Monday, September 11, 2017

அவள்தான் தலைமகள்: கவிஞர் தணிகை

அவள்தான் தலைமகள்: கவிஞர் தணிகை
Related image



குழந்தைகளை அதனதன் போக்கிலேயே விட்டு விட வேண்டும். சின்னஞ்ச்சிறு குழந்தைகளை அடிக்கடி இடுப்பிலும், தோளிலும், மாரிலும் தூக்கி வைத்துக் கொள்ளக் கூடாது நமது சூடு அந்தக் குழந்தைகளுக்கு தேவையில்லை. அந்தக் பழக்கம் நல்லதல்ல. அவை இயல்பாக வளர்ந்தால் அவற்றுக்கு நல்லது . இது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வேதமாக எமக்குக் கிடைத்த பாடம்.

பிள்ளையே பிறக்காது என்ற கணவன் மனைவிக்கு குழந்தை பிறந்தால் எத்தனை சந்தோசம் தரும். அந்த சந்தோசத்தை எமது பெற்றோர்க்கு தந்தவள் இந்த தலைமகள். பொதுவாகவே முதலில் பிறக்கும் குழந்தைகள் தமது தந்தையை கொண்டிருக்கும். இதை பல இடங்களிலும் பல குடும்பங்களிலும் காணலாம்.

அப்போதிருந்த 2 பைசா அளவு பிரிட்டானியா பிஸ்கட்கள் இருக்கும் அதை கெமிகல் ஸ்டோரில் டின் டின்னாக வாங்கி வைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் வைத்து விடுவார்களாம். அதை எடுத்து தின்று கொண்டு குழந்தைகள் அமைதியாகவே இருக்குமாம்.

முதல் பிள்ளையின் செல்லம் எல்லாம் அடுத்த குழந்தை பிறந்து விட்டால் சற்று குறையவே ஆரம்பிக்கும். அதுவும் எங்கள் வீட்டில் 5 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள், அத்துடன் ஒரு ஆண் குழந்தை இறந்து விட்டதாகவும் செய்தி. மேலும் அந்தக் காலத்தில் எல்லாம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எல்லாம் வரவே இல்லை. ஆணுறை, பெண்ணுறை, கருக்கலைப்பு என்பதெல்லாம் இல்லவே இல்லை. ஆனாலும் குழந்தைகள் நிறைய இருப்பதையே விரும்பும் குடும்பம் நிறை காலம் அது. இவை அல்லாமல் இயல்பாகவும் இயற்கையாகவும் கூட சில கருக்கள் கலைந்து இருக்கலாம் என்பார் எனது மற்றொரு மூத்த சகோதரி.

எப்படி கமல் தமது சாருஹாசன், சந்திரஹாசன் போன்றோரை அப்பா என்னும் ஸ்தானத்தில் வைத்து அண்ணன்களைப் பார்க்க முடிகிறதோ அது போல குழந்தைகளின் தொடர்ச்சி எங்கள் குடும்பத்திலும். ஒரு பெண்ணுக்கு மணமுடிக்கும் வயதில் ஒரு பெண் குழந்தை அம்மாவுக்கு கைக்குழந்தையாக  இருந்தது என்பதெல்லாம் உண்மை. இதில் கூச்சமோ வெட்கப்படவோ தெரியாத காலம்.

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டேன். இப்படி அதிகம் குழந்தை பிறந்து இருக்கும் போது மூத்த செல்லக் குழந்தையின் நிலை என்னவாயிருக்கும் என எண்ணிப் பார்க்க முடிகிறதா? இயல்பாகவே அதன் நிலை அமைப்பு மாறி அதன் தோளுக்கு மற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் அக்கறையும் தாயிடமிருந்து மாறி இருக்கும்.இருந்தது.

எனக்கு எல்லாம் சிறு வயதில் எனது சகோதரிகள் குளிக்க வைத்த நினைவு இன்னும் எனது நெஞ்சை விட்டு அகலவே இல்லை. அப்படி என்னை குளிக்க வைத்தவள் ஆடை அணிவித்தவர்கள் இரண்டு பேர். அதில் இந்த அங்கமுத்தம்மாள் மூத்தவர்.

ஒரு முறை என்னை விட்டு விட்டு இந்த எனக்கு மூத்த 4 பெண்களும் புகைப்படம் அப்போதெல்லாம் அதன் பேர் என்ன போட்டோதானே? எடுக்க ஒரு ஸ்டுடியோவுக்கு என்னை அழைத்துச் செல்லாமல் ஏமாற்றி விட்டு சென்றது பொறுக்காமல் அவர்களுடன் ஓடிச் சென்று இரட்டை ஜடையுடன் அதன் ரிப்பன்களுடன் அடம் பிடித்து நின்று எடுத்த போட்டோ இன்றும் எனது வீட்டில் உள்ளது.

எதுக்கு இவ்வளவு கஷ்டம் அனுபவித்தாய் என ஒரு முறைக் கேட்டதற்கு: நம்மை அடுத்து இருப்பவர்கள் பெண்பிள்ளைகள். மூத்த பிள்ளையே விடுதலை, விவாகரத்து  வாங்கிக் கொண்டு வந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் எப்படி மற்றவர்க்கெல்லாம் திருமணம் நடக்கும், அது ஒரு தடையாகிவிடாதா என்று பொறுத்துக் கொண்டேன். வாழ்ந்தேன் என்றாள். அவள் அந்தக் காலத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவள். அதன் பின் ஆசிரியை பயிற்சிக்கு படிக்க அழைப்புக் கடிதம் வந்ததாகவும், நர்சிங் பயிற்சிக்கு எல்லாம் வந்ததாகவும் எல்லாம் சொல்வார்கள்...ஆனால் ஏன் அவற்றுக்கு எல்லாம் போகவில்லை என்பதுதான் இன்று வரை தெரியவில்லை. இனி மேல் நேற்று புதைகுழிக்குள் போனவள் வந்து சொல்லவா போகிறாள்?

கதர் நூல் நூற்று வீட்டில் ஒரு வருவாயை தம்மால் முடிந்த அளவு பெருக்குவார்கள் , பூ விற்பார்கள், கெமிகல் சென்று கோலப்பொடி. எடுத்து வருவாரகள், அரப்பு பறித்துஇடிப்பார்கள், இப்படி செய்யாத வேலை என்றெல்லாம் ஒன்றுமில்லை. எமக்கு குளிக்க வைப்பார்கள், துணியை எல்லாம் துவைத்துத் தருவார்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

காலம் எப்படி எல்லாம் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விடுகிறது பாருங்கள். திருமணமாகாத பெண்கள் அவர்கள் மட்டுமே சமைப்பார்கள். அம்மாவின் பயிற்சி அப்படி. எல்லாமே நன்றாகவே இருக்கும் அந்தக் காலத்தில் அவர்கள் செய்த சமையல் இன்னும் மணமாயிருக்கிறது. பள்ளி படித்த முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் மீதி ஆன பேப்பர் நோட்டுப் புத்தகம் எல்லாவற்றையும் அரைத்து பேப்பர் கூடை போட்டு வைப்பார்கள். குடத்தையும், சொம்பையும் கவிழ்த்து வைத்து அதன் மேல் ஈரமான அரைத்த பேப்பரை போட்டு காய்ந்தவுடன் எடுப்பார்கள் அற்புதமான கூடைகள் தயாராக இருக்கும் அதில் வெந்தய வாடையும் இருக்கும்.

அது அவ்வளவு |ஸ்ட்ராங்காக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் மேல் அவளைப் படிக்காமல் அவளுடன் மற்றொரு சகோதரியும் அவளுடன் 2 வயது வித்தியாசத்தில் ஏறத்தாழ இருவருக்குமே சம வயது என்பதால் சகோதரிகள் மட்டுமல்லாமல் தோழிகளாகவும் இருந்தனர்.

நாள் இப்படியே போய்க் கொண்டிருக்கிறதே என வீட்டிலேயே ஒரு கைத்தறி நெசவு நெய்ய காக்குழி கால் வைத்து பெடல் கட்டைகளை அழுத்தி மிதித்து தறி நெய்வார்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா அதற்காக ஒரு பூமியில் குழியாய் பள்ளம் செய்து அதன் மேல் ஒரு திண்ணையில் அமர்ந்து பணி செய்வார்கள். அதற்கு படமரம். அந்த சேலைத் துணி போன்றவற்றை நெய்ய நெய்ய சுருட்டிக் கொள்ளுமே அதுதான்...வாங்கியாகிவிட்டது...

ஆனால் பெண் பார்க்க வந்து விட்டார்கள். காக்குழியை மூடி விட்டார்கள். அதன் அடையாளம் ஒரு நைஸ் காறையை சிமென்ட் குறைவாக இட்ட சொரசொரப்பான காறை வேறுபாட்டை காண்பித்தபடி இருக்கும் அந்த தரை தளம்தான் அதன் மேல்தான் இன்று தியானம் அமர்ந்து கொண்டிருக்கிறேன்.

முடிவும் தேர்வும் சரியானதாக இல்லை. எனவே வீட்டார்  பெற்றோர் தயங்கிக் கொண்டிருக்கும்போது வெண்ணந்தூரில் கைத்தறி நெய்து வரும் அந்த மாப்பிள்ளையையே மணம் செய்து கொள்கிறேன் என தமது சித்தப்பாவிடம் தெரிவித்து விட்டாள். அதற்கும் காரணம் ஏதாவது வைத்திருந்திருப்பாள் என நினைக்கிறேன்.

அங்கு தறி நெய்யத்தான் கற்றுக் கொள்ளவில்லையே தவிர தார் சுத்தி, சமையல் செய்து என்ன என்ன வேலை செய்ய வேண்டுமோ எல்லாம் செய்து மாமனார், நாத்தனார் இப்படி அனைவர்க்கும் பணிவிடை செய்து மேட்டூரில் இருந்து வெண்ணந்தூர் என்ற ஊருக்கு மணமுடித்த இந்த அங்க முத்து செய்தாள்.

நிறைய முறை நிறைய சண்டைகள் சச்சரவுகள். வீட்டுக்கு வந்து சேர்ந்திருப்பாள். ஆனால் அதன் பின் ஒரு பஞ்சாயத்து நடக்கும் திரும்பிச் சென்றுவிடுவாள். முதலில் ஒரு பையன் குழந்தை பிறந்து இறந்து விட்டது.

மறுபடியும் ஒரு ஆண் குழந்தையும், 3 பெண் குழந்தைகளும் பெரியதாக மாறி அவளது அவல வாழ்க்கையை பறை சாற்றும் விதமாக...இன்றைய வளர்ச்சியிலும்...

ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு தேங்காய் வரிசை அதாங்க ஆடிச் சீர் வரிசை கொண்டு வருவதாக தகவல் சொல்லி விட்டு கொண்டு சென்றார்கள். எங்கள் வீட்டார். அவர்கள் வீட்டை பூட்டி விட்டு விளக்கை எல்லாம் அணைத்து விட்டு வேறு எங்கோ சென்று விட்டார்கள்...


அப்படிப்பட்ட குடும்பத்தார் அதன் பெரியோர் தமது முதுமையின் போது தாம் செய்த தவறுகளை எல்லாம் உணர்ந்து என்னிடம் ஓர் நாள் நான் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோது எல்லாம் நீங்கள் தாம் இந்தக் குடும்பத்துக்கு நன்மை செய்தீர்கள்,,. நாங்கள் அதை எல்லாம் கெடுத்து விட்டோம் என்று உண்மையை ஒப்புக் கொண்டார்கள். அவர்களுக்கு வயது முதிர்ந்த நிலையில் பாவ மன்னிப்பு.


அவர்களது மகனை 8 பிள்ளைகளை படிக்க வைத்த குடும்பம் பிள்ளையோடு பிள்ளையாக உங்கள் பேரனையும் அதாவது தமது பெண் வயிற்றுப் பேரனையும் கொடுங்கள் படிக்க வைத்து ஆளாக்குகிறோம் என்றதற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் அவர்கள் பக்கத்து பாஷையுடன் வருடம் ஒன்றுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்க அந்த முயற்சியை உதவியை செய்யாமலே நிறுத்திக் கொண்டது எம் குடும்பம்.

அந்தப் பெண் பிள்ளையின் காரணமாக எம் குடும்பத்தில் பிறந்த அவளை விட இளையோர் எல்லாம் தம்மால் முடிந்தளவு உதவி செய்து அந்தக் குடும்பத்து பிறப்புகளுக்கு எல்லாம் கூட நன்மை செய்திருக்கிறார்கள் காலம் காலமாக...

உடல் அளவிலும் உள்ளத்தளவிலும் பெரும் துன்பமடைந்தாலும் அந்த துன்பமடைந்த வாழ்க்கையே தம் விதி என வாழ்ந்து விட்டாள்... அடைந்த இன்பம் தமது கணவருடன் என்ன செய்தாலும் ஒற்றுமையாய் இருந்து பழகியதே..

மேலும் அவள் மட்டும் தாம் படித்த படிப்புக்கேற்ப ஒரு வேலைக்கு சென்றிருந்தால் குடும்பத்தின் தலைவிதியும் அவளுக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையும் வேறாயிருந்திருக்கும். முடிவும், தேர்வும் தப்பாகும்போது வாழ்வே தப்பாகிவிடுகிறது. எனவே தான் பெண்களின் வாழ்வை முள் மேல் போட்ட சேலை என்கிறார். சேலையை வேகமாக எடுத்தாலும், முள்ளை வேகமாக எடுத்தாலும் கிழிவதென்னவோ சேலைதான்.


மேலும் இப்படி சொல்லச் சொல்ல நிறையவே உண்டு. இருந்தாலும் இன்று இவ்வளவோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






4 comments:

  1. மலரும் நினைவுகளால் சோகத்தின் கனம் குறையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. I think You are Jana's Brother SRi Ram from Bavani,is it right?

      Delete