Friday, September 22, 2017

சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை

அறிவியல் கதிர் 
சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை
பேராசிரியர் கே. ராஜு
Image result for waste water cleaning plant at pondicherry
Image result for waste water cleaning plant at pondicherry

     புதுச்சேரி ஒரு அழகான, சுத்தமான, அமைதியான சுற்றுலா செல்வதற்கேற்ற இடம். பிரான்ஸ் தேசத்தின் காலனியாக இருந்ததால் அந்நாட்டு கட்டடக்கலை, பண்பாட்டுக் கூறுகளின் மிச்சசொச்சங்கள் உள்ள இடம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.ஏ. அப்பாஸி ஓர் எளிமையான, அதிக செலவில்லாத ஆனால் செயல்திறன் மிக்க கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை வடிவமைத்துள்ளார். அதன் பெயர் ஷெஃப்ரால் (Sheet Flow Root Level or SHEFROL) உயிரியல் உலை. ஒரு தரமான கழிவுநீர் சுத்திகரிக்கும் ஆலையின் விலை சுமார் 50 லட்சம். ஆனால் ஷெஃப்ராலின் விலை 20,000 ரூபாய் மட்டுமே. 
     கழிவு நீரில் உள்ள ரசாயனங்கள், நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றை உறிஞ்சி எடுக்க நீர்த்தாவரங்களைப் பயன்படுத்துவதால் இது ஒரு பசுமைத் தொழில்நுட்பம். நான்கு இலைகள் உள்ள தீவனப்புல் (clover), பதுமராகம் (water hyacinth) ஆகிய இரு நீர்த்தாவரங்களும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் கழிவு நீரைச் சுத்தப்படுத்தும் இயற்கைக் கருவிகளாக செயல்படுகின்றன. சுத்தப்படுத்தும் கருவியில் உள்ள குழிகள் மற்றும் நீர்வழிப் பாதைகளுக்கு மேல் நீர் ஊடுருவமுடியாத தகடுகள் பொருத்தப்படுகின்றன. தகடுகளுக்கு மேல் வளர்க்கப்படும் நீர்த்தாவரங்களுக்கு ஊடாக கழிவு நீர் மெல்ல ஓட விடப்படுகிறது. கழிவு நீரில் உள்ள நச்சுகள் அகற்றப்பட்டு,  சுத்திகரிக்கப்பட்ட பிறகு விளைநிலங்கள், தோட்டங்களில் உள்ள பயிர்களுக்குப் பாய்ச்சப்படுகிறது.
     தாவர வேர்கள், தண்ணீர், நுண்ணுயிரிகள் ஆகியவற்றிடையே உள்ள நெருங்கிய தொடர்பின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்குள் கழிவுநீர் சுத்திகரிப்பில் 80 சதவீதம் முடிந்துவிடுகிறது. இதே அளவு சுத்திகரிப்பை அடைய மற்ற முறைகளில் 2 நாட்கள்  அல்லது அதற்கு மேலேயே கூட ஆகும்.
     சுத்திகரிக்கும் பணியை சோதித்து அறிந்த பிறகு 2005-ம் ஆண்டிலேயே பேராசிரியர் அப்பாஸி, அவருடன் பணிபுரியும் எஸ்.கஜலட்சுமி, தஸ்நீம் அப்பாஸ் ஆகிய இருவர் இணைந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாதிரி ஆலையை அமைத்துவிட்டனர். 2011-ம் ஆண்டில் உயிரியல் தொழில்நுட்பத் துறையிலிருந்து நிதியுதவி கிடைத்தது. மூவரும் காப்புரிமைக்குப் பதிவு செய்துவிட்டு இந்தியக் காப்புரிமை அலுவலகத்தின் அதிகாரபூர்வ இதழில் தங்களது கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை வெளியிட்டனர்.  
     2014-ம் ஆண்டில் உதவிப் பேராசிரியர் தஸ்நீம் அப்பாஸின் வழிகாட்டுதலில் புதுச்சேரி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் அஷ்ரஃப் பட்  தன்னுடைய ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக சின்ன காலாபெட்டில் ஒரு ஷெஃப்ரால் ஆலையை நிறுவினார். ஷெஃப்ரால் ஆலையை நிறுவுவது எளிது எனவும் பராமரிப்புச் செலவு குறைவுதான் எனவும் அவர் நிரூபித்தார்.  நமது தேவைக்கேற்றவாறு அதன் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியும். 10000 லிட்டர்கள் கொள்ளளவு உள்ள அந்த ஆலையில் 38 வீடுகளிலிருந்து கழிவு நீர் சேர்க்கப்பட்டது. கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கு ஆறு மணி நேரத்தை மட்டுமே ஆலை எடுத்துக் கொள்கிறது. சுத்திகரிப்பதற்கு வேறு வேதியியல் பொருட்கள் எதையும் பயன்படுத்தத் தேவையில்லை. இடவமைப்பையும் (topography) புவி ஈர்ப்பு விசையையும் வைத்து ஆலை செயல்படுவதால் நீரை இறைக்க வேண்டிய தேவை எழுவதில்லை. இந்த எளிமையான ஆலையை நமது விருப்பப்படி நிறுவலாம்.. வேண்டாமெனில் எடுத்துவிடலாம்.
     ஷெஃப்ரால் ஆலையைக் கண்டுபிடித்தவர்கள் கழிவு நீரிலிருந்து அசுத்தங்களை அகற்றுவதற்கு சுற்றுச்சூழலுக்கு இசைவான இந்த முறையை இந்தியாவெங்கிலும் பல கிராமங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். கட்டணம் ஏதுமின்றி உதவி செய்யவும் காத்திருக்கின்றனர். பொதுவாக பல பகுதிகளில் கிடைக்கும்  நீர்த்தாவரங்களின் பட்டியலையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.
     தமிழ்நாட்டில் செயல்படும் சர்வம் (Sarvam) என்ற அரசுசாரா அமைப்பு மாநிலத்தின் பல கிராமங்களில் ஷெஃப்ரால் ஆலையை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல ஐரோப்பிய, மத்தியக்கிழக்கு நாடுகள் தங்கள் நாடுகளில் ஷெஃப்ரால் ஆலையை நிறுவ முன்வந்துள்ள செய்தி நமக்கு உற்சாகமூட்டுகிறது.

2 comments: