Wednesday, June 12, 2019

வாழ்வெனும் நதி போகும் போக்கில் (அ) போகிற போக்கில்: கவிஞர் தணிகை.

இடைவிடாமல் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தது காற்று நடைப்பயிற்சி முழுவதுமே அதைக் கவனித்தபடியே சென்று கொண்டிருந்தேன்.தானாக பேசிக் கொண்டே இருந்தால் பைத்தியம் என்பார்கள், இயற்கைக்கு மாறான அறிவியல் ஆக்கபூர்வமாக கொண்டு வந்த அக்கபோர்: வாகனசாரிகளும் தானாகவே பேசியபடியே சென்று கொண்டிருந்தார்கள்.அறிவியல் நிறைய பைத்தியங்களை அடையாளம் காட்டியபடி இருக்கின்றன. செல்பேசி உலகம். வாகனத்தில் கலகம்....
Related image



அவர் எனக்கு புதிதான அறிமுகம் என்பதால் அவர் கால அட்டவணை எல்லாம் எனக்குத் தெரியாது ஆனாலும் அவர் மிகவும் பணிகள் அதிகம் உள்ளவர் என்று அறிய முடிந்தது. ஒர் நாள் மதுரை சென்று வந்தேன் என்றார் மற்றொரு நாள் கோவை சென்று வந்தேன் என்றார். எப்படி இருந்தாலும் இவர் போன்றவர்கள் தமது அன்றாட வேலை நாட்களை விடாமல் செய்து கொண்டே இருக்கின்றனர் அத்தனை பரபரப்பான சூழலிலும்.

மாலை வேறு  மாநகர் சார்ந்த மருத்துவமனைக்கு இவரது பணி நடைபெறுகிறது. கல்லூரியில் பேராசிரியர் பணி . இவரிடம் தான் நான் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளத் தீர்மானித்திருந்தேன். நாளும் தோராயமாகக் குறிக்கப்பட்ட நிலையில் அது குறித்து முன் ஏற்பாடுகளுக்கான ஆவன செய்யும் பொருட்டு திடீரென ஒரு நாள் என்னை அழைத்து மாலை மாநகர மருத்துவ மனைக்கு ஒருமுறை வாருங்கள் சில பரிசோதனைகள் இருக்கின்றன என்றார். ஏற்கெனவே சில தேவையான பரிசோதனைகள்  மருத்துவக் கல்லூரி சார்ந்த வளாகத்திலும் நடைபெற்றிருந்தன‌

உடனே இவரது அழைப்பை வரப்ரசாதமாக ஏற்று வந்து விடுகிறேன் என உறுதி அளித்தேன். அவரும் உங்களுக்காக எப்போதும் வருவதை விட நான் முன் கூட்டியே சுமார் 6 மணிக்கே கூட வந்து விடுகிறேன் என்றார். எனது நிலையை அறிந்த மருத்துவர்.

3. 30 மதியம் கல்லூரி முடிந்து பேருந்து சுமார் 4.15 மணிக்கு எடுக்கப்பட நானும் அத்துடன் என்னை பயணத்தில் இணைத்துக் கொண்டேன். பழைய பேருந்து நிலையம் சென்று அதன் பிறகு கொஞ்சம் நடந்தால் அந்த மருத்துவமனையை சென்றடைந்து விடலாம் என்பதால்.

பேருந்து ஓட்டுனர் சந்திரன் , சார் அமருங்கள் சார், நான் கடைசியில் பேருந்தை சென்று நிறுத்தி விட்டு எனது இரு சக்கர வாகனத்திலேயே கொண்டு வந்து விட்டு விடுகிறேன் என்றார். மறுக்க முடியவில்லை. அவருடன் இணைத்துக் கொண்டேன் கடைசி பயணியான ஒரு பயிற்சி மருத்துவர் இறங்கிக் கொண்டது பேருந்து அதன் நிறுத்தம் சென்று நிறுத்தப்பட்டது மிகக் குறைவான இடத்தில் 6 பேருந்து நிறுத்துகிறார்கள் மாதமானால் ஒன்றுமில்லா சிறு இடமே பல்லாயிரம் ஊதியத்தை பெற்றுத் தந்துவிடுகிற நகர் புறச் சூழல். வியப்பாக இருந்தது.

ஏக்கர் கணக்கில் வைத்துக் கொண்டு விவசாயமும் செய்ய முடியாமல் வேறு ஒன்றும் செய்ய முடியாமல் வள்ளுவர் சொல்லியபடி நிலம் என்னும் நல்லாள் ஊடிவிட எத்தனையோ நிலம் இருக்க...

சரியாக இரு சக்கர வாகனத்தில் என்னை அந்த மருத்துவமனையில் பேருந்து ஓட்டுனர் சந்திரன் ...இளைஞர் கொண்டு விடும்போது சரியாக மணி 5. 30 இருக்கும். அப்போதிருந்து காத்திருக்க ஆரம்பித்தேன். காத்திருந்தேன் என்பதை விட அந்த இடத்தில் என்னை ஐக்யப்படுத்திக் கொண்டிருந்தேன். கோவில் போன்ற இடம். நீள் பாதை விநாயகர் சிலை. அதைச் சுற்றி இறைவணக்க சூழ்நிலை. சில பெண்கள் இரு ஆண்கள் அனேகமாக அவர்கள் அந்த இடத்தை கவனித்துக் கொண்டிருந்ததைக் கவனிக்கும்போது கொஞ்சம் வேறுபாடு தெரிந்தது.அதற்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போல‌

அவரா 7. 30 மணிக்குத் தான் வருவார் என்றார்கள்.அமருங்கள் என்றார்கள்.  சுமார் 6 மணியாக பத்து நிமிடம் ஆனதும் காத்திருக்கிறேன் என்றேன் அங்குதான் அய்யா வந்து கொண்டிருக்கிறேன் என சரியாக 6. 30 மணிக்கே வந்து விட்டார் எனக்காக. எப்போதும் 7. 30 மணிக்குத்தான் வருவார் என்று சொல்லப்பட்ட மதிப்பிற்குரிய மருத்துவர். மதுரை சென்று வந்தேன் என்றார்.

அதற்கும் முன்பே அவரின் உதவியாளர் வந்திருந்தார். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார் மற்றொருவர். அப்படியே செய்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோதே மருத்துவர் வந்துவிட்டார். பரிசோதனைகள் முடிந்து அறுவை சிகிச்சைக்கான திட்டமிடல் நடந்தது. பின் தொடர்ந்து அனுசரிக்க வேண்டிய முறைகளும் குறிப்பிடப்பட்டு மருந்துகளும் தரப்பட்டன.

Image result for perennial river like life

மொத்தம் 780 ரூபாய் ஆகிவிட்டது. நான் எப்போதும் தேவையில்லாமல் ரொக்கத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்வதுமில்லை. பணப்பை அதாவது மணிப்பர்ஸ் என்னிடம் இருக்காது. அது அந்த மாநகரம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடத்தால்.  வீட்டுக்கு கல்லூரிக்கு கல்லூரியிலிருந்து வீட்டுக்கு அதற்கு பயணத்துக்குத் தேவையான பணத்தை மட்டுமே எடுத்துச் செல்பவன்.கார்ட் போன்றவையும் வைத்திருக்கமாட்டேன். செல்பேசியையே அங்கே இங்கே வைத்துவிட்டு அட காணோமே என்று தொலைந்து விடுமோ என்ற பயத்தில் தேடும்போதே அது இருக்குமோ இருக்காதோ என பதற்றம் எல்லாம் உண்டு ஆதலால் கார்ட், பணம் ஏதும் அதிகம் எதற்குமே எடுத்துச் செல்லாதவன் என்பதால்...நானும் கட்டணம் ஏதும் எடுத்துவர வேண்டுமா எனக் கேட்கவில்லை. அவரும் ஏதும் சொல்லவில்லை. அப்படித் தெரிந்திருந்தால் கல்லூரியில் எவரிடமிருந்தாவது வாங்கிச் சென்றிருக்கலாம்.

எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது . அன்றுதான் நூல் விற்ற காசில் திருப்பதி போகும் ஒரு உண்மையான உழைப்பாளிக்கு எனது சார்பாக 50 ரூபாய் கொடுத்திருந்தேன். அதெல்லாம் போக என்னிடம் ரூ. 520 தான் இருந்தது.

அந்த 20ரூ எடுத்துக் கொண்டு இவ்வளவுதான் இருக்கிறது என அந்த 500ரூபாயைக் கொடுத்தேன்,  எனது நிலையை உணர்ந்த அந்த உதவியாளர் அவரிடமிருந்து இரண்டு பத்து ரூபாய் தாள்களை கொடுத்தார். ஒன்று போதும் என்றேன். கையில் உள்ள 20 அத்துடன் அந்த பத்து.( மீதம் உள்ள ரூ.300ஐ மறுபடியும் மருத்துவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்றேன் அவ்வாறே சேர்த்தேன் அதெல்லாம் வேறு கதை). இப்போது அந்த நாள் கதைக்கு மட்டும் வாருங்கள். எனக்கு நினைவில்லை நான் எங்கிருக்கிறேன் என்பது கூட. எனது பயணத்துக்கு வழக்கம்போல ரூ. 30 போதும் என நினைத்திருக்கிறேன். நல்லவேளை எதற்கும் இருக்கட்டும் தேவைப்படும் இதையும் வைத்துக் கொள்ளுங்கள் என அந்த இரு பத்து ரூபாயை கொடுத்தார். என்னிடம் இருந்த ரூ. 20 உடன் இந்த இருபதும். ஆனால் நான் பழைய நகரப் பேருந்து நிலையத்திற்கு முதலில் மருத்துவ மனையிலிருந்து வரவேண்டும் அதற்கு ஆட்டோ என்றால் ரூ. 10 பங்கிட்டுக் கொள்ளும் ஆட்டோ என்றால், பேருந்து என்றால் ரூ. 7 இருக்கும் என்றார்  அப்போது பெருமழையில் நனையாமல் ஒரு பலகாரக் கடையின் முன் உள்ள ஒரு பெரிய துணிக்குடையின் கீழ் ஒதுங்கி சிறிது நேரம் கழித்த பின் அங்கிருந்த ஒரு பெரியவர்.

ஆக அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும், அதன் பின் அங்கிருந்து புதிய மத்திய பேருந்து நிலையம் சென்று அதன் பின் எனது ஊருக்கு 30 ரூபாய் பயணத்தில் செல்ல வேண்டும் என்பதே. ஆக எப்படியும் தேவை 50 ரூபாய். என்னிடம் இருப்பது ரூபாய் 40 மட்டுமே. பெருமழை வளைத்து வளைத்து எவரையும் அசைய விடாமல் பிடித்துக் கொண்டது.
Image result for perennial river like life
 வந்தியத் தேவனைப் போல பெரும் துணிச்சல் கொண்ட நான் சற்று யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் எனில் மழை இல்லை என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடந்து சென்றுவிடுவேன் சமாளித்துவிடுவேன் என்ற தெம்புடன் இருக்கும் என்னை இயற்கை பார்த்து எள்ளி நகையாடியது. எப்போதும் செல்பேசியில் அந்த உறையில் ஆபத்து அவசரத்துக்காக வைத்து இருக்கும் வழிப்பயணத்துக்கான சிறு தொகையும் கூட இல்லை. செல்பேசி மருந்துகள் ஆகியவற்றை எடுத்து பையில் போட்டுக் கொண்டேன் மழை விடட்டும் ஓடிவிடலாம் என்று மழை விட்ட பாடில்லை.
Related image
இந்த மாநகரத்தில் என்ன யாரிடம் எப்படி உதவி பெற...அது இழுக்கு. இஞ்சினியர் மணி உயிருடன் இல்லை, சிற்பி வேலாயுதம்  சென்னை வாழ்க்கைக்கு மாறி விட்டார் யாரிடம் உதவி பெற முடியும்... அமைதியாக இருந்தேன். அந்த சம்பவம் நடந்த மறு நாள் உறங்கப் படுக்கையில் இருந்தவனுக்கு ஒரு நினைவு கையில் எழுதிய புத்தகம் ஒன்றோ இரண்டோ இருந்ததே அதைக் கூட நமது  அப்துல் கலாம் பாணியில் விற்று விட்டு வந்திருக்கலாமே என்று யோசனையும்

நான் வை ப்வை வசதி தவிர செல்போனில் நெட் கார்ட் ஏதும் போடாதவன் இல்லை என்றால் கூகுள் பே மூலம் கூட நண்பர் வழி பெற்றிருக்கலோமோ அந்த நேரத்தில் நாம் கூப்பிடும் நபர் உடனடியான செயல்பாட்டில் இருக்க வேண்டுமே.... ஏ.டி.எம் இருந்தாலும் கூட மழை விட வேண்டும் அதைத் தேடி அது இருக்கும் தேடிச் செல்ல வேண்டும் இதெல்லாம் உபரி நினைவுகள்...

இதற்கெல்லாம் மாறாக இரவின் ஓட்டமும், மழையின் பாட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க அந்தப் பெரியவர் டவுன் பஸ் என்றால் இந்தப் பக்கம் , அப்புறம் ஏன் டவுன் பஸ் எல்லாம் அந்தப் பக்கம் இருந்து வருகின்றன என்ற எனது கேள்விக்கு டவுன் பஸ்ஸில் போவதென்றால் அங்கே செல்ல வேண்டும், நடந்து செல்ல வேண்டுமெனில் இப்படியே போகலாம் என்றார்.

எப்போது...1980.. 90 களில் அந்தப் பக்கம் போனதில் பாதி நினைவு வந்துவிட எடுத்தேன் எனது குதிரையை அதன் பேர் நடராஜா பஸ் சர்வீஸ். நகர பேருந்து நிலையம் வந்து அந்த உதவியாளர் கொடுத்து இரு பத்துகளில் ஒரு பத்தை எடுத்து அனுமதிச் சீட்டைப்பெற்றேன். அதில் வேறு ஒரு நோட்டு சற்று கறை படிந்திருந்ததால் அதை பேருந்து நடத்துனர்கள் வாங்கிக் கொள்வார்களா  மாட்டார்களா என்ற சந்தேகம் முடிவுக்கு வந்தது.

அடுத்து மாநகரப் பேருந்து நிலையம் அடுத்து இருந்த 30 ரூபாயும் இருக்கிறதா இல்லையா என இரு முறை உறுதிப் படுத்தியபடி ஊருக்கு அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன் மணி 9.30 ஆகிவிட்டது எல்லா ஊர்களிலும் மழை, எங்கள் ஊரிலும், ஆனால் வழி எங்கும் மின்சாரம் இருந்தது. எங்களது ஊரில் ஒரே இருள்...மழையின் நாட்டியம் நன்கு அரங்கேறி இருந்தது. சம்சாரம் தொலைபேசி இணைப்பை எல்லாம் விலக்கி வைத்து கணினிக்கு எல்லாம் போர்வை போர்த்தி பாதுகாத்து வைத்திருந்தார். எனது சட்டைப் பையில் மீதம் சில்லறை காசுகள் ரூ. 4 இருந்தது என நினைக்கிறேன்.

மற்றவர்களுக்கு என்றால் ஏதாவது செய்ய வேண்டுமெனில் எனது கை மிகவும் பயனளிப்பதாகவும், அதுவே எனக்கே நான் செய்து கொள்வதாக இருந்தால் எது எடுத்தாலும் ஏனிந்த போராட்டமாகவே இருக்கிறது என பல முறை எண்ணி எண்ணி வருத்தமுற்றிருக்கிறேன். தரித்திரமும் பொருளாதார இடையுறல்களும் என்னதான் முயன்றாலும் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றனவோ... சரியான திட்டமிடலும் முன் கூட்டியே முடிவெடுக்கும் திறனும் இல்லாமல் எது வந்தாலும் எது நடந்தாலும் அதன் பின்னேயே சென்று வாழும் நிலைதான் என்னிடம் எப்போதும்...அது பிறவிச் சுபாவமாகவே இருக்கிறது

அடுத்து இருக்கும் சூழலில் மெய் மறக்கும் நிலை...அடுத்து என்ன வரப்போகிறது அதை எப்படி சமாளிக்கவேண்டும் அதிலிருந்து எப்படி மீண்டு மேல் உயர வேண்டும் என்ற எண்ணமே துளியும் வருவதில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

வாழ்வெனும் நதி போகும் போக்கில் (அ) போகிற போக்கில்: கவிஞர் தணிகை.
Image result for perennial river like life


No comments:

Post a Comment