கோழி பாலு (எ) பிகே BK பிராய்லர்ஸ் பாலச்சந்திரன்: கவிஞர் தணிகை
நம்ப முடியாதவை எவ்வளவோ இருக்கின்றன.நடந்து விடுகின்றன. ஓர் அந்தி சாய்ந்த வேளை, கிராமியப் பகுதி மலையடிவாரத்தில் வேறு ஊருக்கு சென்று விட்டு நமது நாயகன் கால் நடைப் பயணமாக விரைவாக ஊர் திரும்புகையில் இருட்டில் காலை ஒரு பாம்பின் மேல் வைத்து விட்டதை உணர்கிறான் கால் பாதத்தின் அடியில் பாம்பு அதுவும் படம் எடுத்து கொண்டு தலை தூக்கி நிற்கிறது, இவனை ஏதும் செய்யவில்லை. இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் மெதுவாக பதற்றம் உள் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் அசையாமல் கீழிருந்த தனது வேட்டியை கைகளால் உயரத் தூக்கி ஏற்றிக் கட்டியபடி மெதுவாக அசையாமல் அசங்காமல் காலை நகர்த்திக் கொள்ள அந்த நாகம் இவனைத் தீண்டாமல் சென்று விடுகிறது. அதனால் தாம் அதன் பேர் நல்ல பாம்பு.
இது கதை அல்ல உண்மைச் சம்பவம் இதை மறு நாளில் எனைப் பார்த்து பகிர்ந்து கொண்டார் நான் இன்று உயிருடன் இருப்பதே பெரும் பேறு,என்னாலேயே இதை நம்ப முடியவில்லை என பெரும் வியப்புடன் கூறி இப்படி ஒன்று நடந்து விட்டது என விவரிக்கும் போதே என்ன உணர்வு என அறிய முடியாமலேயே இன்ப அதிர்ச்சி மறு நாள் காலை வரை குறையாமல் இருந்ததை அப்படியே சொன்னார். அந்த உண்மைச் சம்பவத்தின் நாயகன் பாலச் சந்திரன். அதன் பின் இவர் வாழ்வே மிகுந்த செல்வாக்கு மிக்கதாக மாறியுள்ளதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.
கோழி பாலு எனச் செல்லமாக என்னால் அழைத்து வரப் படும் பாலச் சந்திரன் மங்கிய கீச்சுக் குரல். நல்ல செயல்வீரர்,மென்மையான குணம் ஆனால் வீரியமுள்ள போர்க்குணமும் கொண்ட நல்ல விவசாயி.அடிப்படையில் இவர் விவசாயி நிலக்கிழார் ஆனாலும் இப்போது பல ஆண்டுகளாக BK பிகே பிராய்லரின் உரிமையாளர்.பெரிதாக படிப்பு ஒன்றும் இல்லை. ஆனால் மகனை எம்.எஸ்M.S பிரான்ஸில் படிக்க வைத்து வருகிறார். பெண் ஒரு பல் மருத்துவர்B.D.S இலண்டன் என்.ஆர்.ஐக்கு மணம் செய்து வைக்கிறார்.
ஒரு காளி கோவிலை தமது விவசாய நிலத்தின் சாலையோரத்தில் கட்டி பராமரிப்பு செய்து வணங்கி வருகிறார், மேலும் பாடம் போடுவதுமுண்டு.இவர் ஈனத்தொழில் புரிவதுதான் இவருக்கு ஏற்றது என இவரது குடும்ப சோதிடர் சொன்னதைப் பின் பற்றி கோழி வெட்டி இறைச்சி கடைக்கு சொந்தக்காரராக இந்தப் பகுதியில் பிரபலமடையக் காரணம் கோழி, காடை, முட்டை போன்றவை எல்லாக் கடைகளையும் விடவும் இவர் கடையில் 5 அல்லது 10 எப்போதுமே விலைக் குறைவு என்பதுவும் மேலும் எடை நாணயம் போன்றவை.
வாரமொருமுறை வெகுதூரம் தமது சொந்த TEMPO வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று பழநி அருகே சென்றேன், ஊத்துக்குளி சென்றேன்,என்று ஏதோ ஒரு தொலை தூர குக்கிராமங்களுக்கெல்லாம் சென்று பறவைகளை டெம்போ நிறைய வாங்கி வந்து விற்று கை கண்டு விட்டார்.
இவர் நிலை கண்டு இவருக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்ற இவரது மாமனார் குடும்பம் தேடி வந்து பெண்ணளித்து குடும்பமாக்கிய கதையில் சோதிடம் பங்கு வகித்தது அதை அவரது சோதிடர் அப்படியே சொன்னதாக சொல்வதிலிருந்து அதைக் கேட்பார் மனதில் கூட சோதிடத்தின் மேல் ஒரு நம்பிக்கை வந்து நிற்கும்.
மொத்தத்தில் வளமான பாலு, பலமான பாலு, விவசாயத்தை நம்பி வீண்போகாத பாலு குடும்பத்தை சிறக்க வைத்தும் பிள்ளைகளை வளமுடன் வாழவைக்கும் வழிகள் கண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார். கல்வி ஒரு பொருட்டல்ல முழு முயற்சியே வாழ்வின் முன்னேற்றத்திற்கு முழு முதல் காரணம் என. என்றாலும் இவருக்கு இவரது முன்னோர் வைத்து சென்றுள்ள நிலமகள் அத்தனைக்கும் ஆதாரம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு: இத்தனைக்கும் அடியேன் 40 ஆண்டுக்கும் மேலான தியானப் பயிற்சியிலும், இராமலிங்க வள்ளலார் பற்றும் , சைவ நெறிமுறைகளைப் பின்பற்றும் முயற்சியில் இருந்தாலும் இந்த கசாப்புக் கடைக்கார விவசாயியும் நானும் நல்ல நண்பர்கள்.
No comments:
Post a Comment