Saturday, August 10, 2019

புத்தாக்கப் பயிற்சியில் எனது உரை வீச்சு: கவிஞர் தணிகை


விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை துவக்க விழாவும் 8 நாள் புத்தாக்கப் பயிற்சியின் ஆரம்பமும்  கடந்த 07.08.19ல் நடைபெற்றதன் தொடர்ச்சியாக 09.08.19 வெள்ளிக்கிழமை காலை  8.45 மணி முதல் 10.30 மணி வரை அடியேன் அவர்களுடன் அவர்களுக்காக எனது எண்ணக் கீற்றுகளை சிந்தனையின் மின்னல் கூறுகள்

சிந்தையில் பதியும்வண்ணம் இளம் தளிர்களுடன் ஒரு தனி ஆட்சி
நடத்தினேன். அதை இப்படி ஆரம்பித்தேன்: தெய்வம் போற்றுதும், செம்மழை போற்றுதும், ஞாயிறு போற்றுதும் நானிலம் போற்றுதும்..

பள்ளி முடித்து கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கும்
பிள்ளைகள் உங்களுக்கு இந்த வெள்ளியின் காலையில்
சொற்களை மாலையாக்கித் தந்து
வருக சரித்திரம் எழுத என வரவேற்று
உரையில் புகலாம் என நினைக்கிறேன்.

முன் வாய்ப்பளித்த
கல்லூரியின் முதல்வர்: பேராசிரியர் மருத்துவர். ஜா. பேபிஜான், பேராசிரியை மருத்துவர் மாயா மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு என் முதற்கண் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்கிவிட்டு

என்னே ஒரு ஒற்றுமை பாருங்கள் சொல்லாமல் கொள்ளாமல்
இன்று என்  தாயின் 13 ஆம் நினைவு நாள்
சிக்குன் குனிய என்றொரு உயிர்க்கொல்லி நோயால்
அவர் உயிர் பிரிந்தது 2006ல்

மருத்துவமும் மருத்துவர்களும் மகத்துவம் செய்ய
இன்னும் மனித வாழ்விலும் உயிர்கள் வாழ்விலும்
எண்ணிலடங்கா விண்மீன்களாய்
சாதனைக் களங்கள் நிறைய நிறைய வீற்றிருக்கின்றன
எவரும் அறியாமல்....

நீங்கள் அறிந்திடுவீர் உலகெலாம் வியக்க
சாதனை புரிந்திடுவீர்....மனித குலம் தழைக்க
உயிர்கள் எலாம் பிழைக்க யாவரும் உமை வணங்க

 ஒரு நல்ல கவிதையின் படிக வரிகள்
மனதை விட்டகலாது
ஒரு  சிறந்த விதை  மண்ணுக்குள்ளேயே மக்காது
நீங்கள் எல்லாம் சிறந்த விதைகளாக
வாழ்த்துகளுடன்...

பௌதீக அறிவியல் அறிஞர் நோபெல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த சந்திரசேகர் தினமும் in USA... 70.கி.மீ பயணம் செய்து தனது இரு ஆய்வு மாணவர்களுக்கு பாடம் நடத்தச் சென்ற சம்பவத்தையும் அவர் மாணவர்கள் நோபெல் பெற்ற பின்னே இந்த நல்லாசிரியர் நோபெல் பெற்ற வரலாற்றையும் கூறினேன்....ஆசிரியர் மாணவர் பந்தம் விளக்க..

அத்துடன்  இந்தியாவின் ஒப்பற்ற நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி ராமன் பாரத ரத்னா பரிசு கொடுப்பதாக சொன்ன , குடியரசுத் தலைவரே அழைத்துக் கூறியபோதும்  தேதி இடிக்கிறது அன்று எமது ஆராய்ச்சி மாணவர்களின் நேரடி கேள்வி பதில் பரிசோதனை நேரம் எனவே நான் ஆசிரியர் என்ற முறையில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன் தேதியை மாற்ற முடிந்தால் மாற்றி விடுங்கள் இல்லையேல் உங்களது பாரத ரத்னா கூட வேண்டாம் என்றதையும்

 மேலும் வழக்கம்போல எனது பாணியில் அப்துல்கலாம் அவர்களின் ஆசிரியர் சுப்ரமணிய அய்யர் என்பார் ஒரு நல்ல மாணவர் கெட்ட ஆசிரியரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்றும், ஒரு கெட்ட மாணவர் ஒரு நல்ல ஆசிரியரிடமிருந்தும் கூட எதையும் கற்க முடியாது என்ற கருத்தையும் கூறி

ஆசிரியர் மாணவர் நல்லுறவை வளர்க்க அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி விட்டு தலைப்பிற்கு சென்றேன். அதை முதல்வர் பேபிஜான் முன் மொழிந்திருந்தார்: வாழ்வின் நெறிமுறைகள்:" என்ற தலைப்பில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுங்கள் என ...அப்படியே செய்தேன்

நெறி, முறை, நெறி +முறைகள் என்றால் என்ன என்று விளக்கினேன். அவர்களிடம் கேட்கும்போது அவர்களால் ஏதும் சொல்ல முடியாத மௌனத்தினால்.நான் நண்பராகவே வ்ந்திருக்கிறேன் ஆசிரியராக அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி எனைப்பற்றி அறிமுகத்தில் கொடுத்த தகவல்களில் ஒன்றிரண்டை வலியுறுத்தி.

வேகமாக வாகனம் ஓட்டி விபத்துக்குண்டாகி தன் இன்னுயிரை இழந்த மாணவர் பற்றி, ஆறு காட்டாறாக, கடல் சுனாமி அலை எழ இப்படி கட்டற்று விளங்குவதை ஒரு கட்டுக்குக் கொண்டு வந்தால் அது நெறிமுறைப்படுத்துவதே...சாலை என்பதே வாகனம் செல்ல , கரைகள் வேண்டும் நதிகள் செல்ல, அணைகள் வேண்டும் நீர் தேக்க  இப்படி மாணவராகிய் உங்களை எல்ல்லாம் எவரெல்லாம் நெறி முறைப்படுத்தி கட்டுப்படுத்துவார் எனில் பெற்றோர், குடும்பத்தார், ஆசிரியர், நாடு, தலைமை , நட்பு ஆகியவை என்றும்,

கடைசியில் 10 நிமிடம் நீங்கள் என்னுடன் கலந்துரையாட ஒதுக்கப்படும் நேரம் அதில் உங்கள் கருத்துகளை மனந்திறந்து தெரிவிக்க வரலாம் என்றும் அதுவரை ஏதாவது கேள்வி இருந்தால் குறித்து ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டேன்.

சிசிடிவி என்பது எதற்கு வந்தது நேர்மை என்றால் என்ன பைபிளில் மனிதரின் நேர்மையின்மையைக் கண்ட இறைவன் 900 ஆண்டுகளாக இருந்த மனிதரின் ஆயுளை 120 ஆகக் குறைத்தான்  என வாசகம் இருப்பதைக் குறிப்பிட்டேன்

காந்தி கூட 120 வரை வாழ்வேன் எனச் சொல்லி 78ல் சுடப்பட்டு முடிந்து போனார் என்றும்

இராமானுஜர் 120 ஆண்டு வாழ்ந்ததையும் மறு ஜென்மத்தில் அவர் தாமே மணவாள மாமுனிவர் அப்போது தனது ஆயுள் 80 என்றதையும் ஆக மொத்தம் தாம் 200 ஆண்டுகள் இந்த  மண்ணில் வாழ்ந்ததாக சொன்னதையும் சொன்னேன். அவரது மேனி இன்னும் திருவரங்கத்தில் காப்பாற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டேன்...

கல்லூரியில் படித்த மலேசிய மாணவர் ஒருவர் காலையில் சாப்பிடாத வழக்கத்திலிருந்த்வரை எப்படி எனது அனுபவ அறிவுரை மூலம் மாற்றி அதிலிருந்து காலையில் உண்ணும் பழக்கத்தை அவர் கைக்கொள்ள வைத்தேன் என்பதையும், மலேசிய மாணவர்களின் சுத்தம் , குப்பையை பொது இடங்களில் போடாத பாங்கு தனது தவறாக இல்லாதபோதும் ஒரு காகிதமானாலும் கீழே கிடந்தால் எவர் இருக்கிறார் இல்லை என்பதை எல்லாம் பொருட்படுத்தாது அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு செல்லும் பாங்கு அவரும் நாமும் மனிதர் தாமே என்றுக் குறிப்பிட்டேன்...


 உடல் ஓம்பும் முறைகள் என வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம், காலையில் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்காமல் வரவேண்டுமென்பது பற்றியும் தினம் இரு முறை மலம் கழித்தல் அவசியம் என தமிழ் சித்த வைத்திய நூல்கள் சொல்வது பற்றியும் எப்படி ஒரு தனியார் பள்ளி மாணவர் இதில் எல்லாவற்றையுமே தவிர்த்துவிட்டு பள்ளிக்கு நேரம் ஆகிறது  பள்ளி முதல்வர் அடிப்பார் ஆசிரியர் திட்டுவார் வருகைப் பதிவு இல்லாமல் போய்விட்டது என பள்ளிக்கு வந்திருந்தார் என்பதையும் அவரை நான் அவர்களது பள்ளிக்கு பல் பரிசோதனை முகாமுக்கு சென்றபோது கலந்துரையாடியது பற்றிக் குறிப்பிட்டேன்.

மனம் தியானம், தீயஒழுக்கம், தீய சேர்க்கை ஐம்பூதங்களின் சீர்கேடு குடிநீர் விற்பனை மேலும் பி.டி.எஸ் படிப்பு முக்கியத்துவம், எம்பிபிஎஸ் கிடைக்காமல் நீட் மதிப்பெண் குறைவால் தற்கொலை செய்த அறிவு கெட்ட பெண்,என பேச்சு உலக அரங்கில் சுற்றித் திரிந்தது.

மருத்துவரின் சமுதாயப் பொறுப்பு, வெட்டுக்கிளி, மான், தேனீ பூங்காவனம் அப்துல்கலாம்  மயில்சாமி அண்ணாதுரை போன்றோரின் மகத்தான பணியும் வாரம் 5 நாள் கடுமையான உழைப்பு, ஒரு நாள் சேவை , ஒரு நாள் தயாரிப்பு என அவர்கள் பம்பரமாக சுழன்றாடிய கதை சொன்னேன்.

தியாகமும் சோதனைகளும் வேதனைகளும் உழைப்பும் இல்லாமல் வெற்றியே இல்லை சாதனைகளே இல்லை என்பதையும் சொன்னேன்.

மருத்துவமனை தினமாகிய மருத்துவர் முத்துலட்சுமி பிறந்த நாள் பற்றி
அருணிமா சின் ஹா பற்றி தெரியுமா என்றால் தெரியாது என்றார்கள்...அவரின் தனிமனிதப்போராட்டம் கால்களை இழந்தது கைப்பந்து, உதைப்பந்து வீரராக இருந்தது ஊனமுற்ற முதல் எவரெஸ்ட் ஏறிய வரலாற்றைக் குறிப்பிட்டேன் உடன் முனிபர் மஜாரா என்னும் இரும்புப் பெண் எனக் குறிப்பிடப்படும் முகமதிய பெண்ணின் வாழ்க்கை போராட்டம் பற்றி எல்லாம் சொன்னேன். அவர்கள் எல்லாம் இதுபோன்ற  எண்ணற்ற பெண்கள் எல்லாம் எப்படி சமுதாய சேவைக்குள் வந்து அதுவே பிறரை மகிழ்விப்பதே சிறந்த வாழ்வு தான் தன் சுகம் தனது பொருளாதார முயற்சிகள் வாழ்வாகாது என்று சொன்னதையும் குறிப்பிட்டேன்.

கஷ்டப்பட்டுத்தான் எல்லாம் முன்னேறி இருப்பர், கஷ்டப்பட்டு என்ற ஒரு வார்த்தைக்குள் ஒவ்வொரு வாழ்வுமே அடங்கி இருக்கிறது என்றுக் குறிப்பிட்டேன்

வசந்தம் சென்று விடும் ஆனால் பூக்கள் திரும்பவும் மலரும்
வாலிபம் சென்று விடும் அந்த நாட்கள் திரும்பி வரா

என்பதையும் வாழ்வு என்பதன் துவக்கம் பிறப்பு முடிவு இறப்பு இவை இரண்டும் தவிர்க்க  முடியாதவை ஆனால் நாம் அதனுள் பயணம் செய்யும்போது நமது இல்லாமைக்கு பின்னும் உலகும் நாமிருந்த இடமும் நமைப்பற்றி உயர்வாகப் பேசவேண்டும்

தாழ்வான இலக்கு என்பதே குற்றம்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று என்ற குறளையும்
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு

என்றும் பி.டி.எஸ் முதல் பி ஹெச் டி வரை உள்ள கல்லூரி எமது கல்லூரி என்றும், மேலும் முதல்வரே இந்திய சிறுவர் பிரிவு பல் மருத்துவத் துறைக்கு தலைவர் என்பதையும் அவரும் கூட பிடி எஸ் ...என்றுதான் ஆரம்பித்திருக்கிறார் தன் வாழ்வை என்பதையும் நினைவு கொள்ளுங்கள்....(அதெல்லாம் அவர்களுக்கு எவருமே ஏற்கெனவே சொல்ல வில்லை என்பது எனக்குத் தெரிந்தது அப்போது)

இப்படி பல்வேறுபட்ட களங்களில் சுழன்றாடிய எனது உரைவீச்சை கால வரையறைக்குள் முடித்து சரியாக 10 மணி முதல் 10.30 வரை உற்சாகமாக எனது பேச்சை இரசித்துக் கேட்ட சிரித்த முகங்களை மேலும் உருவாக்க அவர்களில் இருந்து மறக்க முடியாத சாதனை நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்தேன்.

ஒரு பெண் மாநில அளவில் சிலம்ப சாம்பியன் என்பதையும் ஜோனல் அளவில் வெற்றி இல்லாமல் இருந்தும் ஒரு ஆண்டு கடுமையான பயிற்சி அவரை மாநில அளவில் வெற்றி பெற வைத்ததைக் குறிப்பிட்டார்.

மற்றொருவர் எப்படி ஆஸ்த்மா, சிறுநீரகக் கல் போன்றவற்றிடமிருந்து மீண்டு படித்து வந்தார் என்றார்

இன்னொருவர் பள்ளியில் செய்த ப்ராஜக்ட் எப்படி சிறந்திருந்தது என்றார்

மாணவர் ஒருவர் 30 பேர் அடங்கிய கூட்டுக் குடும்பமாக இருந்தபோது எப்படி எல்லாம் இருந்ந்தோம் நிறைய வீட்டில் செய்த பலகாரங்கள் தின்பண்டங்கள் கிடைத்தான் இப்போது தனிக் குடும்பமாகி , கடையில் வாங்கிய இனிப்புகளைத்தான் தீபாவளி போன்ற  திருவிழாவுக்கெல்லாம் கூட தின்ன முடிகிறது என சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டினார்.

மற்றொரு மாணவி எப்படி சிபிஎஸ்சி கோர்ஸ் பள்ளியில் ஒரே நாள் தனது சகோதரியின் தேடலில் சேர்ந்து இப்போது இந்த கல்லூரியில் இடம் பிடித்தாள் என்பதையும் குறிப்பிட்டார் இல்லை எனில் நீட்டில் தலை நீட்டி இருக்க வே முடியாது என்றார்.

ஆக ஒரே அமர்க்களமாக இருந்தது அந்த  115 பொன்னான நிமிடங்கள்...தங்க விலை பவுன் ரூபாய் 30000 நெருங்குவதை விட எங்களது நேரம் மிகவும் மதிப்பு மிக்கதாக உயர உயர சிறப்பாக  விளங்க அந்த நாள் உதவியது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment