Friday, June 17, 2022

சந்திரன் எலக்ட்ரீஷியன்: கவிஞர் தணிகை

 சந்திரன் எலக்ட்ரீஷியன்: கவிஞர் தணிகை



அந்தக் கல்லூரியில் ப்ளம்பராக பணியில் சேர்ந்து மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே பணி புரிந்து வருகிறார் சந்திரன். கல்லூரி இல்லாத காலத்தே அந்த நெடுஞ்சாலை எப்படி ஒரு விபத்து சாலையாக இருந்தது அது எப்படி ஒரு மனிதர் சந்தடியே இல்லாத காடாக இருந்தது அது பற்றிய அனுபவங்கள் எல்லாம் அவர் பகிர்ந்ததால் என் போன்றோர் தெரிந்து கொண்டது உண்டு.

 கல்லூரியில் பிறர்களின் பிணக்கு தர மத்தியஸ்தராய் இருந்து நாட்டாமை செய்யுமளவு நல்ல பக்குவம் உள்ளவர். இவர் ஒரு நிலக்கிழார் கூட இவர்கள் சகோதரர்கள் எல்லாம் சேர்ந்து விவசாயமும் பார்க்கின்றனர். அத்துடன் இவர் விசைத்தறித் தொழிலையும் நடத்தி வருகிறார். எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இவர் ஒரு சிறு குறு முதலாளி. ஆனால் அந்தக் கல்லூரியில் இவர் தற்போதும் மின் பணியாளராக பணி செய்து வருகிறார். ஆனால் படிப்பறிவு அல்லது தொழில் நுட்பம் எல்லாம் படித்து இவர் ப்ளம்பராகவோ, அல்லது மின் பணியாளாராகவோ இல்லை எல்லாம் அனுபவம் கற்றுத் தந்த பாடம். நல்ல அனுபவம் நல்ல முறை சார்ந்த கல்வியை விட அதிகம் பொருள் பொதிந்ததாய் மாறி விடுகிறது சிலரிடம்



கல்லூரி நிர்வாகத்தை ஒரு மாற்று குறைத்துப் பேசினாலும் அதை ஈடுகட்டி பேசுவார். விட்டுத் தர மாட்டார். இவரிடம் மிக அதிகமாக பணம் எப்போதும் புழங்கிய நாட்கள் உண்டு. அப்போது மாணவர்களுக்கு அகால நேரத்தில் ஏதாவது விபத்து போன்றவை நேர்ந்தாலும் கூட கல்லூரி நிர்வாக இவரைப் பணிக்கும் . தம் கைப்பணத்தில் இருந்து செலவளித்து விட்டு பிறகு பெற்றுக் கொள்வார்


எனக்கும் கூட கல்லூரி வளாகத்தில் இருக்கும் போது திடீர் செலவு ஏதாவது ஏற்பட்டது எனில் : சந்திரன் இவ்வளவு வேண்டும் என்று கேட்டவுடன் தமது சொந்தப் பாக்கெட் பையில் இருந்து எடுப்பது போல இவரிடமிருந்து கிடைக்கும். அதை தவறாமல் மறு நாள் நான் வீட்டில் இருந்து செல்லும்போது முதல் வேலையாய் அவரைப் பார்த்து கொடுத்து விடுவேன் என்பது வேறு...


ஏன் இவரைப் பற்றி இந்தப் பதிவு எனில் இவர் ஒரு நாள் கல்லூரி வரும்போது அரியானூர் என்ற  ஒரு இணைப்புச் சாலை கூடும் வழியில் மற்றொரு இருசக்கர வாகனசாரியால் இடித்து வீழ்த்தப்பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக இருந்து பிழைத்து தேறி இப்போது நல்ல கடவுள் கொடுத்த வரத்தால் நன்றாகவே இருக்கிறார். மரணத்தின் விளிம்பைக் கண்டவர்கள் பெரும்பாலும் வாழ்வின் தருணங்களை உணர்ந்து கொள்கின்றனர், அடுத்தவர்க்கு தங்களால் முடிந்த உதவியையும் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். வாழ்க்கைச் சுருக்கம் என்ன என்று தெரிந்து கொள்கின்றனர்.


சந்திரன் எனது நல் நண்பர்

எப்போதும் அவருக்கும் எனக்கும் ஒரு இணக்கமான உறவு நிலவி வந்தது

எனக்காக அவரும் சிந்தனை செய்து நான் அந்தக் கல்லூரியில் இன்னும் அதிக காலம் இருக்க வேண்டும் என நினைத்தவர்களுள் இவர் முக்கியமானவர்



நன்றி சந்திரன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment