அரசுப் பணியாளர்களுடன் எனது பயணம்: கவிஞர் தணிகை
எனது குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்கிறேனே, எனது தங்கை முதல் சகோதரிகளின் குடும்பம் வரை நிறைய ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்கள்...அரசுப் பணிதான். அதில் சிலர் உதவிக் கல்வி அலுவலர் என்ற பணி வேண்டாம் என தலைமை ஆசிரியராகவே இருந்து விடுகிறோம் என்றிருப்பாரும் அடக்கம். ஏன் எனில் அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளால். நாம் கூட எழுதினோம் ஆசிரியர் தினத்தில் மட்டுமல்ல தினமுமே நல் ஆசிரியரை போற்றும் நாடு உலகில் சிறந்து விளங்கும் என...ஏன் எனில் ஆசிரியப் பணி ஒன்றுதான் மற்ற எல்லா பணிகளுக்குமே போதிக்கும் அடிப்படைப் பணி.
இதே போல காவல் துறையில், நீதித் துறையில் , மத்திய அரசுத் துறைகளில், மாநில அரசின் த.நா.மி.வாரியம், விவசாயம், போக்குவரத்துத் துறை, உள்ளாட்சித் துறையில் வரும் நகராட்சி, ஊராட்சிகள், பொதுப்பணித்துறை , வங்கித் துறை, இப்படி இருக்கும் 40 லிருந்து 50 துறைகள் அல்லது எல்லாத் துறைகளிலும் சுமார் அரசுப் பணியாளர்கள் 3 கோடி வரை இருக்கலாம் . ஆனால் நமது நாட்டின் மக்கள் தொகை 138 கோடிக்கும் மேல் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த மக்கள் தொகை தவிர 130 கோடிக்கும் மேல் வாழ்வாதாரம் என்பது சுயம் வணிகம் அல்லது தனியார் மயத்தில் தான். ஆனால் எல்லாமே அரசின் எல்லைகளில் வரையறைக் கோட்டில் தொடர்புகளில் ஆணைகளில் அதிகாரத்துள் இருந்து வருவதுதான். ஆனால் இவர்களில் அந்த சில கோடி நீங்கலாக இருக்கும் நூற்று முப்பது கோடிக்கும் மேல் இருப்பார் எல்லாம் சாதி,மதம், இனம், மொழி, தீயப் பழக்க வழக்கங்கள், அல்லது அரசில விழிப்புணர்வின்மை, திட்டமிட்ட சதி,போன்றவற்றால் பிரிந்து கிடக்கிறார்கள் இவர்களுக்கு குடிநீர், உணவு, இருப்பிடம் மருத்துவம், கல்வி போன்றவை எட்டாக்கனியாக இருக்கிறது எட்டி எட்டி இதற்காகவே முயன்று கொண்டு வாக்கு வங்கி வாக்குக்கு பொருள் பணம், இலவசம், என்றெல்லாம் கலைந்து போகிறார்கள் கலைக்கப் படுகிறார்கள் . களைகளாகிவிடுகிறார்கள். களைத்தும் போகிறார்கள்.
இங்கு சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்பதே இலக்கு. எனவே புள்ளி விவரத்தைப் பற்றி எல்லாம் இங்கு சொல்ல வேண்டுவது எனது நோக்கமுமல்ல.
இப்படிப் பட்ட கொடிய காலத்திலும் இவர்களுக்கு ( அரசுப் பணியாளர்களுக்கு) வசதி வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் அரசு முழு ஊதியம் அல்லது போதுமான ஊதியம் மற்றும் அதல்லாமல் நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது மக்களின் வரிப்பணத்தில் இருந்து...இவர்கள் வாழ்வு கார், பெரும் கட்டடங்கள் உள்ள குடி இருப்புகள், எவற்றுக்கும் பஞ்சமில்லா வாழ்வு... நேரமும் குறிப்பிட்ட நேர உழைப்பு எல்லாமே இருந்தாலும் இவர்கள் ஒருங்கிணைப்பு இருப்பதால் மேலும் மேலும் போராடுகின்றனர் தங்கள் வசதி வாய்ப்புகளை வளப்படுத்திக் கொள்ள உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ள.. ஆள்வோரான மக்கள் பிரதிநிதிகளும் இதில் அடக்கம்... பாராளுமன்றத்துக்கு சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப் படுவோரும்..
இவர்களில் சிலர் உண்மையாகவே எனது நண்பர்கள் போலும், சில உறவுகள் போலும் வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாக நேர்மையாக நாணயமாக பணியாற்றுகின்றனர். இன்னும் மேலும் சொல்லப் போனால் கீழ் நிலையில் உள்ள மக்கள் மேம்பாடு என்ற அக்கறை( கரிசனம் என்ற பழைய வார்த்தை) உடன் கூட பணி செய்து வருவதாகக் கொள்ளலாம். இதில் எல்லாத் துறைகளிலுமே நல்லோர் உள்ளனர். இல்லாமல் இல்லை. இவர்களை எல்லாம் உலகில் ஏன் அடையாளப் படுத்த முடிகிறது எனில் இவர்கள் சிலராக இருப்பதால் மட்டுமே.
சரி இதல்லாத தேசிய நீரோட்டம் அல்லது முக்கிய வழி வாழ்க்கை என பெரும்பான்மையான அரசுப் பணியாளர்கள் என்ன செய்கிறார் என்றுதானே கேட்கிறீர்....வாய்ப்புகள், சந்தர்ப்ப சூழல்களுக்கேற்ப தங்களை தங்கள் நல்வாழ்வைப் பற்றி மட்டுமே சிந்தித்து பொருள் தேடியே மூழ்கி விடுகின்றனர். நான் இது போன்றோருடன் நிறைய அனுபவப் பட்டிருக்கிறேன் போக்குவரத்து துறை, வங்கித்துறை, மின்வாரியம், உள்ளாட்சி, தனியார் , உள்ளூர் அமைப்புகள், இந்து சமயத் துறை கோவில் அமைப்புகள் வருவாய்த் துறை, நில அளவை, பத்திரப் பதிவுத் துறை, நீதித்துறை இப்படி எல்லா அமைப்பிலுமே இலஞ்ச ஊழல், பணியை செய்யாமை பணியை செய்ய விடாமை பொதுமக்கள் பணிக்கு ஒத்துழையாமை இப்படி நிறைய தடைகளை தாண்ட முடியாமல் உருவாக்கி விடுகின்றனர் சொல் வழியே மற்றும் செயல் வழியே ஆணைகள் வழியே. மேலும் அரசுப் பணி கிடைக்கும் வரை அதற்கான போராட்ட வழிகளை மேற்கொள்வதும் அரசுப்பணி கிடைத்தவுடன் அவர்கள் எஜமானராகிவிடுகிறார்கள்.
தங்களது பழைய வாழ்வை முழுவதுமாக மறந்து வேறு பிரிவுக்கு சென்று மேல்தட்டுவாழ்க்கையில் தொய்ந்து போகிறார்கள். அந்த அரசுப் பணியை பெற பல்வேறு குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகின்றனர். அவற்றுக்கு எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து பெறத் தயாராக இருக்கின்றனர். அங்கிருந்தே இலஞ்ச ஊழல் அவரைப் பொறுத்து ஆரம்பித்து விடுகிறது என்றும் சொல்லலாம். ஏன் எனில் நான் இவ்வளவு பணம் கட்டி வந்திருப்பது சம்பாதிப்பதற்குத் தானே என்று...இவர்கள் திருமணம் முடிக்கும் இடத்திலும் கூட இவ்வளவு செலவளித்து படித்து பணியைப் பெற்றிருக்கிறேன் இவை எல்லாம் சும்மாவா கிடைக்கும் என வரதட்சணை என்ற சமூக குற்றத்திலும் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த அரசுப் பணிகளில் நியாயமாக நேர்மையாக வாழ விரும்புவார்க்கும் அவர்கள் இந்த தீய சக்திகளுடன் ஒன்றித்துப் பயணம் செய்ய இசையவில்லை எனில் இடர்பாடுகளை உருவாக்கி எள்ளி நகையாடுமளவு வாழ்வை சீரழிக்கும் விதமாக சிதைத்தும் விடுகின்றனர்.
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் குடும்பத்துக்கும் இராணுவம், கப்பற்படை,விமானப் படை அவர்தம் குடும்பம் போன்றோருக்கும் கூட வழி வழியான அரசு உதவிகள் இருக்கின்றன. இந்த அரசு உதவிகள் மட்டுமல்ல அவர்களை கெடுப்பதற்கான எல்லா தீய வழக்கங்களுக்குமான இலவச அல்லது தள்ளுபடியான விலைகளுடன் திறப்புகள் கிடைக்கின்றன.
இந்த மக்கள் ஏற்றத்தாழ்வு சீரமைவின்மையை சீர்படுத்த ஒதுக்கீடுகள் நூற்றுக்கு இவ்வளவு என்ற சாதிய சதவீதங்கள்...சுதந்திரத்துக்குப் பின் பலவிதமான முயற்சிகளின் பால் ஏற்பட்டன என்றாலும் அவையும் திருப்தியையும் அமைதியையும் நிம்மதியையும் சமூக அமைப்பில் ஏற்படுத்தி விட முடியவில்லை முழுமையாக...
அமைப்பு சாரா மக்கள் வாழ் நிலை போராட்டமாகவே முடிந்து விடுகிறது. இவர்கள் இவ்வளவு ஜனத்திரளும் ஒன்றிணையாதபடி அவரவர் வாழ்க்கையின் போக்கில் தவறிப் போகின்றனர் தீய வழக்கங்களுக்கு ஆளாவதுடன் திட்டமிட்ட அரசியல் இன, மொழி, மத பேத சூழ்ச்சி முறைமைகளால்..
எனவே தாம் அரசுப் பணி என்பது பெரும்பாலும் அவர்கள் வாழ்வு சார்ந்து நலம் பயப்பதற்காகத் தான் இருக்கிறதே அல்லாமல் பொது மக்கள் நலத்துக்கான வேலையாக பெரும்பாலும் இல்லாமல் இருப்பதால் அதை விமர்சிக்க நேரிடுகிறது. இதை ஒவ்வொரு தனிமனிதரின் தனித்தன்மை என்ற அளவு கோலில் மட்டுமே வைக்கவும் முடிவதில்லை. அதை அமைப்பு ரீதியான முறை என்றே கொள்ள வேண்டியதாகிறது. அதிலும் தீயவழிகளைக் கையாள்வார் மேலே வருகிறார் என்ற மனக்குமறல்கள் இல்லாமல் இல்லை.
அதே போல அவர்களால் அந்தப் பணியை விட்டு வெளியே வந்து போராட்ட வாழ்வையும் கையில் எடுக்கும் போதும் அந்த அரசுக்கு பட்ட நன்றி கடன் அவர்கள் பணியில் இருந்து கொண்டே இருக்கும். உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பது ஒன்றும் தவறில்லையே...அப்படி துணிந்து வருவாரும் வெகு சிலரே... அதே போல மன்றம் மனமகிழ் மன்றம் ரெக்ரியேஷன் கிளப் என்பதில் கொள்கை ஒன்று உடையார் இருக்க வேண்டும் என்ற விதி முறைகள் இருக்க அவசியமில்லை...அதில் புகைப்பாரும் இருப்பார், மது அருந்துவாரும் இருப்பார் மன்றத்தில் இலக்கு வைத்து நகர வேண்டிய அவசியம் இல்லை. அல்லது இலக்குகள் பேரியக்கத்தின் பேரிலக்குகள் எல்லாம் வர வழிகள் குறைவு.அது ஒரு கூடுமிடம் அவ்வளவுதான்.
ஆனால் நாட்டின் மேடுபள்ளங்களை செப்பனிட நமக்கு வியட்நாமுக்கு ஹோசிமின் கிடைத்தது போல, கியூபாவுக்கு பிடல் சே கிடைத்தது போல அமெரிக்காவுக்கு லிங்கன், மார்ட்டின், வாசிங்டன், கென்னடி போன்ற தலைவர்கள் கிடைத்தது போல இந்தியாவுக்கு காந்தி, போஸ், பகத், குமரன், அம்பேத்கர், கிடைத்தது போல ரஷியாவுக்கு லெனின் போல, சீனாவுக்கு மாவோ போல சிங்கப்பூருக்கு லீ குவான் யூ போல இப்படி நல்ல தலைவர்களை நான் வேண்டும் என நினைக்கிறேன்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment