Sunday, December 10, 2017

சுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணிகை.

சுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணிகை.

Image result for andhra pradesh cold in winter early morning


எழில் வேந்தனுக்கு அது 23 வயது . ஆந்திரப் பிரதேசம்  அப்போது தெலுங்கானாவாகவும் ஆந்திராவாகவும் பிரியவில்லை. 1985 ஜனவரிக் குளிர் காலை 4 அல்லது 5 மணிக்குள் நிலவொளியில் பெரும் பெரும் பானைகளில் இருக்கும் ஜில்லென்ற நீரை எடுத்து குளிக்க வேண்டும். சுறு சுறுப்பு உதடு பல் எல்லாம் உதற காலிலிருந்து தலைவரை பரவும்.

அதன் பின் தியான வகுப்பு, அங்கு தான் ஓம் பூர்புவஸ்ஸுவ‍ஹ் தத்ஸ விதுர் வ்ரேண்யம் பர்ஹோ தேவஸ்ய தீமஹு த்யோயந  ப்ரஸோயாதாயாத் என்ற பாடல் சொல்ல வருவது காயத்ரி ஜெபம் என்றும், ஓம் ஸகனாவவது ஸகனோபுனத்து சகவீரியம் கருவாவஹே.. என்ற பாடல்களையும் பொருள் தெரிந்து சொல்லக் கற்றுக் கொண்டான்.  ஆனால் சந்திரசேகரேந்திரர்  சங்கராச்சாரியார்தான் தமிழை நீச மொழி என்றதால் சமஸ்கிருதம் மட்டுமே கடவுளுக்குத் தெரிந்த மொழியாக ஒருபோதும் விளங்கமுடியும் என்பதை எப்போதுமே அவன் ஏற்றுக் கொண்டதே இல்லை.

முதலில் கம்யூனிச மேடைகளில் முழங்கித் திரிந்து இரவு நள்ளிரவில் எல்லாம் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்த அவனுக்கு அது எட்டிக்காயாகவே தெரிந்தது.

கம்பயூனிசமும் காந்தியிசமும் ஒன்னுதான் என அங்கு அவனுக்கு ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார் எல்லாமே எல்லா மனிதர்களுக்கு நன்மை செய்யத்தானே சொன்னது. அதில் மேல் இருக்கும் சிலர்தானே எல்லாவற்றையும் எல்லாருக்கும் செல்வதை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றுதானே இரண்டும் சொல்கிறது ஆனால் ஒன்றில் அஹிம்சை மற்றொன்றில் நீ எந்த ஆய்தம் ஏந்த வேண்டுமென்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்றது.

இந்த சமஸ்கிரத ஸ்லோகங்களை எல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற பஜனை எல்லாம் வேண்டாம் என்று இருந்தான் . எதுவானாலும் பொருள் தெரிந்து மற்றவர்க்கும் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான். பொருள் தெரியாமல் ஒரு பாடலை பாடவே கூடாது.  ஒரு நாள் இங்கு கடவுள் மறுப்பு சிந்தனையாளர் யாரெல்லாம் என சபையில் கேள்வி எழுப்பப் பட்டபோது இவன் ஒருவன் மட்டுமே எழுந்து நின்றான் அந்த எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டிருந்த 150 பேரில்.

அவர்கள் மேற்கொண்டு வேறு ஏதும் கேட்கவில்லை. வகுப்புகள் சுமார் ஒன்னரை மாத காலம் அப்படியே சென்றது . நிலவொளிக்குளியல், தியான வகுப்பு, முடிந்ததும் எளிய உணவு நிலக்கடலை எல்லாம் போடப்பட்ட தாழித்த உணவு...மதியம் முழுச் சாப்பாடு, இரவு சில ரொட்டிகள் அல்லது சாப்பாடு எளிய உணவு. அரிஜன சமையல்காரர்கள் மூலம் செய்தது. சுவை எல்லாம் எதிர்பார்க்க முடியாது, சுகாதாரம் கூட சற்று குறைவாகவே இருப்பதுதான் ...அது அப்படி இப்படித்தான் இருக்கும்.

Related image

காலையும் மதியமும் வகுப்புகள் நடந்தன பல்வேறு நாட்டு முன்னேற்றம், கிராமிய முன்னேற்றம் பற்றி. பல்கலைக் கழக கோல்டு மெடல் வாங்கிய நபர்களிலிருந்து நிறைய பிரிவு பாடங்களைத் தேர்ந்து படித்தார் எல்லாம் அங்கே குழுமியிருந்தனர். பயிற்சிக்காகவும் பணிக்காகவும்.

எழில் வேந்தனுக்கு இரண்டாண்டு தேசிய அளவிலான பயிற்சி, இவனை போல 15 பேர்தாம் மாநிலத்துக்கு ஒருவராக. மற்றவர் யாவரும் ஒன்னரை மாதத்தில் பயிற்சி முடித்து சுமார் 20 கிராமங்களுக்கும் மேல் சென்று கிளஸ்டர் டெவலப்மென்ட் ஆபிசர் என்ற பணிப் பொறுப்பை ஏற்றாகவேண்டும்.

அதில் ஒரு மதுரைக்கார சௌராஸ்ட்ரா நண்பன் தமிழ் பேசியவன் கிடைத்தான் அவன் பேர் கணேஷ் சந்திரா. சரியாக கண் தெரியாது. கண்ணாடியைக் கழட்டி விட்டால். நல்ல மொத்தமான ப்ரேம் மற்றும் கண்ணாடி. அவன் முதுகலை பட்டம் பெற்றிருந்தான்.

அவன் ஒன்னரை மாதப் பயிற்சி முடித்து ஜங்காரெட்டி கூடம் என்ற பகுதிக்கு அலுவலராக நியமிக்கப்பட்டான். அந்தப் பகுதி யாவும் ஒன்று காடு அல்லது காட்டைச் சார்ந்த பகுதி, அல்லது மலை அல்லது மலை சார்ந்த பகுதி அல்லது சமவெளியாய் இருந்தால் அது ஹரிஜனப் பிரிவினர் அன்று அது அவர்கள் பேர் அதுதான் இன்று தலித் என்று சொல்லப்படுகிறார்கள்.அங்கே கூட்டத்தில் ஹரிஜன் கிரிஜன மஹிலா மண்டலாரா என்றெல்லாம் பேசுவார்கள்... அங்கே நக்ஸலைட்கள் எல்லாம் கூட பாடலைப் பாடிக்கொண்டு வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

பயிற்சியின் போது ஆங்காங்கே களப்பயிற்சிக்கு செல்லும்போதே உணவு தயாராகும் வரை அங்குள்ள புதர் அல்லது காலி இடங்களில் கற்ற பயிற்சியை பயன்படுத்திப் பார்க்கலாம் என எழில் அமர்ந்து பார்த்து வந்தான்.அப்போது எல்லாம் நீண்ட நேரம் நாள் முழுதும் நடக்க வேண்டும் காடுகளிடை செல்லும் அடவிப் பகுதிகளில். மிகவும் தள்ளித் தள்ளித்தான் கிராமங்கள் இருக்கும் அதுவும் மரத்தில் மூங்கிலால் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும்.  எங்காவது சென்று தங்கும் இடத்தில் உணவு தயாரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

Related image

அப்படி செல்லும்போது உடன் அழைத்து வரும் ஆர்கனைசர் எனப்ப்படும்  அமைப்பாளர்கள் அவர்கள் விருப்பப்படி எல்லாம் செய்து வந்தார்கள். கொடுத்திருந்த பணத்தை என்ன செய்தார்கள் எப்படி செய்தார்கள் என்றே தெரியாது ஆனால் அந்தக் கிராமத்தாரின் வீடுகளில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். அது எந்நிலையிலிருந்தாலும் உண்ண வேண்டும். அப்படித்தான் குடல் புண் வந்திருக்கும். மாங்கா வடுவும் மிளகாய் சாரமும் அடங்கிய சாரத்தில் அரிசிச் சோற்றை கலந்து உண்ண வேண்டும். அது மிகவும் ருசியாக இருக்கும்.ஏன் எனில் நாளெல்லாம் பசியுடன் இருந்தால் எதுவுமே தின்னக் கிடைத்தால் ருசிக்கத்தானே செய்யும்.

கொர்ரய்யா என்ற அமைப்பாளர் ஒரு முறை கொர் கொர் என தூங்கிக் கொண்டே, எழில் வேந்தனுக்கு ஒரு கோரைப்பாய் கூட கொடுக்க விடாமல் கீழே படுக்க வைத்தான் கொஞ்சம் நகர்ந்து படுத்திருந்தாலும் கோழிகளின் எச்சம் தலை முழுதும் பூசிக் கொள்ள வேண்டியதுதான், கோழிகளுடன் உறக்கம்.அப்படி அங்கே அனுபவம் எல்லாம் கிடைத்ததால் தான் இவனுக்கு இவனேத் திட்ட அலுவலராகத் திட்டத்தை துவங்க ஆரம்பிக்கும்போது கிராம மக்கள் நம்பாமல் கொடுத்த ஆட்டுக் கொட்டிலும் மாட்டுக் கொட்டிலும் மலைக்கிராமங்களில் இவனுக்கு இரவு தங்க இடமானபோதும் அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலை ஏற்படவே இல்லை. வசதியாகவேத் தெரிந்தது.

இதை எல்லாம் விட ஒரிஸ்ஸாவின் மல்க்கங்கிரி, காளி மேளா கோராபுட் மாவட்டம் செல்லும்போது சாலையின் ஓரம் எல்லாம் படுத்துறங்கி ஓய்வெடுத்து அடுத்த பேருந்து வரும் வரை தூங்கவும் அதில் எல்லாம் ஒன்றும் இல்லை எல்லாம் நாடோடி வாழ்வில் சகஜமாகிப் போனது.

பாலமலை கழிப்பறைகளை சுத்தம் செய்து மக்களைப் பயன்படுத்த பழக்கப்படுத்திய கதையை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தேர்வு நிலையில் இதைப் பற்றி எல்லாம் சொல்லும்போது பாஸ்கரராஜ் என்னும் தொலைக்காட்சி காட்சி இயக்குனர் அது ஏழரை சனியாக காலம் இருந்திருக்கும். இதை எல்லாம் சொல்லுங்கள் நமது பெண்கள் அதை எல்லாம் பெரிதாக‌ எண்ணாமல் அவரவர் வீட்டுக்கு கழிப்பறையைக் கழுவ கூப்பிட்டுவிடுவார்கள் என்றார். அவரே அவனது புத்தகம் ஒன்றைப் படித்து விட்டு தமது வாழ்விலும் அதைப் பயன்படுத்த வேண்டும் இவை எல்லாம் உண்மைதானா என பாலியல் விழிப்புணர்வு நூலை ஒன்றைப் படித்து விட்டு பயன்படுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இப்படி எல்லாம் அவனுக்கு கிடைத்த அனுபவமே பிற்காலத்தில் எவ்வளவு விடியலில் 4 மணிக்கே எழுந்தாலும் அவனுக்கு அதெல்லாம் பயிற்சி கொடுத்த பாடமாகவே இருந்தது பயன்பட்டது.

இதையெல்லாம் விட பயிற்சியின் போது கற்ற தியான வகுப்பு பற்றி எல்லாம் தொடர்பை விட்டு விடலாம் என இருக்கும்போது ஒரு நாள் ஜங்காரெட்டி கூடம் சென்றான் அவனது நண்பர் கணேஷ் சந்திராவைக் காண. கதவைத் தட்டி காத்திருந்தான், கணேஷ் சந்திரா கதவைத் திறக்க அங்கே ஒரு வேட்டி விரிப்பு கிடந்தது, என்னடா கணேஷ் என்ன செய்றே,? தியானம்...

ஆக இவன் எல்லாம் செய்யும் போது நாம் எல்லாம் செய்ய முடியாதா என்ற உந்தல் ஏற்பட அந்த 1985 ஜனவரியில் ஏற்பட்ட வழக்கத்தை வாழ்வில் மனதை எரிக்க தியானத்தையும், அதற்கு முன்பே கைக்கொண்டிருந்த உடலுக்கான நடைப்பயிற்சியையும் வாழ்க்கையில் பின்னிப் பிணைய ஒன்றிணைய எடுத்துக்கொண்டு 33 வருடங்களாக பயணம் சென்று கொண்டே இருக்கிறான் சுடர் விட்டு நின்றெரியும் விளக்காக... பத்தாயிரம் மணி நேரம் ஈடுபட்டிருந்தால் எந்த செயலுமே அது அப்படி செய்தாரை மேதையாக்கி அவருக்கு புகழ் சேர்க்குமாம் அந்த அறிவியல் உண்மையை தாமும் மேடையெங்கும் சொல்வதும் பிறர்க்கும் சொல்வதும் வழக்கமான அவனுக்கு அப்போது அவை பற்றி ஏதும் தெரியாது...ஆனால் இப்போது கணக்கிட்டிருந்தால் அவை சுமார் 12000 மணி கூட வந்திருக்கும்...

Image result for andhra pradesh cold in winter early morning

ஆனால் அதற்குள் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் தாம் எத்தகையது? எப்படிப்பட்ட மாந்தர்கள் எல்லாம் அவனது வாழ்வுடன்? 20க்கும் மேற்பட்டோர் அவனிடமிருந்து அந்தப் பயிற்சியை கற்றுக் கொண்டார்களாக உலகெங்கும் பிரிந்து கிடந்து பயணம் செய்து கொண்டிருக்க...

தியானத்துக்கும் முன், தியானத்துக்கும் பின் என இரண்டு வாழ்வு இருக்கிறது என அவனுக்கு தெரிந்ததை அனைவர்க்கும் சொன்னான். ஆனாலும் யாவர்க்கும் நன்மை செய்தே தீரும் மார்க்கம் காணும் முயற்சியும் அவனை விட்டு சென்ற பாடில்லை. அது ஒரு தாகம். இது ஒரு வேகம் கட்டுப்படுத்தும் முயற்சி.

இவனுக்கு இப்போது கடவுள் இருப்பு பற்றி எல்லாம் கேள்வி எல்லாம் இல்லை அது தேவையுமில்லை. எங்கும் இருப்பான் ஏகாந்த மூர்த்தி என இந்து எல்லாவற்றிலும் கடவுளைப் பார்ப்பதாயிருக்கும் சிந்தனையும், அடுத்தவரை உன்னைப் போல் நேசி என்னும் கிறித்தவ சிந்தனையும், அல்லா கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்னும் முகமதிய சிந்தனையும், ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்னும் புத்தம், ஆற்றல் மாறாக் கோட்பாடான : ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது அது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித்தோன்றும் என்ற அறிவியல் பார்வையுடன் இணைந்திருக்கிறது என்ற புரிதலுடன், வள்ளலாரின் வாடிய பயிரைக் கண்டபோதெலாம் மனம் மிக வாடினேன் என்ற காருண்யத்துடன், மஹாவீரர் காட்டிய பிற உயிர்க்கெலாம் தீங்கு செய்யா துன்புறுத்தல் இலா வாழ்வு பற்றிய ஜைன மதம் பற்றியும் இப்படி உலகுக்கு உவந்த எவைபற்றியுமே பெரிய மாறுபாடு இருப்பதாகவோ அல்லது எந்த ஒன்றில் மட்டுமே மிகவும் முழுமையடைந்த நிலை உள்ளதாகவோ எண்ணுகிற நிலை எல்லாம் போய் விட...

ஒரு வீட்டில் மொட்டை அடித்து குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வும், அடுத்த வீட்டிலேயே சவமாய் ஒரு மரணம் சடலம் எடுக்கும் நிகழ்வையும் ஒரு சேர பார்த்தபடியான ஞானம்... சித்தர் வழிப்பாடலாய் இறங்கியபடியே இருக்க...

எல்லா மனிதருமே வயது முதிர்ந்து மூப்படைந்து தாமாக உதிரும் வெள்ளரிப்பழமாகவே இருக்க வேண்டும் என்பதுவே அவனது விருப்பமும் பிரார்த்தனையாகவும் இருக்கிறது... ஆனால் அவை எல்லாம் சாத்தியமா"

உயிர் வழங்கும் மந்திரம் என்பது : ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருஹ மிவபந்தனாத் ம்ருத்யுர் முச்ய மாம்ருதாத்...என்பது என்ன வெனில் எந்த ஒரு விபத்திலும், இடி,மின்னல், போன்ற இயற்கை அல்லது செயற்கை விபத்திலும் உயிர் போகாமல் ஒரு வெள்ளரிக் கொடியிலிருந்து பழுத்த வெள்ளரிப்பழமானது இயல்பாக உதிர்ந்து நிற்குமோ அது போல இயல்பாக போகவேண்டும் அதற்கு சிவபெருமானே அதற்கு நீ அருள் புரிய வேண்டும் என்பது அந்தப் பாடலின் பொருள்...ஆனால் அந்த சிவ பெருமானுக்கு பதிலாக எந்த இறைச் சக்தி அல்லது இயற்கைச் சக்தியின் பேரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். அதுபோலவே காயத்ரி ஜெபம் என்பதும் கூட பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளான உங்களை தியானிக்கிறேன் என் உள்ளத்திலிருந்து என்னை ஒளிரச் செய்வீராக என்பதுதான்...

நிதமும் பத்மாசனத்தில் குதம் குய்யம் இரண்டிடையே இடது குதி காலை வைத்து அமர்ந்தபடி இருந்து சின் முத்திரை இட்டு  நெற்றிப் பொட்டில் நினைவை நிறுத்தி இமையும் விழி விளம்புகளும்  அசையாமல் கண்கள் பாதி திறந்த நிலையில்  மூக்கின் நுனியைப் பார்த்தபடி அமர்ந்து

சுடர் விட்டு நின்று எரியும் விளக்காக இருக்கிறான்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


1 comment:

  1. அருமையான பதிவு, அனுபவங்கள். நன்றி.

    ReplyDelete