு நியதி வரையறை இருக்க வேண்டியதும் அவசியம்தான்...
நரகாசுரன் வதை பற்றியோ, பகவத்கீதை போர் முனை அறிவுரை போன்று நம்முள் எழும் தீய எண்ணங்களை நீக்கத்தான் என்பது பற்றியோ நான் இங்கு எதையுமே சொல்ல முனையவில்லை...
கடன் வாங்கும் திருவிழாக்கள் வேண்டாமே...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
இராமலிங்க வள்ளல் சொல்வது போல பசிதீர்த்தலும், ஜீவகாருண்ய ஒழுக்கமுமே நற்வழிகாட்டும் சமய நெறிகளாகட்டும்.
No comments:
Post a Comment