Tuesday, January 30, 2024

சொல்லாமல் இருக்க முடியவில்லை காந்தி:கவிஞர் தணிகை.

 சொல்லாமல் இருக்க முடியவில்லை காந்தி

கொசுக்களைக் கொல்லாமல் இருக்க முடியவில்லை இராமலிங்க வள்ளலார்.



காந்தி கிராமியப் பல்கலைக் கழகத்தில் சில மாதங்கள் பயிற்சி எடுத்தது

மதுரை வள்ளியம்மாள் கல்வி நிறுவனத்தின் காந்திய நூல்களைப் படித்து தேர்வு எழுதியதில் முதல் பரிசும் சான்றிதழும் பெற்றது

காந்தி மாதிரி இந்த நாட்டின் சுகாதாரத்திற்காக மலம் அள்ளி மலத் தொட்டிகளை தூய்மை செய்தது

காந்தி வழி நூல்கள் 20 மற்றும் காந்திய சாரம் அடங்கிய அனைத்து நூல்களும் பயின்றது

பல கல்லூரி, பள்ளிகளில் பேருரை காந்திய சிந்தனையில் நிகழ்த்தியது... 

நினைவு கொள்ளுங்கள் சுமார் 60,000 பக்கங்கள் அதற்கும் மேல் உள்ள களஞ்சியம் அவை. அது மேலும் இணைய உலகத்தில் 100,000 பக்கங்களாக விரிந்து கிடக்கிறது. இளமையில் வாய்த்ததால் அவை அனைத்தையும் படித்த பெருமை என்னுள் இன்னும் இருக்கிறது. இவை போன்ற தகுதிகள்


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

எனவே இந்த தகுதிகள் இருப்பதால் சொல்லாமல் இருக்க முடியவில்லை...


நாட்டை மனிதர்களை உலகை மதம் ஆட்டி வைக்கக் கூடாது கூறு போட்டு பிளந்து இரத்தக் களரியாக்கக் கூடாது என்ற சிந்தனை உள்ளார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது...

இன்றைய காந்தி அமரத்துவ தினத்தில் அவர்க்கு இதை நான் செய்யும் அஞ்சலியாகக் கருதுகிறேன்.

சாதி மதம் சமயம் பொய்யென்று ஆதியில் உணர்த்தினாய் அருட் பெருஞ் ஜோதி

எம் மதம் எம் இறை என்ப உயிர்த்திரள் அம்மதம் அவர்க்கென்று அருள்வாய் அருட் பெருஞ் ஜோதி

என்பார் வள்ளலார்


விவேகானந்தர் மதங்கள் என்னும் ஆறுகள் இறை என்னும் சமுத்திரத்தில் கலப்பதாக உரைத்தார்.

சுருக்கமாக சொல்ல நினைத்தாலும் வார்த்தை சற்று நீண்டு விட்டது.

விமர்சனம் கொடுக்க நினைப்பார் அதற்கும் முன் அவை, அவர்கள், அது பற்றி எல்லாம் நிறைய தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள அறிந்து கொள்ள உணர்ந்து கொள்ள தேடல் நடத்த படிக்க வேண்டும் . அதன் பின் கருத்துகள் இருப்பின் முரண் இருப்பின் மாறுபட்ட கருத்துகள் இருப்பின் அது சமுதாய மேன்மைக்கு பயன்படுவதாக இருந்தால் தெரிவிக்கலாம். அதற்கு மனிதராய்ப் பிறந்த யாவர்க்க்கும் உரிமையும் கருத்து சுதந்திரமும், வாய்ப்பும் உண்டு.

அல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பேசுவது தவறே.

உயிருடன் இருக்கும் போதே பாராட்டி விடலாம். அது நல்ல வாய்ப்பு. விமர்சிப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, சிந்தித்து வாய் உரைப்பதும் எழுத முனைவதும் சிறந்த பலன் தரும்.


ரபீந்தர நாத் தாகூர் இவரை மகாத்மா என்கிறார், அவரை இவர் குருதேவ் என்கிறார். சுபாஷ் சந்திர போஷ் இவரை தேசத் தந்தை என்கிறார். தமது தந்தையாகவே கருதுகிறார். அது மட்டுமல்ல இவர் தன்னை தலைவராக ஏற்பது குறித்து மாறுபட்ட சிந்தனையில் இருப்பதை அறிந்து ஜனநாயக முறையில் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையிலும் அது வேண்டாம் எனத் துறக்கிறார். இந்த காந்தி காங்கிரஸ் பேரியக்கத்தில் அங்கமாக இல்லாத போதும்.

உண்மைதான் இந்தியாவின் 1947 விடுதலைக்கு காந்தி மட்டுமே காரணமல்ல. ஆனால் மையப்புள்ளி இவராகவே இருந்திருக்கிறார் என்பதை அனைத்து தலைவர்களும், அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் இரும்பு மனிதர் என்றழைக்கப் பட்ட சர்தார் வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, சுபாஷ், போன்றோர் கூட விலக்கல்ல. பகத் சிங் விவகாரத்தில் கூட முரண்கள் உள்ளன.

இவை யாவுமே பிரேதப் பரிசோதனைகளுக்கு ஒப்பானது. இதனால் உயிர்களுக்கு தீங்கு விளையும் எனில் அவை தேவை இல்லை என்பது எவராலும் மறுக்கக் கூடாத சத்தியம்.

எழுதுவதையும் பேசுவதையும் கூட நிர்பந்தமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதால்

இத்துடன் நிறுத்திக் கொண்டு விடை பெறுகிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

 


No comments:

Post a Comment