Saturday, September 8, 2018

என்ன சொல்லி(ல்) வாழ்த்துவது எப்படி பாராட்டுவது? கவிஞர் தணிகை.

என்ன சொல்லி(ல்) வாழ்த்துவது எப்படி பாராட்டுவது? கவிஞர் தணிகை.




ஓரின சேர்க்கையாளர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ராஜிவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக நிலை   பத்தாம் தேதி பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றம் பற்றிய நாடு தழுவிய வேலை நிறுத்தம் இவை போன்ற செய்தி  நிகழ்வுகளில் நாடு மூழ்கிக் கிடக்கையில் நாம் ஒரு நல்ல மனிதரைப் பற்றிய அன்பை நன்றியறிதலாய்ப் பகிர்ந்து கொள்கிறோம்.

1978ல் இதே போல கல்லூரி ஆரம்பமான ஜூன் ஜுலை போன்ற மாதங்களில் இந்த நபரை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது கல்லூரியில் ஒரு கவிதைப் போட்டி வைத்தார்கள் உழைப்பு என்ற தலைப்பில் 40 வரி எழுதச் சொல்லி.

அந்த உழைப்பு என்ற தலைப்பில்:
உழைப்புக்கு உரு கொடுத்தோர் கொடுத்த தலைப்புக்கு கரு எடுத்து ... என்ற முதல் வரியுடன் எழுதி இருந்தேன். அதில் கவனக் குறைப்புக்கு இறை ஈடு செய்யும் கவளச் சோற்றுக்கு என்ன செய்யும் படி அளக்குமா: செவிப்பறை கிழியும் மட்டும் போர்ப்பறை ஒலிக்கட்டும், பெரியார் அண்ணா வழியில்..என்றெல்லாம் எழுதி அதே முதல் 4 வரியையே மாற்றி கடைசி நாலு வரியாக மாற்றியும் கவிதை முடிந்திருக்கும்...

தற்போது விடியல் குகன் எனச் சொல்லப்படும் எனது நண்பன் அவருடைய கவிதை அத்துடன் எனது கவிதையையும் அவர் எடுத்துச் சென்று போட்டி நடத்தும் நிர்வாகிகளிடம் சேர்த்தார். நான் அப்போது சில நண்பர்களுடன் சேர்ந்து பழனி சென்றிருந்தேன். நாங்கள் அனைவரும் அப்போது பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தோம்.

அந்தப் போட்டியில் எனது பெயரும், எனது கவிதையும் முதலாக தேர்வு செய்யப்பட்டு அறிவிப்புப் பலகையில் இடம் பெற்றிருந்தது. அதன் பின் கோவை வானொலி நிலையம் சார்பாக எமது கல்லூரியில் நடைபெற்ற ஒரு பதிவு நிகழ்விலும் அந்தக் கவிதையை வாசிக்கச் சொல்லி பதிவு செய்துகொண்டன‌ர்.

அதன் பிறகு நண்பர் என்னை இணைத்துக் கொண்டு விடியல் என்ற ஒரு கையெழுத்துப் பிரதியை வெளியிட்டார் அல்லது வெளியிட்டோம். அதன் பிறகும் அவர் விடாமல் கல்லூரியிலிருந்து பிரிந்து சென்ற பிறகும் அதை அச்சாக்கப் பிரதியாக தமது நாமக்கல் ஊரில் இருந்தபடியே வெளியிட்டு புத்தகத்தை தபாலில் அனுப்பி நண்பர்களுக்கு விற்பனை செய்யச் சொல்வார். என்னடா இவன் விடவே மாட்டேன் என்கிறான், அதில் ஒரு கவிதை அல்லது ஒரு பதிவு என்னுடையதும் இருக்கும்...என்றாலும் எவரிடமும் சென்று விலைக்கு அந்தப் சிறு நூலை விற்பனை செய்து தருவதில் எனக்கு மகாத் தடங்கலாக மனசு கோணிக்கொண்டிருக்கும். கவிஞர் என்பவர்களுக்கும் விற்பனைக்கும் எப்போதும் பெரும் இடைவெளி இருந்து கொண்டு இருப்பது இயல்புதானே..

அத்துடன் கல்லூரியில் படிக்கும்போதே அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதி நேர ஊழியராக அப்போது கவிஞர் இளைய பாரதி என்ற பேர் இளைய பாரதி என்ற பேர் பலருக்கும் இருப்பதால் தனது கி. ராஜேந்திரன் என்ற பேரில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி அப்போதும் இப்போதும் பெரிய பதவியில் இருக்கும் இருந்த அந்த நண்பர் விடியலைத் தேடி என்ற ஒரு நூலை வெளியிட்டிருந்தார்...அவர் வீட்டுக்கு என்னை இவர் கூட்டிச் சென்று இருவரும் ஓரிரவு தங்கினோம். நிறைய பேசினோம்...காலையில் எழுந்தும் எங்கோ நடந்து பேசிச் சென்று வந்தோம்.

 அது மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களின் காலம், அது நா. காமராஜனின் கறுப்பு மலர்களின் காலம், அது வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகளின் காலம், அது மீராவின் கனவுகள் + கற்பனைகள்+ காகிதங்கள் காலம் இப்படி அப்துல் ரகுமான் கொடி கட்டிப் பறந்த காலம்...இப்படி சொல்லிக் கொண்டே போன காலத்தில் நாங்கள் எங்கள் ஆரம்பத்தை துவக்கி இருந்தோம்...


எங்களது கல்லூரிப் படிப்பு 3 ஆண்டு நிறைவுக்கு வந்த பிறகும் நண்பர் 7 ஆண்டுகள் தொடர்ந்து படித்து இன்று நீதிபதி ஆகிவிட்டார். அது வரை நிறைய வாழ்க்கைப் பயணம் இருவரிடமும் இருவர் வாழ்விலும்.

 அவர் திருமண்த்தின் போது தேக்கம்பட்டி சென்று இரட்டைக் கிளவி படர்ந்திருக்குமாறு ஒரு வாழ்த்தை பரிசளித்தேன்... பேர்ப்பொருத்தமும் அபாரமாக இணைந்திருந்தது. எனது நண்பர்க்கும் அவரது துணைவிக்கும் அப்போது அவர் ஒரு வழக்கறிஞர்தாம்.

நான் அப்போது திட்ட அலுவலராக, நேரு யுவக்கேந்திரா தொடர்புடன் , நண்பர் கொ. வேலாயுதம் தொடர்புடன் சசிபெருமாள், சின்ன பையன், தமிழரசு போன்ற இளைஞர்களை உருவாக்கிக் கொண்டிருந்த பேர்கள் 3 முறை மாற்றம் பெற்ற ஒரு இயக்கத்தின் முன்னோடியாக செயல்பட்டு வந்தேன். ஏன் அப்போதும் கூட சேலம் மக்கள் கலைப் பண்பாட்டுக் கழகம் என்ற ஒரு நல்லியக்கத்தின் தலைமைப் பொறுப்பில் கவிஞர் இன்குலாப் போன்ற கவிஞர்களுடன் கூட கவிதை கவியரங்கம் செய்தேன். அந்த கவியரங்கில் எனக்கு கிடைத்த தலைப்பு: நீதி. அப்போது தலைமைக்கவிஞராக இருந்த இன்குலாப் எனது கவிதையை நீதியின் தீர்ப்புக்கு ஒப்பிட்டு பேசியதும் நினைவிருக்கிறது.

இது போன்ற தருணங்களில் எல்லாம் கூட நண்பர் என் தொடர்பிலிருந்தார்.
 நாங்கள் பல்வேறுபட்ட கருத்து நெறிகள் குறித்து அவ்வப்போது கடிதப் பரிமாற்றம் செய்தபடி இருந்தோம்.இருப்போம். அப்போதெல்லாம் தொலைபேசி எல்லாம் அவ்வளவாக இல்லை.

நான் முதல் கவிதை நூலை வெளியிட்டேன், அதற்கு மீண்டும் மலரும் என்று பெயரிடலாம் என தமது கருத்தை முன் வைத்தார் நான் கேட்கவில்லை: அது மறுபடியும் பூக்கும் என்ற பேரிலேயே வெளிவந்தது.

அவர் எங்கிருந்த போதும் எனது வாழ்வில் ஒரு பகுதியாக முக்கியமான கட்டங்களில் எல்லாம் சேர்ந்தே இருந்தார். இருக்கிறார். எனது தந்தை இடுப்பெலும்பு முறிந்து சேலம் மருத்துவ மனையில் இருந்த போது, நான் ஹைதராபாத் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சேவை புரிய சென்றிருந்த காலக் கட்டத்தில் கூட நான் வரும்போது அவரும் அங்கு சேலம் வந்து தந்தையைப் பார்த்து விட்டு... சற்று முன் நான் புறப்பட்டு விட அவர் நான் அங்கு மறதியாக தவற விட்ட எனது சாவிக் கொத்து ஒன்றை தபாலில் அனுப்ப அது என் கைக்கு வராமலே வாழ்வுப் படி மேலேறிச் சென்றுவிட்டது.

எனது தங்கையை நாமக்கல் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் சேர்த்து விட்டு அவரை விடுதியில் விட்ட பிறகு விஜய்காந்த் படமான வைதேகி காத்திருந்தாள் படம் பார்த்தோம்...அவர் இருப்பிடக் கிராமம் செருக்களை புதுப்பாளையத்துக்கு நான் நேரு யுவக்கேந்திராவில் பணி புரியும் காலக்கட்டத்தில் நாமக்கல் பக்கம் செல்லும்போது சென்று அவரை சந்திப்பது வழக்கம்.அவரது தங்கை சேலம் பொது அரசு மருத்துவ மனையில் விடுதியில் இருந்து கொண்டு செவிலியர் பயிற்சி எடுக்கும்போதும் இருவரும் அங்கு சென்றோம் பார்த்து வந்தோம்.

அவரும் எனது வீடு வந்து ஒரு நாள் தங்கிச் சென்றது இன்னும் நினைவிருக்கிறது. அப்போது நிறைய காதல் விஷ(ய)ங்களைப் பரிமாறிக் கொண்டு பேசியது நினைவிருக்கிறது.

அதன் பின் எனக்கும் நான் பணி புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டபோது ஒரு வழக்குத் தொடரலாமா நடத்துகிறாயா என்று கேட்க அவரின் நாமக்கல் அறைக்கு ஒரு நாள் அவர் நீதிமன்றம் செல்லும் முன் காலையில் சென்று சந்தித்தேன். அவர் அதை ஏற்றுக் கொள்ள்வில்லை. மௌனம் சாதித்தார். நானும் விட்டு விட்டேன்.

 அதன் பின் அவர் பெரும் பாடுபட்டு நீதிபதி ஆகிவிட்டார். ஆனாலும் அவருக்கும் எனக்கும் இருக்கும் நட்பில் ஏதும் இடைவெளி இல்லை. இருவரும் ஒரே கொள்கையில் பயணம் செய்வதாகவே தோன்றுகிறது. மேல் படிப்பு படிக்க என் பெரும் குடும்பத்தின் சூழல் ஒத்துழைக்காத போது தனது சகோதரர் மூலம் நிதி உதவி செய்ய தயாராக இருந்தார்  என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

அதன் பின்னும் நாங்கள் பல படிகள் வாழ்வின் வழியில் கடந்து மேல் ஏறினோம். மணந்தோம். தந்தையானோம். குடும்பம் நடத்துகிறோம். அவருக்கு இரண்டு பாரதிகள் அருண், நவீன் என எனக்கு ஒரு சுப்ரமணியம்...

அதிலிருந்து ஒவ்வோரு புத்தகம் போடும் போதெல்லாம் தன்னால் ஆன பங்களிப்பை செய்யத் தவறியதேயில்லை. மேலும் அந்தப் புத்தகம் விற்பனை செய்ய தாம் பின்னிருந்து செய்யும் கூட்டத்தில் எல்லாம் என்னை அழைத்து பேசச் சொல்லி, உரை வீச்சு செய்யச் சொல்லி, புத்தகம் விற்பனையாக நல்ல ஒரு மேடையை எனக்கு அமைத்துத் தந்த வண்ணம் இருக்கிறார். எனக்கு எனதுசேவையை பாராட்டி எவரும் ஒரு விருதும் தர முன்வராத போது நான் முன் விழையாத போதும் எனக்கு வாழ்வியல் வழிகாட்டி நட்புச் சூரியன் என்ற விருதை எல்லாம் பெற்றுத் தர காரணமாகி இருக்கிறார்.

 ஒரு நாள் இரவில் வந்து பழனி செல்ல குடும்பத்துடன் அழைத்தார் ஏனோ அப்போது அந்த நள்ளிரவில் எனது தியான ஆன்மாவின் குரல் தடுத்து விட நான் அவருடன் இணைந்து வர வில்லை என்று அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தாரையும் சற்று ஏமாற்று குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தேன். அப்போது எனது தாயும் என்னுடன் இருந்தார்.

எனக்குள் ஒரு கற்பனை இருந்தபடி இருக்கும் நான் மார்க்ஸ் போல அவர் எங்கெல்ஸ் போல...ஏழ்மை மார்க்ஸ் பக்கம்..எனவே...

நாட்டுக்கும் நட்புக்கும் பெரிய அமைதிப் பாலமிட ஆக்கபூர்வமான செயல்கள் புரிய தன்னால் ஆன செயல்களைச் செய்து வருகிறார். இவர் நல்ல உழைப்பாளி. என்னை விட ஆமாம் என்னை விட. எனவே நிறைய எழுதுவர். நான் அவரை ஒப்பிட்டால் படு சோம்பேறி... நான் தியானம், நடைப்பயிற்சி எழுத்து பேச்சு என நிறைய பயணம் செய்தபோதும்...

அவர் கதை எல்லாம் எழுதுவார். நான் கதை பெரிதாக எதையும் எழுதியதாக நினைவில்லை. அவரும் கவிஞர். அவரது ஆலோசனகளை அவ்வப்போது எடுத்துக் கொண்டுமிருக்கிறேன்..ஏற்காமலும் இருந்திருக்கிறேன். ஆனாலும் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்

இப்போது எங்களது அடுத்த தலைமுறையையும் இணைந்து பிணைந்து  பயணம் செய்ய முயற்சிக்கிறார். குடும்பம், நட்பு எல்லாவற்றிலுமே தம் இதழ்களை விரித்தபடி...தம் கிளைகளை பரப்பியபடி... தட்சிணா மூர்த்தி  என்ற பேர்தானே கருணாநிதி என்ற பேராகியது தமிழில் சொல்ல அமைதிக் கீற்றுடன்....

அப்துல் கலாம் இயக்கம் நடத்தும்போதும், கபாலீஸ்வரர் கோவில் கட்ட நான் சுமார் பதினெட்டு மாத காலம் எவ்வித ஊதியமும் இன்றி உழைத்த போதும் எனது பகிர்வை பகிர்ந்து கொண்டார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சுருங்கச் சொல்லின் எனது வாழ்வின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் தமது பங்கெடுப்பை இவர் தவறாமல் எடுத்துக் கொண்டே இருக்கிறார். இவரை என்ன சொல்லி(ல்) வாழ்த்துவது எப்படி பாராட்டுவது?

எங்கிருந்து இவ்வளவு பெரிய மனது, பரந்த மனப்பான்மை உன்னிடம் வந்தது...நான் இன்னும் கர்ஜிக்கும், ரௌத்திரம் பழகிய சிறுவனாகவே இருக்கிறேன்...நீ அமைதியான ஆழ்கடலாகி புன்முறுவலுடன் மட்டுமே காட்சி தருகிறாய்...எப்படி இவ்வளவு பெரிய ஆள் உன்னுள் வந்து உட்கார்ந்திருக்கிறான் நண்பா.. உண்மையிலேயே நீ பெரிய ஆள்தான், அரிய மனிதன் தான், அபூர்வமான நல்ல மனிதர்தான். மனிதரை இருக்கும்போதே நினைக்கும்போதே பாராட்டி விட வேண்டும். அதற்கானதே இந்தப் பதிவு...உனக்கு என் மேல் துளி கூட பொறாமையே வரவில்லையே..

.நீ பல நேரங்களில் நீ பெரு முயற்சி செய்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வாய் நான் வந்து அந்த இடத்தை ஆக்ரமித்து பெரும்பயன் அடைந்து பேர் பெற்று சென்று விடுவேன்... ஆனாலும் நீ மறுபடியும் என்னை அழைத்தபடியே இருக்கிறாய், என்னை அணைத்தபடியே இருக்கிறாய்...என்னை தூக்கி வைக்கவே என்னை எனது கருத்துகளுக்கு தோள் கொடுக்கவே, கை கொடுக்கவே நீ ஏற்பாடு செய்கிறாயோ என்றெல்லாம் தோன்றும்... ஆனாலும் நமது உழைப்பு  நாடு மேம்பட...நாம் நல்ல விதைகள்...பேர் சொல்லும் நம் பேர் சொல்லும் நம் பெற்றவர் பேர் சொல்லும், நம் பிள்ளைகள் பேர் சொல்லும் இந்த பூமி...

உனக்காகவே கரூரில்  நெட்டைமரங்களென நின்றார் என்றும், உனக்காகவே பழனியில் உடல் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம் என்றும் உனக்காகவே திண்டுக்கல்லில் புறம் கட உள் பார்க்க புறம் கட கடவுள் பார்க்க என்றெல்லாம் வந்து உரை வீச்சு செய்தேன் எனது உடல் நலிவை எல்லாம் கூட பொருட்பட்டுத்தாமல்..செப். 02ல் உனக்காகவே கோவையிலும் நம்முடன் படித்த நபர்களுடன் ஒருவனாய் வந்து சேர்ந்தேன் உனது வேண்டுகோளின் படி மகனையும் அங்கழைத்து வந்து சேர்த்து... அங்கு ஒருங்கிணைப்பு செய்தேன் என்றாலும் அது வேறு தளமாக இருந்ததால் பெரிதான நிறைவில்லாத போதும் அங்கும் எனது நோக்கம் நிறைவேற சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டு நான் மனம் கோணி விடக்கூடாது என்று புத்தக விற்பனைக்கும், மேடையில் எனை இடையுற்ற நண்பர்களையும் ஆற்றுப் படுத்தி என்னை மேன்மைப்படுத்தினாய். அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்...பொருளாதார நிலை மட்டும் உயர்ந்திருக்க, வயது மட்டும் கூடியிருக்க, உடல் மட்டும் தளர்ந்திருக்க....சமுதாயப் பார்வை அவர்களுள் இன்னும் வந்தமரவில்லை... அவர்கள் யார் சொல்வதையும் எவர் சொல்வதையும் எதற்காகவும் கேட்கும் மன நிலையிலும் இல்லை... அவர்களுடன் வெகுவாக மாறி வெகுதூரம் சென்ற என்னையும் ஏன் கொண்டு வைக்கிறாய் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.....

கடைசியில் ஒரு காமெடி: எனது வீட்டின் கூரையின் ஓடுகள் தொங்கிக் கொண்டிருக்க நண்பர்கள் எல்லாம் சேர்ந்து எனது வீட்டைக் கட்டித்தர ஒரே ஏகோபித்த குரலில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றி கட்டித்தருவதை அறிவிப்பார்கள் என்றிருந்தேன் அந்த அறிவிப்பும் வரவில்லையே..

கடைசியில் பற்றாக்குறை வரவு செலவில் ஏற்பட்டு அனைவரும் பங்கிட்டுக் கொண்டதை அறிந்தேன். அனேகமாக அங்கு வந்ததில் பெரும்பயன் பெரும்பலன் அடைந்தவன் நானாகவே இருப்பேன், அதை தந்தவன் நீயாகவே இருக்கிறய்.

நிறைய தவறுகள் இருக்கின்றன ஆனாலும் அங்கு நீ இருந்தாய் என்ற நிறைவும் இருந்தது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






4 comments:

  1. என்னைப்பற்றி நிறைய நினைவுபடுத்தி மிக நன்றாக எழுதியுள்ளாய்!நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை! இன்னும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கந்தான் அதிகமுள்ளது! எல்லாவிற்கும் உள்ள காரண காரியங்கள் இறைவனுக்குத்தான் தெரியும்! நமக்கும் ஒருநாள் தெரிய வரலாம்!என்னை நினைவு கூர்ந்து சிறப்பித்ததற்கு எவ்வளவு நன்றி கூறினாலும் வார்த்தைகள் போதாது!மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post. vanakkam. I made year correction from 1983 to 1978. that is right.

      Delete
  2. நண்பர்களைப்பற்றிய சிலவரிகளை த்விர்த்திருக்கலாம்! அவர்களை அப்படி கூறிவிடமுடியாது!அன்பும் நட்பும் கொண்டவர்கள் நல்லவர்கள்தான்! எல்லோருள்ளும் சமுதாய பார்வை இருக்கும்! ஏனெனில் அது மனித இயல்பு!
    கூட குறைய இருக்கலாம்! எல்லோரிடமும் எல்லாநேரமும் வெளிப்படாது!அவரவர் சூழ்நிலையில் அவரவருக்கு இயன்றளவு செய்கிறார்கள்! எல்லோரிடமும் நல்லதை பார்க்கும் தர்ம பார்வை வரவேண்டும்! அது இன்னும் நல்லது உருவாக வழிவகுக்கும்!இயன்றால் அந்த வரிகளை நீக்கவோ, மாற்றவோ முயற்சி செய்யுங்கள்!இது எனது வேண்டுகோள்!

    ReplyDelete
  3. yes may be you are right.Mother Teresa quotes: If you judge people you have no time to love them.

    ReplyDelete