மறுபடியும் ஒரு வெற்றிக் கதை: கவிஞர் தணிகை
மிகச் சுருக்கமாகவே சொல்ல விழைகிறேன். நான் வாழ்வின் மூன்றாம் சுற்றில் இருக்கிறேன். போராடியே வாழ்வில் பெரும் பகுதி கடந்து விட்டது. இப்போது கடந்த வாரத்தில் தமிழக மின் வாரியம் தனியார்மயம் ஆகாது என அந்த துறை சார்ந்த அமைச்சர் அறிக்கை. இந்த வாரத்தில் உதவியாளர்கள்,(ஹெல்பர்) ஒயர்மேன்(மின் கம்பி பணியாளர்கள்) ஆகியோர் இனி நேரடி நியமனம் இல்லை. தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் அமல். இப்படியாக....மத்திய அரசின் ஆளுகை, மேலாண்மை,அறிவுறுத்தல் , வலியுறுத்தல் மாநிலம் செயல்படும் அவலம் தொடர்கிறது நிர்பந்தங்களுடன் அதற்கு எந்த துறையும் விலக்கில்லை. எனக்கு நிதி வாய்ப்பிருந்தால் விவசாயிகள் போர்க் கடலுடன் சென்று கலந்து சிறுதுளியாக கலந்து கொள்ள எண்ணம் உண்டு.
சரி இப்போது ஏன் மின் துறை பற்றி கதைக்கிறேன் என நீங்கள் கேட்பது புரிகிறது. எங்கள் வீட்டுக்கு மின் பிரச்சனை நிறைய உண்டு. வாக்குக்கு காசு வாங்குவது போல எல்லாம் எல்லாம்... ஆனால் அதில் நாங்கள் ஒரு வீடு அடங்க மறுப்பதால் எங்களுக்கு எல்லாமே பிரச்சனை ஒரு வரியில் சொல்வதானால் அவ்வளவுதான்.
அடிக்கடி மின்சாரம் துண்டாகி...பிரச்சனையாகும். அடிக்கடி நாங்கள் போராடி இந்த ஊரில் இட வசதி கட்டடத்துடன் அமைத்துக் கொடுத்த வாடகையில்லாமல் இலவசமாக இயங்கி வரும் உதவி மின் பொறியாளர் பராமரிப்பும் இயக்கமும் அலுவலகத்தை நாங்கள் முற்றுகை இட நேரிடும். நோட்டிலும் எழுத நேரிடும் இணைப்பை (ப்யூஸ் போட ) சரி செய்ய... மேலும் அடிக்கடி அறிவிப்பு இல்லாமலே சரக் சரக் என மின் துண்டு நிகழ்ந்து மின் சாதனப் பொருட்கள் பயனிழந்து போவதைப் பற்றி எல்லாம் சொல்லப் புக வில்லை.
உங்கள் மின் கம்பியை மாற்றுக என எங்கள் அக்கப் போர் பொறுக்க மாட்டாமல் சொல்லி விட்டார் மின் வடப் பணியாளர்(லைன் மேன்) இவர் அலம்பல் அதிகம். இவரிலிருந்து மேல் இருப்பார் வரை எல்லாரும் நல்லவரே. ஆனால் மக்கள் சரியில்லை தங்களது தேவையை விரைவாகச் சரி செய்து கொள்ள இவர்களுக்கு கொடுத்து கொடுத்து பழக்கி விட்டனர். வாங்குவதை விட கொடுப்பதுதான் முதல் குற்றம் என இவர்களை எல்லாம் தண்டிப்பதாக இருந்தால் நாட்டின் குடிமக்கள் அனைவருமே குற்றவாளிகள் எனச் சொல்ல நேரிடும் சில விதி விலக்குகள் தவிர. டாஸ்மார்க் குடியால் 50 சதம் கெட்டது போலத்தான் இதுவும், அதனால் தாம் சொன்னோம் வாக்கு வியாபாரம் பற்றியும்...
நாங்கள் குறிப்பாக எங்களது குடும்பம் போராட்ட குணம் படைத்தது. ஆரம்பத்தில் இருந்தே நான்50 ஆண்டுக்கும் மேல் அரை நூற்றாண்டுகளாக மதுவுக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் எதிர்ப்புடன் இயங்கி வருகிறேன். நிறைய நேரங்களில் தனியாகவே...அதன் எதிரொலி, பின் விளைவுகள் பாதிப்புகள் என் வாழ்வில் நிறைய உண்டு. உறவின் வெறுப்புகளும், நட்பின் விரிசல்களும் எனக்கு உண்டு.
இப்போது பக்கத்து வீடு கட்டுகிறேன் என ஏற்பாடு. பழைய தலைமுறையில் எனது தந்தை அவரது சகோதரருக்கு கட்டிக் கொடுத்து ஏமாந்த கதை ஏமாற்றிய கதை வேறு அது நமது கதையின் கருப்பொருள் இல்லை.
அவர்கள் இடத்தின் மேல் செல்லும் எங்களது மும்முனை இணைப்பை நான் எடுத்து வழி மாற்றி அவர்களுக்கு வசதி செய்து கொடுக்கிறேன் என ஏற்று மின் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தேன். வீட்டருகிருக்கும் ஒரு கம்பத்தில் மின் எங்கள் மின் இணைப்பை மாற்றித் தரச் சொல்லி மாதக் கணக்கில் கோரிக்கை வாய் மொழி, எழுத்து வழி இப்படியாக.ஊ ஹூம்...கிணற்றில் போட்ட கல். நான் தொலைக்காட்சியில் பேசியவற்றை, வானொலியில் பேசியவற்றை, ஊடகத்தில் பத்திரிகையில் எனது செய்திகள் வெளிவந்தததைப் பற்றி எல்லாம் அதிக ஆண்டுகள் ஆனதால் உலகு எனை அத்துடன் எல்லாம் சேர்க்காமல், இப்போது ஊடக வெளிச்சம் பெறுவாரை பெருமையுடன் பேசிடும் நாட்களில் நான் எனது காலத்தை நினைத்துப் பார்க்க நேரிட...
அது போல எனது போராட்ட முறைகளுக்கு மாறாக...காலம் போதியவை கொடுத்துப் பார்த்தேன்... கடைசியாக மின் வாரியத்திற்கு புகார் எழுத்துவடிவத்தில் கொடுத்தேன். மேலும் பங்கஜ் குமார் மிஸ்ரா ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நிலை விளக்கி ஒரு மின்னஞ்சல் புகார் செய்தேன் ஒரு நாள் தாமதமான இரவில். இவர்தாம் மின் துறையை தனியார் மயமாக்குவதில் மும்முரமாய் இருக்கும் மின் துறைத் தலைவர் என எனது உள்ளூர் தோழர் ஒருவர் கூறினார். அதெல்லாம் வேறு. இவர் எடுத்த நடவடிக்கை மறு நாள் காலையில் இருந்தே துவங்கியது. மின்னல் போன்ற நடவடிக்கை.
பின் கண்காணிப்பு பொறியாளர் செயல் பொறியாளர்க்கு எழுதிய கடிதம் எனக்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு இருக்கிறது என எனக்கும் அந்த செய்தி தெரிவிக்கும் கடிதம் அனுப்பப் பட்டு குறை தீர்த்து பிரச்சனை அதாவது இரு கம்பத்துக்கு இடையே இரு கம்பிகள் 72 அடி அல்லது சுமார் 22 மீ நீட்டிக்கப் பட்டு இணைப்பை மாற்றித் தர வேண்டியது நடைபெறும் நிறைவேறும் என...
தலைமைப் பணியாளர் முடியாது என்றார், ஆனால் உதவி மின் பொறியாளர் முடியும் என்று முடித்து வைக்க காரணமானார். இடையில் லைன்மேனுக்கும் என் மேல் வருத்தமே. இவன் என்னடா இப்படி பண்ணி இருக்கிறான் என...
நான் உதவி மின் பொறியாளர் வசம் பேசும்போது குறிப்பிட்டேன். நான் இப்படிப் பட்டவன் தான் . எவ்வளவு நாள் பார்ப்பது பொறுப்பது கேட்பது வேறு வழி இல்லை நிர்பந்தம் எனை இப்படிச் செய்யத் தூண்டியுள்ளது. மற்றபடி எனக்கு யாருக்கும் எந்த தொந்தரவும் தர எண்ணமில்லை என.... முக தாட்சண்யம் எனக்கும் உண்டு. மனிதர்கள் எனக்கும் வேண்டும் என்றுதான்...
ஆனாலும் இந்த மனிதர்கள் ஏன் இப்படிப் போனார்கள்?
போராடத் தயாராக இல்லாமல்
தமது வாய்ப்பும் வரும் என வரிசையில் காத்திருக்க முடியாமல்
காலத்துடன் காத்திருக்க முடியாமல்
நேர்மை , உண்மை இல்லாமல்
சரியான ஆட்சி, சரியான ஆளுமை, சரியான மனிதர்க்குரிய குணாம்சங்கள் ஏதுமின்றி
இந்த மனிதர்கள் ஏன் இப்படி ஆகிப் போனார்கள்?
அதே துறையில் பணி புரிந்து வருவாரும், பணியில் இருந்து ஓய்வு பெற்றோரும் கூட காலப் போக்கில் முக்கிய நீரோட்டத்திலேயே எதிர் நீச்சல் ஏதுமின்றி அரசு எப்படி மக்களை குற்றவாளிகளாகவே வைக்க வலை அமைக்கிறது என எனது உள்ளூர் தோழர் சொல்வதற்கு ஏற்ப இரையாகிறார்கள் என்பதையும் கொடுத்து கொடுத்து பணியாளர்களை, வேலையாட்களை, சேவகர்களை, எப்படி எஜமானர்களாக்கி விடுகிறார்கள் என்பதுவே எனது கேள்வி...
இவை என்று நேராவது...அப்படி நேரானால் மட்டுமே நல்லாட்சி பற்றி எல்லாம் எவருமே சிந்திக்க நினைக்க துளிர்கள் முளை விட ஆரம்பிக்கும்...இல்லையேல் இப்படியே எம் போன்றோர் எல்லாம் போராடிப் போராடியே நாங்களும் வேதனைப் பட்டு எமை வாழ்வில் ஏற்றுக் கொண்ட சுற்றம் சூழத்திற்கும் இந்த துன்பப் பகிர்வை அளித்துக் கொண்டே சென்று சேர வேண்டியதுதான்...
ஒருவர் சொன்னார்
உங்களைப் போல ஒருவராவது வேண்டும் என,
மற்றொருவர்
உங்கள் சேவை மகாத்மா, அன்னை தெரஸா போன்றது என
இன்று மற்றொருவர்
உங்கள் எழுத்துகளும், வாழ்வும் ஒரேமாதிரியானதுதான். நீங்கள் மாமனிதர் சார் என....
இந்த ஊக்கமும் உற்சாகமும் அந்திமக் காலத்தில் நாவில் விழும் சிறு தேன் துளிகளாக இருப்பது தவிர எம் போன்றோர்க்கு வாழ்வு மாறப் போவதில்லை. இன்னும் நாங்கள் அசிங்கம் பிடித்த மனிதர்களுடன் தாம் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது அன்றாடம் அப்படிப்பட்டவர்களுடன் தாம் வாழ வேண்டியுமிருக்கிறது.
இந்த வெற்றியால் எனக்கு மகிழ்வே இல்லை. ஒரு பிரச்சனை மிக அதிகபட்ச உச்சத்திற்கு எல்லாம் செல்லாமல் முடிந்ததே என்ற ஒரு நிம்மதி அவ்வளவுதான். அதன் பகிர்வே இந்தப் பதிவும்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment