Sunday, December 17, 2017

தலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.

தலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை.

Related image

பரணிக்கு தன் தாய் இறந்தது பேரதிர்ச்சி. சுமார் இரண்டாண்டுகள் வெளியில் வாய் திறந்தே பேசவில்லை.கிறித்தவத்தில் சோகத்தில் தாவீது சாக்கிலான ஆடையை அணிந்திருந்தான் துக்க காலத்தில் என்பது போல எந்தவித ஆடை அலங்கார ஒப்பனைகளில் கவனமின்றி காலம் செலுத்தி வந்தான். தான் இறந்திருந்தால் கூட அவ்வளவு துன்பமாய் இருந்திருக்க வழியில்லை என்றே இருந்தது அவனுக்கு.

சாப்பிடும்போதெல்லாம் அந்த நினைவு தாக்கியது வாய் விட்டும் அழுவான்,எப்படி இந்த மரணம் இப்படி சொல்லி வைத்தபடி நிகழ்ந்தது என்றே ஆச்சரியப்பட்டான். ஏன் எனில் தந்தையின் ஆண்டு நினைவு தினத்தின் போது அடுத்த ஆண்டு இவ(ள்) இருக்க மாட்டா(ள்)  என்ற ஒரு அசரீரியா, ஆன்மாவின் குரலா ? தியான வழிகாட்டுதலாம் தமக்கு கிடைத்த வரமா அதிலிருந்து கிடைத்தது அப்படியே பலித்தது. அவள் இறந்த முன் தினத்தில் தாம் கண்ட கனவை தாயிடமே பகிர்ந்து கொண்டதும் அந்த ஆட்டுக் கிடாயை தூக்கிய மீசைக்கார கறுப்பு மனிதன் கதவைத் தள்ளி அவன் உள் நுழைய பரணி அதைத் தடுக்க முயல இந்தப் போராட்டத்தில் மீசைக்காரன் வென்று விட்டான் என்றும் சொல்கிறான். அதற்கு அம்மா அது வேறு ஒன்னுமில்லடா அக்கா வீட்டில் இன்னைக்கு மாரியம்மன் பண்டிகை, கெடா வெட்டுவாங்க இல்ல அதான்..எனச் சொல்லி முடித்தது நேற்று நடந்தது போல் அப்படியே இருக்க‌

அவள் பயன்படுத்திய கை விசிறி இன்னும் சேதமாகாமல் இருக்க..அவள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்க அவள் இல்லையே...தந்தைக்கும் பிறகு 20முழு ஆண்டுகள் அப்படியே நம்முடன் வாழ்ந்தாளே இன்று இல்லையே சென்று இரண்டாண்டு போயிற்றே...என்று விரக்தியில் இருந்தான். திருமணம் முடித்தபின் பரணி மனைவியும் ஓராண்டின் நிறைவில் ஒரு மகனுமாக இருக்க மணம் செய்த ஒன்பதாண்டுகள் முடிந்தவுடன் இவளும் விடை பெற்று விட்டாளே...

அவள் கடைசி ஆசை என பெயரனுக்கு ஒரு வெள்ளித் தட்டை வாங்கித்  தர ஆசைப்பட்டாளே. அதை இன்னும் நிறைவேற்றவில்லையே...அவள் கடைசியாக ஆசைப்பட்டாள் என அவள் பட்டு சேலை கட்டிக் கொண்டு வெள்ளிக்கிழமை செல்லும் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு பெரிய மணியை சேலம் செவ்வாய்ப் பேட்டையில் வாங்கி வந்து ஒரு பூஜை செய்து கோவிலில் கட்டி விட்டு வந்து விட்டான் குடும்ப சகிதமாக சென்று...ஆனால்  இந்த வெள்ளித் தட்டு ஆசை அப்படியே இருந்தது.

அதற்கும் ஒரு நாள் முடிவு கண்டு விடலாம் என சுமார் ஏழாயிரத்து எண்ணூறு ரூபாயும் பிய்ந்து போயிருந்த அரை ஞாண் கொடியையும்  சுமார் 3 வயதேயான  தரணியையும் கூட்டிக் கொண்டு சேலம் புறப்பட்டான் ஒரு வெள்ளித்தட்டை வாங்கிக் கொண்டு வந்து விடலாம் என.

எம்.ஆர்.பி என்ற ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டான், பாலகனையும் ஏற்றிக் கொண்டான் அவனுக்கு ஜன்னலோரம் சீட்டைக் கொடுத்து வெளியே வேடிக்கை பார்க்க அமர்த்தி விட்டு அந்த மூன்று பேர் அடங்கிய சீட்டில் அமர்ந்து கொண்டான். பேருந்தில் நல்ல கூட்டம். மேச்சேரி வந்தது. ஒரு கரும் பூதமான குண்டாக ஒரு பெண் ஒரு நடக்கும் வயதில் உள்ள ஒரு பையனுடன் வித்தியாசமாக  கையில் இடுப்பில் எடுத்து வந்தாள், இவனருகே வந்து நகர், என்றாள்.
Related image


இவனும் கம்யூனிச சிந்தனை உள்ளவன் என்பதால் எவருடன் வேண்டுமானாலும் பாவம் என அமர்ந்து கொண்டு உதவிகளும் செய்வான் எனப்தால் அது ஒரு வித்தியாசமாகத் தெரியவில்லை. அவளுக்கு நகர்ந்து இடம் கொடுத்தான். தமது வலது பக்கத்தில் உள்ள மகன் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தான். ஏன் எனில் அவன் துறு துறு வென சுட்டிப் பையன் என்பதால் . ஏற்கெனவே மூக்கில் சிலேட் பெனிசிலை போட்டுக் கொண்டு தூக்கி ஓடி மருத்துவமனை சென்று எடுத்த வந்த கதையும், பள்ளியில் விளையாடி ஸ்டீல் சேர் டேபுள்மேல் விழுந்து இடது கண் புருவத்தில் வெட்டப்பட்டு விழி திறந்தது போன்ற ஒரு வெட்டு நடந்து தையல் போட்டது அது சற்றுத் தவறி பட்டிருந்தாலும் கண் போயிருக்கலாம், சற்றுத் தள்ளிப் பட்டிருந்தாலும் பொறியில் பட்டு உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கலாம் என்பதாலும் அவன் மேல் கவனமாக இருந்தான்.

இந்த கருமலை போன்ற பூதமான பெண் அவள் மஞ்சள் பையில் இருக்கும் காசை எடுத்து கொடுக்கச் சொன்னாள் டிக்கட் வாங்க அதையும் செய்தான். வண்டி ஓமலூர் தாண்டி  சேலம் செல்லும் வழியில் குரங்கு சாவடியில் அந்தப் பெண் இறங்கிக் கொண்டாள்.

பரணி தரணியைக் கூட்டிக் கொண்டு வெள்ளித் தட்டு வாங்கும் முன் அண்ணா பூங்கா சென்று ரோலர் வீல் ஏறி சிறுவனுக்கு வேடிக்கை காட்டினான் அதன்பின் புறப்படும்போது கைப்பையை திறந்து பார்த்தான் அரை ஞாண் கொடியும் பணம்  7,800 ரூபாயும் அந்தப் பையில் இல்லை.

உடனே வீட்டுக்குத் துணைவியிடம் பேசி பணம் பறி போயிற்று வெள்ளித் தட்டு எல்லாம் வாங்க வில்லை. வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டான்.

இதைப்பற்றி மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அட, அதை உடனே காவல் நிலையம் சென்றிருந்தால் பிடித்திருக்கலாமே அவள் குரங்கு சாவடியில் இறங்கிய அந்தக் கருங்குண்டிதான் எடுத்திருக்கிறாள்.  அந்த பையனை சேலைக்கடியில் விட்டு கூடையில் வைத்திருந்த கைப்பையில் இருந்து பணத்தையும், அரை ஞாணையும் எடுக்க வைத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். ஆனால் அவன் காவல் நிலையமே செல்ல வில்லை.

வீட்டுக்கு வந்த பிறகு அவனை தலைக்கு குளிக்கச் சொல்லி மனைவி அறிவுறுத்த அவன் சொட்டை விழுந்து கொண்டிருந்த அவன் தலையில் ஒரு கறுப்பு பொட்டு சுமார் ஒரு சிறு வட்டமாய் பொட்டாக வைக்கப்பட்டிருந்தது மையில். அதைத் தேய்த்து சுரண்டி எடுத்து விட்டு தலைக்கு தேய்த்து குளிக்க வைத்தாள்

பணத்தை எடுத்துக் கொண்டு பணி நிமித்தம் இலட்சக்கணக்கில் எல்லாம் பயணம் செய்து 100லிருந்து 150 கி.மீ எல்லாம் சென்று மலை வாழ் மக்களுக்கு எல்லாம் விநியோகம் செய்த காலம் , நாடெங்கும் சுற்றித் திரிந்து  சென்று பணத்துடன் புழங்கிய காலம் எல்லாம் கண்ணில் வர எனக்கா இப்படி நடந்தது என மலைத்து வந்தான்.

அதன் பின் அதே சேலத்தில் சொற்ப பணத்துடன் ஒரு ஜர்னலிஸ்ட் அடையாள அட்டையுடன் டவுண் பஸ்ஸில் பாக்கெட் அடிக்கப்பட்டதும், அதன் பின் புத்தகம் போடும் முயற்சியின்போது சேலம் பால் மார்க்கெட்டில் இறங்கி செவ்வாய்ப் பேட்டை பிரஸ் பைன்டிங் பணிகளுக்கு சென்ற போது புத்தகம் வைத்திருந்த ஏ.வீ. ஆரில் கொடுத்த லெதர் பை அடியில் பிளேடால் கிழிக்கப்பட்டு உள்ளே கையை விட்டு தேடப்பட்டிருந்ததும், அட சொல்லி இருந்தால் நானே எழுதி இருக்கும் ஒரு புத்தகத்தை கையில் கொடுத்திருப்பேனே என்றும்,

அதன் பின் அவனும் அவரது நண்பரும் பிரஸ். பைண்டிங் நபருக்கு கொடுக்க வேண்டிய சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு சத்திரம் ரெயில்வே கிராஸ் செய்து இரவு நேரத்தில் செவ்வாய்ப் பேட்டைக்கு போகாமல் பணம் பெற வேண்டியவரையே போன் செய்து வந்து வாங்கிக் கொள்ளுங்கள் நாங்கள் இங்கிருக்கிறோம் என அழைக்க அவரும் வராமல், இவர்களும் செல்லாமல் மற்றொரு நாள் கொடுத்துக் கொள்ளலாம் என திரும்பியதும் படச் சுருளாக ஓடின.
Related image


சேலம் நாலு ரோடு, செவ்வாய்ப் பேட்டை, லீ பஜார், சத்திரம் ரெயில்வே லைன் போன்ற இடங்களில் எப்போதுமே இது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு இதெல்லாம் காவல் துறைக்கும் தெரியும் என்ற செய்திகளும் பரிமாறப்பட்டன‌

இதே போல மளிகைக் கடை ஜீவா தமது பங்குக்கு ஒரு பணம் பறிப் போன கதையை சொன்னான். இதை எல்லாம் கண்காணிக்க எடுக்க பறிக்க எடுத்துச் செல்ல ஒரு நெட் ஒர்க் இருக்குமோ என்றெல்லாம் எண்ணினான்.

அதிலிருந்து பணத்திற்கான பை ஏதுமே எடுத்துச் செல்லக் கூடாது என்றும் முடிவுக்கு வந்தான்.

ஆனால் இந்த கருப்பு மை, சுடுகாடு, மண்டையோட்டு மை, நள்ளிரவு பூஜைகள், வசிய மை,   போன்றவை பற்றி எல்லாம் பில்லி சூனியம், மந்திரம், மாந்திரீகம் போன்றவை எல்லாம் அறிவியலுக்கு எட்டாமல் இருந்தபோதும் கேரளாவில் குட்டிச் சாத்தான், மாந்திரிகம் மந்திரம் எல்லாம் பகவதி அம்மன் எல்லாம் இப்படி அப்படி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே என்றாலும் தெளிவில்லை.

ஆனாலும் நகையை தாமாக கழட்டிக் கொடுத்த பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள், கொண்டு போனவற்றை எல்லாம் இழந்து விட்டு சுய நினைவே இன்றி வேறெங்கோ சென்றபடி இருப்பார் எல்லாம் உண்மையாகவே இருக்கிறார்கள்.

மனித அறிவுக்கு எட்டாத இப்படிப்பட்ட புதிர்கள் இன்னும் எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்களால் எழுதப் படித்த மனிதர்களிடை மேல் கூட பிரயோகம் செய்தபடி...இதன் தொடர்ச்சியாக அரசியல், தொழில், வியாபாரம் ஏன் காதலைக் கூட பிரிக்கவும் சேர்க்கவும் இந்த வசியக் கலை உதவுவதாகவும் செய்திகள் இருக்கின்றன நம்பவே முடியவில்லை என்ற போதும் அவரவர்க்கு நடந்தபோது நம்பியே ஆக வேண்டிய நிலையில் உண்மையாகவே நடந்திருப்பதால்.

ஏன் இங்கிலாந்தில் சந்திராசாமி தாட்சருக்கு செய்த கதை எல்லாம் கூட நமது சுய வரலாறில் எழுதப்பட்ட சான்றுகளை ஒரு வெளி நாட்டு தூதராயிருந்தார் எழுதி இருக்கிறாரே...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment:

  1. தலையில் ஒரு கருப்புப் பொட்டு: கவிஞர் தணிகை. - ஆனால் இந்த கருப்பு மை, சுடுகாடு, மண்டையோட்டு மை, நள்ளிரவு பூஜைகள், வசிய மை, போன்றவை பற்றி எல்லாம் பில்லி சூனியம், மந்திரம், மாந்திரீகம் போன்றவை எல்லாம் அறிவியலுக்கு எட்டாமல் இருந்தபோதும் கேரளாவில் குட்டிச் சாத்தான், மாந்திரிகம் மந்திரம் எல்லாம் பகவதி அம்மன் எல்லாம் இப்படி அப்படி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே என்றாலும் தெளிவில்லை - நிஜம். நமக்கு புரியாத நிறைய சக்திகள் இருக்கின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் தணிகை

    ReplyDelete